Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

உத்தமருக்கு யெகோவா அருளும் பொக்கிஷம்

உத்தமருக்கு யெகோவா அருளும் பொக்கிஷம்

வாழ்க்கை சரிதை

உத்தமருக்கு யெகோவா அருளும் பொக்கிஷம்

வெர்னன் டன்கம் சொன்னபடி

இரவு சாப்பாடு முடிந்தது; சிகரெட்டைக் கையிலெடுத்தேன், பற்றவைத்தேன். “இன்னிக்கு மீட்டிங்-ல என்ன விசேஷம்?” என்று என் அருமை மனைவி ஐலீனிடம் கேட்டேன்.

அவள் நிதானமாய் பதிலளித்தாள்: “யார் யாருக்கு என்னென்ன பொறுப்புங்கற விஷயத்த ஒரு லெட்டர்ல வாசிச்சாங்க. அதில ஒங்க பேரும் இருந்தது. சவுண்டு சிஸ்டத்த கவனிச்சிக்கிற பொறுப்பு உங்களுடையதாம்! அப்புறம், அந்த லெட்டர்ல கடைசியா என்ன வாசிச்சாங்க தெரியுமா? ‘புதிதாக நியமனம் பெற்ற இவர்களில் யாருக்காவது புகைபிடிக்கும் வழக்கம் இருந்தால், அந்தப் பொறுப்பை தங்களால் ஏற்றுக்கொள்ள இயலாது என்பதைத் தெரிவித்து சொஸைட்டிக்கு கடிதம் எழுத வேண்டும். a “ஹூ. . .ம், அப்படியா விஷயம்!” என்று மெல்ல இழுத்தேன்.

மனதில் தீவிர சிந்தனையோடு, “எனக்கு ஏன் இந்தப் பொறுப்பு கொடுக்கப்பட்டது என்று தெரியவில்லை. ஆனால் எனக்குக் கொடுக்கப்பட்ட எந்தப் பொறுப்பையும் இதுவரை நான் ‘முடியாது’ என்று சொன்னதில்லை. ஆகவே இனியும் அப்படி சொல்லப் போவதில்லை” என்று சொல்லி, பல்லைக் கடித்துக்கொண்டு அந்த சிகரெட்டை அணைத்து ஆஷ்ட்ரேயில் போட்டுவிட்டேன். இனிமேல் சிகரெட்டின் முகத்தில் முழிக்கவே மாட்டேன் என தீர்மானம் பண்ணிக்கொண்டேன். இந்தத் தீர்மானம், கிறிஸ்தவனாகவும் இசைக் கலைஞனாகவும் வாழ்ந்த என் வாழ்க்கையில் திருப்பத்தை ஏற்படுத்தியது. எதனால் நான் இந்தத் தீர்மானம் எடுத்தேன் என்பதைப் பற்றி கொஞ்சம் சொல்லட்டுமா?

ஆரம்பத்தில் வாழ்க்கை

கனடாவைச் சேர்ந்த டோரன்டோவில் 1914, செப்டம்பர் 21-⁠ம் தேதியன்று பிறந்தேன். எங்கள் வீட்டில் நான்தான் தலைப்பிள்ளை. என் பெற்றோரின் பாசத்துக்குக் குறைவேயில்லை. அவர்கள் கடினமாக உழைப்பவர்களும்கூட. அப்பா பெயர் வெர்னன்; அம்மா பெயர் லைலா. நான்கு பையன்களையும் இரண்டு பெண்பிள்ளைகளையும் அரும்பாடு பட்டு வளர்த்தார்கள். எனக்கு அடுத்து யார்க், ஆர்லண்டோ, டக்லஸ் என்ற மூன்று தம்பிகள். பிறகு ஐலீன், கோரல் என்ற இரண்டு தங்கைகள். அம்மா என் கையில் ஒரு வயலினைக் கொடுத்து ஹாரிஸ் இசைப் பள்ளிக்குச் சென்று இசைக் கல்வி பயில அனுப்பியபோது எனக்கு ஒன்பதே வயது. அப்பொழுது பணக்கஷ்டம் ஒரு பக்கம் இருந்தாலும், அப்பாவும் அம்மாவும் ரொம்ப சிரமப்பட்டு எங்களைப் படிக்க வைத்தார்கள். பள்ளி கட்டணம், எங்கள் போக்குவரத்து செலவு இவற்றுக்கெல்லாம் எப்படியோ பணம் புரட்டி சமாளித்து வந்தார்கள். பிறகு டோரன்டோவிலுள்ள ராயல் கன்ஸர்வேட்டரி ஆஃப் மியூசிக்கில் நான் இசைக்கல்வி பயின்றேன். அப்போது எனக்கு வயது 12. அந்த நகரத்தில் ஒரு பிரபலமான இசைப் போட்டி, மாஸீ ஹால் என்ற அரங்கத்தில் நடைபெற்றது. அதில் கலந்துகொள்வதற்கு தகுதி பெற்றேன். இது டோரன்டோ நகரிலுள்ள ரொம்ப பிரசித்தி பெற்ற இசை அரங்கமாகும். இந்தப் போட்டியில் நான்தான் வெற்றி பெற்றேன். அதற்குப் பரிசாக அலிகேட்டர் தோல் உறையிடப்பட்ட அருமையான வயலின் ஒன்று கிடைத்தது.

