Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

கோபத்தின் கால்தடங்கள்

கோபத்தின் கால்தடங்கள்

கோபத்தின் கால்தடங்கள்

ஃபாஸ்ட் ஃபுட் கடையில் சான்ட்விச் ஆர்டர் செய்துவிட்டு காத்திருக்கிறார் ஒருவர். லேட் ஆனதும் அவருக்கு ‘குப்’ என்று கோபம் ஏறுகிறது. கடைக்குள் போய் அந்த ஆளை மிரட்டி, கவுன்ட்டரோடு பிடித்துத் தள்ளி, ஓங்கி ஓர் அறைவிடுகிறார். பிறகு சான்ட்விச்சை அவரிடமிருந்து பிடுங்கிக்கொண்டு வெளியேறுகிறார்.

அவ்வப்போது எல்லாருக்குமே கோபம் வரும். சொல்லப்போனால், அன்பு, நம்பிக்கை, கவலை, துக்கம், பயம் போன்ற உணர்ச்சிகளைப் போல கோபமும் ஓர் உணர்ச்சியே. கோபத்தைக் கட்டுக்குள் வைத்து அதைச் சரியான விதத்தில் வெளிக்காட்டுவது நல்லதுதான். உதாரணத்திற்கு, ஒருவர் தன் தீர்மானத்தில் உறுதியாய் இருக்க, தடைகளைத் தாண்ட, பிரச்சினைகளைச் சமாளிக்க கோபம் உதவுகிறதென்றால் அது நல்லதுதான்.

அதே சமயம், கோபத்திற்கு ஓர் இருண்ட பக்கமும் இருக்கிறது. சிலருக்கு சட்டென கோபம் வரும், தொட்டதெற்கெல்லாம் வரும், அதுவும் சுள்ளென்று வரும். எரிச்சல் வந்துவிட்டால், அமில வார்த்தைகளை அள்ளி வீசுவார்கள், அடிதடியில் இறங்குவார்கள். கோபத்தை அவர்கள் அடக்குவதற்குப் பதிலாக கோபம் அவர்களை அடக்கி விடும். இப்படிப்பட்ட அத்துமீறிய கோபம், ஆபத்தானது; ஒருவருடைய வாழ்க்கையையே பாழாக்கும் அளவுக்குக் கொடியது. ஆம் மனதை, உணர்ச்சியை, நடத்தையை, உறவுகளை காயப்படுத்திவிடும்.

கோபக்காரர்கள் தங்களுக்கு மட்டுமல்ல மற்றவர்களுக்கும் சங்கடத்தை உண்டாக்குகிறார்கள். இவர்கள் சாதாரண விஷயத்திற்கெல்லாம் எரிமலையாய் வெடித்து, பயங்கரமான விளைவுகளை ஏற்படுத்திவிடுகிறார்கள். கோபத்தின் சில கால்தடங்கள் இதோ:

நண்பர்கள் சிலர் சந்தடிமிக்க சாலையில் சென்றுகொண்டிருந்தார்கள். அப்போது அவர்களில் ஒருவருடைய ஸ்போர்ட்ஸ் பை யாரோ ஒருவன்மேல் இடித்துவிட்டது, கோபத்தில் கண்மண் தெரியாமல் அவன் சுட்டுவிட்டான். அது அந்த நண்பர்களில் ஒருவருடைய கழுத்தைப் பதம் பார்த்துவிட்டது.

ஒரு சின்ன விஷயத்திற்காக 19 வயது இளைஞன் தான் கல்யாணம் செய்யப்போகும் பெண்ணின் 11 மாதக் குழந்தையைக் கொன்றுவிட்டான். கொலைவெறியைத் தூண்டும் வீடியோ கேம்ஸை அவன் விளையாடிக்கொண்டிருந்தபோது அந்தக் குழந்தை ஏதோவொரு பட்டனை அழுத்திவிட, அந்த விளையாட்டு வீணாய்போய் விட்டதாம்.

இப்போதெல்லாம் கோப வெறிபிடித்தவர்கள் அதிகரித்து வருவதை உலகெங்குமிருந்து வரும் இதுபோன்ற அறிக்கைகள் காட்டுகின்றன. இதற்குக் காரணம் என்ன? (g12-E 03)

[பக்கம் 3-ன் பெட்டி]

கோபமும் ஓர் உணர்ச்சியே. அதை அடக்கி வாசித்தால் பாதுகாப்பு, அவிழ்த்துவிட்டால் ஆபத்து. கெட்ட கோபத்தால் நாம் மட்டுமல்ல மற்றவர்களும் பாதிக்கப்படுவார்கள்; ஆம், மனமும், உடலும் ஆன்மீகமும் கெட்டுவிடும். இதைப் பற்றியே இந்தக் கட்டுரைகள் விளக்குகின்றன.