Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

மாக்ன கார்டாவும் மனிதனின் சுதந்திர தாகமும்

மாக்ன கார்டாவும் மனிதனின் சுதந்திர தாகமும்

மாக்ன கார்டாவும் மனிதனின் சுதந்திர தாகமும்

பிரிட்டனிலிருந்து விழித்தெழு! எழுத்தாளர்

இங்கிலாந்திலுள்ள சர்ரே என்ற மாவட்டத்தின் இயற்கை எழில் கொஞ்சும் நிலப்பரப்பில் சலசலத்து ஓடுகிறது தேம்ஸ் நதி. இந்த நதிக்கரையின் ஓரமாக பரந்து கிடக்கும் புல்வெளிகள் ஒன்றில் குத்திட்டு நிற்கிறது ஒரு நினைவுச் சின்னம். சுமார் 800 வருடங்களுக்கு முன்பு நடந்த சம்பவத்தைப் பற்றிய விவரம் அதில் பொறிக்கப்பட்டிருக்கிறது. இந்த ரன்னிமீடு புல்வெளியில்தான் ஆங்கிலேய அரசரான ஜான் (1199 முதல் 1216 வரை ஆட்சிசெய்தவர்) தன்னை எதிர்த்த நிலமானியப் பிரபுக்களை நேருக்கு நேர் சந்தித்தார். இவர்கள், அரசரின் வரம்புமீறிய செயல்களால் கொதிப்படைந்த செல்வாக்குமிக்க நிலக்கிழார்கள். அரசர் சில உரிமைகளை தங்களுக்கு வழங்கி தங்கள் வேதனைகளைத் தணிக்க வேண்டுமென இவர்கள் கோரிக்கை விடுத்தனர். இவர்களது தாங்க முடியாத நச்சரிப்பினால் அரசர் கடைசியில் ஒரு சாசனத்தில் தன் முத்திரையைப் பதித்தார். அந்த சாசனமே பிற்பாடு மாக்ன கார்டா (மகா சாசனம்) என அழைக்கப்படலானது.

இது, “மேற்கத்திய சரித்திரத்திலேயே அதிமுக்கியத்துவம் வாய்ந்த சட்ட சாசனம்” என ஏன் விவரிக்கப்பட்டிருக்கிறது? இதற்கான பதில், மனிதனின் சுதந்திர தாகத்தை கோடிட்டுக் காட்டுகிறது.

நிலமானியப் பிரபுக்களின் கோரிக்கைகள்

அரசர் ஜானுக்கும் ரோமன் கத்தோலிக்க சர்ச்சுக்கும் இடையே தகராறு தலைதூக்கியது. ஸ்டீஃபன் லாங்டன் என்பவரை காண்டர்பரியின் பேராயராக ஏற்க ஜான் மறுத்துவிட்டார், இவ்வாறு போப் மூன்றாம் இன்னசென்ட்டின் தீர்மானத்தை மதிக்காமல் உதாசீனப்படுத்தினார். இதனால் சர்ச்சின் ஆதரவை அவர் இழந்தார், அதோடு சர்ச்சிலிருந்தும் நீக்கப்பட்டார். இருந்தாலும் சர்ச்சோடு சமரசம் செய்துகொள்ள ஜான் முயன்றார். தன் நாடுகளாகிய இங்கிலாந்தையும் அயர்லாந்தையும் போப்பிடம் ஒப்படைக்க ஒப்புக்கொண்டார். சர்ச்சுக்கு கட்டுப்பட்டு நடப்பதாகவும் வருடந்தோறும் அதற்குக் கப்பம் கட்டுவதாகவும் ஜான் அளித்த வாக்குறுதியின் அடிப்படையில் அந்த நாடுகளை போப் அவரிடமே திருப்பிக் கொடுத்தார். இப்போது போப்பின் பிடியின்கீழ் ஜான் வந்தார்.

இருக்கிற பிரச்சினைகள் போதாதென்று பணக்கஷ்டம் வேறு அரசரை ஆட்டிப்படைத்தது. அதனால், தனது ஆட்சியின் 17-ஆம் ஆண்டில் நிலக்கிழார்கள் செலுத்த வேண்டிய வரிப் பணத்தை 11 மடங்கு உயர்த்தினார். சர்ச்சோடு மோதியதாலும் பண விஷயங்களில் மக்களின் வெறுப்பை சம்பாதித்ததாலும் இவர் நம்பகமானவரே அல்ல என்ற கருத்து எங்கும் நிலவியது. ஆனால் இப்பிரச்சினைகளை ஜான் சட்டை செய்யவே இல்லை.

