Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

அடிக்கப்படும் பெண்களுக்கு ஆதரவு

அடிக்கப்படும் பெண்களுக்கு ஆதரவு

அடிக்கப்படும் பெண்களுக்கு ஆதரவு

கொடுமைப்படுத்தப்படும் பெண்களுக்கு எப்படி கைகொடுக்கலாம்? முதலாவதாக, எப்படிப்பட்ட கொடுமைகளை சகிக்கிறார்கள் என புரிந்துகொள்ள வேண்டும். அடிக்கும் ஆண்கள் பெரும்பாலும் உடலை இம்சிப்பதோடு நிறுத்திக்கொள்வதில்லை. எதையாவது சொல்லி பயமுறுத்துகிறார்கள், மிரட்டி அடிபணிய வைக்கிறார்கள். இதனால் மனைவி லாயக்கற்றவள் போலவும் கையாலாகாதவள் போலவும் உணருகிறாள்.

ரோக்ஸானாவை எடுத்துக்கொள்ளுங்கள்; முதல் கட்டுரையில் இவரது அனுபவத்தை பார்த்தோம். சிலசமயம் இவரது கணவர் சொல்லம்புகளால் தாக்குகிறார். “அவர் என்னை ரொம்ப கேவலமாக பேசுவார். ‘நீ படிச்ச லட்சணத்துக்கு பிள்ளைகள் ஒரு கேடு. நான் இல்லாம அதுகள வளர்த்து ஆளாக்கறதுக்கு உனக்கு எங்கடி துப்பு இருக்கு? சரியான சோம்பேறி, ஒன்னுத்துக்கும் லாயக்கில்லாதவ, அம்மாவாம் அம்மா. நீயே தனியா பிள்ளைகள வளர்க்கறதுக்கு உரிமை கிடைக்கும்னு கனவா கண்டுகிட்டு இருக்க?’ என்றெல்லாம் பொரிந்துதள்ளுவார்” என ரோக்ஸானா மனம்திறந்து கொட்டுகிறார்.

ரோக்ஸானாவின் கணவர் காசு விஷயத்தில் கறார்ப் பேர்வழி, அதை வைத்தே ஆதிக்கம் செலுத்துகிறார். காரை பயன்படுத்த ரோக்ஸானாவை அனுமதிக்க மாட்டார், என்ன செய்கிறாள் ஏது செய்கிறாள் என வேவு பார்க்க நாள்பூராவும் நினைத்த நேரமெல்லாம் போன் செய்துகொண்டே இருப்பார். ரோக்ஸானா மட்டும் தன் அபிப்பிராயத்தை சொல்லிவிட்டால் போதும், பூகம்பமே வெடித்துவிடும். அதனால் ரோக்ஸானா எதற்கும் வாயே திறப்பதில்லை.

மனைவிகளுக்கு இழைக்கப்படும் கொடுமை, சிக்கலான பிரச்சினை என்பதை புரிந்துகொள்ள முடிகிறது. அவர்களுக்கு கைகொடுக்க, இரக்கத்தோடு காதுகொடுத்து கேளுங்கள். பொதுவாக, தங்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளை வாய்விட்டு சொல்வது அவர்களுக்கு ரொம்ப கஷ்டம் என்பதை ஞாபகம் வையுங்கள். அவர்கள் வேகத்திலேயே நிலைமையை சமாளிக்க உதவும் வகையில் அவர்களுக்கு பக்கபலமாக இருப்பதுதான் உங்கள் லட்சியமாக இருக்க வேண்டும்.

அடிவாங்கும் சில பெண்கள் போலீஸாரின் உதவியை நாட வேண்டியிருக்கலாம். சிலசமயம் போலீஸார் தலையிடுவது போன்ற நெருக்கடியான ஒரு கட்டத்தில், கொடுமைப்படுத்தும் அந்தக் கணவன் தான் எந்தளவுக்கு மோசமாக நடந்துகொள்கிறான் என்பதை உணரலாம். இருந்தாலும் தன்னை மாற்றிக்கொள்ள வேண்டும் என்ற தூண்டுதல் அந்த கட்டத்தைத் தாண்டியவுடனேயே பெரும்பாலும் மறைந்துவிடுவதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்.

