Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

நல்ல நண்பர்களைத் தேட வேண்டுமா?

நல்ல நண்பர்களைத் தேட வேண்டுமா?

இளைஞர் கேட்கின்றனர்

நல்ல நண்பர்களைத் தேட வேண்டுமா?

“நான் கோபமா இருக்கிறப்போ என் ‘ஃபீலிங்ஸ’ யாரிடமாவது கொட்டணும். இல்லைன்னா என் தலையே வெடிச்சிடும். நான் கவலையா இருக்கிறப்போ, யாராவது வந்து என்னை சமாதானப்படுத்தணும். நான் சந்தோஷமா இருக்கிறப்போ அதை யார்கிட்டேயாவது பகிர்ந்துக்கணும்.. மொத்தத்தில எனக்கு ஃபிரெண்ட்ஸ் வேணும்.”​—⁠ பிரிட்டனி.

சின்ன குழந்தைகளுக்குக் கூடசேர்ந்து விளையாட ஆள் இருந்தால் போதும், ஆனால் பதின்வயதினருக்கு நண்பர்கள் தேவை. இதில் என்ன வித்தியாசம்?

கூடசேர்ந்து விளையாட ஆள் இருந்தால் நேரம் போகும், அவ்வளவுதான்.

நண்பர்கள் இருந்தாலோ, சுக துக்கங்களைப் பகிர்ந்துகொள்ளலாம்.

“நண்பன் எல்லா சமயங்களிலும் அன்பு காட்டுவான்; இடுக்கணில் உதவுகிற சகோதரனைப் போலவும் இருக்கிறான்” என்று பைபிளும் சொல்கிறது. (நீதிமொழிகள் 17:​17, NW) இங்கே சொல்லப்பட்டுள்ள நட்பு, விளையாட்டு மைதானத்தில் ஆரம்பித்து அங்கேயே முடிவடைகிற ‘ஹாய்-பை’ நட்பு அல்ல, இது ஆத்மார்த்தமான நட்பு, ஆழமான நட்பு!

நிஜம்: நீங்கள் பெரியவர்களாக வளருகையில்,

(1) மெச்சத்தக்க குணங்கள் உள்ள. . .

(2) உயர்ந்த நெறிகள் உள்ள. . .

(3உங்களை நல்வழியில் நடத்துகிற. . . நண்பர்கள் உங்களுக்குத் தேவை.

கேள்வி: உங்கள் நண்பர்கள் இந்தத் தகுதிகளைப் பூர்த்தி செய்வார்களா? எப்படித் தீர்மானிப்பது? இவற்றை ஒவ்வொன்றாகச் சிந்திப்போம்.

நட்புக்கு இலக்கணம் #1​—⁠மெச்சத்தக்க குணங்கள்

நீங்கள் அறிந்துகொள்ள வேண்டியவை. நண்பன் என்று சொல்லிக்கொள்கிற எல்லாரும் நண்பன் அல்ல. “கேடுவிளைவிக்கும் நண்பர்களும் உண்டு” என்று பைபிள் எச்சரிக்கிறது. (நீதிமொழிகள் 18:​24, பொது மொழிபெயர்ப்பு) ‘யாராவது அப்படி இருப்பார்களா?’ என நீங்கள் கேட்கலாம். ஆனால், கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்: எந்த “நண்பனாவது” உங்களைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்தியிருக்கிறானா? உங்கள் முன்னால் சிரித்துப் பேசிவிட்டு, பின்னால் போய் இல்லாததையும் பொல்லாததையும் சொல்லியிருக்கிறானா? இப்படிப்பட்ட அனுபவங்கள் உங்களுக்கு இருந்தால் நண்பன்மீது நீங்கள் வைத்திருந்த நம்பிக்கையெல்லாம் சிதைந்து போயிருக்கலாம். * நண்பர்களைப் பொறுத்தவரை ஒன்றை மட்டும் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்: உங்களுக்கு எத்தனை நண்பர்கள் இருக்கிறார்கள் என்பது முக்கியமல்ல, எப்படிப்பட்ட நண்பர்கள் இருக்கிறார்கள் என்பதுதான் முக்கியம்!

