Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

ஓவியக் கலைஞராக என் வாழ்க்கை

ஓவியக் கலைஞராக என் வாழ்க்கை

ஓவியக் கலைஞராக என் வாழ்க்கை

ஷீஸூகோ காவாபாட்டா சொன்னபடி

“யெகோவாவின் சாட்சிகள் எனும் இனிய மக்கள் உலகமனைத்திலும் நற்செய்தியை அறிவித்து வருகின்றனர்” என்பதே என் ஓவியமொன்றின் தலைப்பு; இதை 1999-⁠ல் பிரான்ஸில் வெர்செய்ல்ஸ் நகரில் நடத்தப்பட்ட ஒரு கலைக் கண்காட்சியில் வைத்திருந்தனர்.

அந்தக் கண்காட்சி நடப்பதற்கு ஒரு வாரம்கூட மீதமிருக்கவில்லை; பிரான்ஸ் நாட்டில் யெகோவாவின் சாட்சிகள் நாடு முழுவதிலும் 1 கோடியே 20 லட்சம் துண்டுப்பிரதிகளை விநியோகித்திருந்தனர்; அது, பிரான்ஸ் அரசு அவர்களை அநியாயமாக நடத்தியதை பறைசாற்றியது. சாட்சிகளைப் பாராட்டி நான் வரைந்திருந்த ஓவியத்திற்கு விசேஷ விருது கிடைத்தது. அதை வழங்கியவர் பின்பு கூறினார்: “நீங்கள் தைரியமானவர்கள்; நானும்தான். அதனால்தான் இந்த சிறப்புமிக்க பரிசை உங்களுக்கு வழங்குகிறேன்.”

அநேக ஓவியர்கள் தங்கள் உணர்வுகளையும் எண்ணங்களையும் தங்கள் ஓவியங்களில் வெளிக்காட்ட விரும்புகிறார்கள். நானும் இதைத்தான் செய்ய முயலுகிறேன். என் மனதில் என்ன தோன்றுகிறதோ அதை வரைகிறேன்; என் ஓவியங்கள் உயிரோட்டம் உடையவை; அவை என் மகிழ்ச்சியையும் இன்பத்தையுமே படம்பிடித்துக் காட்டுகின்றன. நான் சிறுபிள்ளையாக இருந்தபோது ஓவியமும் படைப்புத்திறனும் கைகோர்க்கையில் கிடைக்கும் இன்பத்தைக் கண்டறிந்தேன்.

ஏன் ஓவியரானேன்

ஜப்பான் நாட்டிலுள்ள மோரியோகா நகரைச் சேர்ந்த வசதியான குடும்பத்தில் 1920-⁠ம் ஆண்டு பிறந்தேன். எனக்கும் என் அக்காவுக்கும் ஜப்பானிய நடனம், மலர் அலங்காரம், தேநீர் உபசாரம், கோட்டோ (ஜப்பானிய ஸித்தார்), பியானோ, இசை போன்றவற்றில் பயிற்சி அளிக்க தனி ஆசிரியர்கள் அமர்த்தப்பட்டார்கள். இவை எதுவுமே எனக்குப் பிடிக்கவில்லை. ஆசிரியர்கள் தலை கண்டதும், ஓடி ஒளிந்துகொள்வேன். வீட்டு வேலைக்காரர்கள் என்னைக் கண்டுபிடித்து இழுத்து வருவார்கள்.

அந்த பாடங்களின் கறாரான தன்மைதான் எனக்குப் பிடிக்கவில்லை. எனக்கு பழக்கமே இல்லாதவர்கள் வந்து நான் எப்படி ஆட வேண்டும், மலர்களை அலங்கரிக்க வேண்டும், தேநீரைப் பரிமாற வேண்டும் என்று தீர்மானித்தார்கள். சுயமாக கற்பனை செய்யவும், எனக்கென்று இலட்சியங்களை வைக்கவும் வழியின்றி, என்னை கட்டிப்போட்டிருப்பதைப் போல் உணர்ந்தேன். ஓவியம் தீட்டினபொழுதோ, என்னை கண்காணிக்க யாரும் இருக்கவில்லை. நான் என்ன செய்ய வேண்டும் என எவரும் எனக்கு சொல்லவில்லை. இதுவே நான் விரும்பிய சுதந்திரம்.

