Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

கிறிஸ்தவர்கள் புதுவருட கொண்டாட்டங்களில் பங்குகொள்ளலாமா?

கிறிஸ்தவர்கள் புதுவருட கொண்டாட்டங்களில் பங்குகொள்ளலாமா?

பைபிளின் கருத்து

கிறிஸ்தவர்கள் புதுவருட கொண்டாட்டங்களில் பங்குகொள்ளலாமா?

“புது வருட பிறப்புக்கு முந்தின மதியம் வழக்கத்துக்கு மாறாக மிகவும் அமைதியாக இருக்கும்” என்கிறார் பிரேசிலில் உள்ள டாக்டர் ஃபர்னான்டூ. “பின்னர் இரவு சுமார் 11 மணியளவில், வரத் தொடங்குவார்கள்​—குத்துக் காயங்கள், குண்டடிபட்ட காயங்கள், வாகன விபத்துக்களில் சிக்கிய டீனேஜர்கள், அடிக்கப்பட்ட மனைவிகள் என வரிசையாக வந்து கொண்டே இருப்பார்கள். பெரும்பாலும் மதுபானமே இவற்றிற்கு காரணமாக இருக்கிறது.”

மேற்சொல்லப்பட்டதை கவனிக்கையில், வருடத்தின் முதல் நாளை சர்வதேச குடியின் பின்விளைவு நாள் என பிரேசிலைச் சேர்ந்த பத்திரிகை ஒன்று குறிப்பிட்டதில் ஆச்சரியம் ஏதுமில்லை. “இன்பத்தையே நாடும் சாதாரண மனிதனை சந்தோஷப்படுத்தவே புதுவருட நாள்” என்றும் அது “மதுபானத்துக்கும் மனிதனுக்கும் இடையிலுள்ள நிரந்தர போராட்டத்தில் மற்றுமொரு சுற்று” என்றும் ஐரோப்பிய செய்தி நிறுவனம் ஒன்று சொல்கிறது.

எல்லாருமே அதிகமாக குடித்தும் வன்முறையான செயல்களை செய்தும் புத்தாண்டை கொண்டாடுவதில்லை என்பது உண்மைதான். சொல்லப்போனால், அநேகருக்கு அந்நாளைப் பற்றி இனிய நினைவுகளும் உண்டு. “பிள்ளைகளாக இருக்கையில், புதுவருட பிறப்பின் முந்தைய இரவுக்காக நாங்கள் ஆவலாக காத்திருப்போம்” என்கிறார் ஏற்கெனவே மேற்கோள் காட்டிய ஃபர்னான்டூ. “பல விளையாட்டுகளும் எக்கச்சக்கமான உணவும் பானமும் எப்போதும் இருந்தன. நடுராத்திரியில் நாங்கள் ஒருவரையொருவர் கட்டி அணைத்து முத்தமிட்டு புத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வோம்.”

அதேவிதமாகவே, இன்றும் புத்தாண்டு கொண்டாட்டங்களை மிதமிஞ்சிப் போகாமல் அனுசரிப்பதாக அநேகர் நினைக்கிறார்கள். என்றாலும், இந்த பிரபல கொண்டாட்டம் எங்கிருந்து ஆரம்பித்தது, அதன் முக்கியத்துவம் என்ன என்பதை கிறிஸ்தவர்கள் ஆராய்வது அவசியம். புதுவருட கொண்டாட்டங்கள் பைபிள் போதனைகளுக்கு விரோதமானவையா?

கடந்தகால உண்மைகள்

புதுவருட கொண்டாட்டங்கள் ஒன்றும் புதியவை அல்ல. பொ.ச.மு. மூன்றாவது மிலெனியத்திலேயே இவை பாபிலோனில் கொண்டாடப்பட்டதாக பண்டைய கல்வெட்டுகள் காண்பிக்கின்றன. மார்ச் மாத மத்திபத்தில் அனுசரிக்கப்பட்ட இந்த கொண்டாட்டம், மிக முக்கியமானது. “புதிய வருடத்தில் அந்த நாட்டின் விதியை மார்டூக் என்ற தெய்வம் தீர்மானிக்கும் சமயம் அது” என்கிறது த உவர்ல்ட் புக் என்ஸைக்ளோப்பீடியா. பாபிலோனிய புத்தாண்டு கொண்டாட்டம் 11 நாள் நீடித்தது. அதில் பலிகளும், ஊர்வலங்களும், கருவள சடங்குகளும் உட்பட்டிருந்தன.