நீங்கள் செய்ய வேண்டியவை. நல்ல குணம் படைத்தவர்களை உங்கள் நண்பர்களாகத் தேர்ந்தெடுங்கள்.

“என்னோட ஃபிரெண்ட் ஃபியோனாவை எல்லாருக்கும் ரொம்பப் பிடிக்கும், அவளை எல்லாரும் மெச்சிப் பேசுவாங்க. நானும் அவளை மாதிரியே நல்ல பேரு வாங்கணும்னு நெனைக்கிறேன். என்னையும் எல்லாரும் மெச்சிப் பேசணும்னு ஆசப்படறேன்.”​—⁠ஈவெட், 17

இதைச் செய்துபாருங்கள்.

1. கலாத்தியர் 5:​22, 23-⁠ஐ வாசியுங்கள்.

2. ‘என் நண்பர்கள் “ஆவியின் கனி”யை வளர்த்திருக்கிறார்களா?’ என்று கேட்டுக்கொள்ளுங்கள்.

3. உங்கள் நெருங்கிய நண்பர்களின் பெயர்களைக் கீழே எழுதுங்கள். ஒவ்வொரு பெயருக்குப் பின்பும் அவர் எதற்குப் பேர்போனவர் என்று எழுதுங்கள்.

பெயர் எதற்குப் பேர்போனவர்

..... .....

..... .....

..... .....

கவனத்திற்கு: அவர்களுடைய மோசமான குணங்கள்தான் உங்கள் கண்முன் வருகிறதென்றால் நல்ல நண்பர்களை நீங்கள் தேட வேண்டும் என்று அர்த்தம்!

நட்புக்கு இலக்கணம் #2உயர்ந்த நெறிகள்

நீங்கள் அறிந்துகொள்ள வேண்டியவை. நண்பர்களைத் தேர்ந்தெடுப்பதில் நீங்கள் ரொம்ப அவசரப்பட்டால், கடைசியில் கெட்ட நண்பர்கள்தான் வாய்ப்பார்கள். “மூடருக்குத் தோழனோ நாசமடைவான்” என்கிறது ஒரு பைபிள் பொன்மொழி. (நீதிமொழிகள் 13:20) இங்கு ‘மூடர்’ என்பது அறிவில்லாதவர்களைக் குறிப்பதில்லை. மாறாக, நல்ல புத்திமதியை ஒதுக்கித் தள்ளிவிட்டு, நெறி தவறிய பாதையில் செல்கிறவர்களைக் குறிக்கிறது. உங்களுக்கு இப்படிப்பட்ட நண்பர்கள் இருப்பதைவிட இல்லாமல் இருப்பதே மேல்!

நீங்கள் செய்ய வேண்டியவை. உங்களை ஏற்றுக்கொள்கிற எல்லாரோடும் நண்பராகி விடாமல், நல்ல நண்பர்களாகப் பார்த்துத் தேர்ந்தெடுங்கள். (சங்கீதம் 26:4) அதற்காக நீங்கள் பாரபட்சமாக நடந்துகொள்ள தேவையில்லை. மாறாக ‘நீதிமானுக்கும் துன்மார்க்கனுக்கும், தேவனுக்கு ஊழியம் செய்கிறவனுக்கும் அவருக்கு ஊழியம் செய்யாதவனுக்கும் இருக்கிற வித்தியாசத்தை’ கண்டுகொண்டு அதன் அடிப்படையில் நண்பர்களைத் தேர்ந்தெடுங்கள்.​—மல்கியா 3:⁠18.