ஓவியக் கலைக்கென ஆசிரியர் எனக்கில்லாததால், புதிது புதிதாக என்னால் படைக்க முடிந்தது; ஓவியத் திறனை வளர்க்க முடிந்தது; எவரும் என்னைக் குறைகூறவில்லை. படிப்படியாக புகுந்துவிளையாட ஆரம்பித்தேன். ஏறக்குறைய 12 வயதில், என் அப்பாவின் பட்டு டைகளை எடுத்து நேரடியாகவே அவற்றில் பெயின்ட்டிங் செய்ய தொடங்கினேன். அதன் பிறகு, பள்ளிகளில் டிரெஸ்களை தைத்தோம். அவற்றில் ஒரு டிரெஸ்ஸின் முன்பகுதியில் பாதியை வெட்டி எடுத்துவிட்டு வெண்ணிறத்தில் ஒட்டுப் போட்டிருந்ததைப் பார்த்த ஆசிரியை திடுக்கிட்டார். என் அப்பாவைப் போலவே அவரும் ஒன்றும் சொல்லவில்லை.

கனவும் நனவும்

தொடக்கப் பள்ளியில் படிக்கும்போதே, நான் ஓவிய கலைஞராவேன் என்று சொன்னேன். என் இலட்சியம் மாறவில்லை; எனவே கலை பயில பல்கலைக்கழகத்திற்குச் செல்ல விரும்பினேன்; என் பெற்றோர் என்னை அனுமதிக்கவில்லை. ஜப்பானில், கலை பயின்ற பட்டதாரிகளை மணமுடிக்க யாரும் முன்வரமாட்டார்கள் என்று அவர்கள் சொன்னார்கள். ஆகவே குடும்பக் கலையைப் பாடமாக எடுத்துப் பயின்றேன்.

அயல்நாட்டு கவிதைகள், அயல்நாட்டு புத்தகங்கள் என்றால் எனக்கு அலாதி பிரியம்; எனவே அவற்றில் ஏராளமானவற்றை வாசித்தேன். ஆனால் அப்போதெல்லாம் பகைவரின் இலக்கியங்கள் என அவற்றை சாடினார்கள். அப்படிப்பட்ட புத்தகங்களை வைத்திருந்தாலே ஆபத்து. பள்ளியில் ஒரு பிரெஞ்சு ஆசிரியையிடம் ஐந்து ஆண்டுகள் பிரெஞ்சு மொழி பயின்றேன்; ஆனால் ஜப்பானில் நிலைமை மாறியதால் பிற மொழிகளில் ஆர்வம் இருந்தாலும்கூட அது சந்தேகத்திற்கு இடமளித்தது. பேச்சு சுதந்திரம் எங்களுக்கு மறுக்கப்பட்டது.

1943-⁠ல் இரண்டாம் உலகப் போர் தீவிரமாக நடந்துகொண்டிருந்தது; திருமணத்திற்குப் பெண் தேடிய ஒருவர் திருமண வயதிலிருந்த 40 பெண்களின் போட்டோவைப் பார்த்தும் திருப்தியடையாமல் என்னை தன் வருங்கால மனைவியாக தேர்ந்தெடுத்ததைக் கேட்டபோது எனக்கு உச்சி குளிர்ந்தது. நான் அறியாத வண்ணம் என்னைப் பார்ப்பதற்காக எங்கள் வீட்டுப் பக்கமாய் அவருடைய அம்மாவும் அவர்களின் சிநேகிதியும் வந்துவிட்டுப் போனது பின்னர்தான் எனக்குத் தெரிய வந்தது. அதன்பிறகு, அவர்களது குடும்பத்தார் முறைப்படி பெண் கேட்டார்கள்; எனவே நான் ஒத்துக்கொள்ள வேண்டியதாயிற்று. மாப்பிள்ளையை திருமணத்திற்கு முன்பு ஒரு தடவைதான் சந்தித்தேன்.

