Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பகைமையின் இரும்புப் பிடியிலிருந்து விடுதலை

பகைமையின் இரும்புப் பிடியிலிருந்து விடுதலை

பகைமையின் இரும்புப் பிடியிலிருந்து விடுதலை

ஹோஸே கோமெஸ் கூறியது

பிரான்சின் தெற்குப் பகுதியிலுள்ள ரான்யாக் என்ற ஒரு சிறிய நகரத்தில், செப்டம்பர் 8, 1964-⁠ல் நான் பிறந்தேன். என் அப்பா, அம்மா, தாத்தா பாட்டிமார் எல்லாரும் அண்டலூசியாவைச் சேர்ந்த ஜிப்ஸிகள்; வட ஆப்பிரிக்காவில் உள்ள அல்ஜீரியாவிலும் மொராக்கோவிலும் பிறந்தவர்கள். ஜிப்ஸி கலாச்சாரப்படி எங்கள் குடும்பமும் ஒரு பெரிய கூட்டுக் குடும்பமாக இருந்தது.

என் அப்பா ஒரு முரடர்; நான் சிறுவனாக இருந்த சமயத்திலிருந்தே அவர் என் அம்மாவை கொடுமைப்படுத்தின காட்சிகளைப் பார்த்திருக்கிறேன். ஜிப்ஸிகள் மத்தியில் விவாகரத்து செய்வது சகஜமில்லை; என்றாலும், சில காலத்திற்குப் பின் அம்மா அவரை விவாகரத்து செய்தார். பின்னர், என் தம்பியையும் அக்காவையும் என்னையும் பெல்ஜியத்துக்கு கூட்டிச் சென்றார். அடுத்த எட்டு வருஷங்களுக்கு அங்கே நாங்கள் நிம்மதியாக வாழ்ந்தோம்.

ஆனால், நிலைமை மாறியது. பிள்ளைகளான எங்களுக்கு அப்பாவை பார்க்க ஆசை வந்தது. அதனால், அம்மா எங்களைத் திரும்ப பிரான்சிற்கே கூட்டிக்கொண்டு வந்து, மறுபடியும் அப்பாவோடு ஒன்றுசேர்ந்தார். அப்பாவுடன் வாழ்வது மீண்டும் எனக்கு பல பிரச்சினைகளைத் தந்தது. பெல்ஜியத்திலிருக்கும்போது நாங்கள் எங்கு போனாலும் அம்மாகூடவே போவோம். ஆனால் இங்கு அப்பாவின் குடும்பவட்டாரத்தில், ஆண்கள் ஆண்களோடு மட்டும்தான் கூட்டுறவு வைத்துக்கொள்ள வேண்டும் என்ற எண்ணம் நிலவியிருந்தது. உரிமை ஆண்களுக்கு, உழைப்போ பெண்களுக்கு என்பது இவர்களுடைய ஆண் ஆதிக்கச் சிந்தனையாக இருந்தது. உதாரணமாக, ஒரு நாள், இரவு சாப்பாட்டிற்குப் பிறகு, எல்லாவற்றையும் சுத்தம் செய்வதற்கு என் அத்தைக்கு உதவ முன் வந்தேன். அதற்கு, என் சித்தப்பா என்னை ஓரினப்புணர்ச்சிக்காரன் என்று திட்டினார். பாத்திரங்களை சுத்தம் செய்வது பெண்களுக்கே உரிய வேலையென அவர் குடும்பத்தார் நினைத்தார்கள். காலப்போக்கில் இந்த மட்டமான சிந்தனை என்னிடமும் ஒட்டிக்கொண்டது.

கொஞ்ச நாளிலேயே அப்பா தன் சுயரூபத்தைக் காட்ட ஆரம்பித்ததால், மறுபடியும் அம்மாவுக்கு அடி உதை விழுந்தது. அப்பாவைத் தடுக்க முயற்சி செய்தபோதெல்லாம் அவருடைய குத்துகளிலிருந்து தப்பிக்க நானும் என் தம்பியும் ஜன்னல் வழியாக குதித்து ஓட வேண்டியிருந்தது. என் அக்காவையும் அவர் விட்டுவைக்கவில்லை. இதனாலேயே, நான் முடிந்தவரை வீட்டுக்குப் போகாமல் வேறெங்காவது போய்விடுவேன். 15 வயதிலேயே எனக்கு வாழ்க்கையில் ஒரு பிடிப்பு இல்லாமல் போனது.

