Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

நர்ஸின் முக்கிய சேவை

நர்ஸின் முக்கிய சேவை

நர்ஸின் முக்கிய சேவை

“நோயாளியை கண்ணும் கருத்துமாய் கவனித்து, அவர் குணமடைய பக்க பலமாக இருந்து, பாதுகாப்பதே நர்ஸின் கடமை. நோயுற்றோர், காயமுற்றோர், வயதானோர் ஆகியோரை கவனிப்பதற்கு எப்போதும் தயாராக இருப்பவரே நர்ஸ்.​—⁠இன்றைய உலகில் நர்ஸின் பணி⁠—⁠எதிர்ப்படும் சவால்கள், பிரச்சினைகள், மனச்சாய்வுகள் (ஆங்கிலம்).

திறமையான நர்ஸுக்கு அவசியம் தன்னலமின்மையே, ஆனால் இது மட்டுமே போதாது. நர்ஸிங் பயிற்சியும் அதிகமான அனுபவமும் தேவை. இவை இருந்தால்தான் ஒருவர் திறமையான நர்ஸாக ஜொலிக்க முடியும். நர்ஸ் ஆவதற்கு ஒருவர், ஒன்றிலிருந்து நான்கு ஆண்டுகளோ அதற்கு அதிகமாகவோ படித்திருக்க வேண்டும்; பயிற்சியும் பெற்றிருக்க வேண்டும். அப்படியென்றால், திறமையான நர்ஸிற்கு தேவையான குணங்கள் யாவை? விழித்தெழு!-விற்கு பேட்டியளித்த அனுபவம் வாய்ந்த சில நர்ஸ்களின் பதில்களை சற்று வாசியுங்கள்.

“நோய் குணமாவதற்கு டாக்டர் மருந்து கொடுக்கிறார், ஆனால் அந்த மருந்து பலனளிக்க வேண்டுமென்றால் அது அக்கறையோடு கவனிக்கும் நர்ஸுகளின் கையில்தான் இருக்கிறது. தீராத வியாதி தனக்கு இருக்கிறதென்றோ, சீக்கரத்தில் சாகப் போகிறோமென்பதையோ அறிந்ததும் உடலும் உள்ளமும் தொய்ந்துபோய் இருக்கும் நோயாளிகளுக்கு அன்பும் ஆதரவும் மிக அவசியம். இந்த சமயத்தில் நோயாளிக்கு தேவை ஒரு சேய்க்கு தாய் காட்டுவதைப் போன்ற பரிவும் பாசமுமே.”​—⁠கார்மன் கில்மார்டீன், ஸ்பெய்ன்.

“நோயாளியின் வேதனையையும் கலக்கத்தையும் புரிந்துகொண்டு அவருக்கு எப்படியாவது உதவ வேண்டும் என்ற உள்ளூர விருப்பம் இருக்க வேண்டும். இதற்கு இரக்கமும் பொறுமையும் அத்தியாவசியம். மருத்துவத்தையும் நர்ஸின் பணிகளையும் பற்றி அதிகம் கற்றுக்கொள்ளும் ஆர்வம் எப்போதுமே இருக்க வேண்டும்.”​—⁠டேடாஷி ஹேடானோ, ஜப்பான்.

“தங்கள் துறையின் ஆழ அகலங்களை, ஏற்ற இறக்கங்களை நன்கு அறிந்த நிபுணர்களாக நர்ஸ்கள் இருக்க வேண்டியதன் அவசியம் சமீப ஆண்டுகளில் ஏற்பட்டிருக்கிறது. எனவே நிறைய விஷயங்களை தெரிந்துகொள்ள வேண்டும் என்ற ஆர்வமும் கற்றவற்றை சரிவர புரிந்துகொள்ளும் பக்குவமும் மிக முக்கியம். அதே சமயத்தில் பணியில் ஈடுபட்டிருக்கும்போது சூழ்நிலைகளுக்கு ஏற்ப விரைவாக முடிவெடுக்கவும் அதற்கேற்ப உடனடி நடவடிக்கை எடுக்கவும் தெரிந்திருக்க வேண்டும்.”​—⁠கேக்கோ கவேன், ஜப்பான்.

“நர்ஸாக உங்கள் பணி தொடர நோயாளியிடம் நீங்கள் கருணை காட்ட வேண்டும். அவர்களுடைய நிலைமைக்கேற்ப அனுசரித்து நடக்கவும் விட்டுக்கொடுக்கவும் உங்களுக்கு தெரிந்திருக்க வேண்டும்.”​—⁠அரசெலி கார்சீயா பாடீயா, மெக்ஸிகோ.

“திறமையான நர்ஸ் நேரம் காலம் பார்க்காமல் கடுமையாக உழைப்பவராகவும், பிரச்சினைகளை நன்கு சீர்தூக்கி பார்ப்பவராகவும், தன்னுடைய வேலையில் கைதேர்ந்தவராகவும் இருக்க வேண்டும். எந்த நர்ஸும் தன்னலமிக்கவராகவோ, உயர் அதிகாரிகள் தரும் யோசனைகளை அசட்டை செய்பவராகவோ இருக்கக்கூடாது. அப்படியிருந்தால், அவரிடம் தியாக மனப்பான்மை மருந்துக்கும் இருக்காது; அவரால் நோயாளிகளுக்கும் சரி, அவரோடு வேலை செய்பவர்களுக்கும் சரி எந்தப் பிரயோஜனமும் இருக்காது.”​—⁠ரோஸன்ஜலா சான்டோஸ், பிரேஸில்.

“வளைந்துகொடுப்பது, சகித்திருப்பது, பொறுத்துப்போவது போன்றவை நர்ஸுக்கு அத்தியாவசியமான குணங்கள். இந்த சேவை செய்வதற்கு உங்களுக்கு பரந்த மனப்பான்மை வேண்டும். உங்களோடு வேலை பார்ப்பவர்களோடும் மருத்துவர்களோடும் ஒத்துப் போகும் பக்குவம் வேண்டும். நீங்கள் திறமையான நர்ஸாக பிரகாசிக்க, புதிய கருத்துக்களை புரிந்துகொள்ளவும் திறமைகளை வளர்த்துக்கொள்ளவும் வேண்டும்.”​—⁠மார்க் கோலர், பிரான்ஸ்.