எங்கள் திருமணத்திற்குப் பின்பு சரமாரியாக நடந்த விமானத் தாக்குதல்கள் எங்களை தினமும் குலைநடுங்க வைத்தன; கடைசியில் நகரமெங்கும் தீப்பற்றியபோது எங்கள் வீடும் தீக்கிரையானது. தலைதப்பியவர்கள் மலைகளில் தஞ்சம் புகுந்தார்கள். அங்கிருந்தபோதும் அபாயச் சங்கு முழங்கியதைக் கேட்டோம்; போர் விமானங்கள் பறந்ததைக் கண்டோம். திகில் கவ்வியது. எல்லாருமே அல்லல்பட்டனர். போர் முடிந்து பத்து வருடங்களும்கூட கசப்பான வருடங்களாகவே இருந்தன.

எங்கள் மூன்று பிள்ளைகள் தவிர, என் மாமியாரும், என் கணவரின் ஆறு தம்பி தங்கைமாரும் எங்களுடன்தான் வசித்தனர். வேலைக்கென ஆட்களை வைத்திருந்தபோதிலும் சாப்பிடுவதற்காக நாங்கள் எல்லாருமே வயலில் வேலை பார்க்க வேண்டியிருந்தது. அப்போதெல்லாம் பெரும்பாலும் கவலைக் கடலில் மூழ்கிவிட்டதால் சிரிப்பையே மறந்துவிட்டேன். ஆனால் என் எண்ணங்களை வெளியில் சொன்னால் இன்னும் தவறாகவே புரிந்துகொள்வார்கள் என்று எண்ணி பயந்தேன். ஆனாலும் ஓவியத்தின் வாயிலாக என் எண்ணங்களை வெளிப்படுத்த முடியும் என படிப்படியாக கண்டுபிடித்தேன்.

ஓவியராக அங்கீகரிக்கப்படுதல்

கலாபூர்வத் திறமை ஒருவருக்கு இருந்தாலும், பயன் கிடைக்க வேண்டுமானால் வியர்வை சிந்த உழைக்க வேண்டும். ஓவியம் பற்றிய புத்தகங்களை வாங்கினேன்; ஜப்பானின் முன்னணி ஓவியர்கள் பலரிடம் பயின்றேன். இளம் பருவத்தில் வளர்த்திருந்த எனக்கே உரிய ஓவிய பாணியை மாற்றச் சொல்லி எவரும் என்னை வற்புறுத்தவில்லை.

என் படைப்பு ஓவிய விமர்சகர்களின் கண்களில் பட்டுவிட்டது; ஆனால் நானோ என் திருப்திக்காகவே வரைந்தேன், மற்றவர்களிடம் காட்டுவதற்கென்று அல்ல. என்றாலும், என் படங்களைப் பற்றிய மற்றவர்களின் கருத்துக்களை தெரிந்துகொள்ள விரும்பினேன். ஆகவே, 1955-⁠ல் டோக்கியோவிலுள்ள கின்ஸா என்ற பகுதியில் என் முதல் ஓவிய கண்காட்சியை நடத்தினேன். அதன் தலைப்பு “மௌன போராட்டம், மௌன பேச்சு, என் டைரி” என்பதாகும்; அதில் அன்றாட வாழ்க்கை சித்தரிக்கப்பட்டிருந்தது. அந்தக் கண்காட்சி மாபெரும் வெற்றி அடைந்தது.

சாட்சிகளை சந்தித்தல்

நானும் என் கணவரும், எங்கள் பிள்ளைகள் தரமான பள்ளியில் படிக்க வேண்டும் என்றும் மிகச் சிறந்த கல்வியைப் பெற வேண்டும் என்றும் விரும்பினோம்; எனவே 1958-⁠ல் டோக்கியோவுக்கு குடிமாறிச் சென்றோம். என் வாழ்க்கை ஓவியத்தைச் சுற்றியே அமைந்திருந்தது. ஒவ்வொரு நாளும் சுமார் ஐந்து மணிநேரத்தை ஓவியத்தில் செலவிடுவது என் பழக்கமாய் இருந்தது. இரவு நேரத்தில் வெளியே சென்று ஓவியர்களாக இருக்கும் என் நண்பர்களுடன் நேரத்தை செலவிட்டு வந்தேன்; என் கணவரும் பிறருடன் வெளியே சென்றுவிடுவார். எங்கள் பிள்ளைகளை எப்படி வளர்ப்பது என்பதைப் பற்றி எதுவும் தெரியவில்லை.