சில காலமாக, ரோமர்களுடைய வருடமும் மார்ச் மாதத்தில்தான் ஆரம்பமானது. ஆனால் அது ஜனவரி ஒன்றாம் தேதி தொடங்க வேண்டும் என்று பொ.ச.மு. 46-⁠ல் பேரரசர் ஜூலியஸ் சீஸர் அறிவித்தார். ஆரம்பங்களின் தெய்வமாகிய ஜேனஸுக்கு அந்த நாள் ஏற்கெனவே அர்ப்பணிக்கப்பட்டிருந்தது. இப்போது அது ரோம வருடத்தின் முதல் நாளையும் குறிக்கும். தேதி மாறியது, ஆனால் விழாக்கோலமோ தொடர்ந்தது. ஜனவரி முதல் தேதி அன்று, மக்கள் “மிதமிஞ்சி செயல்படுவதற்கும் பல்வகையான புறமத மூடநம்பிக்கைகளில் ஈடுபடுவதற்கும் துணிந்திருந்தார்கள்” என்பதாக மக்ளின்டாக் மற்றும் ஸ்ட்ராங்கின் ஸைக்ளோப்பீடியா சொல்கிறது.

இன்றும் மூடநம்பிக்கை சார்ந்த சடங்குகள் புதுவருட கொண்டாட்டங்களின் பாகமாக இருக்கின்றன. உதாரணமாக, தென் அமெரிக்காவைச் சேர்ந்த சில பகுதிகளில், அநேகர் தங்கள் வலது காலில் நின்றுகொண்டு புதுவருடத்தை வரவேற்கிறார்கள். இன்னும் மற்றவர்கள் கொம்பு வாத்தியத்தை இசைக்கிறார்கள், பட்டாசு வெடிக்கிறார்கள். செக் நாட்டு வழக்கத்தின்படி, புதுவருட தினத்துக்கு முந்தைய இரவு லென்டில் சூப்பை சுவைப்பதற்கான நேரம். ஸ்லோவாக் பாரம்பரியத்தின்படி, மேஜை விரிப்புக்கு அடியில் பணத்தையோ மீன் செதிள்களையோ வைப்பது பழக்கம். துரதிர்ஷ்டம் வராமல் தடுக்கவும், வளம் பெருகுவதை உறுதியளிக்கவும் செய்யப்படும் இதுபோன்ற சடங்குகள், வருடம் பிறக்கையிலேயே அதன் விதியும் தீர்மானிக்கப்படும் என்ற பண்டைய நம்பிக்கையை நிலைநாட்டும் செயல்களே ஆகும்.

பைபிளின் கருத்து

‘களியாட்டமும் குடிவெறியுமின்றி மதிப்போடு நடந்து கொள்ளும்படி’ பைபிள் கிறிஸ்தவர்களுக்கு புத்திமதி அளிக்கிறது. a (உரோமையர் [ரோமர்] 13:12-14, பொது மொழிபெயர்ப்பு; கலாத்தியர் 5:19-21; 1 பேதுரு 4:3) பைபிள் கண்டனம் செய்கிற மிதமிஞ்சிய காரியங்களே புதுவருட கொண்டாட்டங்களில் பெரும்பாலும் முக்கிய பாகம் வகிப்பதால், கிறிஸ்தவர்கள் அவற்றில் பங்குகொள்வதில்லை. இதனால் கிறிஸ்தவர்கள் இன்பம் அனுபவிக்காத, உற்சாகமற்ற மக்கள் என்று அர்த்தமில்லை. மாறாக, உண்மை கடவுளை வணங்குகிறவர்கள் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று பைபிள் திரும்பத்திரும்ப சொல்கிறது; அதுவும் மகிழ்ச்சியாக இருக்க பல காரணங்களை குறிப்பிடுகிறது என்பதை அவர்கள் அறிந்திருக்கிறார்கள். (உபாகமம் 26:10, 11; சங்கீதம் 32:11; நீதிமொழிகள் 5:15-19; பிரசங்கி 3:22; 11:9) உணவும் பானமும் பெரும்பாலும் மகிழ்ச்சியுடன் சம்பந்தப்பட்டிருப்பதையும் பைபிள் ஒத்துக்கொள்கிறது.​—சங்கீதம் 104:15; பிரசங்கி 9:⁠7அ.