“நோயாளியிடம் இரக்கம் காட்டுவது அவசியம்; அத்தோடு அவர்களுக்கு மனப்பூர்வமாக உதவ ஆர்வமும் வேண்டும். வேலையில் ஏற்படும் டென்ஷனை சமாளிக்க அறிந்திருக்க வேண்டும், ஏனெனில் நர்ஸ் தன் வேலையை சரிவர செய்யவில்லை என்றால் விளைவு பயங்கரமாக இருக்கும். வேலை செய்யும் இடத்தில் மாறுபடும் சூழ்நிலைக்கேற்ப தன்னை மாற்றியமைத்துக் கொள்ளும் பக்குவம் மிக அவசியம்; திடீரென்று நர்ஸ்கள் குறைக்கப்படுகையில் அதேயளவு வேலையை தரத்தில் இம்மியும் குறையாமல் செய்யவும் தயாராக இருக்க வேண்டும்.”​—⁠கிளாடியா ரேகர்-பேக்கர், நெதர்லாந்து.

நர்ஸின் பராமரிப்பு

“நோயாளி எந்தவிதமான வியாதியோடு அவதிப்பட்டாலும் பொறுப்போடு கவனித்துக்கொள்வதே நர்ஸின் முக்கிய பணி. மருந்து என்றாலே நோயாளி நலம் பெறுவதும், பராமரிப்பு என்றாலே நர்ஸின் சேவையும்தான் பளிச்சென்று நம் மனதிற்கு வருகிறது” என்று நர்ஸிங் இன் டுடேஸ் வோர்ல்ட் அறிவிக்கிறது.

அப்படியென்றால் நர்ஸின் பணி நோயாளிகளை பராமரிப்பதே. கொஞ்ச நாட்களுக்கு முன்பு சட்டப்படி பதிவு செய்யப்பட்ட 1,200 நர்ஸ்களிடம் பின்வரும் கேள்வி கேட்கப்பட்டது: “நர்ஸாக, உங்கள் தலையாய பணி என எதை குறிப்பிடுவீர்கள்?” நோயாளிகளை மனம் கோணாமல் கவனித்துக்கொள்வதே என்பதாக 98 சதவீதத்தினர் பதிலளித்தனர்.

சில சமயங்களில் நர்ஸ்கள் நோயாளிகளுக்கு செய்யும் தங்கள் சேவையைக் குறைவாக மதிப்பிடுவதுண்டு. இக்கட்டுரையில் முன்பு குறிப்பிடப்பட்ட கார்மன் கில்மார்டீனுக்கு 12 வருட அனுபவம் உண்டு. அவர் தன்னுடைய அனுபவத்தை விழித்தெழு!-வோடு பகிர்ந்து கொண்டார். “நோய் முற்றிப்போய் வேதனையில் வாடும் நோயாளிகளை என்னால் திருப்தியாக கவனித்துக்கொள்ள முடியவில்லையே என்ற ஆதங்கத்தில் ஒருநாள் என் தோழியிடம் புலம்பினேன். நோயாளிகளைப் பொறுத்தவரை நான் வெறும் ‘பாண்டேஜ்தான்’ என்றேன். அதற்கு அவளோ, ‘நீ வெறும் “பாண்டேஜ்” என உன்னை நினைத்துக் கொண்டாலும் உண்மையில் நீ சாதாரண பாண்டேஜே அல்ல, மதிப்புமிக்க பாண்டேஜ். நோயாளி வேதனையில் தவிக்கையில் அவருக்கு என்ன தேவை? ஆறுதல் சொல்ல உன்னைப் போன்ற கனிவான நர்ஸ் அல்லவா?’” என என்னை தேற்றினாள்.

பராமரிக்கும் நர்ஸின் இப்பணி ஓய்வொழிச்சல் இன்றி, நாள் தவறாமல் பத்துமணி நேரத்திற்கும் மேல் தொடருகிறது. அப்படியென்றால் அவருடைய டென்ஷனை உங்களால் புரிந்துகொள்ள முடிகிறதா? மற்றவர்களை கவனித்துக்கொள்வதற்காக தங்களையே மெழுகுவர்த்தியாய் கரைத்துக்கொள்ளும் நர்ஸ் பணியை ஏற்க இவர்களை தூண்டியது எது?

ஏன் நர்ஸ் பணியை தேர்ந்தெடுத்தார்கள்?

உலகின் பல பகுதிகளிலுள்ள நர்ஸுகளை விழித்தெழு! பேட்டி கண்டது. அவர்களிடம், “நீங்கள் ஏன் நர்ஸ் பணியை தேர்ந்தெடுத்தீர்கள்?” என கேட்டது. அவர்கள் அளித்த சில பதில்கள் இதோ.

நர்ஸ் தொழிலில் 47 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர் டெர்ரி வெதர்சன். இவர் இப்போது இங்கிலாந்தில், மான்செஸ்டரிலுள்ள மருத்துவமனையில் நர்ஸ் ஸ்பெஷலிஸ்டாக யூராலஜி டிபார்ட்மென்டில் பணிபுரிகிறார். அவர் சொல்கிறார்: “பிறந்தது கத்தோலிக்க குடும்பத்தில், படித்தது கத்தோலிக்க பள்ளியில், வளர்ந்ததும் கத்தோலிக்க ஹாஸ்டலில். என் பிஞ்சு மனதிலேயே கன்னியாஸ்திரீயாகவோ நர்ஸாகவோ ஆக வேண்டுமென்ற ஆசை வேர்விட்டு வளர்ந்தது. மற்றவர்களுக்கு தொண்டாற்ற வேண்டும் என்ற தணியாத தாகம் எனக்கு ஏற்பட்டது. கன்னியாஸ்திரீயா, நர்ஸா என்ற என் மனப்போராட்டத்தில் கடைசியில் வென்றது நர்ஸ் பணிதான். இதை நீங்கள் வாழ்க்கைப் பணி என்று குறிப்பிடலாம்.”