சிறிது நாட்களுக்குப் பின் பாஸ் வயலினையும் பியானோவையும் இசைக்கக் கற்றுக்கொண்டேன். வெள்ளிக்கிழமை, சனிக்கிழமை மாலை வேளைகளில் நாங்கள் குரூப்பாக சேர்ந்துகொண்டு சிறு பார்ட்டிகளுக்கு வயலின் வாசித்தோம். இதைப்போலவே வேறு சில நடன நிகழ்ச்சிகளிலும் இசைக் கருவிகளை இசைத்துவந்தோம். இப்படிப்பட்ட ஒரு நிகழ்ச்சியின்போதுதான் நான் ஐலீனை முதன்முதலில் சந்தித்தேன். உயர்நிலைப் பள்ளி படிப்பின் கடைசி வருடத்தில் நகர் முழுவதும் நடந்த எண்ணற்ற இன்னிசை கச்சேரிகளில் கலந்துகொண்டேன். பள்ளிப் படிப்பை முடித்ததும் ஃபர்டீ மௌரீ இசைக் குழுவில் சேர்ந்துகொள்ள எனக்கு அழைப்பு வந்தது. 1943-⁠ம் ஆண்டு வரை அக்குழுவில் பணியாற்றி கைநிறைய சம்பாதித்தேன்.

யெகோவாவை அறிதல்

முதல் உலகப் போருக்கு சற்று முன்பு டோரன்டோ டவுனிலிருந்த ஒரு சிறப்பங்காடியில் அப்பா வேலை பார்த்து வந்தார். அங்கிருந்த பொருட்களையெல்லாம் தூசி தட்டி, பார்ப்பவர்கள் சொக்கிவிடும் அளவுக்கு அழகாக அடுக்கிவைப்பதே அவர் வேலை. அந்தச் சமயத்தில்தான் பைபிள் சத்தியத்தை அவர் கேள்விப்பட்டார். அவரோடு வேலை பார்த்துவந்தவர்களில் இரண்டு பேர் பைபிள் மாணாக்கர்கள். (யெகோவாவின் சாட்சிகளது அந்நாளைய பெயர் அது.) அவர்கள் இருவரும் மதிய உணவு இடைவேளையில் பேசிக்கொள்ளும் விஷயத்தை இவரும் கூர்ந்து கவனிப்பார். மாலை வீடு திரும்பியதும் அம்மாவிடம் அவ்விஷயத்தைச் சொல்வார். இப்படியே நாட்கள் நகர்ந்தன. சில வருடங்கள் கழித்து, 1927-⁠ல் பைபிள் மாணாக்கர்கள் டோரன்டோவில் ஒரு பெரிய மாநாட்டை நடத்தினர். அந்த மாநாடு கனடியன் நேஷனல் எக்ஸிபிஷன் கிரவுண்ட்ஸின் மாபெரும் ஸ்டேடியத்தில் நடந்தது. அந்த ஸ்டேடியத்தின் மேற்குப்புற வாசலுக்கு அருகில்தான் எங்கள் வீடு இருந்தது. அதனால் மாநாட்டின்போது அமெரிக்காவைச் சேர்ந்த ஒஹாயோ மாகாணத்திலிருந்து வந்தவர்களில் 25 பேர் எங்கள் வீட்டில்தான் தங்கியிருந்தனர்.

அதற்குப் பிறகு, பைபிள் மாணாக்கரில் ஒருவரான ஏடா பிளெட்ஸோ என்ற சகோதரி, அடிக்கடி எங்கள் வீட்டிற்கு வந்து அம்மாவை சந்திப்பார்; பத்திரிகைகளையும் புத்தகங்களையும் கொடுத்துவிட்டுச் செல்வார். ஒருநாள் அம்மாவிடம் இப்படி கேட்டேவிட்டார்: “மிஸஸ் டன்கம், நானும் கொஞ்ச நாட்களாக பத்திரிகைகளையும் புத்தகங்களையும் உங்களிடம் கொடுக்கிறேன். அதில் எதையாவது எடுத்து வாசித்துப் பார்த்திருக்கிறீர்களா?” அம்மாவைப் பற்றித்தான் முன்னமே சொன்னேனே, அவர்கள் கடுமையாய் உழைப்பவராயிற்றே! ஆறு பிள்ளைகளை சிரமப்பட்டு வளர்த்துவந்த போதிலும், அந்தப் பத்திரிகைகளை அன்று வாசிக்க ஆரம்பித்தவர்தான், நிறுத்தவே இல்லை. நானோ அவற்றை ஏறெடுத்தும் பார்க்கவில்லை. ஏனென்றால், இசைத்துறையில் இருந்த ஈடுபாட்டால், பள்ளிப் படிப்பில் தேறுவதே பெரும்பாடாய் இருந்தது எனக்கு!

ஜூன் 1935-⁠ல் நானும் ஐலீனும் ஆங்கிலிக்கன் சர்ச்சில் திருமணம் செய்துகொண்டோம். எனக்கு 13 வயதாய் இருந்தபோதே யுனைட்டெட் சர்ச்சுக்குச் செல்வதை நிறுத்திவிட்ட பிறகு, வேறு எந்த சர்ச்சுக்கும் செல்லவில்லை. ஆகவே, திருமண ரெஜிஸ்டரில் யெகோவாவின் சாட்சி என்று கையெழுத்திட்டேன்; ஆனால் அப்போது நான் ஒரு யெகோவாவின் சாட்சியுமல்ல.

