Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

எந்தளவு கொடிய அச்சுறுத்தல்?

எந்தளவு கொடிய அச்சுறுத்தல்?

எந்தளவு கொடிய அச்சுறுத்தல்?

அக்டோபர் 1997-⁠ல், ஹாலி மலன் என்ற மூன்று வார பச்சைக்குழந்தைக்கு காதில் இன்ஃபெக்‍ஷன் ஏற்பட்டது. சில நாட்களாகியும் அது சரியாகாததால் ஒரு லேட்டஸ்ட் ஆன்ட்டிபயாட்டிக் மருந்தை டாக்டர் சிபாரிசு செய்தார். அதைக் கொடுத்தவுடன் இன்ஃபெக்‍ஷன் சரியாகியிருக்க வேண்டும். ஆனால் அதுதான் நடக்கவில்லை. அது மறுபடியும் வந்தது, ஒவ்வொரு முறை ஆன்ட்டிபயாட்டிக்ஸ் கொடுத்து முடித்த பிறகும் திரும்பத் திரும்ப வந்துகொண்டே இருந்தது.

முதல் வயதை எட்டுவதற்குள் ஹாலி 17 முறை வெவ்வேறு ஆன்ட்டிபயாட்டிக் மருந்துகளை உட்கொண்டிருந்தாள். பிறகு 21 மாதத்தில் எல்லாவற்றையும்விட கொடிய இன்ஃபெக்‍ஷன் ஏற்பட்டது. கடைசியாக ஒரு ஆன்ட்டிபயாட்டிக் 14 நாட்களுக்கு சிரை வழியாக ஏற்றப்பட்டது; அப்போதுதான் இன்ஃபெக்‍ஷன் முழுமையாக குணமானது.

இப்படிப்பட்ட அனுபவம் இப்போதெல்லாம் சர்வ சகஜமாகி வருகிறது; அதுவும் குழந்தைகள் மத்தியிலும் வயதானவர்கள் மத்தியிலும் மட்டுமல்ல. ஒருசமயத்தில் ஆன்ட்டிபயாட்டிக்ஸ் மூலம் சுலபமாக குணப்படுத்த முடிந்த இன்ஃபெக்‍ஷன்களால் இப்போது எல்லா வயதினரும் வியாதிப்பட்டு, உயிரையே இழக்கிறார்கள். உண்மையில், ஆன்ட்டிபயாட்டிக் மருந்துகளுக்கு மசியாத கிருமிகள் 1950-கள் முதற்கொண்டு சில ஆஸ்பத்திரிகளை ஆட்டிப்படைத்திருக்கின்றன. பிறகு 1960-களிலும் 1970-களிலும் அப்படிப்பட்ட கிருமிகள் ஆஸ்பத்திரிகளுக்கு வெளியேயும் தலைகாட்ட ஆரம்பித்தன.

இறுதியாக, மனிதர்களுக்கும் மிருகங்களுக்கும் அளவுக்கதிகமான ஆன்ட்டிபயாட்டிக் மருந்துகளை கொடுத்திருப்பதுதான், அவற்றுக்கு மசியாத கிருமிகள் எண்ணிக்கையில் பெருகியிருப்பதற்கு முக்கிய காரணம் என மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் சொல்ல ஆரம்பித்தார்கள். ஆன்ட்டிபயாட்டிக் மருந்துகளை அளவுக்கு மீறி பயன்படுத்தும் பிரச்சினை “முற்றிலும் கைமீறிப் போய்விட்டது” என இந்த ஆராய்ச்சியாளர்களில் ஒருவர் 1978-⁠ல் குறிப்பிட்டார். ஆகவே 1990-களில் இப்படிப்பட்ட தலைப்புச் செய்திகள் உலகெங்கும் வெளிவந்தன: “பயில்வான் கிருமிகளின் பிரவேசம்,” “பயில்வான் கிருமிகளின் ஆக்கிரமிப்பு,” “ஆபத்தான மருந்துகள்​—⁠ஆன்ட்டிபயாட்டிக்ஸின் மிதமிஞ்சிய உபயோகத்தால் பெருகும் பயில்வான் கிருமிகள்.”

இவை பெரும் பரபரப்பை ஏற்படுத்துவதற்காக வெளியிடப்பட்ட செய்திகளா? பெயர்பெற்ற மருத்துவ நிறுவனங்களின்படி, அவ்வாறு இல்லை. 2000-⁠ன் தொற்று நோய்கள் பேரிலான அறிக்கையில், உலக சுகாதார நிறுவனத்தின் (WHO) தலைமை இயக்குநர் இவ்வாறு குறிப்பிட்டார்: “புதிய ஆயிரமாண்டு துவங்கும் சமயத்தில் மனிதவர்க்கம் இன்னொரு பிரச்சினையை சந்திக்கிறது. ஒருசமயத்தில் குணப்படுத்த முடிந்த வியாதிகள் . . . இப்போது அதிகமதிகமாக எதிர்ப்பு சக்தியைப் பெற்று வருகின்றன.”

இந்தப் பிரச்சினை எந்தளவு பெரிது? “[மருந்துகளை எதிர்க்கும் கிருமிகள்] கவலையளிக்கும் விதத்தில் பெருகிவருவதால், தொற்று நோய்களை குணப்படுத்தும் வாய்ப்புக்கே இடமில்லாமல் போகிறது” என WHO அறிக்கை செய்தது. “ஆன்ட்டிபயாட்டிக் சகாப்தத்திற்கு முன்னான காலத்திற்கு,” அதாவது தொற்றுகளை குணப்படுத்தும் ஆன்ட்டிபயாட்டிக் மருந்துகள் கண்டுபிடிக்கப்படுவதற்கு முன்னான காலத்திற்கு மனிதவர்க்கம் திரும்பிவிட்டதாகக்கூட இன்று அநேக அதிகாரிகள் சொல்கின்றனர்.

எதிர்ப்பு சக்திமிக்க நுண்கிருமிகளால் எப்படி அதிநவீன அறிவியல் முன்னேற்றங்களையும் சமாளித்து உலகை ஆக்கிரமிக்க முடிந்திருக்கிறது? நம்மையும் மற்றவர்களையும் பாதுகாத்துக்கொள்ள ஏதாவது செய்ய முடியுமா? ஆன்ட்டிபயாட்டிக் மருந்துகளுக்கு மசியாத கிருமிகளை ஒழிப்பதில் என்ன பரிகாரங்களை விரைவில் எதிர்பார்க்கலாம்? இவற்றுக்கான சில பதில்களை பின்வரும் கட்டுரைகள் தருகின்றன. (g03 10/22)