Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

வரலாற்றுச் சுவடுகள்

பூரித்துப்போன ராஜா!

பூரித்துப்போன ராஜா!

ஆகஸ்ட் 1936. ஸ்வாஸிலாந்தில் ஒரு கிராமத்திலுள்ள அரண்மனை வளாகம். ஒரு சவுண்ட் காரிலிருந்து இசை ஒலிபரப்பப்பட்டது. அதன்பின், சகோதரர் ஜே. எஃப். ரதர்ஃபர்டின் பதிவு செய்யப்பட்ட பேச்சுகளை ராபர்ட் நிஸ்பட் மற்றும் ஜார்ஜ் நிஸ்பட் ஒலிபரப்பினார்கள். அதைக் கேட்ட ராஜா இரண்டாம் ஸோபூஸா பூரித்துப்போனார். “அந்த ரெக்கார்ட் ப்ளேயரையும் ரெக்கார்டுகளையும் ஒலி பெருக்கியையும் வாங்கிக்கொள்ள விரும்புவதாக அவர் சொன்னபோது எங்களுக்கு ரொம்பவே தர்மசங்கடமாகிவிட்டது” என்றார் ஜார்ஜ்.

[படத்திற்கான நன்றி]

‘எங்களை மன்னிக்க வேண்டும், இவை விற்பனைக்கு அல்ல. அவை வேறொருவருக்குச் சொந்தமானவை’ என்று ராபர்ட் பதிலளித்தார். அவர் யார் என்பதைத் தெரிந்துகொள்ள ராஜா விரும்பினார்.

“இது இன்னொரு ராஜாவுடையது” என்றார் ராபர்ட். ‘யார் அந்த ராஜா?’ என்று ஸோபூஸா கேட்டார். “இயேசு கிறிஸ்து, கடவுளுடைய அரசாங்கத்தின் ராஜா” என்று பதிலளித்தார் ராபர்ட்.

“ஓ, அவர் பெரிய ராஜா ஆயிற்றே!” என்று ரொம்ப பயபக்தியுடன் பதிலளித்த ஸோபூஸா, “அவருக்குச் சொந்தமானதை எடுத்துக்கொள்ள நான் விரும்பவில்லை” என்றார்.

ராபர்ட் எழுதினார்: ‘அந்த ராஜாவின் குணத்தைப் பார்த்து நான் ரொம்பவே அசந்துபோனேன். அவர் சரளமாக ஆங்கிலம் பேசினார், அவருக்குத் துளிகூட பெருமையோ கர்வமோ இல்லை. ஒளிவுமறைவின்றி வெளிப்படையாகப் பேசினார், நட்பாகப் பழகினார். ஜார்ஜ் வெளியே ரெக்கார்ட் ப்ளேயரில் இசையை ஒலிபரப்ப, நான் ராஜாவுடன் கிட்டத்தட்ட 45 நிமிடம் அவருடைய அலுவலகத்தில் உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தேன்.’

ராபர்ட் மேலுமாக எழுதினார்: ‘பிறகு, அங்கிருந்து ஸ்வாஸி நேஷனல் ஸ்கூலுக்குப் போனோம். அங்குதான் ரொம்பவே சுவாரஸ்யமான அனுபவத்தைப் பெற்றோம். பள்ளியின் தலைமை ஆசிரியருக்குச் சாட்சி கொடுத்தோம், அவர் ஆர்வமாகக் கேட்டார். எங்களிடம் ரெக்கார்ட் ப்ளேயர் இருக்கிறது என்றும் அதிலுள்ள பதிவுசெய்யப்பட்ட பைபிள் பேச்சுகளைப் பள்ளி மாணவர்கள் எல்லோருக்கும் போட்டுக்காட்ட விரும்புகிறோம் என்றும் தெரிவித்தோம். அவர் அதைக் கேட்டு சந்தோஷப்பட்டார். பள்ளியில் கிட்டத்தட்ட நூறு மாணவ மாணவியர் இருந்தார்கள்; அவர்களைப் புல் தரையில் உட்கார வைத்து அதைக் கேட்கும்படி சொன்னார். அந்த உயர்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு விவசாயம், தோட்டக்கலை, தச்சுக்கலை, கட்டிடக்கலை ஆகியவற்றுடன் ஆங்கிலம் மற்றும் கணிதம் கற்றுத்தரப்பட்டதாகவும் மாணவிகளுக்கு நர்ஸிங், வீட்டு வேலை மற்றும் பயனுள்ள பிற வேலைகள் கற்றுத்தரப்பட்டதாகவும் எங்களிடம் சொல்லப்பட்டது.’ ராஜா இரண்டாம் ஸோபூஸாவின் பாட்டிதான் அந்தப் பள்ளியின் ஸ்தாபகர்.