அடிவாங்கும் மனைவி தன் கணவனைவிட்டு பிரிய வேண்டுமா? பைபிளைப் பொறுத்தவரை மணமானவர்கள் பிரிவது சாதாரணமான விஷயமல்ல. இருந்தாலும் மனைவியானவள் தன் உடலுக்கும் உயிருக்கும்கூட ஊறு விளைவிக்கும் கணவனோடு பொறுத்துப் போகத்தான் வேண்டும் என பைபிள் வற்புறுத்துவதுமில்லை. ‘அப்படிப் பிரிந்து வாழ்ந்தால் மறுமணம் செய்யாமலிருக்க வேண்டும். அல்லது கணவருடன் ஒப்புரவாக வேண்டும்’ என கிறிஸ்தவ அப்போஸ்தலனாகிய பவுல் எழுதினார். (1 கொரிந்தியர் 7:10-16, பொது மொழிபெயர்ப்பு) சூழ்நிலை கைமீறிப் போகையில் பிரிந்து வாழ்வதை பைபிள் அனுமதிப்பதால், இந்த விஷயத்தில் ஒரு பெண் எடுக்கும் முடிவு தனிப்பட்ட விஷயம். (கலாத்தியர் 6:5) கணவனைவிட்டு பிரிந்து வாழ யாரும் மனைவியை வற்புறுத்தக் கூடாது. அதே சமயத்தில் அடித்துக் கொடுமைப்படுத்தி உடலுக்கும் உயிருக்கும் ஆன்மீகத்துக்கும் ஊறு விளைக்கும் ஒரு கணவனோடு சேர்ந்து வாழும்படி யாரும் கட்டாயப்படுத்தவும் கூடாது.

அடிக்கும் கணவன்மார் திருந்த வாய்ப்புண்டா?

மனைவியை கொடுமைப்படுத்துவது பைபிள் நியமங்களை நேரடியாக மீறுவதாகும். எபேசியர் 4:29, 31 இப்படி சொல்கிறது: “கெட்ட வார்த்தை ஒன்றும் உங்கள் வாயிலிருந்து புறப்பட வேண்டாம்; . . . சகலவிதமான கசப்பும், கோபமும், மூர்க்கமும், கூக்குரலும், தூஷணமும், மற்ற எந்தத் துர்க்குணமும் உங்களைவிட்டு நீங்கக்கடவது.”

கிறிஸ்துவைப் பின்பற்றும் எந்தக் கணவரும் தன் மனைவியை கொடுமைப்படுத்திக்கொண்டு அதேசமயம் அவளை நேசிப்பதாகவும் சொல்ல முடியாது. அவர் தன் மனைவியை கேவலமாக நடத்தினால், எவ்வளவுதான் வேறு நல்ல காரியங்களை செய்தாலும் என்ன பயன்? ‘அடிக்கிறவன்’ கிறிஸ்தவ சபையில் எந்த விசேஷ பொறுப்புகளுக்கும் தகுதிபெறுவதில்லை. (1 தீமோத்தேயு 3:3; 1 கொரிந்தியர் 13:1-3) சொல்லப்போனால், கிறிஸ்தவர் என உரிமைபாராட்டும் எவராவது அடிக்கடி கோபத்தில் வெடிக்கும்போது, அதுவும் திருந்தாதபோது கிறிஸ்தவ சபையிலிருந்து நீக்கப்படலாம்.​—கலாத்தியர் 5:19-21; 2 யோவான் 9, 10.