ஜப்பானில், சைத்தமா என்ற இடத்தில் எட்டு வருடங்களாக சீவா மட்சுநாகா என்பவர் கிளினிக் வைத்திருக்கிறார். அவர் குறிப்பிடுகிறதாவது: “என் அப்பா எனக்குக் கொடுக்கும் அறிவுரை ஒவ்வொன்றும் மணிமணியாக இருக்கும். ‘வாழ்நாள் முழுவதும் செய்ய முடிந்த தொழிலைக் கற்றுக்கொள்’ என்று சொன்னார். அதனால்தான் நர்ஸ் ஆனேன்.”

ஜப்பானில், டோக்கியோவில் தலைமை நர்ஸாக பணிபுரியும் எட்சுகோ கோட்டானிக்கு 38 வருட அனுபவம். அவர் பின்வருமாறு குறிப்பிடுகிறார்: “அப்போது பள்ளியில் படித்து கொண்டிருந்தேன். ஒரு நாள் திடீரென்று அப்பா மயக்கம்போட்டு விழுந்து அடிபட்டதில் எக்கச்சக்கமாக இரத்தம் வீணாகியது. அவரை ஆஸ்பத்திரியில் அட்மிட் செய்தார்கள். அப்போதே எதிர்காலத்தில் நர்ஸாகி நோயாளிகளை நன்றாக கவனித்துக்கொள்ள வேண்டும் என சங்கல்பம் செய்தேன்.”

சின்ன வயதில் வந்த வியாதியால் மருத்துவமனையில் கிடக்க நேர்ந்த சிலர் நர்ஸ் பணியில் ஈடுபட தீர்மானித்தனர். மெக்ஸிகோவிலுள்ள நர்ஸ் எனேடா பியேரா இவ்வாறு சொல்கிறார்: “எனக்கு ஆறு வயதாக இருந்தபோது மார்பில் சளி கட்டியதால் மருத்துவமனையில் சேர்த்திருந்தனர். இரண்டு வாரங்களை அங்கே கழித்தபோதே மனதளவில் நர்ஸாகிவிட்டேன்.”

நர்ஸ் என்றால் தியாகத்தின் மறுவுருவாய் திகழ வேண்டும். இப்படிப்பட்ட அரும்பணியில் ஒருவர் எதிர்ப்படும் சவால்களையும் சந்தோஷங்களையும் கவனமாக ஆராயலாம்.

நர்ஸ் பணி தரும் சந்தோஷம்

நர்ஸ் சேவை தரும் சந்தோஷங்கள் யாவை? இந்தக் கேள்விக்கான பதில் எந்தத் துறையில் ஒருவர் நர்ஸ் சேவை செய்கிறார் என்பதை பொருத்ததே. உதாரணத்திற்கு, பிரசவத்தின்போது உதவும் மருத்துவச்சிகள் ஒவ்வொரு குழந்தையையும் உலகுக்கு கொண்டுவருவதில் அளவற்ற ஆனந்தமடைகின்றனர். இதைக் குறித்து, மருத்துவச்சியாக பணிசெய்யும் நெதர்லாந்தைச் சேர்ந்த ஒருவர் இவ்வாறு சொல்கிறார்: “எந்தச் சிக்கலுமின்றி ஆரோக்கியமான பிள்ளையைப் பெற்றெடுக்க தாய்க்கு உதவுவதே எங்கள் பாக்கியம்தான்.” நெதர்லாந்தைச் சேர்ந்த யோலன்டா கீலன் ஃபான் ஹோவ்ட் பின்வருமாறு சொல்கிறார்: “பிரசவம் என்பதே ஓர் அற்புதம்! இவ்வுலகைக் காண வரும் பிள்ளையின் பெற்றோருக்கும் அதற்கு உதவும் மருத்துவப் பணியாளர்களுக்கும் இது மகத்துவமான அனுபவம்.”

ராஷிட் ஏசம் என்பவர் பிரான்ஸிலுள்ள டிரோவைச் சேர்ந்தவர். இந்த ஆண் நர்ஸ் 40-45 வயதுக்குட்பட்டவர். அவர் மயக்க மருந்து கொடுக்க அரசு அங்கீகாரம் பெற்றவர். அவர் நர்ஸ் பணியை ஏற்க காரணம்? அவரே சொல்கிறார்: “ஆப்ரேஷன் சக்சஸாக முடிந்தால் அதில் கிடைக்கும் திருப்தியே அலாதி. இந்தத் துறை எப்போதுமே முன்னேற்றப் பாதையில் வெற்றி நடைபோடும் ஆர்வமிக்க துறை. எனவே, இப்படிப்பட்ட துறையில் பணி செய்ய ‘கொடுத்து வைத்திருப்பதாக’ நினைக்கிறேன்.” பிரான்ஸில் பணி புரியும் ஐசக் பாங்கிலி இவ்வாறு சொல்கிறார்: “பிழைப்பார்கள் என்ற நம்பிக்கை எங்களுக்குத் துளியும் இல்லாமலே சில நோயாளிகளுக்கு அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிப்போம்; பெரும்பாடுபட்டு காப்பாற்றிய பிறகு அவர்களும் அவர்களுடைய குடும்பத்தாரும் எங்கள் அரும்பணிக்காக கரம் கூப்புகையில் எங்களுக்குள் ஏற்படும் உணர்ச்சிகளை விவரிக்க வார்த்தைகளே இல்லை.”

ஏற்கெனவே குறிப்பிட்ட டெர்ரி வெதர்சன்னுக்கு பின்வரும் நன்றி கடிதம் ஒரு விதவையிடமிருந்து வந்தது: “சார்லஸ் படுத்த படுக்கையாய் கிடந்ததை மறக்கவே முடியாது. நீங்கள் பதட்டப்படாமல், நிதானமாய் எல்லா உதவிகளையும் செய்தீர்கள். உங்கள் கரிசனை, நம்பிக்கையின் ஒளியாய் திகழ்ந்தது. அதுவே எங்களை கற்பாறையைப் போன்று பலப்படுத்தி உறுதியளித்தது.”

