Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

உலகை கவனித்தல்

உலகை கவனித்தல்

உலகை கவனித்தல்

கண்களுக்கு ஆக்ஸிஜன் இல்லையென்றால்

கண்கள் நன்றாக இயங்குவதற்கு ஆக்ஸிஜன் தேவை; கான்டாக்ட் லென்ஸ் அணியும் சிலருடைய கண்களுக்கு இந்த ஆக்ஸிஜன் கிடைப்பதில்லை என்பதாக த கிளோப் அண்ட் மெயில் அறிவிக்கிறது. “கருவிழி [கண்ணுருண்டையில் உள்ள ஒளிபுகும் பகுதி] தேவையான ஆக்ஸிஜனை கண்ணில் படும் காற்றிலிருந்தே பெறுகிறது, ஆனால் கான்டாக்ட் லென்ஸ் அதைத் தடை செய்வதால் பதிலீடு செய்வதற்கு இரத்த நாளங்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது (Vascularization).” இதன் விளைவு, கண்கள் மங்கலாக தெரியலாம் அல்லது குருடாகியும் விடலாம். கண்மருத்துவ துறையில் தலைமை மருத்துவராக டொரான்டோ மருத்துவமனையில் பணிபுரியும் டாக்டர் ரேமண்ட் ஸ்டீன் பின்வருமாறு விளக்குகிறார்: “கான்டாக்ட் லென்ஸ் அணியும் நபர் அதை ஒழுங்காக பராமரிக்காமல் அல்லது மருத்துவரிடம் வந்து காட்ட வேண்டிய சமயத்தில் காட்டாமல் இருந்தால் மிக மோசமான விளைவுகள் ஏற்படும்.” நோயாளிகள் தங்கள் கண்களுக்கு ஏற்ற சரியான கான்டாக்ட் லென்சைத்தான் வாங்கியிருக்கிறார்களா என்பதை அறிந்துகொள்ள கண் மருத்துவர்களை அணுகுமாறு கண்களை பரிசோதிப்பவர்கள் (Optometrists) நோயாளிகளிடம் சொல்லுகின்றனர். அதேபோல, கான்டாக்ட் லென்சை கண்ணில் எவ்வளவு நேரம் தொடர்ச்சியாக அணியலாம், எவ்வாறு பராமரிக்கலாம் போன்ற விவரங்களை சரியாக கடைப்பிடிக்கும்படி அவர்கள் அறிவுறுத்துகின்றனர்.

(g01 1/08)

“பிசின்” தடவிய பாதமா?

கண்ணாடியைப் போல வீட்டின் மேற்கூரை இருந்தாலும், அதன் மீது தலைகீழாக படுவேகமாக பல்லிகளால் ஓட முடியும். இவை எவ்வாறு இந்த சாதனை படைக்கின்றன? இதைப் பற்றி கடந்த ஆண்டுகளில் விஞ்ஞானிகள் விளக்கமளிக்க முயற்சித்தனர்; இப்போதோ அதற்கு விடை கிடைத்துவிட்டதாக நினைக்கின்றனர். இதை புரிந்துகொள்வதற்கு விஞ்ஞானிகள் மற்றும் பொறியியலாளர்களின் குழு பாடுபட்டதாக சயன்ஸ் நியூஸ் பத்திரிகை அறிக்கை செய்தது. “பல்லியின் பாதங்களில் இருக்கும் மிகச் சிறிய சீட்டே என்றழைக்கப்படும் முடிகள் தரையில் உராயும்போது ஒட்டிக்கொள்ளும் விசை அதிகளவில் உருவாகிறது. ஒவ்வொரு சீட்டாவிலிருந்தும் ஸ்பேட்யுலே என்றழைக்கப்படும் மிகச் சிறிய காம்புகள் வெளிவருகின்றன. பல்லி தன்னுடைய பாதத்தை தரைமீது வைக்கும்போது இந்த பாதத்தில் இருக்கும் கோடிக்கணக்கான காம்புகள் தரையோடு அவ்வளவு அருமையான முறையில் பொருந்திக்கொள்வதால் மூலக்கூறுகளிடையே விசை . . . உருவாகக்கூடும்.” இந்த ஆராய்ச்சியாளர்கள் இன்னொரு விஷயத்தையும் கவனித்தனர். பல்லி தன்னுடைய பாதத்தை தரைமீது வைக்கும்போது “அந்த சீட்டேக்களை தரை மீது அழுத்துவதோடு தரைக்கு இணையாக அவற்றை இழுக்கிறது.” இவ்வாறு “செய்வதால் ஒவ்வொரு சீட்டாவுடைய பிடிமானம் சாதாரணமாக அழுத்தும்போது இருப்பதைவிட 10 மடங்கு அதிகமாகிறது” என்று அந்தப் பத்திரிகை விளக்குகிறது.