மூர்க்கமான ஆண்கள் தங்கள் நடத்தையை மாற்றிக்கொள்ள முடியுமா? சிலர் மாற்றியிருக்கிறார்கள். அடிக்கிறவர் பொதுவாக பின்வரும் சந்தர்ப்பங்களில் மட்டுமே மாறுவார்: (1தன் நடத்தை தவறு என்பதை ஒப்புக்கொள்ளும்போது, (2தன் நடத்தையை மாற்றிக்கொள்ள விரும்பும்போது, (3உதவியை நாடும்போது. ஒருவரைத் திருத்தும் அபார சக்தி பைபிளுக்கு இருப்பதை யெகோவாவின் சாட்சிகள் அனுபவத்தில் கண்டிருக்கிறார்கள். அவர்களோடு பைபிளை படிக்கும் அநேக ஆர்வமுள்ள நபர்கள், கடவுளை பிரியப்படுத்த வேண்டும் என்ற அளவிலா ஆசையை வளர்த்திருக்கிறார்கள். யெகோவா தேவனை பொறுத்தமட்டில், ‘கொடுமையில் பிரியமுள்ளவனை அவருடைய உள்ளம் வெறுக்கிறது’ என்பதை இந்தப் புதிய பைபிள் மாணாக்கர்கள் கற்றுக்கொண்டிருக்கிறார்கள். (சங்கீதம் 11:5) கொடுமைக்கார கணவர் அடிப்பதை நிறுத்திவிட்டால் மட்டுமே அவர் திருந்திவிட்டதாக ஆகிவிடாது. தன் மனைவியை முற்றிலும் புதிய கோணத்தில் பார்க்க அவர் கற்றுக்கொள்ள வேண்டும்.

கடவுளைப் பற்றி கணவன் கற்றுக்கொள்ளும்போது, தன் மனைவியை வேலைக்காரியாக பார்ப்பதற்கு பதிலாக, ‘துணைவியாக’ பார்க்கிறார்; மட்டமானவளாக பார்க்காமல் ‘கனப்படுத்தப்பட’ வேண்டியவளாக பார்க்கிறார். (ஆதியாகமம் 2:18, NW; 1 பேதுரு 3:7) பரிவோடு நடந்துகொண்டு, மனைவியின் கருத்தையும் காதுகொடுத்துக் கேட்க வேண்டிய அவசியத்தை கற்றுக்கொள்கிறார். (ஆதியாகமம் 21:12; பிரசங்கி 4:1) யெகோவாவின் சாட்சிகளது பைபிள் படிப்பு ஏற்பாடு அநேக தம்பதிகளுக்கு கைகொடுத்திருக்கிறது. கிறிஸ்தவ குடும்பத்தில் கொடுங்கோலர்களுக்கு அல்லது அராஜகர்களுக்கு இடமே இல்லை.​—எபேசியர் 5:25, 28, 29.

‘தேவனுடைய வார்த்தையானது ஜீவனும் வல்லமையும் உள்ளது.’ (எபிரெயர் 4:12) ஆகவே பைபிளில் உள்ள ஞானம், தங்கள் பிரச்சினைகளை பகுத்தறிய தம்பதிகளுக்கு உதவுகிறது; அவற்றை சமாளிப்பதற்கான தைரியத்தையும் தருகிறது. அதுமட்டுமின்றி, யெகோவாவின் பரலோக ராஜா கீழ்ப்படிதலுள்ள மனிதவர்க்கம் முழுவதின்மீதும் ஆட்சிசெய்யும்போது உலகில் கொடுமையின் சுவடே தெரியாது என்ற உறுதியான, ஆறுதலான நம்பிக்கையை பைபிள் தருகிறது. அது சொல்வதாவது: “கூப்பிடுகிற எளியவனையும், உதவியற்ற சிறுமையானவனையும் அவர் விடுவிப்பார். அவர்கள் ஆத்துமாக்களை வஞ்சகத்திற்கும் கொடுமைக்கும் தப்புவிப்பார்.”​—சங்கீதம் 72:12, 14.(g01 11/8)

[பக்கம் 12-ன் சிறு குறிப்பு]

கிறிஸ்தவ குடும்பத்தில் கொடுங்கோலர்களுக்கு அல்லது அராஜகர்களுக்கு இடமே இல்லை

[பக்கம் 8-ன் பெட்டி]

தவறான அபிப்பிராயங்களை திருத்திக்கொள்வது

கணவன் அடிப்பதற்கு மனைவியே காரணம்.

