Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

ஆசிரியர் பணி—திருப்தியும் இன்பமும்

ஆசிரியர் பணி—திருப்தியும் இன்பமும்

ஆசிரியர் பணி​—திருப்தியும் இன்பமும்

“நான் ஏன் ஓர் ஆசிரியராகவே இருக்கிறேன்? ஆசிரியர் பணி சிரமமாகவும் களைப்பூட்டுவதாகவும் இருக்கலாம்; என்றாலும், கற்பதில் பிள்ளைகளின் ஆர்வத்தையும் அவர்களுடைய முன்னேற்றத்தையும் காண்பதே இப்பணியைத் தொடர என்னை உந்துவிக்கிறது.”​—லீமரீஸ், நியூ யார்க் நகர ஆசிரியர்.

எத்தனை சவால்களை, சிரமங்களை, ஏமாற்றங்களை எதிர்ப்பட்டாலும், இவை அனைத்தின் மத்தியிலும் உலகெங்குமுள்ள கோடிக்கணக்கான ஆசிரியர்கள் தாங்கள் தேர்ந்தெடுத்த பணியை விட்டு விடாமல் அதில் நிலைத்திருக்கிறார்கள். அதே சமயத்தில் போதியளவு மரியாதை கிடைக்காமல் போகலாம் என்பதை அறிந்தும் ஆசிரியர் பணிக்கு தகுதி பெறுவதற்காக ஆயிரக்கணக்கான மாணவர்கள் பாடுபட்டு உழைப்பது ஏன்? இதில் அவர்கள் உறுதியாக இருக்க உதவுவது எது?

இந்தியாவின் தலைநகரான புது டில்லியில் பள்ளி ஆசிரியராக வேலை பார்க்கும் மேரிஆன் இவ்வாறு விளக்கினார்: “மிக கஷ்டமான வருடங்களில் ஒரு டீனேஜருக்கு வழிகாட்டியதற்காக பாராட்டப்படுகையில் கிடைக்கும் ஆனந்தமே அலாதி தான். வாழ்க்கையில் நீங்கள் கைகொடுத்து தூக்கிவிட்ட இளைஞர் காலமெல்லாம் உங்களை பிரியத்துடன் நினைத்துப் பார்ப்பதால் உங்களுக்குக் கிடைக்கும் திருப்தி வேறெந்த வேலையிலும் கிடைப்பதில்லை.”

முந்தைய கட்டுரைகளில் குறிப்பிட்ட ஜூல்யானோ என்ற ஆசிரியர் கூறினார்: “ஒரு பாடத்தில் மாணவர்களின் ஆர்வத்தைத் தூண்டுவதில் வெற்றி கண்டுவிட்டதை உணருகையில் கிடைக்கும் திருப்திக்கு அளவேயில்லை. உதாரணமாக, வரலாற்றில் ஒரு கட்டத்தை நான் விளக்கிச் சொன்னதைக் கேட்ட மாணவர்களில் சிலர், ‘ஏன் நிறுத்திட்டீங்க, இன்னும் சொல்லுங்க!’ என்றார்கள். மாணவர்கள் இப்படி தெரிவிக்கும் பாராட்டுக்கள், அந்த சோர்வான காலை வேளையில் புத்துணர்ச்சி அளிக்கலாம்; ஏனென்றால் ஒரு புதிய விஷயத்தில் மாணவர்களின் உணர்ச்சிகளை தூண்டியிருக்கிறீர்கள். ஒரு பாடத்தைப் புரிந்துகொண்டதால் அவர்கள் கண்கள் பளிச்சிடுவதைக் காணும்போது உங்களுக்கு ஏற்படும் மகிழ்ச்சிக்கு எல்லையே இருப்பதில்லை.”

இத்தாலியில் ஆசிரியையாக இருக்கும் எல்லேனா கூறினார்: “அன்றாடம் நடக்கும் சிறுசிறு காரியங்களில் பெரும்பாலும் எனக்கு திருப்தி கிடைக்கிறது; அதாவது அரிதாகவே சம்பவிக்கும் மிகப் பெரிய சாதனைகளில் அல்லாமல் சின்னச் சின்ன சாதனைகளை மாணவர்கள் படைக்கும்போதே திருப்தி ஏற்படுகிறது.”

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த 30 வயதைத் தாண்டிய கான்னீ கூறினார்: “ஆசிரியராக உங்களுடன் ஒரு பிணைப்பை ஏற்படுத்திக்கொண்ட மாணவர் உங்கள் முயற்சிகளுக்கு நன்றி தெரிவித்து கடிதம் எழுத நேரமெடுக்கையில் கிடைக்கும் திருப்திக்கும் இன்பத்திற்கும் அளவே இல்லை.”