நான் ஒரு பயங்கரமான கோபக்காரன் என்று எல்லோரும் காலப்போக்கில் தெரிந்துகொண்டார்கள். அக்கிரமம், அடாவடியில் இறங்கி ஆட்களை ஆட்டிவைத்தேன். அப்போது எனக்கு படுகுஷியாக இருக்கும். சில சமயம், வேண்டுமென்றே மற்ற இளைஞர்களை வம்புச் சண்டைக்கு இழுப்பேன். பெரும்பாலும் என்னிடம் ஒரு கத்தியோ ஒரு சங்கிலியோ இருந்ததால், என்னை எதிர்க்க யாருக்கும் துணிச்சல் வரவில்லை. கொஞ்ச நாள் கழிந்ததும், மோட்டார் வண்டிகளைத் திருடி அவற்றை விற்க ஆரம்பித்தேன். சில வேளைகளில் அவற்றைக் கொளுத்தியும் விடுவேன்; பின்பு தீயணைப்பு படையினர் நெருப்பை அணைப்பதற்கு போராடும் காட்சியை ஜாலியாக வேடிக்கை பார்ப்பேன். பிறகு, பூட்டை உடைத்து, கடைகளையும் கோடவுன்களையும் சூறையாட ஆரம்பித்தேன். இதனால் பல தடவை போலீஸிடம் பிடிபட்டேன். ஆனால், ஒவ்வொரு முறையும் உதவிக்காக கடவுளிடம் ஜெபித்தேன்!

ஆச்சரியமாக இருக்கிறதா, எனக்கும் கடவுள் நம்பிக்கை இருந்தது. பெல்ஜியத்தில் இருந்தபோது, மதப் பள்ளியில் படித்ததால் நான் செய்வதெல்லாம் தப்புத்தான் என்று எனக்கு நன்றாகவே தெரிந்திருந்தது. எனக்கு கடவுள் நம்பிக்கை இருந்தாலும், என் நடத்தையை அது துளிகூட மாற்றவில்லை. கடவுளிடம் மன்னிப்பு கேட்டாலேபோதும் அவர் எல்லாவற்றையும் மன்னித்துவிடுவார் என்றுதான் நினைத்தேன்.

திருடிய குற்றத்திற்காக, 1984-⁠ல் எனக்கு 11 மாத சிறை தண்டனை விதிக்கப்பட்டது. மார்செய்ல்ஸில் உள்ள போமெட் சிறைக்கு அனுப்பப்பட்டேன். அங்கே, என் உடலில் பல இடங்களில் பச்சைக் குத்திக் கொண்டேன். “பகை, பழிக்குப்பழி” என்ற வார்த்தைகளையும் பச்சைக் குத்தியிருந்தேன். சிறைச்சாலை என்னைத் திருத்தவில்லை; மாறாக, அதிகாரத்தின் மேலும், முழு சமுதாயத்தின் மேலும் எனக்கிருந்த வெறுப்பு எனும் நெருப்புக்கு இன்னும் எண்ணெய் வார்க்கவே செய்தது. மூன்று மாத சிறைவாசத்திற்கு பிறகு, கொளுந்துவிட்டெரியும் பகையுணர்ச்சியோடு கடும்வீராவேசத்துடன் விடுதலையாகி வெளியே வந்தேன். அதன் பின்பு நடந்த ஒரு சோக நிகழ்ச்சி என் வாழ்க்கையை திசை திருப்பியது.