கொஞ்ச நாளுக்குப் பின் நாங்கள் பிள்ளைகளைப் பெற்றுக்கொள்ள ஆசைப்பட்டோம். ‘லட்சிய பெற்றோர்’ என்று பெயரெடுக்க எங்கள் இருவருக்குமே விருப்பம். இதற்கு என்ன வழி? பைபிளில் ‘புதிய ஏற்பாட்டை’ சேர்ந்து வாசிக்க ஆரம்பித்தோம். தவறாமல் வாசிக்க நாங்கள் எவ்வளவுதான் ஆசைப்பட்டாலும், இடையிடையே ஏதாவது வேலை வந்துவிடும். இதனால் எங்கள் பைபிள் வாசிப்பு அப்படியே பாதியில் நின்றுவிடும். கொஞ்ச நாள் கழித்து மறுபடியும் வாசிக்க ஆரம்பிப்போம்; அப்பொழுதும் அப்படியே தடைபட்டுவிடும். இந்த சமயத்தில்தான் 1935-⁠ல், கிறிஸ்மஸ் பண்டிகையின்போது எங்களைத் தேடி வந்த பரிசு சற்று வித்தியாசமாய் இருந்தது. கண்ணைக் கவரும் அந்த வண்ணக் காகிதத்தை பிரித்துப் பார்த்தவுடன் எங்களைப் பார்த்து புன்னகை பூத்தது த ஹார்ப் ஆஃப் காட் என்ற புத்தகம். “என்ன இது, உங்க அம்மா விசித்திரமான கிறிஸ்மஸ் பரிசை அனுப்பியிருக்காங்க!” என்றாள் என் மனைவி. ஆனாலும் அதை அப்படியே மூலையில் போட்டுவிடவில்லை அவள். நான் வேலைக்குப் போனபிறகு, அதை எடுத்து வாசிக்க ஆரம்பித்திருக்கிறாள்; அதிலிருந்த விஷயம் அவளுக்கு ரொம்ப பிடித்துவிட்டது. இந்த விஷயம் கொஞ்ச நாட்களுக்கு எனக்கு தெரியாமலே இருந்தது. பிள்ளைகளைப் பெற்று ஆளாக்கும் எங்கள் ஆசை பூர்த்தியாகவில்லை. ஏனென்றால், ஒன்னே ஒன்னு, கண்ணே கண்ணு என பிப்ரவரி 1, 1937-⁠ல் பிறந்த எங்கள் செல்ல மகளும் பிழைக்கவில்லை. எங்கள் மனம் கசிந்தது!

எங்கள் வாழ்க்கை இப்படி தொடர, என் குடும்பத்தார் பிரசங்க வேலையில் மிக மும்முரமாக ஈடுபட்டு வந்தனர். அந்த மாத வெளி ஊழிய இலக்கு, ஆறுதல் (இப்பொழுது விழித்தெழு!) பத்திரிகைக்கு சந்தா எடுப்பது. பாவம், என் அப்பாவுக்கு ஒரு சந்தாகூட கிடைக்கவில்லை. இதை அறிந்த நான், “அப்பா, என் பெயருக்கு ஒரு சந்தா போடுங்கள், உங்களுக்கும் ஒரு சந்தா கிடைத்ததாக இருக்கட்டும்” என்று பரிதாபப்பட்டு சொன்னேன். ஆனால், அதுவரை சொஸைட்டியின் பிரசுரங்கள் எதையுமே நான் வாசித்ததில்லை. கோடைகாலம் ஆரம்பித்தது. எங்கள் இசைக் குழு ஒரு ரிஸார்ட்டில் இசைக்கச் சென்றது. சந்தா பத்திரிகைகள் அந்த அட்ரஸுக்கு தபாலில் வர ஆரம்பித்தன. இலையுதிர்காலம் தொடங்கியவுடன் மறுபடியும் எங்கள் குழு டோரன்டோவுக்கு வந்துவிட்டது. இப்போது எங்கள் புதிய அட்ரஸுக்கு பத்திரிகைகள் வர ஆரம்பித்தன. ஆனால், அவற்றில் ஒரு பத்திரிகையின் அட்டையைக்கூட நான் பார்த்ததில்லை. தபால் உறையைப் பிரித்தால்தானே!

கிறிஸ்மஸ் விடுமுறை வந்தது. குன்றுபோல் அடுக்கி வைத்திருந்த பத்திரிகைகளையெல்லாம் மெல்ல வெளியே எடுத்தேன். பணத்தைக் கொட்டி இவ்வளவு பத்திரிகைகளை வாங்கிவிட்டு வாசிக்காதிருப்பது சரியல்ல என்று எண்ணினேன். அவை என்னதான் சொல்கின்றன என்பதை அறிந்துகொள்வதற்கு ஓரிரு பத்திரிகையையாவது எடுத்து வாசித்தே ஆகவேண்டும் என்ற தீர்மானத்துடன் ஒன்றைப் பிரித்தேன். எனக்குத் தூக்கிவாரிப்போட்டது. அந்தப் பத்திரிகை அப்போதைய அரசியல் ஊழலையும் பித்தலாட்டத்தையும் விலாவாரியாக பிட்டுப் பிட்டு வைத்தது. நான் வாசித்துவந்த விஷயங்களை அவ்வப்போது என் இசைக் குழுவில் இருக்கும் நண்பர்களிடமும் சொல்லுவேன். நான் சொல்லும் விஷயங்களை அவர்கள் நம்ப மறுத்து, விவாதித்தார்கள். என் வாதத்தில் வெற்றி பெற நிறைய விஷயங்களை தெரிந்துகொள்ள வேண்டியிருந்ததால் அதிகமாக வாசிக்க ஆரம்பித்தேன். நாளடைவில் என்னையறியாமலே யெகோவாவைப் பற்றி சாட்சி கொடுக்க ஆரம்பித்திருந்தேன். இப்படித்தான் “உண்மையும் விவேகமுமுள்ள அடிமை” வகுப்பாரால் வெளியிடப்பட்ட அரிய பைபிள் பிரசுரங்களை வாசிக்க ஆரம்பித்தேன். அப்படி ஆரம்பித்தவன்தான், அதற்குப் பிறகு நிறுத்தவே இல்லை.​—மத்தேயு 24:⁠45, NW.