சந்திக்க வேண்டிய சவால்கள்

நர்ஸ் வேலையில் சந்தோஷம் ஒருபக்கம், ஆனால் ஏராளமான சவால்கள் மறுபக்கம் என்பது உண்மை. இந்தத் தொழிலில் தவறே ஏற்படக்கூடாது! மருந்து கொடுப்பது, பரிசோதனைக்கு இரத்தம் எடுப்பது, இரத்த நாளத்திற்குள் சிரிஞ்சை செலுத்துவது போன்ற பணிகள் நர்ஸுக்கு இருக்கலாம். இது மட்டும் அல்ல, நோயாளியை ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு மாற்றுவது போன்ற சாதாரண வேலையையும் நர்ஸ் மிக ஜாக்கிரதையாக செய்ய வேண்டும். நர்ஸ் ஆணாக இருக்கலாம், பெண்ணாக இருக்கலாம், ஆனால் அவரது வேலையில் எந்தத் தவறும் ஏற்படாதவாறு கவனமாய் செயல்பட வேண்டும்; இல்லாவிட்டால் சில நாடுகளில் அக்குற்றத்திற்காக வழக்குத் தொடரப்படுகிறது; அப்படிப்பட்ட இடங்களில் நர்ஸின் நிலைமை திண்டாட்டம்தான். நர்ஸுக்கு இவ்வளவுதான் பிரச்சினைகள் என நினைத்துவிடாதீர்கள்; பட்டியல் தொடருகிறது. ஒருவேளை தவறான மருந்தை டாக்டர் எழுதி கொடுத்துவிட்டதாக அல்லது அவர் கொடுத்த ஆலோசனையால் நோயாளிக்கு எந்தப் பிரயோஜனமும் இருக்காது என்பதாக நர்ஸ் நினைத்தால்? டாக்டரையே கேள்வி கேட்பாரா? அவர் எழுதிக் கொடுத்த மருந்து தவறானது என டாக்டரிடமே சொல்ல நர்ஸுக்கு தைரியம், சாமர்த்தியம், நாசூக்கு வேண்டும். இதில் ஒரு முக்கிய அபாயமும் இருக்கிறது; அது வேதனைக்குரிய விஷயம்கூட. தனக்குக்கீழ் வேலை செய்யும் ஒரு நர்ஸ் சொல்லி தான் கேட்பதா என நினைக்கும் டாக்டர்கள் சில சமயத்தில் அவர்கள் ஆலோசனைகளை மதிக்காமல் மிதிக்கின்றனர்.

இது சம்பந்தமாக சில நர்ஸ்களின் அனுபவம் என்ன? கடந்த 34 வருடங்களாக அமெரிக்காவில் விஸ்கான்ஸினில் நர்ஸாக பணியாற்றுகிறார் பார்ப்ரா ரீனக். அவர் விழித்தெழு!-⁠க்கு அளித்த பேட்டியில் சொன்னதாவது: “நர்ஸ் படுதைரியசாலியாக இருக்க வேண்டும். நோயாளிக்கு நர்ஸ் ஏதேனும் மருந்து கொடுக்கலாம் அல்லது சிகிச்சை அளிக்கலாம்; இதனால் ஏதேனும் தீங்கு ஏற்பட்டால் அதற்காக முழுக்க முழுக்க சட்டப்படி அவளே பொறுப்பேற்க வேண்டும். டாக்டர் சொன்ன ட்ரீட்மென்டை தர தனக்கு உரிமையில்லை என சொல்லி மறுக்க அல்லது அவர் குறிப்பிட்ட ட்ரீட்மென்ட் தவறு என சுட்டிக்காட்ட நர்ஸ் அறிந்திருக்க வேண்டும். ஃபிளாரன்ஸ் நைட்டிங்கேல் வாழ்ந்த காலத்தோடு அல்லது 50 ஆண்டுகளுக்கு முன்பிருந்த நிலைமையோடு இன்றைய நிலைமையை ஒப்பிட்டால் அப்பப்பா எத்தனை வித்தியாசம். எப்போது டாக்டர் சொல்வதை செய்ய மறுக்க வேண்டும் எனவும் நோயாளியை கவனிக்க எப்போது (நட்டநடு ராத்திரியாக இருந்தாலும்) டாக்டரை அழைக்க வேண்டும் எனவும் நர்ஸுக்குத் தெரிந்திருக்க வேண்டும். சிலசமயங்களில் நர்ஸின் கணிப்பு தவறாகலாம்; அப்போது டாக்டரின் ஏளனத்தை சகிக்கவும் தெரிந்திருக்க வேண்டும்.”

நர்ஸுகள் எதிர்ப்படும் சவால்களில் வன்முறையை சந்திப்பதும் அடங்கும். தென் ஆப்பிரிக்காவில் இருந்து வரும் அறிக்கை பின்வருமாறு விளக்குகிறது: நர்ஸ்கள்தான் “பணி செய்யும் இடத்தில் தாக்குதலை அதிகம் எதிர்ப்படுபவர்கள். சொல்லப்போனால் அதிகமாக தாக்கப்படுகிறவர்களின் பட்டியலில் சிறைக் காவலர்கள் அல்லது போலீஸ் அதிகாரிகளைவிட நர்ஸ்கள்தான் முதலிடம் பிடிக்கின்றனர். நர்ஸ்களில் 72 சதவீதத்தினர் எந்த நேரத்திலும் தாக்குதலை எதிர்நோக்கி பயத்தோடுதான் வேலை செய்கின்றனர்.” இங்கிலாந்திலும் இதே நிலைதான் என்கிறது ஓர் அறிக்கை. அந்த அறிக்கையின்படி, கடந்த வருடத்தில் நர்ஸ்கள் தாக்கப்பட்டதைப் பற்றி சமீபத்தில் பேட்டி அளித்த 97 சதவீத நர்ஸ்கள் குறிப்பிட்டனர். இந்த வன்முறைக்குக் காரணம் என்ன? போதைக்கு அல்லது மதுவுக்கு அடிமையானவர்கள், மன அழுத்தத்தால் குமுறுகிறவர்கள், சோகத்திற்கு சிறைப்பட்டவர்கள் என்ற வரிசையிலுள்ள நோயாளிகள்தான் நர்ஸ்களை தாக்குகின்றனர்.