அர்ஜன்டினா, மென்டோஸாவைச் சேர்ந்த ஆஸ்காரும் அதையே சொன்னார்: “என்னிடம் படித்த மாணவர்கள் தெருவிலோ வேறெங்காவதோ என்னை சந்தித்து தங்களுக்குக் கற்றுக்கொடுத்த விஷயங்களுக்காக எனக்கு நன்றி தெரிவிக்கையில் மனதுக்கு மிகவும் திருப்தியாக இருக்கிறது.” ஸ்பெய்ன், மாட்ரிட்டைச் சேர்ந்த ஆன்ஞ்சால் கூறினார்: “அருமையான அதே சமயத்தில் சிரமம் மிகுந்த இந்தப் பணிக்கு வாழ்நாளில் ஒரு பகுதியை அர்ப்பணித்திருக்கும் எனக்கு பரம திருப்தி அளிப்பது, என்னிடம் படித்த மாணவர்கள் மணிமணியான ஆண்களும் பெண்களுமாக மாறியிருப்பதைக் காண்பதுதான்; ஏனெனில் அவர்கள் வெற்றிக்கு என் முயற்சியும் ஓரளவு பங்களித்திருக்கிறது.”

ஆரம்பத்தில் குறிப்பிட்ட லீமரீஸ் சொன்னார்: “ஆசிரியர்கள் தனிப்பிறவிகள் என்றே நான் உணருகிறேன். அப்படிப்பட்ட மாபெரும் பொறுப்பை ஏற்றுக்கொள்ளும் நாங்கள் கொஞ்சம் வினோதமானவர்களும்கூட. ஆனால், ஒரு மாற்றத்தை ஏற்படுத்த முடியுமென்றால், அது பத்து பிள்ளைகளாகட்டும், ஒரே ஒரு பிள்ளையாகட்டும், கடமையைச் செய்தோம் என்ற நிம்மதி கிடைக்கிறது. இதைவிட சிறந்த உணர்வு வேறில்லை. வேலையை சந்தோஷத்துடன் செய்ய முடிகிறது.”

உங்கள் ஆசிரியர்களுக்கு நன்றி தெரிவித்திருக்கிறீர்களா?

ஒரு மாணவராக அல்லது பெற்றோராக, ஆசிரியர் செலவிட்ட நேரம், முயற்சி, அக்கறை ஆகியவற்றுக்காக அவருக்கு எப்பொழுதாவது நன்றி தெரிவித்திருக்கிறீர்களா? அல்லது நன்றி மடலோ, நன்றி கடிதமோ அனுப்பியிருக்கிறீர்களா? கென்யாவிலுள்ள நைரோபியைச் சேர்ந்த ஆர்தர் அர்த்தமுள்ள குறிப்பு ஒன்றைச் சொன்னார்: “பாராட்டுகளாலும் ஆசிரியர்கள் தழைக்கிறார்கள். அவர்களையும் அவர்களின் சேவையையும் அரசு, பெற்றோர், மாணவர்கள் அனைவருமே உயர்வாய் மதிக்க வேண்டும்.”

எழுத்தாளரும் ஆசிரியருமான லூவன் ஜான்சன் எழுதினதாவது: “ஓர் ஆசிரியரைப் பற்றி என்னிடம் குறை சொல்லி வரும் கடிதம் ஒவ்வொன்றுக்கும், நூறு பாராட்டுக் கடிதங்கள் வந்து குவிகின்றன; இவை மோசமான ஆசிரியர்களைக் காட்டிலும் சிறந்த ஆசிரியர்களே அதிகமாக உள்ளனர் என்ற என் நம்பிக்கைக்கு வலுவூட்டுகின்றன.” அக்கறையூட்டும் வகையில், நிஜமாகவே அநேகர் துப்பறிபவர்களை பணத்திற்கு அமர்த்தி “முன்னாள் ஆசிரியரை தேடிக் கண்டுபிடிக்கின்றனர். தங்கள் ஆசிரியர்களைக் கண்டுபிடித்து அவர்களுக்கு நன்றி சொல்ல மக்கள் விரும்புகின்றனர்.”

ஒரு நபரின் கல்விக்கு அத்தியாவசியமான அஸ்திவாரத்தை ஆசிரியர்கள் போடுகின்றனர். மிகவும் பிரசித்தி பெற்ற பல்கலைக்கழகங்களிலுள்ள மிகச் சிறந்த பேராசிரியர்களும்கூட, தங்கள் கல்வி, அறிவு, புரிந்துகொள்ளுதல் ஆகியவற்றை வித்திட்டு வளர்ப்பதற்கு ஆசிரியர்கள் செலவிட்ட நேரத்திற்கும் முயற்சிக்கும் கடன்பட்டிருக்கின்றனர். நைரோபியைச் சேர்ந்த ஆர்தர் சொல்கிறார்: “பொதுத் துறையிலோ தனியார் துறையிலோ உயர் அதிகாரிகளாக இருக்கும் அனைவருமே, வாழ்க்கையின் ஒரு கட்டத்தில் ஓர் ஆசிரியரால் கல்வி புகட்டப்பட்டவர்களே.”