வாரம் முழுவதும் வேலை வேலையென்று பம்பரமாய் சுழன்றபோதிலும், ஞாயிற்றுக்கிழமை நடந்த யெகோவாவின் சாட்சிகளின் கூட்டத்திற்கு ஐலீனுடன் போக ஆரம்பித்தேன். 1938-⁠ம் வருடத்தில் ஒரு நாள் ஞாயிற்றுக்கிழமை கூட்டத்துக்குச் சென்றபோது வயதான சகோதரிகள் இருவர் எங்களுக்கு ‘ஹலோ’ சொன்னார்கள். அவர்களில் ஒருவர் கேட்டாரே ஒரு கேள்வி: “என்ன தம்பி, அர்மகெதோன் சீக்கிரம் வரப்போகுதே! யெகோவாவுக்காக உறுதியா நிக்கிறதப் பத்தி இன்னுமா தீர்மானம் எடுக்கல?” அப்போதுதான் எனக்குள் ஒரு பொறி தெறித்தது. யெகோவாவே உண்மையான கடவுள். இதுவே அவருடைய அமைப்பு. இதில் எள்ளளவும் எனக்கு சந்தேகம் எழுந்ததில்லை. எனவே அந்த அமைப்பில் நானும் அங்கத்தினன் ஆக வேண்டும் என விரும்பினேன். கடைசியில், 1938 அக்டோபர் 15-⁠ல் முழுக்காட்டுதல் எடுத்தேன். ஆறுமாதம் கழித்து ஐலீனும் முழுக்காட்டுதல் எடுத்தாள். என் குடும்பத்தில் எல்லாருமே யெகோவாவை சேவிக்கின்றனர் என்பதை சொல்லிக்கொள்வதில் பெருமிதம் அடைகிறேன்.

கடவுளுடைய ஜனங்களோடு அறிமுகமாகி அன்னியோன்யமாய் பழகுவதில்தான் எத்தனை இன்பம்! சீக்கிரத்திலேயே அவர்களோடு ஒன்றிவிட்டேன். அதனால்தான் என்றாவது ஒருநாள் கூட்டத்திற்குப் போகாவிட்டாலும், என்ன நடந்தது என்பதை ஆர்வமாக கேட்டுத் தெரிந்துகொள்வேன். ஆரம்பத்தில் நான் குறிப்பிட்டிருந்த நிகழ்ச்சி, யெகோவாவின் சேவையில் எனக்கு திருப்புக் கட்டமாய் அமைந்தது.

எங்கள் வாழ்க்கையில் மைல்கற்கள்

செப்டம்பர் 1942-⁠ல் ஒஹாயோ மாகாணத்தில் கிளீவ்லாண்ட்டில் நடந்த நியூ வோல்ட் தியோக்ரட்டிக் அசெம்பிளிதான் நாங்கள் கலந்துகொண்ட முதல் பெரிய மாநாடு. அப்போது இரண்டாம் உலகப் போர் மும்முரமான சமயம். அந்தப் போர் முடிவடைவதற்கான அறிகுறியே கொஞ்சமும் தெரியவில்லை. அந்நிலையிலும், உவாட்ச் டவர் சொஸைட்டியின் தலைவராக இருந்த சகோதரர் நார் அனல் தெறிக்க ஒரு பொதுப் பேச்சை கொடுத்தார். அதன் தலைப்பு, “சமாதானம்​—⁠நிலைக்குமா?” என்பது. அதில், வெளிப்படுத்துதல் 17-⁠ம் அதிகாரத்திலிருந்து அவர் பேசின விஷயம் பசுமரத்தாணியாய் எங்கள் மனதில் பதிந்துவிட்டது. அந்த உலகப் போரை அடுத்து கொஞ்சக் காலம் சமாதானம் நிலவும்; அந்தக் காலப்பகுதியில் பிரசங்க வேலை பெரியளவில் நிறைவேறும் என அவர் சொன்னார்.

“யெப்தாவின் வாக்கு” என்ற பேச்சை பிரதர் நார் கொடுத்தார். இது எங்கள் நெஞ்சைத் தொட்டது. அதையடுத்து இன்னும் அதிக பயனியர்கள் தேவையென்ற அழைப்பு விடுக்கப்பட்டது. நானும் ஐலீனும் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டோம். இருவரும் ஒருமித்து, (அப்போது அநேகர் தாங்கள் பயனியராவதாக முன்வந்தனர்; அவர்களோடு சேர்ந்து) “நாங்களும் பயனியராகிறோம்!” என்று குரல் கொடுத்தோம். மிக முக்கியமான இந்த வேலைக்காக என்ன மாற்றம் செய்தாலும் தகும் என்ற முடிவுக்கு வந்தோம்.

1940, ஜூலை 4-லிருந்து கனடாவில் யெகோவாவின் சாட்சிகளது வேலை தடை செய்யப்பட்டிருந்தது. 1943, மே 1-⁠ஐ மைல்கல் என்று குறிப்பிடலாம். ஏனென்றால், அன்றுதான் நாங்கள் பயனியர் ஊழியத்தை ஆரம்பித்தோம். அப்போது வெளி ஊழியத்தில் யெகோவாவைப் பற்றி பேசுவதும் பிரசுரங்களைக் கொடுப்பதும் சட்ட விரோதமான செயல். எனவே கிறிஸ்தவர்கள் என்ற பெயரில் பைபிளை மட்டுமே வைத்துக்கொண்டு நாங்கள் எங்கள் ஊழியத்தைத் தொடர்ந்தோம். ஒன்டாரியோவிலுள்ள பாரீ சௌண்ட் என்ற ஏரியா எங்களுக்கென நியமிக்கப்பட்டது. அங்கு நாங்கள் போய்ச் சேர்ந்த சில நாட்களுக்குள் வந்து சேர்ந்தார் மற்றொரு பயனியர். அவர் பயனியர் ஊழியத்தில் கரைகண்டவர். எங்களுடன் சேர்ந்து பயனியர் ஊழியம் செய்ய அவர் அனுப்பப்பட்டிருந்தார். அவர் வந்தது எங்களுக்கு ரொம்ப நல்லதாகிவிட்டது! அவர் பெயர் ஸ்டீவர்ட் மேன். அந்த சகோதரர் பழகுவதற்கு இனிமையானவர்; புன்னகை பூத்த முகமுடையவர். நிறைய விஷயங்களை அவரிடமிருந்து கற்றுக்கொண்டோம். அவை மறக்க முடியாத நாட்கள்! நிறைய பைபிள் படிப்புகளை நாங்கள் நடத்திவந்த சமயத்தில் ஹேமில்டன் என்ற இடத்திற்கு மாற்றலானோம். கொஞ்ச நாட்களுக்குள் கட்டாயமாக ராணுவத்தில் சேர வேண்டும் என்று ஆணையிட்டார்கள். இத்தனைக்கும் அதில் சேருவதற்கான வயது வரம்பைக் கடந்தவன் நான். ராணுவத்தில் சேர மறுத்ததால் 1943, டிசம்பர் 31-⁠ல் என்னை கைது செய்தனர். வழக்கப்படியான நீதிமன்ற விசாரணைகள் எல்லாம் முடிந்த பிறகு, மற்றொரு உழைப்பாளி முகாமுக்குப் போகும்படி தீர்ப்பளிக்கப்பட்டது. அங்கு 1945 ஆகஸ்ட் வரை இருந்தேன்.

