Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பில்லிசூனியம்—நீங்கள் அறிந்தவை

பில்லிசூனியம்—நீங்கள் அறிந்தவை

பில்லிசூனியம்—நீங்கள் அறிந்தவை

பில்லிசூனியம் என்றதும் உங்கள் மனதிற்கு வருவது என்ன?

மூட நம்பிக்கை, கற்பனை கதை—இவற்றின் கலவையே பில்லிசூனியம் என பெரும்பாலானோர் கருதுகின்றனர். இதையெல்லாம் அவர்கள் ரொம்ப சீரியஸாக எடுத்துக்கொள்வதில்லை. இவர்களுக்கெல்லாம் பில்லிசூனியம் என்பது வெறும் கற்பனையே, அதாவது தொளதொளவென்ற அங்கியில் உலா வரும் சூனியக் கிழவிகள், கொப்பரையிலுள்ள மந்திர தண்ணீர் கொதிக்கையில் வௌவால் இறக்கைகளைப் போடுவது; மனிதரை தவளையாக்குவது; அவர்களுக்கே உரிய அழகிய ரதமான துடைப்பக்கட்டையில் பவ்வியமாய் அமர்ந்து இரவுநேர வானில் கொக்கரித்துக்கொண்டே பவனி வருவது; இவை தவிர வேறொன்றும் பெரிய விஷயமில்லை.

மற்றவர்களுக்கோ இது வேடிக்கையான விஷயமல்ல. சூனியக்காரர்கள் நிஜமான ஆட்களே என உலக மக்கள் தொகையில் ஐம்பது சதவீதத்திற்கு அதிகமானோர் நம்புகின்றனர்; அவர்கள் மற்றவர்களின் வாழ்க்கையை பாதிக்க முடியும் எனவும் நம்புகின்றனர்; இது சில ஆய்வாளர்களின் கணிப்பு. மறுபட்சத்தில், பில்லிசூனியம் ஆபத்தானது, அச்சந்தருவது, தீங்கானது என கோடிக்கணக்கானோர் நம்புகின்றனர். உதாரணமாக, ஆப்பிரிக்க மதத்தைப் பற்றி ஒரு புத்தகம் இவ்வாறு குறிப்பிடுகிறது: “மாயவித்தை, மாந்திரீகம், பில்லிசூனியம் ஆகியவை தீங்கானவை என்பது ஆப்பிரிக்க சமுதாயத்தினரின் மனதில் ஆழமாக பதிந்திருந்தது. . . . சூனியக்காரர்களும் மாந்திரீகர்களும் சமுதாயத்தில் மிகவும் வெறுக்கப்பட்டார்கள். இன்றும்கூட அதுபோன்ற பழக்கவழக்கங்களில் ஈடுபடுகிறவர்களை மக்கள் எல்லாரும் சேர்ந்து அடித்தே கொல்லும் இடங்களும் சந்தர்ப்பங்களும் உள்ளன.”

ஆனால் மேலை நாடுகளிலோ பில்லிசூனியம் புதிய உருவெடுத்து மரியாதை எனும் முகமூடிக்குள்ளிருந்து எட்டிப்பார்க்கிறது. புத்தகங்கள், டெலிவிஷன், திரைப்படங்கள் யாவும் பில்லிசூனிய பயத்தைப் போக்கியிருக்கின்றன. பொழுதுபோக்கு ஆய்வாளர் டேவிட் டேவிஸ் குறிப்பிடுகிறார்: “திடீரென்று சூனியக்காரிகளுக்கு இளமை திரும்பிவிட்டது; நிஜமாகவே கவர்ச்சி நங்கைகளாகி விட்டனர். மாறிவரும் உலகில் அதிக கவனம் செலுத்தும் ஹாலிவுட் தன் கெட்டிக்காரத்தனத்தைக் காட்டி வருகிறது. . . . சூனியக்காரிகளை கவர்ச்சியாக்கி, பார்ப்பவருடைய பிரியத்தை சம்பாதித்து வருகிறது. இவர்களில் பெண்களும் சிறு குழந்தைகளும் அடங்குவர்.” எந்தவொரு புதுப் பாணியையும் பணம் கொட்டும் திட்டமாக மாற்றுவதில் ஹாலிவுட் ‘கில்லாடி.’