என் கணவரின் வேலை அவருக்கிருந்த நேரத்தையெல்லாம் உறிஞ்சிக் கொண்டதால் பிள்ளைகளை வளர்க்கும் பொறுப்பு என் தலையில்தான் விழுந்தது; எனக்கோ என்மீது நம்பிக்கையில்லை. சிறுபிள்ளையாய் இருந்தபோது, கத்தோலிக்க மிஷன் பள்ளியில் படித்ததால் பிள்ளைகளை வளர்க்க ஏதாவதொரு வகையான பைபிள் படிப்பு உதவுமா என்று யோசித்து வந்தேன். டோக்கியோவில் ஓமோரீ பகுதியிலிருந்த எங்கள் வீட்டிலிருந்து சாலைக்கு மறுபக்கம் ஒரு லூத்தரன் சர்ச் இருந்தது; நாம் அங்கு போகலாம் என்று பிள்ளைகளிடம் சொல்லியிருந்தேன். ஆனால் அந்தச் சர்ச்சுக்குப் போகவே இல்லை.

அதற்குப் பதிலாக, அதற்கு அடுத்த நாளே​—⁠1959-⁠ன் ஆரம்பத்தில்​—⁠யெகோவாவின் சாட்சிகளில் ஒரு பெண்மணி எங்கள் வீட்டுக்கு வந்தார். அவர் சொல்வதை கவனிக்கும்படி பிள்ளைகளையும் கூப்பிட்டு சீக்கிரமாக உட்கார வைத்தேன். இந்தப் பூமியிலிருந்து துன்மார்க்கத்தை கடவுள் ஒழித்துக்கட்டும் முக்கியமான காலக்கட்டத்தில் நாம் வாழ்ந்து வருகிறோம் என்று பைபிளிலிருந்து அந்த சாட்சி எடுத்துரைத்தார். பைபிள் பிரசுரங்கள் சிலவற்றோடு, நான்கு பைபிள்களுக்கு ஆர்டர் கொடுத்தேன்; வாரா வாரம் அவர்கள் வந்து எங்களுக்கு பைபிளை கற்பிக்கும் ஏற்பாட்டிற்கும் உடனே சம்மதம் தெரிவித்தேன். மாதக் கட்டணம் எவ்வளவு என்று கேட்டேன்; யெகோவாவின் சாட்சிகள் தாங்கள் போதிப்பதற்கு எந்தக் கட்டணமும் வசூலிப்பதில்லை என சொன்னபோது எனக்கு பெரிய ஆச்சரியமாக இருந்தது. எனக்குத் தெரிந்திருந்த ஆசிரியர்கள் அனைவரையும்விட எவ்வளவு வித்தியாசம்!

என் மகள்கள் உடனே பைபிள் சத்தியங்களை ஏற்றுக்கொண்டார்கள்; ஒவ்வொரு வாரமும் எங்கள் வீட்டில் குரூப் ஸ்டடியும் நடக்க ஆரம்பித்தது. ஆனால் ஓரிரு ஸ்டடிக்குப் பின்னர், எனக்குள் ஒரே நெருடல். அந்த ஸ்டடி நேரம் வந்துவிட்டாலே எனக்கு ரொம்ப கஷ்டமாக இருந்தது; ஆகவே என்னுடைய தனிப்பட்ட பைபிள் படிப்பு நேரம் வந்தபோது சில சமயங்களில் ஒளிந்துகொள்ளவோ எங்காவது வெளியில் சென்றுவிடவோ முயன்றதுண்டு.

எனக்கிருந்த பிரச்சினை என்னவென்றால், பைபிள் சொன்னதெல்லாம் சரி என்றும் அது சொல்வதற்கிசைய நடக்க வேண்டும் என்றும் எனக்கு நன்றாகவே புரிந்தது. அதே சமயத்தில் திறமையான ஓவியராக வேண்டும் என்றும் சங்கல்பம் செய்திருந்தேன்; எனவே புதுப்புது படைப்புகளை உருவாக்க சிந்தனை சுதந்திரம் வேண்டும் என நினைத்தேன். எனக்குள்ளிருந்த இந்தப் போராட்டத்தால் என் ஓவியக் கலையில் தொய்வு ஏற்பட்டது. ஓவியக் கண்காட்சிகளில் என் ஓவியங்கள் இருந்த இடமே தெரியவில்லை.