கற்றுக்கொள்ளும் ஆர்வத்தை தூண்டிய, மனதையும் இதயத்தையும் உந்துவித்த, அறிவிற்கும் புரிந்துகொள்ளுதலுக்குமான தாகத்தை தணித்துக்கொள்ள வழிகாட்டின ஆண்களுக்கும் பெண்களுக்கும் நாம் எவ்வளவு நன்றியுள்ளவர்களாக இருக்க வேண்டும்!

நீதிமொழிகள் 2:1-6-⁠ல் காணப்படும் பின்வரும் வார்த்தைகளை எழுதும்படி ஏவிய மகா ஆசிரியர் யெகோவா தேவனுக்கு நாம் இன்னும் எவ்வளவு நன்றியுள்ளவர்களாக இருக்க வேண்டும்: “என் மகனே, நீ உன் செவியை ஞானத்திற்குச் சாய்த்து, உன் இருதயத்தைப் புத்திக்கு அமையப்பண்ணும்பொருட்டு, நீ என் வார்த்தைகளை ஏற்றுக் கொண்டு [“ஏற்றுக்கொள்வாயாகில்,” NW], என் கட்டளைகளை உன்னிடத்தில் பத்திரப்படுத்தி, ஞானத்தை வா என்று கூப்பிட்டு, புத்தியைச் சத்தமிட்டு அழைத்து [“அழைப்பாயாகில்,” NW], அதை வெள்ளியைப்போல் நாடி, புதையல்களைத் தேடுகிறதுபோல் தேடுவாயாகில், அப்பொழுது கர்த்தருக்குப் பயப்படுதல் இன்னதென்று நீ உணர்ந்து, தேவனை அறியும் அறிவைக் கண்டடைவாய். கர்த்தர் ஞானத்தைத் தருகிறார்; அவர் வாயினின்று அறிவும் புத்தியும் வரும்.”

நிபந்தனைக்குட்பட்ட -“ஆகில்” என்ற விகுதி, சிந்தையைத் தூண்டும் இவ்வசனங்களில் மூன்று தடவை வருவதை கவனியுங்கள். அந்த சவாலை ஏற்றுக்கொள்ள நாம் மனமுள்ளவர்களாக இருந்தால், ‘தேவனை அறியும் அறிவைக் கண்டடைவோம்’! நிச்சயமாகவே அதுதான் எல்லாவற்றிலும் தலைசிறந்த கல்வியாகும். (g02 3/8)

[பக்கம் 13-ன் பெட்டி]

மகிழ்ச்சியுள்ள தாய்

பின்வரும் கடிதத்தை நியூ யார்க் நகர ஆசிரியர் ஒருவர் பெற்றார்:

“என் பிள்ளைகளுக்கு நீங்கள் செய்திருக்கும் உதவிக்காக என் இதயத்தின் ஆழத்திலிருந்து உங்களுக்கு நன்றி சொல்ல விரும்புகிறேன். கரிசனை, கனிவு, திறமை ஆகியவற்றைக் காட்டி, அவர்களை சாதனை படைக்கச் செய்திருக்கிறீர்கள்; நீங்கள் இல்லாமல் அவர்களால் அதை அடைந்திருக்க முடியாது என்பது நிச்சயம். என் பிள்ளைகளால் என்னை பெருமிதம் கொள்ள செய்திருக்கிறீர்கள்—மறக்க முடியாத ஓர் அனுபவம். தங்கள் உண்மையுள்ள, எஸ். பி.”

உங்களுக்குத் தெரிந்த எந்த ஆசிரியரையாவது நீங்கள் உற்சாகப்படுத்த முடியுமா?

[பக்கம் 12-ன் படம்]

‘ஒரு பாடத்தைப் புரிந்துகொண்டதால் மாணவர்களின் கண்கள் பளிச்சிடுவதைக் காணும்போது உங்களுக்கு ஏற்படும் மகிழ்ச்சிக்கு எல்லையே இருப்பதில்லை.’​—ஜூல்யானோ, இத்தாலி

[பக்கம் 13-ன் படங்கள்]

‘ஒரு மாணவர் உங்கள் முயற்சிகளுக்கு நன்றி தெரிவித்து கடிதம் எழுத நேரமெடுக்கையில் கிடைக்கும் திருப்திக்கும் இன்பத்திற்கும் அளவே இல்லை.’​—கான்னீ, ஆஸ்திரேலியா