எனக்கு விடுதலை கிடைத்ததும் ஒன்டாரியோவைச் சேர்ந்த கார்ன்வால் என்ற இடத்திற்கு நானும் ஐலீனும் பயனியராக அனுப்பப்பட்டோம். விரைவிலேயே சொஸைட்டியின் லீகல் டிபார்ட்மெண்ட்டின் சார்பில் க்யுபெக் மாகாணத்திற்குச் செல்லும் விசேஷ நியமிப்பு கிடைத்தது. அது, க்யுபெக்கில் டூப்லெசி கொடி கட்டிப் பறந்த காலம்; யெகோவாவின் சாட்சிகளுக்கு எதிராக போர்க்கொடி நாட்டிய காலம். என் புதிய நியமிப்பின்படி, காவல் துறை, நீதிமன்றத் துறை சம்பந்தப்பட்ட விசாரணையில் சகோதரர்களுக்கு உதவ வேண்டும். இதற்காக அதிகம் அலைய வேண்டியிருந்தது. சில சமயங்களில் நான்கு கோர்ட்டுகளுக்குக்கூடச் செல்ல வேண்டியிருந்தது. அவை விசுவாசத்தை பலப்படுத்திய பரபரப்பான நாட்கள் என்றால் மிகையாகாது.

மறக்க முடியாத இன்னொரு அனுபவமும் எனக்குக் கிடைத்தது. 1946-⁠ம் வருடம் கிளீவ்லாண்டில் ஒரு மாநாட்டிற்குப் பின்பு, வட்டாரக் கண்காணியாகவும், மாவட்ட கண்காணியாகவும் சேவை செய்யும் வாய்ப்பைப் பெற்றேன். இதனால் நானும் என் மனைவியும் கனடா முழுவதும் பயணித்தோம். இந்த வேலையில் நாங்கள் செலவிட்ட நாட்கள் வேகமாக ஓடிவிட்டன. அதையடுத்து 1948-⁠ல் உவாட்ச் டவர் பைபிள் கிலியட் பள்ளியின் 11-வது வகுப்புக்கு எங்கள் இருவருக்குமே அழைப்பு கிடைத்தது. சகோதரர்கள் ஆல்பர்ட் ஷ்ரோடரும் மாக்ஸ்வெல் ஃபிரெண்ட்டும் எங்கள் ஆசிரியர்களுள் இருவர். எங்கள் வகுப்பில் மொத்தம் 108 மாணவர்கள். அவர்களில் 40 பேர் பரலோகத்துக்குச் செல்லும் நம்பிக்கை உடையவர்கள்! யெகோவாவை நீண்ட காலமாய் உண்மையுடன் சேவித்து வந்தவர்களுடன் சேர்ந்து படித்த பாக்கியத்தை ஒரு பொக்கிஷம் என்று சொன்னால் மிகையாகாது.

அப்பள்ளியில் படிக்கும்போது, ஒரு நாள் சகோதரர் நார் புரூக்ளினிலிருந்து வந்து ஒரு பேச்சு கொடுத்தார். அப்பேச்சின்போது 25 பேர் ஜப்பானிய மொழியைக் கற்றுக்கொள்ள முன்வரும்படி அழைப்பு விடுத்தார். பார்த்தால், 108 மாணவர்களுமே ஒருமனதாய் முன்வந்தனர். இவர்களில் யார் யாரைத் தேர்ந்தெடுப்பது என்பதே சிக்கல்! கடைசியில் அவர் ஒருவழியாக 25 பேரைத் தேர்ந்தெடுத்து விட்டார். யெகோவாதாமே இதற்கு வழிநடத்தியிருக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன், ஏனெனில் அங்கே அப்படி ஒரு ‘அறுவடை!’ ஜப்பானில் முதன்முதலாக ஆவிக்குரிய விதை விதைக்க சென்றவர்களில் அநேகர் இன்றுவரை தங்கள் முதிர்வயதிலும் அங்கு ஊழியத்தைத் தொடருகின்றனர். யெகோவாவின் சேவையில் அந்த மிஷனரிகள் அருமையான பலன்களை பரிசாக பெற்றனர்; அவர்களோடு சேர்ந்து நாமும் மகிழ்கிறோம். சகோதரர் லாய்ட் பாரியும் சகோதரி மெல்பா பாரியும் இன்னும் சிலரும் அதே மிஷனரி குரூப்பைச் சேர்ந்தவர்கள். அவர்கள் வேறு பொறுப்புகளில் மாறிச் சென்றனர். சகோதரர் லாய்ட் சென்ற வருடம் இறந்துபோனார். அதுவரை ஆளும் குழுவின் அங்கத்தினராக இருந்தார்.

கிலியட் பள்ளியின் பட்டமளிப்பு நாளும் வந்தது. ஜமைக்காவில் மிஷனரிகளாக சேவை செய்வதே எங்களுக்குக் கிடைத்த நியமனம். ஆனால் க்யுபெக்கில் நீதிமன்ற விசாரணைகளில் தொடர்ந்து உதவி தேவைப்பட்டதால் கனடாவிற்கே திரும்பி செல்லும்படி சொன்னார்கள்.