இறுதியில், நாட்டின் வட பகுதியைச் சேர்ந்த நிலமானியப் பிரபுக்கள் கூடுதல் வரித் தொகையை செலுத்த மறுத்தபோது கலவரம் கட்டுக்கடங்காமல் போனது. அவர்கள் லண்டனுக்கு அணிவகுத்துச் சென்று இனி தாங்கள் அரசரை ஆதரிக்கப் போவதில்லை என அறிவித்தனர். இரு சாராருக்கும் இடையே கடும் வாக்குவாதம் எழுந்தது; அரசர் வின்ட்சரிலிருந்த தன் மாளிகையிலும் நிலமானியப் பிரபுக்களோ கிழக்கே ஸ்டேன்ஸ் பட்டணத்தில் ஒரு முகாமிலும் இருந்துகொண்டு சமரச பேச்சு வார்த்தைகள் நடத்தினர். இரகசிய பேச்சு வார்த்தைகளின் விளைவாக, அந்த இரு பட்டணங்களுக்கு நடுவே அமைந்திருந்த ரன்னிமீடு பகுதியில் அவர்கள் நேருக்கு நேர் சந்தித்தனர். ஜூன் 15, 1215, திங்கட்கிழமை அன்று, 49 கோரிக்கைகள் அடங்கிய சாசனத்தில் ஜான் முத்திரையிட்டார். அதன் ஆரம்ப வாக்கியம்: ‘நிலமானியப் பிரபுக்கள் கோருபவையும் அரசர் நிறைவேற்ற ஒப்புக்கொள்பவையும் இவையே.’

சட்டத்தின்கீழ் சுதந்திரம்

இருந்தாலும் விரைவிலேயே ஜானுடைய உள்நோக்கத்தின் பேரில் சந்தேகம் ஏற்பட்டது. அரசரையும் போப்பையும் அநேகர் வெறுத்தனர்; இருப்பினும் ரோமிலிருந்த போப்பிடம் தூதுவர்களை அனுப்பினார் அரசர். ரன்னிமீடு ஒப்பந்தம் செல்லுபடி ஆகாது என்ற அதிகாரப்பூர்வ கடிதத்தை போப் தாமதமின்றி அனுப்பி வைத்தார். இங்கிலாந்தில் உடனடியாக போர் மூண்டது. என்றாலும் அடுத்த வருடமே ஜான் திடீரென காலமானார். அவரது ஒன்பது வயது மகன் ஹென்றி அரியணை ஏறினார்.

இளம் ஹென்றியின் ஆதரவாளர்கள், ரன்னிமீடு ஒப்பந்தத்தை மீண்டும் வெளியிட ஏற்பாடு செய்தனர். “கொடுங்கோன்மையை ஒடுக்குவதற்கான ஆவணமாக இருந்த ஒன்று, அரசரை ஆதரிப்பதற்கு மிதவாதிகளை ஒன்றுதிரட்டும் ஓர் அறிக்கையாக அவசர அவசரமாக மாற்றி எழுதப்பட்டது” என இந்த மறுபதிப்பைப் பற்றி மாக்ன கார்டா என்ற சிற்றேடு குறிப்பிடுகிறது. ஹென்றியின் ஆட்சிக் காலத்தில் இந்த ஒப்பந்தம் பல முறை மீண்டும் மீண்டும் வெளியிடப்பட்டது. அவருக்குப் பின் அரசராக பதவியேற்ற முதலாம் எட்வர்டு, அக்டோபர் 12, 1297-⁠ல் மறுபடியும் மாக்ன கார்டாவை உறுதிசெய்தார். அதன் பிரதி இறுதியில் இங்கிலாந்து நாடாளுமன்றத்தின் விசேஷ முக்கியத்துவம் வாய்ந்த அதிகாரப் பத்திரங்களோடு சேர்த்து வைக்கப்பட்டது.