பாரிஸுக்குப் பயணம்

பாரிஸுக்கு சென்று வந்தால் என் ஓவியக் கலையில் முன்னேற்றம் காண வாய்ப்புண்டு என்று எண்ணினேன். ஆகவே 1960-⁠ல், பிரான்ஸில் ஜப்பானிய கலையை பொதுமக்கள் பார்வையில் முதன்முறையாக வைப்பதற்கென மாபெரும் கலை கண்காட்சி நடந்ததால் அதற்குச் சென்றேன். ஜப்பானிலிருந்து சென்ற ஒரே பெண் ஓவியக் கலைஞர் நான்தான். பாரிஸில், வாழ்க்கைச் சூழ்நிலைகள், உடைகள், பொதுக் கருத்துக்கள், நிறங்கள் போன்ற எல்லாவற்றிலும் வித்தியாசத்தைக் கண்டபோது சிலிர்ப்புற்றேன். நான்கு நாட்களுக்கு கண்காட்சி நடந்தது; அந்நாட்டுத் தலைவர்களும் கலந்துகொண்டது எனக்கு வியப்பூட்டியது. இன்னொரு ஆச்சரியம் என்னவெனில், நான் அணிந்த கிமோனோக்கள் அங்கிருந்த பெண்களை வசீகரித்தது. அங்கு இன்னும் சில காலம் தங்குவதற்கு தீர்மானித்தேன்.

ஜப்பானிலிருந்து பணத்தை தருவிக்கும் முறையை அறியாததால் என் கிமோனோக்களை விற்கத் தொடங்கினேன். எனவே இன்னும் மூன்று மாதங்களுக்கு தங்க முடிந்தது; அப்போது கலைக் காட்சியகங்களில் பார்வைக்கு வைக்கப்பட்ட கலைப் படைப்புகளை ஆய்வு செய்தேன். கண்காட்சியில் என் ஓவியத்திற்கு அருகே வைக்கப்பட்டிருந்த கலைஞரின் வார்த்தைகளை அடிக்கடி நினைப்பூட்டிக்கொண்டேன். அவர் சொன்னதாவது: “என் ஓவியத்தில் கதிரவன் ஒளிவீசுகிறான்; உன் ஓவியத்திலோ வழக்கமான கருமை நிறமும் இருளுமே கலந்துள்ளது; அதற்குக் கிழக்கத்திய தத்துவஞானிகளின் செல்வாக்கே காரணம்.”

நான் தங்கியிருந்த அபார்ட்மென்ட்டுக்கு யெகோவாவின் சாட்சிகளுடைய பாரிஸ் கிளை அலுவலகத்திலிருந்து ஒரு தம்பதியினர் வந்தனர். சில தடவை சந்தித்ததற்குப் பிறகு எப்படியோ கிறிஸ்தவ கூட்டத்திற்கு அவர்களுடன் ஒருமுறை செல்ல ஒப்புக்கொண்டேன். நான் சென்றபோது, அங்கு கண்டவற்றால் இன்ப அதிர்ச்சியுற்றேன். ஒரு பெண், அகல விளிம்புடைய அழகிய சிவப்பு நிற தொப்பியை அணிந்திருந்தார். மற்றொரு பெண், பளிச்சென்று பச்சை நிறத்தில் உடை உடுத்தியிருந்தார். அவர்கள் அணிந்திருந்த உடைகள், அழகுணர்வையும் கலை ரசனையையும் வெளிப்படுத்தின; ஆகவே சாட்சிகளைப் பற்றி எனக்கிருந்த எண்ணம் முற்றிலும் மாறியது.

அங்கு நடைபெற்ற நிகழ்ச்சியும் என்னைக் கவர்ந்தது. பூமி முழுவதுமே ஒரே போதனையும் ஒரே வணக்கமுறையும் பின்பற்றப்படுவதைக் கண்டேன்; இந்தத் தொகுதியினரும் அவர்கள் வேலையும் சாதாரணமானவை அல்ல என்பதைப் புரிந்துகொண்டேன். கடவுளால் வழிநடத்தப்பட்ட ஜனங்களோடு நான் தொடர்பு வைத்திருக்கிறேன் என்பதை உணர்ந்தபோது என் உள்ளம் உருகியது.