தெவிட்டாத இன்னிசை

பயனியர் சேவைக்காக இசைக்கலையை ஓரங்கட்டி வைத்திருந்தபோதிலும், அது என்னை விட்டபாடில்லை. அடுத்த வருடம் டோரன்டோவில் மேப்பில் லீஃப் கார்டன்ஸ் என்ற அரங்கத்தில் நடந்த மாநாட்டிற்கு சொஸைட்டியின் பிரஸிடென்ட்டாக பணியாற்றிய சகோதரர் நாரும் அவருடைய காரியதரிசி சகோதரர் மில்டன் ஹென்ஷலும் வந்திருந்தனர். பொதுப் பேச்சை சகோதரர் நார் கொடுத்தார். “நீங்கள் நினைப்பதைவிட காலம் எடுக்கும்!” என்ற அந்தப் பேச்சு அனைவரையும் மெய்சிலிர்க்கச் செய்தது. அந்த மாநாட்டு ஆர்க்கஸ்ட்ராவை இயக்கும் பொறுப்பு முதன்முறையாக என்னிடம் ஒப்படைக்கப்பட்டது. ராஜ்ய ஊழிய பாட்டு புத்தகம் (1944) என்ற ஆங்கில பாட்டு புத்தகத்தில் முக்கியமான சில பாடல்களுக்கு வால்ட்ஸ் (waltz) ஸ்டெப்புடன் இசை அமைத்திருந்தோம். சகோதரர்கள் மிகவும் ரசித்தனர். சனிக்கிழமை பிற்பகல் நிகழ்ச்சிநிரல் முடிந்தபிறகு, ஞாயிற்றுக்கிழமைக்கான பாடல்களை ஒத்திகை பார்த்தோம். சகோதரர் மில்டன் ஹென்ஷல் அரங்கத்தின் ஒரு பக்கத்திலிருந்து மறுபக்கமாக எங்களை நோக்கி வருவதை சட்டென்று கடைக்கண்ணால் பார்த்துவிட்ட நான், அப்படியே பாதியில் நிறுத்திவிட்டு அவரிடம் பேசுவதற்கு எழுந்து சென்றேன். “இப்போது உங்கள் ஆர்க்கஸ்ட்ராவில் எத்தனை பேர் இருக்கிறீர்கள்?” என்று கேட்டார். “எல்லாரையும் சேர்த்து மொத்தம் 35 பேர் இருப்போம்” என்றேன். “அடுத்த வருடம் நியூ யார்க்கில் இதைப்போல் இரண்டு மடங்கு ஆட்கள் இருக்கும் ஆர்க்கஸ்ட்ராவை இயக்கப்போகிறீர்கள்” என்று சொல்லிவிட்டுச் சென்றார்.

அடுத்த வருடத்திற்குள்ளாகவே புரூக்ளினுக்கு வரும்படி எனக்கு அழைப்பு வந்தது. சூழ்நிலை அனுமதிக்காததால் முதல் தடவை சென்றபோது ஐலீன் என்னுடன் வரவில்லை. அங்கு சென்றபோது, 124, கொலம்பியா ஹைட்ஸ் கட்டடம் கட்டி முடிக்கப்படாததால் பழைய கட்டடத்திலேயே ஒரு சிறிய அறையில் தங்க ஏற்பாடு செய்தனர். அந்த அறையில் பரலோக நம்பிக்கை உடைய முதிய சகோதரர்களான பேன், கார்ல் க்ளேன் ஆகியோருடன் தங்கியிருந்தேன். முதன்முறையாக அவர்களை அப்போதுதான் பார்த்தேன். ‘மூன்று பேர் ஒரு சிறிய அறையில் தங்கியிருப்பது கொஞ்சம் சிரமமாக இருக்காதா?’ என்று நீங்கள் ஒருவேளை சிந்திக்கலாம். என்ன செய்ய, சிரமம்தான்! ஆனால், எங்களுக்குப் பழகிவிட்டது. அந்த வயதான சகோதரர்கள் ரொம்ப பொறுமைசாலிகள்; எந்தச் சூழ்நிலையிலும் சகிப்புத்தன்மை காட்டுபவர்கள். நான் அவர்களுக்கு எந்த விதத்திலும் தொந்தரவு தராமல் ஒதுங்கியே இருப்பேன். ஆனால் கடவுளுடைய ஆவி எதையும் சாதிக்கும் என்ற அனுபவ பாடத்தை கற்றுக்கொண்டேன். சகோதரர் க்ளேனை சந்திக்க நேர்ந்ததாலும், அவரோடு சேர்ந்து வேலைசெய்ய முடிந்ததாலும் எனக்குக் கிடைத்த ஆசீர்வாதங்களுக்கு கணக்கே இல்லை! அவர் என்னிடம் ரொம்ப தயவாக நடந்துகொண்டார், எனக்கு உதவி செய்வதில் அவர் சளைக்கவுமில்லை. எங்கள் இருவருக்கும் நன்றாக ஒத்துப்போனது. 50 வருடங்களுக்கும் மேலாக நாங்கள் இணைபிரியா நண்பர்களாகவே இருந்திருக்கிறோம்.