அடிக்கிற கணவன்மார் அநேகர் தங்கள் தவறை ஒப்புக்கொள்ள மறுத்து, மனைவிகளே தங்களை கோபப்படுத்துவதாக அவர்கள்மீது வீண் பழிசுமத்துகிறார்கள். குடும்ப நண்பர்கள் சிலரும்கூட, மனைவி சரியில்லாததால்தான் கணவனுக்கு எப்போதாவது கோபம் வந்துவிடுகிறது என நினைக்கலாம். ஆனால் இது, கொடுமைக்கு ஆளாகுபவரை குற்றப்படுத்துவதற்கும் கொடுமைப்படுத்துபவரை நியாயப்படுத்துவதற்கும் சமம். உண்மையில், அடிவாங்கும் மனைவிகள்தான் பெரும்பாலும் வலியச் சென்று தங்கள் கணவர்களை சமாதானப்படுத்த பெரும் பாடுபடுகிறார்கள். அதுமட்டுமல்ல, மனைவியைக் கைநீட்டி அடிப்பது எந்த சந்தர்ப்பத்திலும் ஒருபோதும் நியாயம் அல்ல. அடிக்கிறவர்​—⁠ஒரு மனோதத்துவ கண்ணோட்டம் என்ற ஆங்கில புத்தகம் சொல்வதாவது: “மனைவியை கொடுமைப்படுத்தியதற்காக நீதிமன்றத்தால் மருத்துவ உதவிபெற அனுப்பப்படும் ஆண்கள் வன்முறைக்கு அடிமையானவர்கள். கோபத்திலிருந்து அல்லது மனச்சோர்விலிருந்து விடுபட அதை வடிகாலாக பயன்படுத்துகிறார்கள். கட்டுப்பாட்டைப் பெற, சண்டைகளை தீர்க்க, டென்ஷனை போக்க அதை யுக்தியாக பயன்படுத்துகிறார்கள். . . . அநேகர் தங்கள்மீது குற்றம் இருப்பதையே ஒப்புக்கொள்வதில்லை அல்லது அதை ஒரு பொருட்டாகவே எடுத்துக்கொள்வதில்லை.”

குடித்திருப்பதால்தான் கணவன் மனைவியை அடிக்கிறான்.

குடிவெறியில் இருக்கும்போது சில ஆண்கள் மிக அதிக மூர்க்கமடைவது உண்மைதான். ஆனால் அதற்காக மதுபானத்தின்மீது பழிபோடுவது நியாயமா? “குடித்து வெறிப்பது, அடிக்கிறவர் தன் நடத்தைக்கு வேறொன்றின்மீது பழிசுமத்த உதவுகிறது” என வன்முறை வீட்டில் துவங்கும்போது ஆங்கில என்ற புத்தகத்தில் எழுதுகிறார் கே. ஜே. வில்சன். அவர் தொடர்ந்து எழுதுவதாவது: “நம் சமுதாயத்தில், குடித்திருப்பவர் கொடுமைப்படுத்துவதை புரிந்துகொள்வது எளிதாக இருக்கிறது. கொடுமைக்கு ஆளாகும் மனைவி தன் கணவனை கொடுமைக்காரராக பார்க்காமல் குடிவெறியராக அல்லது குடிக்கு அடிமையானவராக பார்க்கிறாள்.” இது, “அவர் மட்டும் குடிப்பதை நிறுத்திவிட்டால் கொடுமை முடிவுக்கு வந்துவிடும்” என்ற தவறான நம்பிக்கையை மனைவிக்கு அளிக்கிறது என வில்சன் சுட்டிக்காட்டுகிறார்.