பழி வாங்குவதே என் இலட்சியமானது

மற்றொரு ஜிப்ஸி குடும்பத்துக்கும் என் குடும்பத்துக்குமிடையே ஒரு பிரச்சினை தலைதூக்கியது. இந்த பிரச்சினையைத் தீர்ப்பதற்காக நேருக்கு நேர் மோத நானும் என் அப்பாவின் அண்ணன் தம்பிமாரும் முடிவு செய்தோம். இரண்டு குடும்பத்தாரிடமும் ஆயுதங்கள் இருந்தன. வாக்குவாதம் முற்றியபோது என் பெரியப்பா பியெரும் இன்னொரு நெருங்கிய உறவினரும் சுட்டுக் கொல்லப்பட்டார்கள். உடனே, நான் வெறி பிடித்தவன் போல, கையில் துப்பாக்கியை வைத்துக்கொண்டு, கோபம் கொப்பளிக்க நடுத்தெருவில் நின்று, காட்டுத்தனமாக கத்தினேன். கடைசியில் என் அப்பாவின் இன்னொரு சகோதரர் துப்பாக்கியை பலவந்தமாக என்னிடமிருந்து பிடுங்கி விட்டார்.

சொந்த அப்பாவைப் போல நினைத்திருந்த என் பெரியப்பா பியெரின் அகால மரணம் என்னை சோகக் கடலில் ஆழ்த்தியது. ஜிப்ஸி வழக்கத்தின்படி துக்கம் கொண்டாடினேன். பல நாட்கள் நான் ஷேவ் செய்து கொள்ளவில்லை, இறைச்சியும் சாப்பிடவில்லை. டிவி பார்க்கவோ மியூஸிக் கேட்கவோ மனம் வரவில்லை. என் பெரியப்பாவின் சாவிற்கு பழிக்குப்பழி வாங்கியே தீருவேன் என்று சபதமிட்டேன். ஆனால், என் உறவினர்களோ, ஒரு துப்பாக்கி என் கைக்கு கிடைக்காதவாறு செய்தார்கள்.

ஆகஸ்ட் 1984-⁠ல், மிலிட்ரியில் சேர்ந்தேன். 20 வயதில், லெபனானில் உள்ள ஐ.நா. அமைதிப் படையில் சேர என் பெயரை பதிவு செய்தேன். ‘சாகடி இல்லையேல் செத்துமடி’ என்ற கொள்கையை துணிந்து ஏற்றுக்கொண்டேன். அச்சமயத்தில், எக்கச்சக்கமாக கஞ்சா அடித்தேன். அது, எனக்கு சந்தோஷத்தைக் கொடுத்ததோடு எதுவும் என்னை அசைக்க முடியாது என்ற உணர்வையும் எனக்குள் ஏற்படுத்தியது.

லெபனானில் ஆயுதங்களை ரொம்ப ஈஸியாக வாங்க முடியும். அதனால் என் பெரியப்பாவை கொலை செய்தவர்களைப் பழிதீர்க்கும் திட்டத்தை கைகூடி வரச் செய்வதற்காக ஆயுதங்களை பிரான்சிற்கு கப்பலில் அனுப்ப தீர்மானித்தேன். உள்ளூரிலிருந்தவர்களிடம் இரண்டு கைத்துப்பாக்கிகளையும் வெடி மருந்தையும் வாங்கினேன். அந்தத் துப்பாக்கிகளை பாகம்பாகமாகக் கழற்றி, அவற்றை இரண்டு ரேடியோ பெட்டிகளுக்குள் வைத்து, வீட்டுக்கு அனுப்பினேன்.

என் மிலிட்ரி சர்வீஸ் முடிவதற்கு இரண்டே வாரங்களுக்கு முன், நானும் என்னுடன் இருந்த மூன்று பேரும், அனுமதியில்லாமல் அங்கிருந்து வெளியேறினோம். பின்பு, எங்கள் கேம்ப்புக்கு வந்தபோது எங்களை கைது செய்தார்கள். ஜெயிலில் இருக்கும்போது எனக்கு கோபம் பொத்துக்கொண்டு வந்தது. பொங்கியெழுந்த கோபத்தில் அங்கிருந்த ஒரு காவலாளியைத் தாக்கினேன். பெயோ என அழைக்கப்படும் ஜிப்ஸி அல்லாதவனுடைய அதிகாரத்தின் கீழிருந்து அவமானப்படுவதை என்னால் சகிக்க முடியவில்லை. அடுத்த நாள், ஒரு அதிகாரிக்கும் எனக்கும் பயங்கர மோதல் ஏற்பட்டது. அதனால் லயான்ஸிலுள்ள மான்டலுயக் சிறைக்கு என்னை மாற்றினார்கள். என் மிலிட்ரி சர்வீஸ் முடியுமட்டும் அங்கேயே இருந்தேன்.