யாங்கி ஸ்டேடியத்தில் 1950, 1953, 1955, 1958 ஆகிய வருடங்களில் நடந்த மாநாடுகளில் இன்னிசை இயக்குவதில் உதவும் அரிய வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அத்துடன், 1963-⁠ல் கலிபோர்னியாவைச் சேர்ந்த பசடீனாவில் உள்ள ரோஸ் பௌல் என்ற அரங்கில் நடந்த மாநாட்டில் அல் கவ்லனுடன் சேர்ந்து ஆர்க்கஸ்ட்ராவை நடத்த வாய்ப்பு கிடைத்தது. 1953-⁠ல், யாங்கி ஸ்டேடியத்தில் நடந்த மாநாட்டில் ஞாயிற்றுக்கிழமை பொதுப் பேச்சுக்கு முன்பு ஓர் இசை நிகழ்ச்சி வழங்கப்பட்டது. ஏரிக் ஃப்ராஸ்ட் என்பவர் “சாட்சிகளே முன்னேறுங்கள்!” என்ற பாடலை இயற்றினார். அந்தப் பாடலை ஏடிட் ஷீம்யானிக் என்ற சகோதரி பாடும்படி அழைத்தார். (ஏடிட் ஷீம்யானிக் பின்னர் வைகாண்ட் என்று அழைக்கப்பட்டார்) இந்த சகோதரி அந்தப் பாடலை எங்களுடைய இசையமைப்பில் உச்ச ஸ்தாயியில் பாடினார். அதற்குப் பிறகு கேட்போரை சுண்டியிழுக்கும் இனிய குரலில், நம் ஆப்பிரிக்க சகோதர சகோதரிகள் பாடுவதை முதன்முறையாக கேட்ட நாங்கள் அப்படியே சொக்கிப் போனோம். அதன்பின் ஜாம்பியா என அழைக்கப்படும் வட ரோடீஷியாவிலிருந்து வந்த பதிவு செய்யப்பட்ட ஓர் அருமையான பாடலை மிஷனரி ஆர்னட் எங்களுக்குப் போட்டுக் காட்டினார். அந்த இசை எங்கள் காதுகளில் தேனாய் இனித்தது. அத்துடன் அரங்கு முழுவதையும் ஆக்கிரமித்திருந்தது.

1966 பாட்டுப் புத்தகத்திற்கு இசையமைத்தல்

“உங்கள் இருதயத்தில் கர்த்தரைப் பாடிக் கீர்த்தனம்பண்ணிக் கொண்டிருங்கள்” என்ற தலைப்பில் வெளிவந்த பிங்க் நிற ஆங்கில பாட்டுப் புத்தகம் உங்களுக்கு நினைவிருக்கிறதா? இது தயாரித்து முடிக்கப்படும் தறுவாயில் சகோதரர் நார் இவ்வாறு சொன்னார்: “நாம் இப்போ ரெக்கார்டிங் செய்யணும். ஓர் ஆர்க்கஸ்ட்ரா குழுவை ரெடி பண்ணுங்க; அதில் சில வயலின்களும் ஓரிரு புல்லாங்குழல் இசையும் இருக்கும்படி பார்த்துக்கோங்க. ஆனா யாரும் ‘எக்காளம் ஊத வேண்டாம்!’” என்று நகைச்சுவையாக கூறினார்; ஆங்கிலத்தில் அந்த சொற்றொடருக்கு இரண்டு அர்த்தம் இருந்ததே நகைச்சுவைக்குக் காரணம். பெத்தேலில் இருந்த ராஜ்ய மன்றத்தையே ஆடியோ ரெக்கார்டிங் அறையாக பயன்படுத்தினோம். ஆனால் அதை அவ்வாறு பயன்படுத்துவதில் சிக்கல்கள் இருந்தன. பொதுவாக ரெக்கார்டிங் செய்வதற்கான வசதி அங்கிருக்கவில்லை. ஏனெனில் அந்தச் சுவர்கள், டைல்கள் பதித்த தரை, உலோக நாற்காலிகள் அனைத்தும் சேர்ந்து இசைக் கருவிகளின் இசையை எதிரொலிக்கச் செய்தன. முகத்தைச் சுளிக்க வைக்கும் இந்த எதிரொலி பிரச்சினையை எப்படி சமாளிப்பது? அப்போது யாரோ குரல் கொடுத்தார்கள்: “டாமீ மிஷல் இருக்காரே! அவர் ஏபிசி நெட்வொர்க் ஸ்டூடியோவில் பணியாற்றி வருகிறார். அவர் நிச்சயம் உதவுவார்.” சகோதரர் மிஷலை அணுகினோம். அவரும் உடனே உதவிக்கரம் நீட்டினார்.

அன்று, ரெக்கார்டிங் செய்யவேண்டிய தினமான முதல் சனிக்கிழமை. ஒவ்வொருவராக அறிமுகப்படுத்தப்படுகையில் சகோதரர்களில் ஒருவர் கையில் டிராம்போன் இசைக்கருவி இருந்ததைப் பார்த்துவிட்டேன்! யாரும் ‘எக்காளம் ஊத வேண்டாம்!’ என்று சகோதரர் நார் கொடுத்த எச்சரிக்கை என் மனக் காதுகளில் ரீங்காரமிட்டது. என்னடா செய்வது என்று கையைப் பிசைந்து கொண்டிருந்தேன். அதைக் கொண்டு வந்த சகோதரர் வேறு யாருமில்லை, டாம் மிஷல்தான்! அவர் அந்த உறையிலிருந்து டிராம்போனை விடுவித்து அதன் U-வடிவ குழாயைப் பொறுத்தி, மெல்ல இசைத்துப் பார்த்தார். ஓரிரு சுரத்தை இசைக்கும்போதே எங்கள் காதுகளில் தேன் பாய்ந்தது போலிருந்தது. அவர் அப்படி பவ்யமாக வாசிப்பதைக் கேட்டபோது ஏதோ வயலின் இசையைக் கேட்பது போலவே இருந்தது! ‘இந்த பிரதரை விட்டுவிடக் கூடாது!’ என்று நான் சங்கல்பம் செய்து கொண்டேன். சகோதரர் நார் அதற்கு எதிர்ப்புக் குரல் கொடுக்கவும் இல்லை.