(g01 1/22)

ஆபாச ‘வலை’யில் சிக்கியவர்கள்

ஸ்டான்ஃபோர்ட், டியுகேன்சீன் பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த மனோதத்துவ நிபுணர்கள் ஒரு ஆய்வை செய்தனர். அதன்படி “இன்டெர்நெட் உபயோகிப்பவர்களில் குறைந்தது 2,00,000 நபர்கள் ஆபாச வெப்ஸைட்களுக்கு அடிமையாகியுள்ளனர். இவர்கள் X முத்திரை குத்தப்பட்ட அரட்டை அரங்கத்தில் அளவளாவுபவர்கள், அல்லது பாலியல் சம்பந்தப்பட்ட விஷயங்களை இன்டர்நெட்டில் காண்பவர்கள்” என்று அறிக்கை செய்தது த நியூ யார்க் டைம்ஸ். இவ்வாறு இன்டெர்நெட் மூலம் “கம்ப்யூட்டர் பாலியலுக்கு அடிமையானவர்களின்” எண்ணிக்கையை முதன்முதலாக கணக்கிட்ட ஆய்வுகளில் ஒன்று இது. இந்த நபர்கள் X முத்திரை குத்தப்பட்ட வெப்ஸைட்டுகளில் ஒரு வாரத்தில் குறைந்தது 11 மணிநேரங்களையாவது செலவிடுகின்றனர். அந்த ஆய்வாளர்கள் சொன்ன பின்வரும் குறிப்புகளை அந்த செய்தித்தாள் அறிக்கை செய்தது: “இது பொதுமக்களின் நலனை மறைந்திருந்து தாக்கும் கண்ணி, இது படுவேகமாக அதிகரித்து வருகிறது, ஏனெனில் இதிலுள்ள ஆபத்தை வெகு சிலரே அறிந்திருக்கின்றனர், பெரும்பான்மையோர் இதை ஒரு பெரிய பிரச்சினையாகவே நினைப்பதில்லை.”

(g01 1/08)