கடவுள் பாரபட்சம் பார்ப்பவர் அல்ல. ஆனால், ‘யார் தம்முடைய கூடாரத்தில் தங்க’ வேண்டும் என்பதை அவர் தேர்ந்தெடுக்கிறார். (சங்கீதம் 15:1–5) நீங்களும் அப்படியே செய்யலாம். உயர்ந்த நெறிகளின்படி நீங்கள் வாழ்ந்தால், உங்களை மாதிரியே நடக்க முயலுகிறவர்கள் உங்களைத் தேடிவருவார்கள். அவர்கள்தான் உங்களுக்கு மிகவும் நல்ல நண்பர்களாக இருப்பார்கள்!

“நண்பர்களைத் தேர்ந்தெடுக்க அப்பா அம்மா எனக்கு ரொம்ப உதவி செய்தாங்க. என் வயசு நண்பர்களை, அதுவும் கடவுள் பக்தியுள்ளவர்களை, தேர்ந்தெடுக்க உதவி செய்தாங்க. அதுக்காக இன்னைக்கும் நான் அவங்களுக்கு ரொம்ப நன்றியுள்ளவனா இருக்கேன்.”​—⁠கிறிஸ்டோஃபர், 13.

இதைச் செய்துபாருங்கள்.

இந்தக் கேள்விகளுக்கு உங்கள் பதில்:

◼ஏதாவது தப்புத்தண்டா செய்ய என் நண்பர்கள் என்னைக் கட்டாயப்படுத்துவார்களோ என்று நினைத்து எப்போதும் பயப்படுகிறேனா?

ஆம்இல்லை

◼என் நண்பர்களைப் பார்த்தால் அப்பா அம்மா என்ன சொல்வார்களோ என்று பயந்து அவர்களை அறிமுகப்படுத்த தயங்குகிறேனா?

ஆம்இல்லை

கவனத்திற்கு: உங்கள் பதில் ‘ஆம்’ என்றால், உயர்ந்த நெறிகளைக் கடைப்பிடிக்கிற நண்பர்களைத் தேடுங்கள். முதலாவதாக, உங்களைவிட வயதில் சற்று பெரியவர்களை, பைபிள் நெறிகளுக்கு இசைய வாழ்கிறவர்களைத் தேர்ந்தெடுக்கலாமே?

நட்புக்கு இலக்கணம் #3நல்ல முன்மாதிரி

நீங்கள் அறிந்துகொள்ள வேண்டியவை. “தீய நண்பர்கள் நல்ல பழக்கங்களைக் கெடுப்பார்கள்.” (1 கொரிந்தியர் 15:​33, ஈஸி டு ரீட் வர்ஷன்) இதைக் குறித்து லாரன் சொல்வதாவது: “என் ஸ்கூல் பொண்ணுங்க போடுற தாளத்துக்கெல்லாம் நான் ஆடினப்போ என்னை ஏத்துக்கிட்டாங்க. நானும் தனிமையில வாடிட்டு இருந்ததால அவங்க சொல்றபடியெல்லாம் செஞ்சேன்.” லாரென் சொல்வது உண்மைதான். மற்றவர்களுடைய வழிக்கு நீங்கள் இசைந்து போனால், செஸ் விளையாட்டில் உள்ள காயைப் போல் ஆகிவிடுவீர்கள். அவர்கள் இஷ்டப்படி உங்களை நகர்த்துவார்கள். ஆனால், நீங்கள் ஏன் அதற்கு இடம்கொடுக்க வேண்டும்?

நீங்கள் செய்ய வேண்டியவை. தங்கள் வழிக்கு நீங்கள் வரவேண்டும் என்று நினைப்பவர்களுடன் உங்களுக்கு இருக்கும் சகவாசத்தை அடியோடு நிறுத்திக்கொள்ளுங்கள். அப்புறம் பாருங்கள், உங்கள்மீது உங்களுக்கே ஒரு நல்ல அபிப்பிராயம் உண்டாகும். நல்ல நண்பர்கள் உங்களைத் தேடி வருவார்கள். உங்களை நல்வழிப்படுத்துபவர்கள் அவர்கள்தான்.​—ரோமர் 12:⁠2.