டென்ஷன் டென்ஷன் ஒரே டென்ஷன்!!! இதனால் வரும் கடும் சோர்வையும் நர்ஸ்கள் சமாளித்தாக வேண்டும். இதற்கு முக்கிய காரணம் நர்ஸ்கள் “பற்றாக்குறையே.” வேலைப் பளுவின் அழுத்தத்தால் நோயாளியை சரிவர கவனிக்க முடியவில்லையே என மனம் வெதும்புகையில் அவருக்கு டென்ஷனோ டென்ஷன்! இதை சரிக்கட்ட தன் ஓய்வு நேரத்தின்போதும் வேலை செய்வார்; அத்துடன் ஓவர்டைமும் செய்வார். இப்படி வேலையில் சதா பம்பரமாய் சுழல்வது விரக்தியின் உச்சாணிக்கே அவரைக் கொண்டு செல்கிறது.

உலகம் முழுவதிலும் எண்ணற்ற மருத்துவமனைகள் இருந்தாலும், நர்ஸ்களின் எண்ணிக்கையோ குறைவு. மாட்ரிட்டில் முண்டோ சானிடோரியோ-வில் வெளியான ஓர் அறிக்கை: “ஓர் ஹால்பிடலில் சேர்ந்து சிகிச்சை பெற்ற எவருமே நர்ஸ்களின் சேவை எந்தளவுக்கு தேவை என்பதை நன்கு அறிந்திருப்பார். ஆனால் எங்கள் மருத்துவமனைகளில் நர்ஸ்களின் எண்ணிக்கையோ குறைவுதான்.” நர்ஸ்களின் எண்ணிக்கை இப்படி குறைவுபடுவதற்கு என்ன காரணம் சொல்லப்படுகிறது? பணத்தை மிச்சப்படுத்துவதே! மாட்ரிட்டிலுள்ள மருத்துவமனைகளுக்கு இன்னும் 13,000 நர்ஸ்கள் தேவை எனவும் அந்த அறிக்கை அறிவித்தது!

நர்ஸ்களுக்கு டென்ஷன் அதிகமாவதற்கு இன்னொரு காரணம்: டியூட்டி நேரம் அதிகம், சம்பளம் குறைவு. த ஸ்காட்ஸ்மேன் செய்தித்தாள் இவ்வாறு அறிவிக்கிறது: “பிரிட்டனிலுள்ள நர்ஸ்களில் இருபது சதவீதத்தினரும் நர்ஸ்களின் உதவியாளர்களில் இருபத்தைந்து சதவீதத்தினரும் இரண்டு இடங்களில் வேலை செய்கின்றனர்; இதற்கு காரணம் சம்பளம் போதாததே என பப்ளிக் சர்வீஸ் யூனியன், யூனிசன் குறிப்பிடுகிறது.” தங்களுக்கு குறைவான சம்பளம் கிடைப்பதாக நர்ஸ்களில் நான்கில் மூவர் நினைக்கின்றனர். இதன் காரணமாக இந்த வேலைக்கே முழுக்குப்போடுவதைப் பற்றி அநேகர் சிந்திக்கின்றனர்.

நர்ஸ்களின் சோர்வுக்கு காரணங்கள் ஒன்றோ இரண்டோ அல்ல. இதைக் குறித்து உலகத்தின் நாலாபுறமும் பணி செய்யும் அநேக நர்ஸ்களை விழித்தெழு! பேட்டி கண்டது. தங்கள் பராமரிப்பிலிருந்த நோயாளி இறந்து போகையில் நர்ஸ்கள் மனமுடைந்து போவது இந்தப் பேட்டியின் மூலம் தெரிய வந்துள்ளது. எகிப்திய பின்னணியைச் சேர்ந்தவர் மாக்டா சுவாங். இவர் நியூ யார்க், புரூக்லினில் பணி செய்கிறார். எது அவருடைய பணியை படுசிக்கலாக்குகிறது என அவரிடம் கேட்கப்பட்டபோது அவர் சொன்ன பதிலைக் கேளுங்களேன். “கடந்த பத்து ஆண்டுகளில் என் பராமரிப்பிலிருந்த 30 நோயாளிகள் இறந்து போயிருக்கின்றனர்; அவர்கள் தீரா வியாதியால் அவதிப்பட்டது உண்மையானாலும் அவர்கள் சாவு என் மனதை சுக்குநூறாக்கியது.” இதனால்தான் நர்ஸ்களின் பணியைப் பற்றி இக்குறிப்பு சொல்லப்படுகிறது: “நோயாளிகளைக் கவனித்துக்கொள்ள இராப்பகலாக பாடுபட்டு, பட்ட கஷ்டமெல்லாம் வீண் என்பதுபோல் அவர்கள் மரணத்தைத் தழுவுகையில் எல்லாம் விரயமானதைப் போன்ற உணர்வு மேலெழுகிறது.”

நர்ஸ்களின் எதிர்காலம்

தொழில்நுட்ப வளர்ச்சியும் முன்னேற்றமும் நர்ஸ் தொழிலுக்கு டென்ஷனை ஏற்படுத்துகின்றன. எனவே, நோயாளிகளைப் பராமரிப்பதில் தொழில்நுட்பமும் மனித நேயமும் இழையோட செய்வதே இப்போதைய சவால். எவ்வளவு பிரமாதமான மெஷினாக இருந்தாலும் நர்ஸின் அன்பையும் ஆதரவையும் அந்த மெஷினால் அளிக்க முடியாது.