திடதீர்மானம் செய்தல்

ஜப்பானுக்கு திரும்பியதும் பைபிளை சீரியஸாக படிக்க ஆரம்பித்தேன். நான் நினைத்ததைவிட அதிக சுதந்திரத்தை படைப்பாளரின் வழிநடத்துதல் அளிப்பதை கண்டறிந்தேன். நம் ஒவ்வொருவருக்கும் தனித்தனி தன்மைகளையும் தனித்தனி திறமைகளையும் தந்து அவற்றை வளர்க்கும் சுதந்திரத்தையும் அவர் அன்புடன் தந்திருக்கிறார். ஆகவே, யெகோவாவின் சாட்சியாக ஆவதால் ஒருவர் தனது கலையார்வத்தை முற்றிலும் கைவிட வேண்டியதில்லை என புரிந்துகொண்டேன்.

நானும் என் மகள்களும் பைபிள் படிப்பில் முன்னேற்றம் செய்தோம். யெகோவாவுக்கு ஒப்புக்கொடுத்ததன் அடையாளமாக, ஒரு மகள் 1961-⁠லும், இன்னொரு மகள் 1962-⁠லும் முழுக்காட்டுதல் பெற்றனர். இன்று வரை இருவருமே யெகோவாவின் உண்மையுள்ள ஊழியர்களாக நிலைத்திருக்கின்றனர். நானோ பின்வாங்கினேன். 1965-⁠ல் யெகோவாவின் சாட்சிகளது பிரசங்க வேலையை ஜப்பானில் மேற்பார்வையிட்ட சகோதரர் லாய்ட் பாரி பின்வருமாறு சொல்லி என்னை உற்சாகப்படுத்தினார்: “பரதீஸில் பரிபூரண மக்கள் தீட்டும் ஓவியங்கள் எவ்வளவு அழகாக இருக்கும் என்பதை சற்று எண்ணிப் பாருங்கள்!” அதற்கடுத்த வருடம் நானும் முழுக்காட்டுதல் பெற்றுவிட்டேன்.

ஓவியத்தில் அதன் தாக்கம்

என் வாழ்க்கையிலும் குணத்திலும் ஏற்பட்ட மாற்றங்கள் என் ஓவியத்தில் மிளிருவதை என்னால் இப்போது காண முடிகிறது. முன்பு நான் தீட்டிய ஓவியங்கள் கருமையாகவும் இருள் நிறைந்தும் காணப்பட்டன; அவை என் துக்கத்தையும் வேதனையையும் நம்பிக்கையின்மையையும் வெளிக்காட்டின. நம் படைப்பாளரைப் பற்றி, அவருடைய அருமையான குணங்களை, அவரைத் துதிப்பதால் அடையும் சந்தோஷத்தை, வாழ்க்கையின் சரியான தராதரங்களை பைபிளிலிருந்து கற்றுக்கொண்டேன். என் உணர்வுகள் மாறவே, என் ஓவியங்களும் மாறின.

இப்போது மற்றவர்களுடன் பைபிளிலுள்ள செய்தியை பகிர்ந்துகொள்வதற்கு அதிக நேரத்தை செலவிடுகிறேன்; இவ்வாறு தவறாமல் செய்கிறேன். கடவுளுடைய குணங்களைப் பற்றியும் தம் குமாரன் இயேசு கிறிஸ்துவின் தலைமையிலுள்ள ஆட்சியில் இந்தப் பூமியை பரதீஸாக்கும் அரிய நோக்கத்தைப் பற்றியும் ஜனங்களிடம் பேசுவது எனக்கு பெரும் மகிழ்ச்சியையும் திருப்தியையும் தருகிறது. பைபிள் சார்ந்த இந்த வேலை எனக்குத் தூண்டுதல் அளிக்கிறது; எனவே இப்போதெல்லாம் நினைத்தபோது ஓவியம் தீட்ட பிரஷ்ஷை எடுக்க வேண்டியது, என் உணர்வுகளை ஓவியத்தில் வடிக்க வேண்டியதுதான். ஆண்டுகள் செல்லச் செல்ல, என் சந்தோஷம் பெருகப் பெருக, என் ஓவியங்களும் மெருகேறி ஒளிவீசுகின்றன.

