Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

கண் காணாதவைகளை காண்கிறீர்களா?

கண் காணாதவைகளை காண்கிறீர்களா?

கண் காணாதவைகளை காண்கிறீர்களா?

வளைவான பாதையில் எதிரில் வருகிற வண்டிகள் டிரைவருக்கு தெரியாது. ஆனால் அந்த இடத்தில் கண்ணாடி பொருத்தியிருந்தால், வருகிற வண்டியும் தெரியும், விபத்தையும் தவிர்க்க முடியும். அதேபோல் எல்லாவற்றையும் படைத்த கடவுள் இருக்கிறார். ஆனால் நம் கண்களுக்குத் தெரிவதில்லை. ஆகவே, அவர் இருப்பதை தெரிந்துகொள்ள ஏதேனும் வழி இருக்கிறதா?

கடவுளை நம் கண்களால் காண முடியாது. ஆனால் அவர் இருப்பதை மனக் கண்களால் அறிய முடியும் என்றார் முதல் நூற்றாண்டை சேர்ந்த ஒரு எழுத்தாளர். அவர் எழுத்தில் வடித்தவை: “கண்ணுக்குப் புலப்படா அவருடைய [கடவுளுடைய] பண்புகள்​—⁠அதாவது, என்றும் நிலைக்கும் அவரது வல்லமையும் கடவுள் [தெய்வத்] தன்மையும்​—⁠உலகப் படைப்பு முதல் அவருடைய செயல்களில் மனக் கண்களுக்கு தெளிவாய்த் தெரிகின்றன. ஆகவே அவர்கள் சாக்குப்போக்கு சொல்வதற்கு வழியே இல்லை.”​—⁠உரோமையர் 1:20, பொது மொழிபெயர்ப்பு.

இதை சற்று யோசித்து பாருங்கள்: மனிதனால் காப்பியடிக்க முடியாத கடவுளுடைய கைவண்ணங்கள் பல நம் கண்களை குளிர்விக்கின்றன. அவை ஒவ்வொன்றும் அவருடைய அறிவை பறைசாற்றுகின்றன. இதை உங்களால் உணர முடிகிறதா? படைப்பின் அதிசயங்களை உங்கள் மனக் கண்களால் காண முடிகிறதா? மனிதனுக்கு அப்பாற்பட்ட சக்தி இருப்பதை அவை மௌனமாய் சொல்வது உங்கள் காதில் விழுகிறதா? படைப்பின் அதிசயங்கள் சிலவற்றை காண்போம்.​—எபேசியர் 1:⁠19.

படைப்பிலிருந்து பாடம்

மாதத்தில் ஒருநாள் நிலவுக்கு விடுமுறை. நிலவு இல்லாத குறையை நிறைவு செய்யும் எண்ணத்தில் இன்னும் பிராகாசமாய் மின்னிடும் விண்மீன்களின் கூட்டத்தை பார்த்திருக்கிறீர்களா? அவை படைத்தவரின் பெருமையை பளிச்சிடுகின்றன. படைப்பின் இந்த அதிசயத்தில் மனதைப் பறிகொடுத்த பண்டைய கவிஞர் ஒருவர் வடித்த கவிதை: “வானங்கள் இறைவனின் மாட்சிமையை வெளிப்படுத்துகின்றன; வான்வெளி அவர்தம் கைகளின் வேலைப்பாட்டை விவரிக்கின்றது. உமது கைவேலைப்பாடாகிய வானத்தையும் அதில் நீர் பொருத்தியுள்ள நிலாவையும் விண்மீன்களையும் நான் நோக்கும்போது, மனிதரை நீர் நினைவில்கொள்வதற்கு அவர்கள் யார்? மனிதப் பிறவிகளை நீர் ஒருபொருட்டாக எண்ணுவதற்கு அவர்கள் எம்மாத்திரம்?”​—⁠திருப்பாடல்கள் [சங்கீதம்] 8:3, 4; 19:⁠1, பொ.மொ.

மனிதன் என்னதான் முயன்றாலும் காப்பி அடிக்க முடியாத இயற்கைகளிடம் மண்டியிட்டு அதிசயிக்கிறான். “மரத்தை கடவுள் மட்டுமே படைக்க முடியும்” என்றார் புகழ்பெற்ற கவிஞர். மரத்தை விட மனித படைப்பு இன்னும் அதிசயம் அல்லவா! பெற்றோரின் மண்டையை உருட்டாமலே உருவாகும் அற்புதம் அல்லவா குழந்தை! தந்தையின் விந்தும், தாயின் முட்டையும் இணைந்ததும், கருவுக்கு எத்தகைய உரு கொடுக்க வேண்டும் என்பதை உருவான புதிய செல்லின் டி.என்.ஏ விரைவாக கட்டங்களைப் போட்டு, திட்டங்களை தீட்டுகிறது. டி.என்.ஏ.-வின் திட்டங்களை “எழுத்தில் வடித்தால் 600 பக்கங்கள் உடைய ஆயிர புத்தகங்கள் தேவை” என்கிறார்கள்.