அந்த ஆர்க்கஸ்ட்ராவில் இருந்த சகோதர சகோதரிகள் அத்தனை பேரும் ‘மணி’ தான். அதே சமயத்தில் அவர்கள் அன்பானவர்களும்கூட. அவர்களில் யாராலும் எந்தப் பிரச்சினையும் வரவில்லை. ஒரு வழியாக கஷ்டப்பட்டு ரெக்கார்டிங் செய்து முடித்தோம். ஆனால் எந்தவிதத் தடையுமின்றி சுமுகமாக முடிந்துவிட்டது. ரெக்கார்டிங் வேலை முடிந்ததும் எங்கள் கண்கள் குளமாயின. ஏனெனில் எங்கள் குரூப்பிலிருந்தவர்களுக்கு மத்தியில் அத்தனை அன்னியோன்யம்! அதை இப்போது நினைத்தாலும் இதமளிக்கிறது. நாங்கள் அனைவருமே அந்தச் சந்தர்ப்பத்தை அனுபவித்து மகிழ்ந்தோம். அந்தப் பெரிய வேலை இனிதே முடிந்ததற்கு யெகோவா தேவனே காரணம்.

இன்னும் இனிய வாய்ப்புகள்

இத்தனை வருடங்கள் உருண்டோடிய பின்பும், இன்னும் நான் முழுநேர ஊழியம் செய்கிறேன். இவ்வருடங்களில் மொத்தம் 28 வருடங்கள் வட்டார, மாவட்ட பயணக் கண்காணியாக சேவித்திருக்கிறேன். அவை அனைத்துமே நெஞ்சை விட்டு நீங்காத அனுபவங்கள். அத்துடன், ஒன்டாரியோவிலிருந்த நார்வல் அசெம்பிளி ஹாலை ஐந்து ஆண்டுகளாக நிர்வாகம் செய்தேன். சனி, ஞாயிறு வந்தால் போதும், தவறாமல் வட்டார மாநாடு நடக்கும்; வேற்று மொழியில் மாவட்ட மாநாடுகளும் நடக்கும். இதனால் எனக்கும் ஐலீனுக்கும் ஓயாத வேலை இருக்கும். 1979/80-களில் கட்டிடக் கலைஞர்களும் எஞ்ஜினியர்களும் இந்த அசெம்பிளி ஹாலில் தங்கி, ஹால்டன் ஹில்ஸ் என்ற இடத்தில் கட்டப்படவிருந்த சொஸைட்டியின் கிளை அலுவலகத்திற்கான வரைபட வேலைகளைக் கவனித்து வந்தனர். அந்த அசெம்பிளி ஹாலை கவனித்துக்கொள்ளும் பொறுப்பு முடிந்தது; பிறகு புரூக்ளினில் இசையமைப்பு சம்பந்தப்பட்ட வேலைகளில் 1982 முதல் 1984 வரை பங்கேற்றேன்.

உயிருக்கு உயிரான என் மனைவி, 1994, ஜூன் 17 அன்று இறந்துவிட்டாள். அதற்கு ஏழு நாட்களுக்கு முன்புதான் எங்களுடைய 59-வது திருமண நாளை கொண்டாடினோம். நாங்கள் இருவரும் சேர்ந்து பயனியர் சேவையில் முழுமூச்சாய் ஈடுபட்டது 51 வருடங்கள்.

வாழ்க்கையில் எனக்குக் கிடைத்த அனுபவங்களையெல்லாம் சற்று அசைபோட்டுப் பார்த்தால், பைபிள் எந்தளவுக்கு என் வாழ்க்கைப் பாதைக்கு வழிகாட்டும் தீபமாய் இருந்திருக்கிறது என்று புரிகிறது. சில சமயங்களில் ஐலீனின் பைபிளைப் புரட்டிப் பார்த்து மகிழ்வதுண்டு. அங்கங்கே அவள் கோடு போட்டு வைத்திருப்பாள். அவை அனைத்தும் அவளைத் தொட்ட வசனங்கள், வாக்கியங்கள், வார்த்தைகள்! அதைப் போலவே என் இதயத்தைத் தொட்ட வசனங்களும் அநேகம் உள்ளன. அவற்றில் ஒன்று, 137-வது சங்கீதம். யெகோவாவுக்கு ஏறெடுக்கப்படும் அந்த உருக்கமான விண்ணப்பமாவது: ‘எருசலேமே நான் உன்னை மறந்தால் என் கை சுரமண்டலத்தை மீட்டும் தொழிலை மறப்பதாக. நான் உன்னை நினையாமலும், எருசலேமே என் மகிழ்ச்சி என்பதை எண்ணாமலும்போனால், நான் பாட முடியாமல் போவதாக.’ (சங்கீதம் 137:5, 6, டுடேஸ் இங்லீஷ் வர்ஷன்) எனக்கு இசை என்றால் வெல்லக்கட்டிதான். ஆனாலும் யெகோவாவை நான் உண்மையுடன் சேவிப்பதில் இருக்கும் இன்பம் இருக்கிறதே, அதுதான் அதைவிடப் பெரிது. என் வாழ்க்கையில் யெகோவாவுக்கு உத்தமமாய் சேவை செய்ததில் கிடைத்த ஆனந்தமே என்னை பரவசமடையச் செய்கிறது. எந்தக் குறையுமில்லாமல், திருப்தியாக வாழ்ந்து வருகிறேனென்றால், அது யெகோவா எனக்கு அள்ளித் தந்த பொக்கிஷம் என்பேன்!

[அடிக்குறிப்பு]

a யெகோவாவின் சாட்சியாக ஒருவர் முழுக்காட்டப்படுவதற்கு முன்பே புகைபிடிக்கும் பழக்கத்தை விட்டுவிட வேண்டும் என்பதை பின்னர் வந்த ஆங்கில காவற்கோபுரம், ஜூன் 1, 1973 வெளியீடு விளக்கியது.

[பக்கம் 28-ன் படம்]

1947-⁠ல் ஐலீனுடன்

[பக்கம் 30-ன் படம்]

முன்பு ரெக்கார்டிங் செய்தபோது