ஐக்கிய மாகாணங்களில் மிக வேகமாக வளர்ந்து வரும் ஆன்மீக இயக்கங்களில் ஒன்று பில்லிசூனியம் என்று சிலர் கூறுகிறார்கள். வளர்ச்சியடைந்த நாடுகள் முழுவதிலும் பெண்ணுரிமை இயக்கங்களால் தூண்டப்பட்டவர்களும் மதப்பற்று இல்லாதவர்களும் பெருமளவில் அதிகரித்து வருகிறார்கள். அவர்கள் தங்களுடைய ஆன்மீக தாகத்தைத் தீர்க்க வித்தியாசமான பில்லிசூனிய முறைகள் பலவற்றை நாடுகிறார்கள். சொல்லப்போனால் “சூனியக்காரி” என்ற வார்த்தையின் அர்த்தத்தில்கூட அத்தனை கருத்துவேறுபாடுகள் இருக்குமளவுக்கு எண்ணற்ற பில்லிசூனிய முறைகள் இருக்கின்றன. இருந்தாலும், சூனியக்காரர்கள் என்று சொல்லிக்கொள்பவர்கள் விக்கா (Wicca) என அறியப்படுகிறார்கள். அவர்களைப் பற்றி ஓர் அகராதி இவ்வாறு விளக்கம் அளித்தது: “மேற்கத்திய ஐரோப்பாவில் கிறிஸ்தவத்திற்கு முன் வேரூன்றியிருந்த, இயற்கையை வணங்கும் புறமதமே 20-ம் நூற்றாண்டில் மறுமலர்ச்சி அடைந்து வருகிறது. a ஆகவே அநேகர் தங்களை புறமதத்தினராக அல்லது புதிய புறமதத்தினராக சொல்லிக் கொள்கிறார்கள்.

சரித்திர ஏடுகளை கொஞ்சம் புரட்டி பார்க்கும்போது சூனியக்காரிகளுக்கு எப்போதுமே ‘கறுப்புக் கொடிதான்’ காட்டப்பட்டு வந்திருக்கிறது. அவர்கள் அறவே வெறுக்கப்பட்டிருக்கிறார்கள். துன்புறுத்தப்பட்டிருக்கிறார்கள், சித்திரவதை செய்யப்பட்டிருக்கிறார்கள், கொலையும் செய்யப்பட்டிருக்கிறார்கள். ஆனால் இன்றோ அந்த நிலை மாறி அதன் முழு உருவமும் திரைக்கு வெளியே வந்துவிட்டது. பில்லிசூனியத்தில் ஈடுபாடுள்ளவர்கள் அதன் அந்தஸ்தை உயர்த்த தங்களாலானதை செய்ய அதிக ஆர்வமுள்ளவர்களாக இருக்கிறார்கள். ஒரு சுற்றாய்வின்போது, பல சூனியக்காரிகளிடம் அவர்கள் பொது மக்களுக்கு என்ன விஷயத்தை மிக முக்கியமாக சொல்ல விரும்புகிறார்கள் என்று கேட்கப்பட்டது. அவர்களுடைய பதிலை ஆய்வாளர் மார்கோ ஆல்டர் சுருக்கமாக இவ்வாறு கூறினார்: “நாங்கள் ஒன்றும் கெட்டவர்களில்லை. நாங்கள் பிசாசை வணங்குவதில்லை. நாங்கள் ஜனங்களுக்கு தீங்கு செய்வதோ அவர்களை மோசடி செய்வதோ இல்லை. நாங்கள் ஆபத்தானவர்களல்ல. நாங்களும் உங்களைப் போன்ற சாதாரண மனிதர்தான். எங்களுக்கும் குடும்பம், வேலை, ஆசாபாசங்கள், கற்பனைகள் எல்லாம் உண்டு. நாங்கள் எங்கள் நம்பிக்கைகளில் வெறிப்பிடித்தவர்கள் அல்ல. நாங்கள் வினோதமானவர்கள் இல்லை. . . . நீங்கள் எங்களைப் பார்த்து பயப்பட வேண்டாம். . . . நீங்கள் நினைக்கிற மாதிரியில்லை, நாங்களும் உங்களைப் போன்றவர்கள்தான்.”

அவர்களுடைய பதில் வெகுவாக ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது. அப்படியானால், பில்லிசூனிய பழக்கத்தைப் பற்றி கவலைப்பட வேண்டியதே இல்லை என்றா அர்த்தம்? பின்வரும் கட்டுரையில் இக்கேள்விக்கான பதிலை கவனிக்கலாம்.

[அடிக்குறிப்புகள்]

a “விச்கிராஃப்ட்” என்ற இந்த ஆங்கில வார்த்தை பழங்கால ஆங்கில வார்த்தையிலிருந்து வருகிறது. “விக்கி” என்ற வார்த்தை சூனியக்காரிகளையும் “விக்கா” என்ற வார்த்தை சூனியக்காரர்களையும் குறிக்கிறது.