எய்ட்ஸின் கோரப்பிடியில் ஆப்பிரிக்கா

காங்கோ மக்களாட்சி குடியரசு, சியர்ரா லியோன், அங்கோலா, காங்கோ குடியரசு, எதியோபியா, சோமாலியா, எரிட்ரியா, சூடான் போன்ற ஆப்பிரிக்க நாடுகளில் யுத்தம் நடைபெறுகிறது. அப்படிப்பட்ட யுத்தங்களில் இறந்தவர்களின் எண்ணிக்கையைவிட எய்ட்ஸால் இறந்தவர்களின் எண்ணிக்கை அதிகம் என்பதாக ஐக்கிய நாடுகளின் பொது செயலாளர் கோஃபி அன்னான் தெரிவிக்கிறார். உலகில் கிட்டத்தட்ட 3.6 கோடி எய்ட்ஸ் நோயாளிகள் இருக்கின்றனர், அவர்களில் கிட்டத்தட்ட முக்கால்வாசி பேர் ஆப்பிரிக்காவில் உள்ள சகாரா பாலைவனத்தை சுற்றி அமைந்திருக்கும் நாடுகளில் வாழ்கின்றனர். கோட் டீவ்வாரில் ஒவ்வொரு வேலை நாளிலும் ஒரு பள்ளி ஆசிரியர் எய்ட்ஸ் நோயால் இறக்கிறார்; போட்ஸ்வானாவில் மனித ஆயுட்காலம் 70-திலிருந்து 41-⁠க்கு குறைந்துவிட்டது. ஜிம்பாப்வியில் வருடம் 2005-⁠க்குள் ஆரோக்கியம் தொடர்பான பட்ஜெட்டில், எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்காக 60 சதவீதத்தை ஒதுக்க வேண்டும் என்பதாகவும் அப்படியே ஒதுக்கினாலும் அது போதாது என்றும் சொல்லப்படுகிறது. மலாவி, ஜாம்பியா போன்ற நாடுகளில் எய்ட்ஸ் படுவேகமாகப் பரவுவதால் அதைப் பற்றிய பேச்சையே எடுப்பதில்லை; தென் ஆப்பிரிக்காவில் இந்த நோயாளிகளை ஒதுக்கி வைத்துவிடுகின்றனர் என்பதாக லண்டனில் இருந்து வெளியாகும் த கார்டியன் என்ற செய்தித்தாள் அறிவிக்கிறது. “இந்த பயங்கர வியாதியின் கோரப்பிடி எவ்வளவு வலிமையானது என்பதைப் பற்றி நம்மில் யாருக்கும் தெளிவாக தெரியாது. இதனால் ஆப்பிரிக்காவின் வாழ்க்கை எவ்வாறு பாதிக்கப்படும், பொருளாதாரம், சமூக நலன், அரசியல் உறுதி போன்றவை எவ்வாறு இருக்கும் என்பதெல்லாம் தெரியவே தெரியாது” என்று திரு. அன்னான் தெரிவித்தார்.

(g01 1/08)

வலியில்லா மாரடைப்பு

மாரடைப்பு என்றால் நெஞ்சை பிசைவதைப் போன்ற பயங்கர வலியிருக்கும் என்பதை பலர் அறிந்திருக்கின்றனர். ஆனால், “கிட்டத்தட்ட முப்பது சதவீத நோயாளிகளுக்கு மாரடைப்பின் போது நெஞ்சுவலியே இருப்பதில்லை என்ற உண்மையை பலர் அறியாமல் இருக்கின்றனர்” என்பதாக டைம் பத்திரிகை விவரிக்கிறது. “வலியில்லாததன் காரணமாகத்தான் மாரடைப்பு வந்த பிறகும் மருத்துவமனைக்கு செல்வதில் கிட்டத்தட்ட இரண்டு மணிநேரம் காலதாமதம் செய்திருக்கின்றனர்” என்பதாக த ஜர்னல் ஆஃப் த அமெரிக்கன் மெடிக்கல் அஸோசியேஷன்-⁠ல் வந்த ஒரு ஆய்வு கட்டுரை விளக்கமளிக்கிறது. நிலைமை எப்படியிருந்தாலும் சரி, உயிர்காக்கும் சிகிச்சை பெறுவதைத் தள்ளிப்போடுவது ஆபத்தானதே. அப்படியானால் மாரடைப்பா இல்லையா என்பதை எவ்வாறு புரிந்துகொள்வது? “அடுத்து கவனிக்க வேண்டிய முக்கிய அறிகுறி மூச்சுவிடுவதற்கு மிகவும் சிரமப்படுவதே” என்று டைம் குறிப்பிடுகிறது. குமட்டுவது, பயங்கரமாக வேர்த்துக்கொட்டுவது, “நடந்தால் அல்லது கடினமாக வேலை செய்தால் அதிகமாகும் ‘நெஞ்செரிச்சல்’” போன்றவை மற்ற அறிகுறிகளாகும் என்று அந்த கட்டுரை விளக்குகிறது.

(g01 1/22)

பாக்டீரியாவோடு மல்லுக்கட்டுவது சரியா?