பைபிளுக்கு முக்கியத்துவம்

என் ஓவியங்களை கண்காட்சியில் வைக்கும்படி உலகம் முழுவதிலுமிருந்து​—⁠சிட்னி, வியன்னா, லண்டன், நியூ யார்க்​—⁠அழைப்புகள் வருகின்றன. ஐரோப்பியர்களே என் ஓவியங்களை அதிகமாய் ரசிக்கின்றனர். பாரிஸில் உள்ள லூவர் ராயல் அகாடமி ஆஃப் ஆர்ட்ஸைச் சேர்ந்த நிபுணர்கள் பின்வருமாறு கேட்டிருக்கின்றனர்: “நூற்றாண்டுகளாக மத ஓவியத்தில் காணப்படாத மகிழ்ச்சியை வெளிக்காட்டும் படங்களை வரையும் அளவிற்கு பைபிளும் கிறிஸ்தவமும் ஒரு ஜப்பானிய கலைஞரை நெகிழச் செய்திருப்பது எப்படி?”

பைபிளின் சங்கீதக்காரனாகிய தாவீது இசை வடிவில் தன் உணர்வுகளை வெளிப்படுத்தினார்; மற்றவர்களுக்கு கடவுளின் வியத்தகு செயல்களைப் பற்றி கற்பிக்க இசைக் கலையில் தனக்கிருந்த திறமைகளை பயன்படுத்தினார். என் விருப்பமும் அதுவே. நான் யெகோவாவைத் துதிக்க விரும்புகிறேன். யெகோவாவையும் அவரது வியத்தகு பண்புகளையும் அறிவதால் ஒருவருக்கு கிடைக்கும் மகிழ்ச்சியை என் ஓவியத்தில் மக்கள் கண்டுணரச் செய்வதே என் அளவிலா ஆசை. என் ஓவியத் தலைப்புகளைப் பார்த்த கலை விமர்சகர் ஒருவர் இவ்வாறு கூறினார்: “இந்த ஓவியக் கலைஞர் சுய வார்த்தைகளை திறமையாக தவிர்த்திருக்கிறார்; பைபிளை தத்ரூபமாக பேசச் செய்திருக்கிறார்.” என் ஓவியங்களில் பைபிளின் வல்லமையை மக்கள் கண்டுணர்வது எனக்கு சிலிர்ப்பூட்டுகிறது.

1995-⁠ல், டோக்கியோவில் தலைமை அலுவலகத்தை உடைய சர்வதேச கலை நிறுவனமான உலக கலைக் கழகம், உலகின் தலைசிறந்த ஓவியக் கலைஞர்களுக்குள் முதலிடத்தை எனக்களித்து என்னை கௌரவித்தது. அந்தக் கழகம் என் ஓவியங்களைக் குறித்து அறிவித்தது: “இந்தக் கலைஞர் தலைப்புகளை பைபிளிலிருந்து எடுத்திருக்கிறார் . . . அவரது ஓவியங்கள் அனைத்திலும் பைபிள் சித்தரிக்கப்பட்டுள்ளது; கடவுளுடன் நடக்கும் ஒரு கலைஞருக்கு வாழ்க்கை எப்படிப்பட்டது என்பதையே இது காட்சியாக்கியிருக்கிறது.”

பெரும்பாலும் என் ஓவியங்களில் பைபிளை திறந்து வைத்ததைப் போன்ற ஒரு படத்தையும் சேர்த்துக்கொள்வதை மேற்கூறப்பட்ட வார்த்தைகள் சுட்டிக்காட்டுகின்றன. சமீபத்தில், பைபிளின் அச்சிடப்பட்ட பக்கங்களை என் படங்களுடன் சேர்த்து வைத்திருக்கிறேன். ஆகவே என் ஓவியத்தை ரசிப்பவரின் கண்கள், தெரிந்தெடுக்கப்பட்ட என் தலைப்பிடமும் பைபிளிலுள்ள வார்த்தைகளிடமும் இவற்றை சித்தரிக்கும் வகையில் நான் வரைந்திருக்கும் ஓவியத்திடமும் ஈர்க்கப்படும்.