ஒரு பத்திரிகை பின்வருமாறு விளக்குகிறது: “நர்ஸிங் பணி முடிவில்லாத தொடர்கதை. . . . மற்றவர்களை கவனித்துக்கொள்வது, இரக்கம் காட்டுவது, அவர்களது நிலையை புரிந்துகொண்டு நடப்பது போன்றவை மனிதன் இருக்கும்வரை தொடர வேண்டிய பணிகள்.” இந்தத் தேவைகளை நர்ஸ் சேவை பூர்த்தி செய்கிறது. உடல் நலத்தைப் பொறுத்தவரை நம்பிக்கையின் ஒளி சுடர் விட்டு பிரகாசிக்க இன்னுமொரு முக்கிய காரணம் உள்ளது. “வியாதிப்பட்டிருக்கிறேன்” என்று யாருமே சொல்லாத காலம் வரும் என்பதாக பைபிள் குறிப்பிடுகிறது. (ஏசாயா 33:24) கடவுள் வாக்குக் கொடுத்திருக்கும் புதிய உலகில் டாக்டர்களுக்கோ நர்ஸ்களுக்கோ ஆஸ்பத்திரிகளுக்கோ தேவை இருக்காது.​—ஏசாயா 65:17; 2 பேதுரு 3:13.

பைபிளின் வாக்குறுதி இதோ: “அவர்களுடைய கண்ணீர் யாவையும் தேவன் துடைப்பார்; இனி மரணமுமில்லை, துக்கமுமில்லை, அலறுதலுமில்லை, வருத்தமுமில்லை; முந்தினவைகள் ஒழிந்துபோயின.” (வெளிப்படுத்துதல் 21:4) அந்த நாள் வரும்வரை, தன்னலம் கருதாமல் சேவை செய்யும் கோடிக்கணக்கான நர்ஸுகளுக்கு நாம் அனைவரும் மனமார்ந்த நன்றி தெரிவிக்க கடமைப்பட்டிருக்கிறோம். ஆஸ்பத்திரிகளில் நர்ஸ்களே இல்லை என்றாலும் சிகிச்சை பெற்றுக்கொள்ளலாம் ஆனால் சமாளிப்பது கடினம்! எனவேதான், “நர்ஸ் மட்டும் இல்லையென்றால் நாம் என்ன செய்வோம்?” என்ற கேள்வியின் நிஜத்தை நன்றாக புரிந்துகொள்ள முடிகிறது.

[பக்கம் 6-ன் பெட்டி/படம்]

ஃபிளாரன்ஸ் நைட்டிங்கேல்​—⁠நவீன நர்ஸிங் பணிக்கு முன்னோடி

1820-ஆம் வருடம் ஃபிளாரன்ஸ் நைட்டிங்கேல் இத்தாலியில் ஆங்கிலேய பெற்றோரின் மகளாகப் பிறந்து செல்லமாக வளர்ந்தார். இளமை ததும்பும் வயதில் தன்னை திருமணம் செய்துகொள்ள அநேகர் வந்தபோதிலும் ஃபிளாரன்ஸுக்கு அதில் துளியும் நாட்டமே இல்லை. அவர் மனம் முழுவதிலும் தன்னலமற்ற சேவையே ஆக்ரமித்திருந்தது. ஏழைகளுக்கு சேவை செய்ய விரும்பி, ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட பாடங்களுக்கு கவனம் செலுத்தினார்.

இந்தப் பணியை தங்கள் செல்ல மகள் தேர்ந்தெடுத்தது பெற்றோருக்கு எட்டியாக கசந்தது. இருந்தாலும் பெற்றோரை எதிர்த்துக்கொண்டு ஜெர்மனியில் கைசர்வர்த் என்ற இடத்தில் நர்ஸிங் பயிற்சி மையத்தில் சேர்ந்தார். அதன் பின்பு இந்தத் துறையில் மேற்படிப்பை பாரிஸில் பயின்றார். 33 வயதில் ஃபிளாரன்ஸ் லண்டனிலிருந்த மருத்துவமனையில் சூப்பரின்டென்டன்ட் பொறுப்பை ஏற்றார்.

ஆனால், கிரிமியா போரில் காயம் பட்ட வீரர்களுக்கு தொண்டு செய்ய விரைந்தபோதுதான் நர்ஸ் பணியின் சவால்களை சந்தித்தார். ‘எலிகளின் சாம்ராஜ்யமாக’ திகழ்ந்த அந்த மருத்துவமனையை தன்னோடு வந்த 38 நர்ஸ்களோடு சேர்ந்து சுத்தம் செய்ய முனைந்தார். அந்த ‘சாம்ராஜ்யத்தை’ வீழ்த்துவது சுலபமா என்ன? இல்லவே இல்லை. அங்கே சோப் கிடையாது, வாஷ்பேஸின் கிடையாது, துவட்டிக்கொள்ள துண்டுகூட கிடையாது. காயம்பட்டவர்களை கிடத்த போதுமான கட்டில்களோ, மெத்தைகளோ, ஏன் பாண்டேஜோ, ஊஹூம் எதுவும் கிடையாது. இருந்தாலும், ஃபிளாரன்ஸும் அவரது சகாக்களும் சோர்ந்துவிடவில்லை, சவாலை சந்திக்க துணிந்து செயல்பட களத்தில் இறங்கினர். யுத்தம் முடிந்தபோது நர்ஸ் பணியிலும் மருத்துவமனை நிர்வாகத்திலும் அவர் நிகழ்த்திய புரட்சி உலகெங்கும் எட்டு திக்கும் பரவிவிட்டது. 1860-ஆம் ஆண்டு லண்டனிலுள்ள செயின்ட் தாமஸ் மருத்துவமனையில் நைட்டிங்கேல் டிரெய்னிங் ஸ்கூல் ஆஃப் த நர்ஸஸ் என்பதை ஆரம்பித்தார். இதுதான் மதத்தொடர்பில்லாத முதல் நர்ஸிங் கல்லூரியாகும். தன்னுடைய கடைசி காலத்தில் மற்றவர்கள் தயவை எதிர்பார்க்கும் நிலையில் பல ஆண்டுகள் படுத்த படுக்கையாக கிடந்தார். அந்த முடியாத நிலையிலும் ஆரோக்கியத்தின் தராதரத்தை முன்னேற்றுவிப்பது சம்பந்தப்பட்ட பல புத்தகங்களையும் துண்டுப்பிரதிகளையும் எழுதினார். 1910-ஆம் வருடம் ஃபிளாரன்ஸ் இறந்து போனார்.