“அமெரிக்க மக்கள் தாங்கள் என்ன செய்கிறோம் என்பதை புரிந்துகொள்ளாமல் வீடுகளில் நுண்ணுயிரிகளோடு ஒரு பயங்கர யுத்தத்தை செய்கின்றனர்” என்பதாக யுஎஸ்ஏ டுடே அறிவிக்கிறது. இந்தச் செய்தித்தாள் டஃப்ட்ஸ் பல்கலைக்கழகத்தில் மருத்துவராகவும் நுண்ணுயிரியல் வல்லுனராகவும் பணிசெய்யும் ஸ்டுவார்ட் லீவி சொன்ன பின்வரும் வார்த்தைகளை வெளியிட்டிருந்தது. “பாக்டீரியாக்களை கொல்லும் இரசாயனப் பொருட்கள் இப்போது எக்கச்சக்கமாக வந்துவிட்டன . . . இதன் காரணமாக பாக்டீரியாக்களை கொல்லும் சோப்புகளை மட்டும் அல்ல நோய் எதிர்ப்பு மருந்துகளையும் எதிர்க்கும் ஆற்றல் நிறைந்த நுண்ணுயிரிகள் பெருகிவிடும் ஆபத்து இருக்கிறது.” வீடுகளில் பாக்டீரியாக்களை கொல்வதற்கு இரசாயனங்களை உபயோகிப்பதை “ஒரு ஈயை ஒழிப்பதற்கு சுத்தியலை பயன்படுத்துவதோடு” ஒப்பிடலாம் என்று லீவி குறிப்பிட்டார். இதற்கு பதிலாக, வீட்டை சுத்தப்படுத்துவதற்கு உபயோகிக்கும் பிளீச், ஹைட்ரஜன் பெராக்ஸைட், சுடு தண்ணீர், சோப் போன்றவை அழுக்கை நீக்குகின்றன. அதே சமயம் பாக்டீரியாக்கள் உருவமைப்பில் மாற்றமடைந்து இரசாயனங்களை எதிர்க்கும் சக்தியை பெறுவதற்கு தூண்டுவிப்பதில்லை. “பாக்டீரியாக்கள் நம்முடைய நண்பர்களே. ‘அவர்களோடு’ நாம் சமாதான உடன்படிக்கை செய்ய வேண்டியது அவசியம்” என்றார் லீவி.

(g01 1/22)

“தூய்மையாக்கிக்கொள்ளும்” தாமரை

ஆண்டாண்டு காலமாக கிழக்கத்திய மதங்களில் தாமரை புனிதமானது என்று விவரிக்கப்பட்டிருக்கிறது. அது எவ்வாறு படுசுத்தமாக எப்போதும் காட்சியளிக்கிறது என்ற கேள்விக்கு விடை தெரியாமல் உயிரியலாளர்கள் பல காலம் தவித்தனர். ஜெர்மானிய விஞ்ஞானிகள் கடைசியாக இப்புதிருக்கு விடை கண்டுபிடித்துவிட்டதாக சொல்கின்றனர். விஞ்ஞானிகள் டபிள்யு. பார்த்லாட், சி. நெயின்ஹியூஸ் போன்றவர்கள், தாமரை தன்னை தூய்மையாக்கிக்கொள்ளும் பண்பை விளக்கினர்: “தாமரை இலையில் தண்ணீர் ஒட்டாது என்பது பல நூற்றாண்டுகளாக அறிந்த உண்மையே. இருந்தாலும் தாமரை தன்னையே தூய்மையாக்கிக்கொள்ளும் உண்மையை . . . எப்படியோ கவனிக்காமல் விட்டுவிட்டோம்.” இதைப் பற்றி த சன்டே டைம்ஸ் ஆஃப் இண்டியா பின்வருமாறு விளக்குகிறது: “தாமரை இலையின் மேலிருந்து உருளும் தண்ணீர்த்துளிகள் அங்கிருக்கும் அழுக்கையும் தூசியையும் நீக்கி இலையை சுத்தமாக கழுவி விடுகின்றன.” அந்த இலையின் மேற்பரப்பு மிருதுவாக இருப்பதால் இவ்வாறு சுத்தமாவதாக நினைக்க வேண்டாம். இந்த இலையை மைக்ராஸ்கோப்பில் பார்த்தால் அது “குமிழிகள், மடிப்புகள், பட்டன்கள்” போன்றவற்றைக் கொண்ட சொரசொரப்பான அமைப்பு என்பது தெரியும்; அதிலுள்ள “கோபுர வடிவ புடைப்புகள் தண்ணீரை வடியவைக்கும்” வகையில் இருக்கின்றன என்பதையும் கவனிக்க முடியும். இது போதாதென்று தண்ணீரை தன் மேல் அண்டவிடாமல் இருப்பதற்கு தாமரைக் கொடி முழுவதிலும் தண்ணீரை எதிர்க்கும் மெழுகு படிகங்கள் காணப்படுகின்றன. ‘தாமரை தன்னை தூய்மையாக்கிக்கொள்ளும்’ குணத்தால் தண்ணீரும் தூசியும் தாமரையில் ஒட்ட முடிவதில்லை; சுற்றுச்சூழல் எவ்வளவு மோசமாக இருந்தாலும் தாமரையால் மெழுகை மறுபடியும் சுரக்க முடியும். இதன் காரணமாகத்தான், மனிதன் கண்டுபிடித்த நீர்ப்புகா பெயின்ட், சோப்பு போன்றவற்றைவிட தாமரைக்கு இயற்கையில் இருக்கும் இந்தப் பண்பு மிக நேர்த்தியானது என்று அந்த ஆராய்ச்சியாளர்கள் விளக்குகின்றனர்.