1999-⁠ல், என் ஓவியங்களில் சில தாய்லாந்து, பாங்காக் நகரில் கண்காட்சிக்கு வைக்கப்பட்டன. அவற்றில் ஒன்று, “யெகோவா தேவன் எத்தனை அருமையாக பூமியை படைத்து, மனிதனுக்கு வீடாக கொடுத்திருக்கிறார்” என்றும் மற்றொன்று, “‘யெகோவாவே, இந்த ஜனங்களின் இதயம் உம்மிடம் ஒன்றுபடுவதாக’ என்ற தாவீது ராஜாவின் ஜெபம்” என்றும் இருந்தன. வேறு சில கலைஞர்களுடன் நானும் தாய்லாந்து நாட்டு அரசரின் அரண்மனைக்கு அழைக்கப்பட்டிருந்தேன். என் ஓவியங்களைப் பற்றி பேச விரும்பிய அரசர் என்னிடம் அநேக கேள்விகளைக் கேட்டார். நீண்டநேரம் அவருடன் உரையாட முடிந்தது; பைபிள் சார்ந்த என் நம்பிக்கைகளைப் பற்றியும் பேச முடிந்தது. பிறகு, என் ஓவியம் ஒன்றை அவருக்குப் பரிசளித்தேன்.

கடந்த 35 ஆண்டுகளில், மற்ற ஓவியக் கலைஞர்களின் ஓவியங்களை மதிப்பிடும் நடுவராகவும் ஒரு தேர்வுக் குழுவில் பொறுப்பு வகித்திருக்கிறேன். நான் விரும்பிய ஓவியங்கள் உணர்ச்சியை வெளிக்காட்டுபவை. என்னைப் பொறுத்த வரை நல்ல ஓவியங்கள் என்பவை, எனக்குள் அமைதி ஏற்படுத்தி இனிய உணர்வைத் தருபவையே. யெகோவாவின் சாட்சிகளது பிரசுரங்களில் காணப்படும் படங்களை நான் பெரிதும் ரசிக்கிறேன்; அவை பைபிளின் செய்தியை உண்மையுடன் சித்தரிக்கும் அவற்றின் நோக்கத்தை பூர்த்தி செய்கின்றன.

கடவுளின் ஊழியராக ஆசிகள்

என் ஓவியக் கலையால், யெகோவா தேவனைப் பற்றியும் பூமிக்கான அவரது மகத்தான நோக்கங்களைப் பற்றியும் சாட்சி கொடுப்பதற்கு ஒப்பற்ற வாய்ப்புகள் கிடைத்திருக்கின்றன. பத்திரிகை கட்டுரைகளுக்காகவும் டெலிவிஷன் நிகழ்ச்சிகளுக்காகவும் பேட்டி கொடுக்கையில் இது உண்மையாய் இருந்திருக்கிறது. சொல்லப்போனால், நான் எங்குப் போனாலும் சரி, யாரிடம் பேசினாலும் சரி, யெகோவா தேவனை சேவிப்பதால் பெருகும் விசுவாசமும் மகிழ்ச்சியும் இன்பமுமே என் ஓவியங்களைத் தீட்ட எனக்கு கைகொடுத்திருக்கின்றன என்று தெரிவிக்க முயல்கிறேன்.

நான் என் விசுவாசத்தை விட்டுக்கொடுக்க நேர்ந்தால், இப்போது ஓவியம் வரையுமளவிற்கு என்னால் வரைய முடியாது என்பதே என் நம்பிக்கை. நான் ஒரு யெகோவாவின் சாட்சியாக இருப்பதாலும், கடவுளுடைய வார்த்தையிலுள்ள சத்தியம் என் நெஞ்சத்தை மகிழ்ச்சியாலும் இன்பத்தாலும் நிரப்புவதாலுமே என்னால் ஓவியம் தீட்ட முடிகிறது.(g01 8/22)

[பக்கம் 15-ன் படம்]

பாரிஸில் இருக்கையில்

[பக்கம் 16-ன் படம்]

இன்று என் இரண்டு மகள்களுடன்