1936-ல் ஸ்வாஸிலாந்தில் பொதுப் பேச்சைக் கேட்கக் கூடிவந்திருந்த உயர்நிலைப் பள்ளி மாணவ மாணவியர்

1933-லிருந்தே தன்னுடைய அரசவைக்கு பயனியர்கள் வந்து சாட்சி கொடுத்தபோதெல்லாம் ஸோபூஸா ராஜா அதைச் சந்தோஷமாகக் கேட்டார். ஒரு முறை, பதிவு செய்யப்பட்ட ராஜ்ய செய்தியைக் கேட்க தன்னுடைய 100 மெய்க்காப்பாளர்களைக் கூடிவரச் செய்திருந்தார். அவர் நம்முடைய பத்திரிகைகளுக்குச் சந்தா செய்தார், மற்ற பிரசுரங்களையும் பெற்றுக்கொண்டார். சீக்கிரத்தில், நம்முடைய பிரசுரங்களின் ஒரு நூலகமே அவரிடம் இருந்தது! இரண்டாம் உலகப் போரின் சமயத்தில் பிரிட்டன் தனது குடியேற்ற நாடுகளில் நம் பிரசுரங்களுக்குத் தடைவிதித்திருந்தபோதிலும் அவர் அவற்றையெல்லாம் பத்திரமாக வைத்திருந்தார்.

பல வருடங்களுக்கு ஸோபூஸா ராஜா லுபாம்பாவிலுள்ள தனது அரண்மனைக் கதவுகளை யெகோவாவின் சாட்சிகளுக்காகத் திறந்தே வைத்திருந்தார். சர்ச் தலைவர்களைக்கூட தனது அரண்மனைக்கு வரவழைத்து பைபிள் பேச்சுகளைக் கேட்கும்படி செய்தார். அப்படி ஒருமுறை சர்ச் தலைவர்களை அழைத்திருந்தபோது, ஹெல்வி மஷாஸி என்ற உள்ளூர் சகோதரர் மத்தேயு 23-ஆம் அதிகாரத்திற்கு விளக்கம் அளித்துக்கொண்டிருந்தார்; அப்போது அந்த சர்ச் தலைவர்கள் கோபத்தில் கொதித்தெழுந்து சகோதரரைப் பேசவிடாமல் தடுத்து உட்கார வைக்க முயன்றார்கள். ஆனால், ராஜா தலையிட்டு சகோதரர் மஷாஸியைத் தொடர்ந்து பேசும்படி கேட்டுக்கொண்டார். அதோடு, சகோதரர் சொல்லும் பைபிள் வசனங்களையெல்லாம் அவர்கள் எழுதிக்கொள்ளும்படியும் சொன்னார்!

மற்றொரு முறை, பயனியர் சகோதரர் ஒருவர் பேச்சு கொடுத்தபோது கூடியிருந்த சர்ச் தலைவர்களில் நால்வர், “இனி நாங்கள் சர்ச் தலைவர்கள் இல்லை, யெகோவாவின் சாட்சிகள்” என்று சொன்னார்கள். அதோடு, ‘ராஜாவிடம் இருப்பதைப் போன்ற புத்தகங்கள் ஏதாவது உங்களிடம் இருக்கின்றனவா?’ என்றும் சகோதரரிடம் கேட்டார்கள்.

1982-ல் அந்த ராஜா இறந்தார். 1930-களிலிருந்து தான் இறக்கும்வரை யெகோவாவின் சாட்சிகளை மதிப்பு மரியாதையோடு நடத்தினார். ஸ்வாஸி சம்பிரதாயங்களைக் கடைப்பிடிக்காததற்காகச் சாட்சிகளை யாரும் துன்புறுத்தாதபடி பார்த்துக்கொண்டார். எனவே, அவர்கள் அவருக்கு நன்றியுள்ளவர்களாய் இருக்க நியாயமான காரணம் இருந்தது. அவர் இறந்தபோது அவர்கள் அதிக வேதனையும் வருத்தமும் அடைந்தார்கள்.

2013-ன் ஆரம்பத்தில் ஸ்வாஸிலாந்தில் 3,000-க்கும் அதிகமான பிரஸ்தாபிகள் இருந்தார்கள். இந்த நாட்டின் மக்கள் தொகை 10 லட்சத்திற்கும் அதிகம்; பிரஸ்தாபிகளின் விகிதம் 384-க்கு ஒன்று. இங்குள்ள 90 சபைகளில் மும்முரமாய் ஊழியம் செய்யும் பயனியர்களின் எண்ணிக்கை 260-க்கும் அதிகம். 2012-ல் இயேசுவின் மரண நினைவுநாள் அனுசரிப்புக்கு வந்திருந்தோரின் எண்ணிக்கை 7,496. அப்படியானால், பெருமளவு மக்கள் சத்தியத்தை ஏற்றுக்கொள்ள வாய்ப்பிருக்கிறது! 1930-களில் நற்செய்தியை அறிவிக்க ஸ்வாஸிலாந்துக்குச் சென்றவர்கள் உறுதியான அஸ்திவாரம் போட்டிருந்தார்கள் என்பதில் சந்தேகமே இல்லை!—தென் ஆப்பிரிக்காவிலுள்ள வரலாற்றுச் சுவடுகளிலிருந்து.