(g01 1/08)

டிவி பார்ப்பதில் முதலிடம் ஆங்கிலேயர்களுக்கே

“பிரிட்டனில் கால்வாசி ஜனங்கள், ஒரு வாரத்தில் வேலை செய்வதற்கு எத்தனை மணிநேரத்தை செலவிடுகிறார்களோ அந்தளவு நேரத்தை டெலிவிஷன் பார்ப்பதற்கும் செலவிடுகின்றனர்” என்பதாக லண்டனில் வெளியாகும் செய்தித்தாள் த இன்டிபென்டன்ட் அறிவித்தது. பிரிட்டனில் ஒருவர் சராசரியாக ஒரு வாரத்திற்கு 25 மணிநேரத்தை டெலிவிஷன் பார்ப்பதற்கு செலவிடுகிறார்; அந்நாட்டில் 21 சதவீதத்தினர் இதற்கு 36 மணிநேரத்திற்கு மேல் விரயம் செய்கின்றனர் என்று ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிட்டனர். “இளைஞர்கள்தான் இவ்வாறு டெலிவிஷனுக்கு அடிமையானார்கள் என்று நினைக்க வேண்டாம், வயது வந்த ஆண்கள், பெண்கள், வயதானவர்கள் ஆகிய அனைவருமே டெலிவிஷனால் ஆட்டிப்படைக்கப்படுகின்றனர்” என்பதாக அந்த செய்தித்தாள் சொல்கிறது. “தாங்கள் விரும்பும் கற்பனையில் உலாவவும், நிலவும் உண்மைக்குக் கண்களை மூடிக்கொள்ளவும்” டிவி உதவுவதாக ஒரு குடும்பத்தினர் சொன்னார்கள்; இவர்கள் ஒரு வாரத்திற்கு கிட்டத்தட்ட 30 மணிநேரம் டெலிவிஷன் பார்க்கும் பழக்கமுடையவர்கள். எக்கச்சக்கமாக டிவி பார்க்கும் பழக்கத்தின் மறுபக்கத்தை பார்த்தால், அதற்கு எவ்வளவு வேதனை தரும் விலை தரவேண்டியிருக்கிறது என்பது தெளிவாகிறது. 20 நாடுகளில் எடுக்கப்பட்ட ஆய்வின்படி “டிவி பார்க்கும் நாடுகளை கணக்கிட்டால் பிரிட்டன்தான் முன்னிலையில் இருக்கிறது. ஆனால், எழுத்தறிவு சம்பந்தப்பட்ட மூன்று முக்கிய அம்சங்களில் பிரிட்டன் மிகவும் பின்தங்கி இருக்கிறது” என்பதாக லண்டனில் வெளியாகும் த கார்டியன் வீக்லி அறிவித்தது.

(g01 1/08)