இந்த சாசனம் அரசரின் அதிகாரத்தை கட்டுப்படுத்தியது. அவரது குடிமக்கள் அனைவரையும் போலவே அவரும் சட்டத்திற்கு அடிபணியும் நிபந்தனையை இது முன்வைத்தது. இங்கிலாந்தின் பிரசித்தி பெற்ற 20-ஆம் நூற்றாண்டு சரித்திராசிரியரும் பிரதம மந்திரியுமான வின்ஸ்டன் சர்ச்சில் சொல்கிறபடி, மாக்ன கார்டா “கட்டுப்பாடும் சமநிலையும் நிலவும் அமைப்புமுறையை” குறிப்பிட்டது. இந்த அமைப்புமுறை, அரசருக்கு தேவையான அதிகாரத்தை வழங்கும், ஆனால் அந்த அதிகாரத்தை கொடுங்கோலனோ முட்டாளோ துஷ்பிரயோகம் செய்வதைத் தடுக்கும்.” உயரிய இலட்சியங்கள்தான்! ஆனால் சாதாரண மக்களுக்கு இந்த சாசனத்தால் பயன் என்ன? அவர்களுக்கு அது அப்போது அதிக பயன் தரவில்லை. “சுதந்திர குடிமக்களின்” உரிமைகளை மட்டுமே மாக்ன கார்டா விவரித்தது; அவர்களோ அப்போது ஒரு வகையில் உயர்குடியைச் சேர்ந்த சிறுபான்மையினராக இருந்தனர். a

“சரித்திரத்தின் ஆரம்ப காலத்திலேயே” மாக்ன கார்டா, “ஒடுக்குதலுக்கு எதிரான அடையாளச் சின்னமாகவும் போர் முழக்கமாகவும் ஆனது; அடுத்தடுத்து வந்த சந்ததிகள் ஒவ்வொன்றும், அச்சுறுத்தப்பட்ட தங்கள் உரிமைகளுக்கு பாதுகாப்பளிக்கும் ஒன்றாக அதை கருதின” என என்ஸைக்ளோப்பீடியா பிரிட்டானிக்கா குறிப்பிடுகிறது. இதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் விதமாக, இங்கிலாந்தில் நாடாளுமன்ற கூட்டம் நடைபெற்ற போதெல்லாம் இந்த மாக்ன கார்டா முதலாவதாக உறுதிசெய்யப்பட்டது.

இங்கிலாந்தில், சான்றாளர் முறை விசாரணை (trial by jury), ஆள் கொணர் நீதிப் பேராணை பெறும் உரிமை (habeas corpus), b சட்டத்திற்கு முன் சமத்துவம், அத்துமீறி கைதுசெய்யப்படுவதிலிருந்து பாதுகாப்பு, நாடாளுமன்றம் வரிவிதிப்பது போன்ற உரிமைகளுக்கும் சலுகைகளுக்கும் அடிப்படையாக மாக்ன கார்டாவின் கோரிக்கைகளையே 17-ஆம் நூற்றாண்டு வழக்கறிஞர்கள் பயன்படுத்தினர்.

தீராத தாகம்

“சரித்திரத்தில் அநேகம் முறை, மாக்ன கார்டாவின் சட்டப்பூர்வ முக்கியத்துவம், அது என்ன சொல்லிற்று என்பதன் பேரில் அல்லாமல் அது என்ன சொன்னதாக கருதப்பட்டதோ அதன் பேரிலேயே அதிகம் சார்ந்திருந்திருக்கிறது” என ஒப்புக்கொண்டார் லார்ட் பின்காம்; இவர் 1996 முதல் 2000 வரை இங்கிலாந்திற்கும் வேல்ஸுக்கும் தலைமை நீதிபதியாக பணியாற்றியவர். இருந்தாலும் சுதந்திரத்தோடு சம்பந்தப்பட்ட இந்த சாசனத்தின் இலட்சியங்கள் உலகெங்கும் ஆங்கிலம் பேசப்பட்ட பகுதிகளில் பிற்பாடு பரவியது.

1620-⁠ல் இங்கிலாந்திலிருந்து அமெரிக்காவிற்குச் சென்று குடியேறிய பில்கிரிம்கள், மாக்ன கார்டாவின் ஒரு பிரதியை தங்களுடன் எடுத்துச் சென்றனர். அமெரிக்காவில் குடியேறிய ஆங்கிலேயர்கள், அரசாங்கத்தில் பிரதிநிதித்துவம் செய்யப்படாமல் தங்கள்மீது வரி சுமத்தப்பட்டதை கண்டித்து 1775-⁠ல் கிளர்ந்தெழுந்தபோது, அப்படிப்பட்ட வரிகள் மாக்ன கார்டாவோடு முரண்பட்டதாக இன்றைய மாஸசூஸெட்ஸ் மாகாணத்தின் அன்றைய பேரவை அறிவித்தது. சொல்லப்போனால், அன்று மாஸசூஸெட்ஸ் பயன்படுத்திய அதிகாரப்பூர்வ முத்திரையில், பட்டயத்தை ஒரு கையிலும் மாக்ன கார்டாவை மறு கையிலும் பிடித்த மனிதனின் உருவம் காணப்பட்டது.