நாம் பார்த்தபடி, புதுவருட கொண்டாட்டங்கள் புறமத பழக்கங்களில் வேரூன்றியவை. பொய் வணக்கம் யெகோவாவின் பார்வையில் அசுத்தமானது, அருவருப்பானது; அதிலிருந்து வந்த பழக்கங்களை கிறிஸ்தவர்கள் ஏற்க மறுக்கிறார்கள். (உபாகமம் 18:9-12; எசேக்கியேல் 22:3, 4) அப்போஸ்தலன் பவுல் இவ்வாறு எழுதினார்: “நீதிக்கும் அநீதிக்கும் சம்பந்தமேது? ஒளிக்கும் இருளுக்கும் ஐக்கியமேது? கிறிஸ்துவுக்கும் பேலியாளுக்கும் இசைவேது?” நல்ல காரணத்துடனேயே, பவுல் மேலுமாக, “அசுத்தமானதைத் தொடாதிருங்கள்” என்று எழுதினார்.​—2 கொரிந்தியர் 6:14-17.

மூடநம்பிக்கை சார்ந்த சடங்குகளில் பங்கெடுப்பது மகிழ்ச்சியையும் செழிப்பையும் உறுதியளிப்பதில்லை என்பதையும் கிறிஸ்தவர்கள் அறிந்திருக்கிறார்கள்; ஏனென்றால் அப்படிப்பட்ட கொண்டாட்டங்களில் பங்கெடுப்பது கடவுளுடைய வெறுப்பையே சம்பாதிக்கும். (பிரசங்கி 9:11, NW; ஏசாயா 65:11, 12) மேலுமாக கிறிஸ்தவர்கள் தங்கள் நடத்தையில் நிதானமுள்ளவர்களும் சுயகட்டுப்பாடுள்ளவர்களுமாய் இருக்க வேண்டுமென்று பைபிள் அறிவுறுத்துகிறது. (1 தீமோத்தேயு 3:2, 11, NW) கிறிஸ்துவின் போதனைகளை பின்பற்றுவதாக சொல்லிக்கொள்ளும் ஒருவர், மிதமிஞ்சிய பழக்கங்களே பெரும்பாலும் நிலவும் ஒரு கொண்டாட்டத்தில் பங்குகொள்வது தகுந்ததல்ல என்பது தெளிவாக உள்ளது.

புத்தாண்டு விழா கொண்டாட்டங்கள் எவ்வளவுதான் கண்ணுக்கினியவையாகவும் உணர்வுகளுக்கு விருந்தளிப்பவையாகவும் இருந்தாலும், ‘அசுத்தமானதைத் தொடாதிருக்கவும்’ ‘மாம்சத்திலும் ஆவியிலும் உண்டான எல்லா அசுசியும் நீங்கி இருக்கவும்’ பைபிள் நமக்கு சொல்கிறது. இதற்கு செவிசாய்ப்பவர்களுக்கு யெகோவா பின்வருமாறு இதமளிக்கும் உறுதியளிக்கிறார்: ‘நான் உங்களை ஏற்றுக்கொண்டு, உங்களுக்குப் பிதாவாயிருப்பேன், நீங்கள் எனக்குக் குமாரரும் குமாரத்திகளுமாய் இருப்பீர்கள்.’ (2 கொரிந்தியர் 6:18–7:1) உண்மையில், அவருக்கு உண்மையாய் இருப்பவர்களுக்கு அவர் நித்திய ஆசீர்வாதங்களையும் செழுமையையும் வாக்குறுதி அளிக்கிறார்.​—சங்கீதம் 37:18, 28; வெளிப்படுத்துதல் 21:3, 4, 7. (g02 1/8)

[அடிக்குறிப்பு]

a ‘களியாட்டத்தையும் குடிவெறியையும்’ பற்றி பவுல் குறிப்பிட்டது, புதுவருட கொண்டாட்டங்களில் நடந்தவற்றையும் உட்படுத்தியிருக்கலாம், ஏனென்றால் ரோமில் முதல் நூற்றாண்டில் இவை பிரபலமாக இருந்தன.