“என் நெருங்கிய நண்பன் கிளின்ட்டு எந்தப் பிரச்சினை வந்தாலும் பதட்டப்படாமல் நிதானமாகச் செயல்படுவான். அவனுக்கு ரொம்ப இளகிய மனசு. கஷ்டமான சமயங்களில் அவன் என்னை ரொம்ப ஆசுவாசப்படுத்தி இருக்கிறான்.”​—⁠ஜேசன்.

இதைச் செய்துபாருங்கள்.

இந்தக் கேள்விகளுக்கு உங்கள் பதில்:

◼என் நண்பர்களைப் பிரியப்படுத்துவதற்காக அவர்களைப் போலவே டிரெஸ் பண்ணிக்கொள்கிறேனா? பேசுகிறேனா? நடந்துகொள்கிறேனா?

ஆம்இல்லை

◼என் நண்பர்கள் பேச்சைக் கேட்டுக்கொண்டு பொதுவாக நான் போகாத இடங்களுக்கெல்லாம் போகிறேனா?

ஆம்இல்லை

கவனத்திற்கு: உங்கள் பதில் ‘ஆம்’ என்றால், ஆலோசனைக்காக உடனே உங்கள் பெற்றோரிடம் அல்லது அனுபவஸ்தரிடம் செல்லுங்கள். நீங்கள் ஒரு யெகோவாவின் சாட்சி என்றால், கிறிஸ்தவ மூப்பர் ஒருவரை அணுகி உதவி கேளுங்கள். நீங்கள் நல்வழியில் செல்ல துணைபுரியும் நண்பர்களைத் தேர்ந்தெடுக்க அவர்கள் உதவி செய்வார்கள். (g 3/09)

“இளைஞர் கேட்கின்றனர்” தொடர் கட்டுரைகளுக்கு: www.watchtower.org/ype

[அடிக்குறிப்பு]

^ தவறு செய்யாதவர்கள் யாருமே இல்லை. (ரோமர் 3:23) அதனால், நண்பர் ஒருவர் உங்கள் மனதைப் புண்படுத்திவிட்டு அதற்காக உண்மையிலேயே வருத்தம் தெரிவிக்கும்போது, “அன்பு திரளான பாவங்களை மூடும்” என்பதை மறந்துவிடாதீர்கள்.​—⁠1 பேதுரு 4:⁠8.

சிந்திப்பதற்கு

◼உங்கள் நண்பரிடம் எப்படிப்பட்ட குணங்களை எதிர்பார்ப்பீர்கள், ஏன்?

◼ஒரு நல்ல நண்பராக இருப்பதற்கு நீங்கள் எப்படிப்பட்ட குணங்களை வளர்த்துக்கொள்ள வேண்டும்?

[பக்கம் 23-ன் பெட்டி/படம்]

உங்கள் சகாக்களின் அனுபவங்கள்

எந்தக் கூட்டத்தோடு சேர வேண்டாம்னு என் அப்பா அம்மா சொன்னாங்களோ அந்தக் கூட்டத்தோடுதான் சேர ஆசைப்பட்டேன். இந்த ஆசை என் கண்ண மறச்சிடுச்சு. எப்ப அதை நான் உணர்ந்தேனோ அப்பதான் என் பெற்றோர் சொன்னதெல்லாம் சரின்னு உரைத்தது. நல்ல நண்பர்களும் இருக்காங்க என்பதையும் அப்பதான் தெரிஞ்சிக்கிட்டேன்.”​⁠ கோல்.