சமீபகாலத்தில் அநேக ஆராய்ச்சியாளர்கள் குடிப்பதையும் அடிப்பதையும் இரு வெவ்வேறு பிரச்சினைகளாக கருதுகிறார்கள். சொல்லப்போனால், மதுவிற்கோ போதைக்கோ அடிமையாகும் பெரும்பான்மையான ஆண்கள் தங்கள் மனைவிகளை அடிப்பதில்லை. ஆண்கள் பெண்களை அடிக்கும்போது என்ற ஆங்கில புத்தகத்தின் ஆசிரியர்கள் இவ்வாறு குறிப்பிடுகிறார்கள்: “அடித்து உதைக்கும்போது பெண்ணை கட்டுப்பாட்டிற்குள் வைத்துக்கொள்ள முடிகிறது, மிரட்டி அடிபணிய செய்ய முடிகிறது, அடக்கிவைக்க முடிகிறது என்றெல்லாம் தெரிந்துவிட்டால் அடி உதைகள் தொடர்கதையாகின்றன. . . . அடித்துக் கொடுமைப்படுத்துபவர் மதுவையும் போதைப்பொருளையும் துஷ்பிரயோகம் செய்வது சகஜம். ஆனால் அவற்றையே மூர்க்க நடத்தைக்கு காரணம் காட்ட நினைப்பது தவறு.”

மனைவிகளை அடிப்பவர்கள் எல்லாரிடமுமே மூர்க்கமாக நடந்துகொள்கிறார்கள்.

மனைவியை அடிக்கிறவர் பெரும்பாலும் மற்றவர்களுடன் நட்போடும் இனிமையோடும் பழகும் இயல்புள்ளவர். பொதுவாக அவர் இரட்டை வேஷம் போடுபவராக இருப்பார். இதனால்தான் அவரது மூர்க்க நடத்தையைப் பற்றி சொல்கையில் நண்பர்களால் நம்ப முடிவதில்லை. இருந்தாலும், மனைவியை அடிப்பவர், அவள்மீது ஆதிக்கம் செலுத்த மூர்க்கத்தனத்தை கையாள தீர்மானிப்பதுதான் உண்மை.

கொடுமையை பெண்கள் ஆட்சேபிப்பது இல்லை.

தப்புவதற்கு வழியில்லாமல் தவிக்கும் பெண்ணின் நிர்க்கதியான நிலையை புரிந்துகொள்ள தவறுவதாலேயே இந்த அபிப்பிராயம் ஏற்படுகிறது. அடிக்கப்படும் பெண்ணுக்கு அவளது நண்பர்கள் ஓரிரு வாரங்களுக்கு அடைக்கலம் தரலாம், ஆனால் அதற்குப் பின்? வேலை தேட வேண்டும், வாடகை கொடுக்க வேண்டும், பிள்ளைகளை வளர்க்க வேண்டும் என்றெல்லாம் நினைத்து அந்த அபலை நொந்துபோகலாம். மேலும், பிள்ளைகளோடு ஓடிப்போவதை சட்டம் தடைசெய்யலாம். சிலர் வீட்டைவிட்டு வெளியேறியிருக்கிறார்கள், ஆனால் வலைபோட்டு தேடி கண்டுபிடிக்கப்பட்டு வலுக்கட்டாயமாக அல்லது வசியபேச்சால் மீண்டும் அழைத்து வரப்பட்டிருக்கிறார்கள். இதைப் புரிந்துகொள்ளாத நண்பர்கள், அப்படிப்பட்ட பெண்கள் கொடுமையை ஆட்சேபிக்கவில்லை என தப்புக்கணக்குப் போடலாம்.