சிறைக்குள்ளேயே விடுதலை

மான்டலுயக் சிறைக்குப் போன முதல் நாளில், நான் சந்தித்த ஒரு இளைஞன் இனியவனாக இருந்தான். என்னை அன்பாக வரவேற்றான். அவன் ஒரு யெகோவாவின் சாட்சியென்று தெரிந்து கொண்டேன். அவனும் அவன் மதத்தைச் சேர்ந்தவர்களும் ஆயுதங்களை எடுக்காத ஒரே காரணத்திற்காக அந்த சிறையில் போடப்பட்டிருப்பதை அறிந்தேன். அது கேட்பதற்கே விநோதமாக இருந்தது. இன்னுமதிகமாகத் தெரிந்துகொள்ள ஆசைப்பட்டேன்.

யெகோவாவின் சாட்சிகள், கடவுள்மீது உண்மையிலேயே அன்பு வைத்திருப்பதை உணர ஆரம்பித்தேன். அவர்களின் உயர்ந்த ஒழுக்க தராதரங்கள் நிஜமாகவே என் மனதைக் கவர்ந்தன. ஆனாலும், எனக்கு நிறைய கேள்விகள் இருந்தன. குறிப்பாக, இறந்தவர்கள் உயிரோடிருப்பவர்களிடம் கனவுகள் மூலமாக பேச முடியுமா என்று தெரிந்துகொள்ள ஆசைப்பட்டேன்; இது, பல ஜிப்ஸிகள் நம்பின விஷயம். நீங்கள் பூமியில் பரதீஸில் என்றும் வாழலாம் a என்ற புத்தகத்தை வைத்து என்னோடு பைபிளைப் படிக்க ஷான்பால் என்ற ஒரு சாட்சி முன்வந்தார்.

ஒரே இரவில் அந்தப் புத்தகத்தை ஆசை ஆசையாய் வாசித்து முடித்தேன். வாசித்த விஷயம் என் நெஞ்சைத் தொட்டது. சிறைக்குள் இருக்கையிலேயே, உண்மையான விடுதலையைப் பெற்றேன்! சிறையிலிருந்து நிஜமாகவே விடுதலையானபோது, பைபிள் பிரசுரங்கள் நிறைந்த கனத்த பையோடு, வீட்டுக்குச் செல்ல ட்ரெயினைப் பிடித்தேன்.

நான் வசித்த இடத்திலுள்ள சாட்சிகளை சந்திப்பதற்காக, மார்டிக் நகரத்திலுள்ள ராஜ்ய மன்றத்திற்கு போனேன். ஒரு இளம் முழுநேர ஊழியனான எரிக் என்பவரோடு பைபிள் படிப்பைத் தொடர்ந்தேன். கொஞ்ச நாளிலேயே புகைப்பிடிப்பதை விட்டொழித்தேன். குற்றச்செயல்களில் ஈடுபட்ட என் முன்னாள் கூட்டாளிகளைப் பார்ப்பதையும் நிறுத்தினேன். “என் மகனே, என்னை நிந்திக்கிறவனுக்கு நான் உத்தரவு கொடுக்கத்தக்கதாக, நீ ஞானவானாகி, என் இருதயத்தைச் சந்தோஷப்படுத்து” என நீதிமொழிகள் 27:11-⁠ல் உள்ள வார்த்தைகளுக்கு இசைவாக நடக்க தீர்மானித்தேன். யெகோவாவை ஒரு அன்பான தகப்பனாக கண்டுகொண்டேன்; அவரைப் பிரியப்படுத்த விரும்பினேன்.