அமெரிக்க ஐக்கிய மாகாணங்களின் அரசமைப்பு சட்டத்தை நிறுவ அப்புதிய தேசத்தின் பிரதிநிதிகள் ஒன்றுகூடியபோது, சட்டத்தின்கீழ் சுதந்திரம் என்ற நியமத்திற்கு முக்கிய இடமளிக்க தீர்மானித்தனர். இதன் அடிப்படையிலேயே ஐ.மா.-வின் உரிமைகள் மசோதா அமல்படுத்தப்பட்டது. இவ்வாறு 1957-⁠ல் மாக்ன கார்டாவை கௌரவிக்கும் வகையில் அமெரிக்க வழக்குரைஞர் கழகம் ரன்னிமீடு பகுதியில் ஒரு நினைவுச் சின்னத்தை நாட்டியது; “சட்டப்பூர்வ சுதந்திரத்திற்கு அடையாளமாக திகழும் மாக்ன கார்டாவின் நினைவாக” என்ற வாசகம் அதில் காணப்படுகிறது.

1948-⁠ல் அமெரிக்க அரசியல் அறிஞரான எலனர் ரூஸ்வெல்ட், ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகளுக்கான சர்வதேச பிரகடனத்தை உருவாக்குவதில் உதவினார்; இது “எங்குமுள்ள மனிதருக்கு சர்வதேச மாக்ன கார்டாவாக” விளங்கும் என நம்பினார். உண்மையில் மாக்ன கார்டாவின் சரித்திரப் பின்னணி, மனிதனின் தணியாத சுதந்திர தாகத்தை சுட்டிக்காட்டுகிறது. உயரிய இலட்சியங்கள் மத்தியிலும், இன்று மனிதனின் அடிப்படை உரிமைகள் அநேக நாடுகளில் அச்சுறுத்தப்படுகின்றன. மனித அரசாங்கங்களால் அனைவருக்குமே சுதந்திரத்தை உறுதியளிக்க முடியாமல் போவது மீண்டும் மீண்டும் நிரூபிக்கப்பட்டிருக்கிறது. வித்தியாசமான ஒரு அரசாங்கத்தின்கீழ், அதாவது கடவுளுடைய அரசாங்க சட்டத்தின்கீழ் இன்னும் மேம்பட்ட சுதந்திரத்தைப் பெறும் வாய்ப்பை லட்சக்கணக்கான யெகோவாவின் சாட்சிகள் உயர்வாக மதிப்பதற்கு இது ஒரு காரணம்.

கடவுளைப் பற்றி பைபிள் இவ்வாறு சொல்வது குறிப்பிடத்தக்கது: “கர்த்தருடைய ஆவி எங்கேயோ அங்கே விடுதலையுமுண்டு.” (2 கொரிந்தியர் 3:17) கடவுளுடைய ராஜ்யம் மனிதவர்க்கத்திற்கு அளிக்கவிருக்கும் சுதந்திரத்தைப் பற்றி தெரிந்துகொள்ள உங்களுக்கு விருப்பம் இருந்தால், யெகோவாவின் சாட்சிகள் அடுத்த முறை உங்களை சந்திக்க வரும்போது அவர்களிடம் கேட்டுத் தெரிந்துகொள்ளலாம் அல்லவா? அதற்கான பதில் கண்டிப்பாக உங்களுக்கு ஆர்வமளிக்கும், விடுதலையும் அளிக்கும். (g02 12/22)

[அடிக்குறிப்புகள்]

a “‘சுதந்திர குடிமகன்’ என்ற வார்த்தை 1215-⁠ல் குறிப்பிட்ட தொகுதியினரையே குறித்தது, ஆனால் பதினேழாம் நூற்றாண்டிற்குள் அது கிட்டத்தட்ட அனைவரையுமே குறித்தது.”​—⁠மேற்கத்திய நாகரிகத்தின் சரித்திரம் (ஆங்கிலம்).

b ஆள் கொணர் நீதிப் பேராணை என்பது ஒரு நபர் சிறையில் அடைக்கப்படுவது சட்டப்படி சரியானதா என விசாரிக்க ஆணையிடும் சட்ட ஆவணமாகும்.