சபையில இருக்கிறவங்களோட சேர்ந்து ஊழியத்துக்குப் போனாத்தான் அவங்கள நல்லா தெரிஞ்சுக்க முடியும்னு நான் புரிஞ்சிகிட்டேன். அந்தச் சமயத்திலதான் பெரியவங்க, சின்னவங்கன்னு எல்லாரோடும் என்னால பழக முடியுது. அதோடு, யெகோவாவை நேசிக்கிற ஜனங்களோடு நான் நேரம் செலவிட முடியுது.”​⁠ ஈவெட்.

நல்ல நண்பர்கள் கிடைக்கணும்னு கடவுள்கிட்ட வேண்டினேன். ஆனா, என் பங்குல நான் எந்த முயற்சியும் எடுக்கலைன்னா எப்படி முடியும்னு யோசிச்சேன். அதனால, கிறிஸ்தவ கூட்டங்கள்ல நானே வலியபோய் எல்லாரிடமும் பேச ஆரம்பிச்சேன். கொஞ்ச நாளிலேயே எனக்கு நிறைய ஃபிரெண்ட்ஸ் கெடச்சாங்க. இப்பெல்லாம் நான் தனியா இருக்கிறதாகவே எனக்குத் தோணுறதில்ல.”​⁠ சாம்.

[பக்கம் 24-ன் பெட்டி]

உபயோகமான ஆலோசனைகள்

நட்பைப் பற்றி உங்கள் பெற்றோரிடம் பேசுங்கள். அவர்கள் உங்கள் வயதில் இருந்தபோது எப்படிப்பட்ட நண்பர்கள் அவர்களுக்கு இருந்தார்கள் என்று கேளுங்கள். அவர்கள் தேர்ந்தெடுத்த நண்பர்களைக் குறித்து இப்போது வருத்தப்படுகிறார்களா? அப்படியென்றால், ஏன் என்று கேளுங்கள். அவர்களுக்கு வந்த பிரச்சினைகள் உங்களுக்கும் வராமல் இருக்க என்ன செய்யலாம் என்று கேளுங்கள்.

உங்கள் நண்பர்களைப் பெற்றோருக்கு அறிமுகப்படுத்துங்கள். அப்படிச் செய்ய உங்களுக்குத் தயக்கமாக இருந்தால் ‘ஏன்?’ என்று நீங்களே யோசியுங்கள். உங்கள் பெற்றோருக்குப் பிடிக்காத ஏதாவது பழக்கம் உங்கள் நண்பர்களிடம் இருப்பதால் தயங்குகிறீர்களா? அப்படியானால், உங்கள் நண்பர்களைத் தேர்ந்தெடுப்பதில் இன்னும் கவனமாய் இருங்கள்.

[பக்கம் 24-ன் பெட்டி]

நல்ல நண்பர்களைத் தக்கவைத்துக்கொள்ள மூன்று வழிகள்

செவிகொடுத்துக் கேளுங்கள். உங்கள் நண்பரின் நலனிலும் பிரச்சினையிலும் அக்கறை காட்டுங்கள்.​—⁠பிலிப்பியர் 2:⁠4.

மன்னியுங்கள். தவறே செய்யாதவராய் இருக்க வேண்டுமென எதிர்பார்க்காதீர்கள். “நாம் எல்லாரும் அநேக விஷயங்களில் தவறுகிறோம்.”​—⁠யாக்கோபு 3:⁠2.

ரொம்பவும் உரிமை கொண்டாடாதீர்கள். அட்டை மாதிரி எப்போதும் ஒட்டிக்கொண்டே இருக்காதீர்கள். உங்களுக்கு ஏதாவது அவசரம் என்றால் உண்மையான நண்பர்கள் ஓடோடி வருவார்கள்.​—⁠பிரசங்கி 4:​9, 10.

[பக்கம் 22, 23-ன் படம்]

மற்றவர்களுடைய வழிக்கு நீங்கள் இசைந்து போனால், செஸ் விளையாட்டில் உள்ள காயைப் போல் ஆகிவிடுவீர்கள். அவர்கள் இஷ்டப்படி உங்களை நகர்த்துவார்கள்