என்னையே மாற்றிக்கொள்ள வேண்டிய சவால்

கிறிஸ்தவ நியமங்களை நிஜவாழ்க்கையில் கடைப்பிடிப்பது எனக்கு அவ்வளவு சுலபமாக இருக்கவில்லை. உதாரணத்திற்கு, பழையபடி போதையின் பிடியில் சிக்கிக் கொண்டேன். பல வாரங்களுக்கு அது என்னை ஆட்டிப்படைத்தது. ஆனால், அதையும்விட மிகக் கஷ்டமான சவால் என்னவென்றால், பழி வாங்கியே தீர வேண்டும் என்ற ஆவேசம்; அதை மட்டும் என்னால் அடக்க முடியவில்லை. எரிக்கிற்குத் தெரியாமல் ஒரு துப்பாக்கியை எப்போதும் என் கைவசம் வைத்திருந்தேன். என் பெரியப்பாவை கொலை செய்தவர்களை பழி தீர்க்க இன்னமும் மும்முரமாக திட்டம் தீட்டிக்கொண்டிருந்தேன். அவர்களைக் கண்டுபிடிக்கும் வேட்டையில் தூங்காமல் கொள்ளாமல் பல இரவுகள் அலைந்து திரிந்திருக்கிறேன்.

எரிக்கிடம் இதைச் சொன்னபோது, கையில் துப்பாக்கியோடும் மனதில் பழிவாங்கும் எண்ணத்தோடும் கடவுளிடம் ஒரு நல்ல உறவை வைத்துக்கொள்ளவே முடியாது என்று தெள்ளத்தெளிவாக விளக்கினார். இப்போது, இரண்டில் ஒன்றை தேர்ந்தெடுக்க வேண்டியிருந்தது. ‘பிரியமானவர்களே, நீங்கள் பழிவாங்காமல், கோபாக்கினைக்கு இடங்கொடுங்கள்’ என்று அப்போஸ்தலன் பவுல் ரோமர் 12:19-⁠ல் கூறிய அறிவுரையை ஆழ்ந்து தியானித்தேன். உருக்கமாகவும் ஜெபித்தேன்; இப்படிச் செய்ததால், என் உணர்ச்சிகளை என்னால் அடக்க முடிந்தது. (சங்கீதம் 55:22) ஒரு வழியாக என்னிடமிருந்த ஆயுதங்களை ஒழித்துக்கட்டினேன். ஒரு வருடமாக பைபிளைப் படித்த பிறகு, யெகோவா தேவனுக்கு என் ஒப்புக்கொடுத்தலின் அடையாளமாக டிசம்பர் 26, 1986-⁠ல் முழுக்காட்டுதல் பெற்றேன்.

என் குடும்பத்தாரின் நல்ல பிரதிபலிப்பு

நடத்தையில் நான் செய்த மாற்றங்களைப் பார்த்ததால் என் பெற்றோர் பைபிளைப் படிக்க ஆரம்பித்தார்கள். விவாகரத்து செய்திருந்த அவர்கள் மீண்டும் மணம் செய்துகொண்டார்கள். பின்பு ஜூலை 1989-⁠ல் அம்மா முழுக்காட்டுதல் எடுத்தார். காலப்போக்கில், என் குடும்ப அங்கத்தினரில் அநேகர் பைபிளின் செய்தியைக் கேட்டு, அவர்களும் யெகோவாவின் சாட்சிகளானார்கள்.

ஆகஸ்ட் 1988-⁠ல், முழுநேர ஊழியனாக வேண்டுமென்று தீர்மானித்தேன். பின்பு, எங்கள் சபையில் உள்ள காட்யா என்ற இளம் சகோதரியிடம் காதல் வயப்பட்டேன். ஜூன் 10, 1989-⁠ல் எங்கள் திருமணம் நடந்தது. எங்கள் மண வாழ்க்கையில் முதல் வருடம் கடினமாகவே இருந்தது. ஏனெனில், பெண்களைப் பற்றிய என் அபிப்பிராயத்தை நான் இன்னும் கொஞ்சம் மாற்ற வேண்டியிருந்தது. மனைவிகளுக்கு உரிய கனத்தை கணவர்கள் கொடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தும் 1 பேதுரு 3:7-⁠ல் உள்ள வார்த்தைகளைப் பொருத்துவது எனக்கு கொஞ்சம் கஷ்டமாக இருந்தது. என் அகம்பாவத்தை அகற்றவும், எண்ணங்களை மாற்றவும், சக்தி கேட்டு நான் திரும்பத்திரும்ப ஜெபிக்க வேண்டியிருந்தது. அதன் பலனாக மெதுமெதுவாக என்னில் மாற்றம் தெரிந்தது.