[பக்கம் 13-ன் பெட்டி/படம்]

மகா சாசனம்

மாக்ன கார்டா (“மகா சாசனம்” என்பதற்கான லத்தீன் பதம்), “நிலமானியப் பிரபுக்களின் கோரிக்கைகள்” என்றே ஆரம்பமானது. 49 உட்பிரிவுகளை உடைய இந்த சாசனத்தில் அரசர் ஜான் முத்திரையிட்டார். அடுத்த சில நாட்களில் இந்த ஒப்பந்தம் 63 உட்பிரிவுகளாக விரிவுபடுத்தப்பட்டு, மீண்டும் ஜான் அரசரால் முத்திரையிடப்பட்டது. 1217-⁠ல் வெளிவந்த மறுபதிப்பில் இரண்டாவது சிறிய சாசனம் சேர்க்கப்பட்டது; அதில் கானக சட்டம் அடங்கியிருந்தது. அதுமுதற்கொண்டு இது மாக்ன கார்டா என விவரிக்கப்படலானது.

இதன் 63 உட்பிரிவுகள், ஒன்பது பிரிவுகளின்கீழ் பட்டியலிடப்பட்டுள்ளன. அவற்றில் சில, நிலமானியப் பிரபுக்களின் வேதனைகளைத் தணித்தல், சட்டமும் நீதியும் சீர்திருத்தப்படுதல், சர்ச்சின் சுதந்திரம் போன்றவற்றோடு சம்பந்தப்பட்டவை. 39-ஆம் உட்பிரிவு, ஆங்கிலேய சிவில் உரிமைகளுக்கான சரித்திரப்பூர்வ அடிப்படையாக ஆனது. அது கூறுவதாவது: “எந்தச் சுதந்திர குடிமகனும் பிரபுக்களுடைய சட்டத்துக்கு ஒத்த தீர்ப்பின்படியோ நாட்டின் சட்டப்படியோ அல்லாமல், கைப்பற்றப்படவோ, சிறைப்பிடிக்கப்படவோ, மானிய அல்லது உரிமை பறிமுதலுக்கு ஆளாக்கப்படவோ, சட்டப்பாதுகாப்பு அளிக்கப்படாதிருக்கவோ நாடுகடத்தப்படவோ, எவ்விதத்திலும் அந்தஸ்திற்கு ஊறு விளைவிக்கப்படவோ மாட்டார்; அவரை நாங்கள் பலவந்தப்படுத்தவோ யாரையேனும் அனுப்பி பலவந்தப்படுத்தவோ மாட்டோம்.”

[படம்]

பின்னணி: மாக்ன கார்டாவின் மூன்றாம் மறுபதிப்பு

[படத்திற்கான நன்றி]

By permission of the British Library, 46144 Exemplification of King Henry III’s reissue of Magna Carta 1225

[பக்கம் 12-ன் படம்]

அரசர் ஜான்

[படத்திற்கான நன்றி]

From the book Illustrated Notes on English Church History (Vols. I and II)

[பக்கம் 12-ன் படம்]

அரசர் ஜான் தன் கிரீடத்தை போப்பின் பிரதிநிதியிடம் ஒப்படைக்கிறார்

[படத்திற்கான நன்றி]

From the book The History of Protestantism (Vol. I)

[பக்கம் 13-ன் படம்]

அரசர் ஜான் நிலமானியப் பிரபுக்களை சந்தித்து, மாக்ன கார்டாவில் முத்திரையிட தீர்மானிக்கிறார், 1215

[படத்திற்கான நன்றி]

From the book The Story of Liberty, 1878

[பக்கம் 14-ன் படம்]

மாக்ன கார்டாவின் நினைவுச் சின்னம், ரன்னிமீடு, இங்கிலாந்து

[படத்திற்கான நன்றி]

ABAJ/Stephen Hyde

[பக்கம் 12-ன் படங்களுக்கான நன்றி]

மேலே பின்னணி: By permission of the British Library, Cotton Augustus II 106 Exemplification of King John’s Magna Carta 1215; King John’s Seal: Public Record Office, London