Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பண ஆசை உங்களைப் பாடாய்ப் படுத்துகிறதா?

பண ஆசை உங்களைப் பாடாய்ப் படுத்துகிறதா?

பண ஆசை உங்களைப் பாடாய்ப் படுத்துகிறதா?

நாளைக்கே நீங்கள் செல்வந்தராக ஆகிவிட்டால் என்ன செய்வீர்கள்? வேலையைக் குறைத்துக்கொண்டு வாழ்க்கையை அனுபவிக்கத் தொடங்குவீர்களா? வேலைக்கு விடைகொடுத்துவிட்டு உங்கள் குடும்பத்தாரோடும் நண்பர்களோடும் அதிக நேரத்தைச் செலவழிப்பீர்களா? நீங்கள் விரும்பும் வேறொரு வேலையைத் துவங்குவீர்களா? ஆனால், செல்வந்தர்களாகும் அநேகர் மேற்குறிப்பிட்ட எதையும் செய்வதில்லை என்பதுதான் ஆச்சரியமான விஷயம். அதற்குப் பதிலாக அவர்கள் மேலும் மேலும் பணம் சம்பாதிப்பதிலேயே பேயாய் அலையத் தொடங்குகிறார்கள். தங்கள்மீது விழுந்துள்ள புதிய கடன்களை அடைப்பதற்காகவோ இன்னும் கோடி கோடியாய் சேர்ப்பதற்காகவோ இப்படி அலைகிறார்கள்.

இப்படிப் பண ஆசையின் பாதையில் சென்ற சிலர், பொருளாசை தங்கள் ஆரோக்கியத்தையும் குடும்ப வாழ்க்கையையும் பிள்ளைகளின் ஒழுக்கத்தையும் பெருமளவு பாதித்திருப்பதை உணருகிறார்கள். அதனால், ஆடம்பர வாழ்க்கை பாணியைத் தவிர்த்து எளிமையாக வாழும்படி சமீபகாலமாக வெளிவரும் புத்தகங்களும் பத்திரிகை கட்டுரைகளும் டிவி நிகழ்ச்சிகளும் வீடியோக்களும் மக்களை உற்சாகப்படுத்துகின்றன. பொருள் சேர்ப்பதில் மூழ்கிவிட்டால் நீங்கள் மன ரீதியாகவும், உணர்ச்சி ரீதியாகவும், உடல் ரீதியாகவும்கூட பாதிக்கப்படுவீர்கள் என்பதாகப் பல ஆதாரங்கள் காட்டுகின்றன.

இன்று நேற்றல்ல, பொருளாசையினால் வரும் ஆபத்துகளைக் குறித்த கவலை மக்களிடம் காலங்காலமாய் இருந்து வருகிறது. கிட்டத்தட்ட 2,000 வருடங்களுக்கு முன்னரே பைபிள் இவ்வாறு குறிப்பிட்டது: “ஐசுவரியவான்களாக விரும்புகிறவர்கள் [“செல்வந்தர்களாக வேண்டுமெனத் தீர்மானமாய் இருப்பவர்கள்,” NW] சோதனையிலும் கண்ணியிலும், மனுஷரைக் கேட்டிலும் அழிவிலும் அமிழ்த்துகிற மதிகேடும் சேதமுமான பலவித இச்சைகளிலும் விழுகிறார்கள். பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது; சிலர் அதை இச்சித்து, விசுவாசத்தைவிட்டு வழுவி, அநேக வேதனைகளாலே தங்களை உருவக் குத்திக் கொண்டிருக்கிறார்கள்.”​—1 தீமோத்தேயு 6:9, 10.

ஆனால், அது உண்மைதானா? பணத்தையும் பொருளையும் குவிப்பதிலேயே குறியாய் இருப்பவர்கள் அதினால் அவதிப்படுகிறார்களா? அல்லது ஆஸ்தியையும் ஆரோக்கியத்தையும் பெற்று ஆனந்தமான குடும்பத்துடன் வாழ்க்கையை அனுபவிக்கிறார்களா? அதை நாம் அடுத்த கட்டுரையில் சிந்திக்கலாம்.