என் பெரியப்பாவின் கோர மரணம் இன்னும்கூட என்னை வாட்டி வதைக்கிறது. அவர் நினைவு வரும்போது இப்போதும் சில வேளைகளில் கண்ணீர் வடிக்கிறேன். அவர் கொலையைப் பற்றிய நினைவுகள் என் மனதில் வலம் வரும் போது எழும் உணர்ச்சிவேகத்தோடு போராடவேண்டியிருக்கிறது. முன்பு எங்களுடைய ஜென்ம விரோதியாக இருந்த அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த யாரையாவது நான் எதிர்பாராமல் சந்தித்துவிடுவேனோ என்ற பயம், முழுக்காட்டுதல் எடுத்து பல வருஷங்களான பிறகும் என்னைப் பீடித்திருந்தது. அவர்கள் என்னைத் தாக்கினால் நான் என்ன செய்வேன்? பதிலுக்கு ஏதாவது செய்துவிடுவேனா? என் பழைய குணத்தைக் காட்டி விடுவேனா? என்றெல்லாம் நினைத்து பயந்தேன்.

ஒரு நாள், அருகிலுள்ள சபை ஒன்றில், ஒரு பொதுப்பேச்சைக் கொடுத்துக்கொண்டிருந்தேன். அங்கே, என் பெரியப்பாவைக் கொலை செய்த ஆட்களின் உறவினளான பெப்பா என்பவளைப் பார்த்தேன். அவளைப் பார்த்ததுமே என் கிறிஸ்தவ குணாதிசயத்தின் ஒவ்வொரு இழையும் சோதிக்கப்பட்டதை உணர்ந்தேன் என்பதை நான் ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும். ஆனாலும், என் உணர்ச்சிகளை ஓரங்கட்டி விட்டேன். பிற்பாடு, பெப்பாவின் முழுக்காட்டுதல் தினத்தன்று அவளை ஆரத்தழுவி, யெகோவாவை சேவிக்க அவள் எடுத்த தீர்மானத்திற்காக மனதார வாழ்த்தினேன். இவ்வளவெல்லாம் நடந்திருந்த போதிலும் என் ஆவிக்குரிய சகோதரியாக அவளை ஏற்றுக்கொண்டேன்.

பகைமையின் இரும்புப் பிடியிலிருந்து என்னை விடுவித்த யெகோவாவுக்கு ஒவ்வொரு நாளும் நன்றி சொல்கிறேன். யெகோவா என் மீது கருணை காட்டவில்லையென்றால், என் கதி என்னவாகியிருக்கும்? அவருடைய தயவால் இப்போது நான் ஒரு சந்தோஷமான குடும்ப வாழ்க்கையை அனுபவிக்கிறேன். எதிர்காலத்தில், பகையும் வன்முறையும் இல்லாத ஒரு புதிய உலகில் வாழும் நம்பிக்கையும் எனக்கிருக்கிறது. “அவனவன் தன்தன் திராட்சச் செடியின் நிழலிலும், தன்தன் அத்திமரத்தின் நிழலிலும் பயப்படுத்துவார் இல்லாமல் உட்காருவான்; சேனைகளுடைய கர்த்தரின் வாய் இதைச் சொல்லிற்று.” ஆம், கடவுளின் இந்த வாக்குறுதி கட்டாயம் நிறைவேறும் என்று முழுமையாக நம்புகிறேன்.​—மீகா 4:4. (g03 1/8)

[அடிக்குறிப்பு]

a யெகோவாவின் சாட்சிகளால் பிரசுரிக்கப்பட்டது.

[பக்கம் 17-ன் படம்]

1985, லெபனானில் ஐ.நா. அமைதிப் படையில் இருந்தபோது

[பக்கம் 18-ன் படம்]

காட்யா, என் மகன்கள் டீமியோ, பியெர், ஆகியோருடன்