ஃபிளாரன்ஸ் நைட்டிங்கேல் தனக்கென வாழாமல் பிறர்கென வாழ்ந்தார் என்பதை ஒத்துக்கொள்ளாமல் வாதிடுகிறவர்களும் உண்டு. நர்ஸ் பணிக்காக இவர் மட்டுமல்ல இன்னும் ஏராளமானோர் பாடுபட்டிருக்கின்றனர், அவர்களும் ஃபிளாரன்ஸ் அளவுக்கு புகழப்பட தகுதி வாய்ந்தவர்களே என்பது இவர்களது வாதம். அவருடைய புகழ் இன்றும் சர்ச்சைக்குரியதே. நர்ஸிங்கின் சரித்திரம் என்ற ஆங்கில புத்தகத்தில் “அவர் சட்டென கோபப்படுபவர், தான் பிடித்த முயலுக்கு மூன்று கால் என்று சொல்பவர், தான் சொல்வதே சரி என விதண்டாவாதம் செய்பவர், சிடுமூஞ்சி, ஆணவமாக நடந்து கொள்பவர்” என்று சிலர் அவரைப் பற்றிக் குறிப்பிடுகின்றனர். ஆனால் மற்றவர்களோ “அவர் புத்திசாலிப் பெண், இனிமையானவர், உற்சாக துள்ளல்மிக்கவர், அவருடைய முரண்படும் குணங்களிலும் இனிமை காணலாம்” என்பதாக குறிப்பிடுகின்றனர். அவர் எப்படிப்பட்டவர் என்பது விவாதத்திலிருந்தாலும், நர்ஸ் பணியிலும் மருத்துவ நிர்வாகத்திலும் அவர் ஆரம்பித்து வைத்த உத்திகள் பிரபலமாகிவிட்டன. இவை பல நாடுகளுக்கு பரவியது. நர்ஸிங் துறைக்கு இவர்தான் முன்னோடி என்று கருதப்படுகிறார்.

[படம்]

செயின்ட் தாமஸ் மருத்துவமனை-நைட்டிங்கேல் டிரெய்னிங் ஸ்கூல் ஆஃப் த நர்ஸஸ் ஸ்தாபிக்கப்பட்ட பிறகு

[படத்திற்கான நன்றி]

Courtesy National Library of Medicine

[பக்கம் 8-ன் பெட்டி/படம்]

நர்ஸ்களின் தகுதி

நர்ஸ்: “விஞ்ஞான முறைப்படி நோயாளிகளை கவனித்துக்கொள்ள குறிப்பிட்ட வருடங்கள் நர்ஸிங் பயிற்சியைப் பெற்றிருப்பவர்.”

பதிவு செய்யப்பட்ட நர்ஸ்: “நர்ஸிங் பட்டப் படிப்புக்குப்பின்பு அரசாங்க பரீட்சையில் தேர்ச்சி பெற்றதால் நர்ஸாக பதிவு செய்திருப்பவர் . . . நர்ஸாக பணி செய்வதற்கும் சட்டப்படி R.N. என அழைக்கப்படுவதற்கும் தகுதி பெற்றவர்.”

கிளினிக்கல் நர்ஸ் ஸ்பெஷலிஸ்ட்: “நர்ஸிங் பணியில் குறிப்பிட்ட ஒரு துறையில் அனுபவம், திறமை, தகுதி ஆகியவற்றில் தேர்ச்சி பெற்ற பதிவு செய்யப்பட்ட நர்ஸ்.”

நர்ஸ்-மருத்துவச்சி: “நர்ஸ் வேலையிலும் பிரசவ கட்டத்திலும் உதவுவதற்கு சிறப்புப் பயிற்சி பெற்றவர்.”

அனுபவ பாடம் படித்த நர்ஸ்: “இவர் எந்த நர்ஸிங் பட்டப் படிப்பும் படிக்காதவர். முழுக்க முழுக்க அனுபவத்தை வைத்தே நர்ஸ் பணி செய்கிறவர்.”

சட்டப்படி உரிமையும் அனுபவமும் பெற்ற நர்ஸ்: “இவர் நர்ஸிங் பட்டப் படிப்பு படித்தவர். . . . சட்டப்படி நர்ஸாக பெயர் பதிவு செய்திருப்பவர், நர்ஸாக சேவை செய்ய உரிமையுடையவர்.”

[படங்களுக்கான நன்றி]

டோர்லான்ஸ் இல்லஸ்ட்ரேட்டட் மெடிக்கல் டிக்ஷ்னரி என்ற அமெரிக்க வெளியீட்டிலிருந்து

UN/J. Isaac

[பக்கம் 9-ன் பெட்டி/படம்]

‘ஆரோக்கியத்தின் அஸ்திவாரம்’

ஜூன் 1999-⁠ல், இன்டர்நேஷனல் கௌன்சல் ஆஃப் நர்ஸஸ் சென்டேனியல் கான்ஃபரன்ஸ் நடைபெற்றது; அதில் உலக சுகாதார நிறுவனத்தின் டைரக்டர்-ஜெனரல் டாக்டர் க்ரோ ஹார்லம் பிரன்ட்லான்ட் என்ற பெண்மணி கலந்து கொண்டு உரையாற்றினார்:

“இந்த பூமியில் ஆரோக்கியம் செழித்தோங்க ஒவ்வொரு நர்ஸும் பெரும் போராட்டம் நடத்துகிறார் . . . ஒவ்வொரு நாட்டின் மருத்துவப் பணியாட்களில், நர்ஸுகளும் மருத்துவச்சிகளும் கிட்டத்தட்ட 80 சதவீதத்தினர் இருக்கின்றனர். இருபத்தி ஒன்றாவது நூற்றாண்டில் எல்லாருடைய ஆரோக்கியத்தையும் காக்கும் பணியில் தேவையானவற்றை செய்ய சக்தி வாய்ந்த படையாக இவர்கள் திரண்டிருக்கின்றனர். மருத்துவ உலகின் எந்தத் துறைகளிலும் மக்களின் உடல்நலம் காப்பதில் இவர்கள் அரும்பணி தொடருகிறது . . . மருத்துவத் துறைகள் எனும் கட்டடம் ஆரோக்கியம் எனும் தூண்களில் ஸ்திரமாக நிற்க இந்த நர்ஸ்கள்தான் அஸ்திவாரம்.”

மெக்ஸிகோவின் முன்னாள் ஜனாதிபதி எர்னஸ்டோ ஸடில்லோ போன்ஸ் டி லியான் தன்னுடைய பேச்சில் மெக்ஸிகோவின் நர்ஸ்களை ஆகா ஓகோ என புகழ்ந்தார்: “நீங்கள் அனைவரும், நாள் தவறாமல் . . . உங்கள் அறிவையும், ஒற்றுமையாய் சேர்ந்து பணியாற்றும் திறமையையும், உங்கள் தன்னலமற்ற உழைப்பையும், மெக்ஸிகோ நாட்டவரின் ஆரோக்கியத்தைக் காக்கவும் நோயுற்றவர்களை சுகப்படுத்தவும் செலவழிக்கிறீர்கள். உங்களை நாடி வருபவர்களுக்கு கடமை செய்வதோடு நிறுத்திக்கொள்கிறீர்களா? இல்லையே. மனித நேயத்தோடு ஆறுதல் அளிக்கும் தீர்மானத்தோடு அவர்களுக்கு பணி செய்கிறீர்கள் . . . எங்களுடைய மருத்துவத் துறையில் பெரும் எண்ணிக்கையில் இருப்பவர்கள் நீங்களே . . . காப்பாற்றப்பட்ட ஒவ்வொரு உயிருக்கும், தடுப்பூசி போடப்பட்ட ஒவ்வொரு குழந்தைக்கும், பார்க்கப்பட்ட ஒவ்வொரு பிரசவத்திற்கும், ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட ஒவ்வொரு பேச்சிற்கும், நலமடையும் ஒவ்வொரு நோயாளிக்கும், பராமரிக்கப்படும் ஒவ்வொரு நோயாளிக்கும் பின் திரைமறைவில் பணியாற்றியவர் ஒரு நர்ஸே என்பதை மறுக்க முடியாது.”

[படங்களுக்கான நன்றி]

UN/DPI Photo by Greg Kinch

UN/DPI Photo by Evan Schneider

[பக்கம் 11-ன் பெட்டி/படம்]

நர்ஸை வாயார புகழும் மருத்துவர்

நியூ யார்க்கின் பிரஸ்பிட்டேரியன் மருத்துவமனையில் பணி செய்யும் டாக்டர் சந்தீப் ஜோஹர் திறமையான நர்ஸ்களுக்கு தான் கடமைப்பட்டிருப்பதாக சொன்னார். மரணத்துடன் போராடும் ஒரு நோயாளிக்கு இன்னும் கொஞ்சம் மார்ஃபைன் அளிக்க வேண்டும் என்பதை ஒரு நர்ஸ் தனக்கு நாசூக்காக தெரிவித்ததைக் குறிப்பிட்டார். அவர் பின்வருமாறு எழுதுகிறார்: “திறமையான நர்ஸ்கள் டாக்டர்களுக்கே ‘ஆசிரியராகிறார்கள்.’ மருத்துவமனையில் பணிசெய்பவர்களில் அவசர சிகிச்சைப் பிரிவில் பணியாற்றும் நர்ஸ்களே மிகச் சிறந்த பயிற்சி பெற்ற நிபுணர்கள். மருத்துவ படிப்பிற்குப் பின்பு மருத்துவ பயிற்சியாளனாக பணியாற்றினேன்; அப்போது இரத்த நாளத்தில் எவ்வாறு மருந்தை ஏற்றுவது என்பதையும் செயற்கை சுவாசமானியை எவ்வாறு இயக்குவது என்பதையும் அவர்கள் கிளிப்பிள்ளைக்குச் சொல்லிக்கொடுப்பதைப் போல் சொல்லிக் கொடுத்தார்கள். எந்த மருந்துகளை தவிர்க்க வேண்டும் என்பதையும் கற்றுக்கொடுத்தனர்.”

மேலும், “நோயாளியின் உள்ளம், உணர்ச்சி சம்பந்தப்பட்ட விஷயங்களுக்கு உண்மையில் ஆதரவை அளிப்பவர்கள் நர்ஸ்கள்தான். ஏனெனில் நோயாளியோடு இராப்பகலாக நேரத்தை செலவிடுகிறவர்கள் அவர்கள்தான் . . . நம்பிக்கைக்கு பாத்திரமான நர்ஸ், நோயாளியை பார்க்கும்படி வந்து கூப்பிடுகையில் உடனடியாக செல்வேன்.”

[பக்கம் -ன் படம்7]

“மற்றவர்களுக்கு சேவை செய்வதே என் விருப்பம்.”​—⁠டெர்ரி வெதர்சன், இங்கிலாந்து.

[பக்கம் -ன் படம்7]

‘அப்பாவை ஆஸ்பத்திரியில் அட்மிட் செய்தார்கள். அப்போதே எதிர்காலத்தில் நர்ஸாக வேண்டும் என சங்கல்பம் செய்தேன்.’—எட்சுகோ கோட்டானி, ஜப்பான்.

[பக்கம் -ன் படம்7]

“இவ்வுலகைக் காண வரும் பிள்ளைக்கு உதவும் மருத்துவச்சிக்கு பிரசவம் என்பது ஒரு மகத்துவமான அனுபவம்.”—யோலன்டா கீலன் ஃபான் ஹோவ்ட், நெதர்லாந்து.

[பக்கம் -ன் படம்8]

பிரசவத்திற்கு உதவும்போது மருத்துவச்சிகளுக்கு சந்தோஷமும் திருப்தியும் ஏற்படுகிறது