கரு உருவானதற்கே அசந்துவிட்டீர்களா? இன்னும் நிறைய அதிசயங்கள் கருவறையில் காத்திருக்கின்றன. கருவுற்ற செல், ஒன்று இரண்டாகி, இரண்டு நான்காகி, நான்கு எட்டாகி என பெருகிக்கொண்டே இருக்கும். 270 நாட்களுக்குள், 200 வகை செல்கள், கோடிக்கணக்கில் பெருகி, குழந்தையை ரெடியாக்கி, வெளியே அனுப்பி வைக்கும். எப்படி ஒரேவொரு செல்லிற்குள் இருக்கும் விஷயம் அப்படியே பலவகை செல்களுக்கு சரியான நேரத்தில் கடத்தப்படுகின்றன என்பது ஆச்சரியம்! கருவை உருவாக்கிய கடவுளை இவ்வாறு மனம் உருகி பாடினார் ஒரு பாடகர்: “என் உள் உறுப்புகளை உண்டாக்கியவர் நீரே! என் தாயின் கருவில் எனக்கு உரு தந்தவர் நீரே! அஞ்சத்தகு, வியத்தகு முறையில் நீர் என்னைப் படைத்ததால் நான் உமக்கு நன்றி நவில்கிறேன்.” கருவை உருவாக்கிய கடவுளை புகழ உங்கள் உள்ளமும் துடிக்கிறதா?​—⁠திருப்பாடல்கள் 139:13-16.

கருவாகி, உருவாகி, உயிராகி ஜனிக்கும் மனிதன் என்னும் “அதிசயத்தை” ஆராய்வோர் அதிசயத்து நிற்கிறார்கள். சிகாகோ, இல்லினாயஸ் மாகாண மருத்துவ சங்கங்களின் முன்னாள் தலைவராக இருந்தவர் டாக்டர் ஜேம்ஸ் H. ஹட்டன். மனித செல் செய்கிற அற்புதங்களை கண்டு பிரமித்து போய், இவ்வாறு கூறினார்: “எதை தயாரிக்க வேண்டும், எப்படி தயாரிக்க வேண்டும் என்ற கட்டளைகள் செல்லிற்கு செல் கடத்தப்படுவது உண்மையிலேயே ஒரு மேஜிக். இந்த மேஜிக்கை புரிந்துகொள்ள விஞ்ஞானிகள் முயல்வது ஆச்சரியமான அதிசயம். ஆனால், இவ்வாறெல்லாம் மனித செல் செயல்பட வேண்டும் என்று திட்டம் தீட்டியவர் கண்டிப்பாக அறிவுக்கடலான தெய்வீக சக்தியாக இருக்க வேண்டும்.”

டாக்டர் ஹட்டன் மேலும் இவ்வாறு கூறினார்: “அகச்சுரப்பி இயலின் (endocrinology) உட்பிரிவான நாளமில்லா சுரப்பிகள் எவ்வாறு செயல்படுகின்றன, என்ன கோளாறுகள் ஏற்படுகின்றன என்பதில் ஸ்பெஷலிஸ்ட் நான். அவை செயல்புரிகிற அற்புதத்தையும், அவற்றின் சிக்கலான தன்மையையும் காண்கையில், இவை அனைத்திற்கும் தெய்வீக சக்தியே காரணம் என்பேன் நான். ஆகவே, எல்லாம் வல்ல, எல்லாம் அறிந்த படைப்பாளரே இந்தப் பிரபஞ்சத்தை படைத்து, அவற்றை இயங்க வைத்து, அவற்றை கண்காணித்தும் வருகிறார் என்பதை மறுக்க முடியாது.”

படைப்பாளரை பற்றி வியந்து கூறிய டாக்டர் ஹட்டன் மனதில் எழுந்த கேள்வி: “சிட்டுக்குருவி விழுவதைக்கூட கண்காணிக்கும் அளவுக்கு கடவுள் நம்மீது அக்கறை வைத்திருக்கிறாரா?” அவருடைய கேள்விக்கு அவரே பதிலளித்தார்: “கடவுளுக்கு நம்மீது அளவுகடந்த அக்கறை இருக்குமா என்பதில் எனக்கு சந்தேகமாக உள்ளது. ஏனென்றால், அவ்வளவு பெரிய கடவுள், நான் செய்கிற சின்ன சின்ன அற்ப விஷயங்களைக்கூட பார்த்துக்கொண்டிருப்பாரா என்ன?”

படைப்பு என்னும் “அதிசயத்தை” அறிவுள்ள படைப்பாளரே செய்திருப்பார் என்று ஒத்துக்கொள்கிற பலர், நம் ஒவ்வொருவரிடத்திலும் கடவுளுக்கு அக்கறை இருக்கிறது என்பதை ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்கள். ஏன்?

உண்மையிலேயே கடவுளுக்கு நம்மிடம் அக்கறை உள்ளதா?

கடவுள் இருந்தால் உலகத்தில் இவ்வளவு அநியாயம் அக்கிரமங்கள் இருக்காதே என்று பலர் நினைக்கிறார்கள். “எங்களுக்கு உதவி தேவைப்பட்ட போது அந்தக் கடவுள் எங்கிருந்தார்?” என்ற கேள்வியே எங்கும் ஒலிக்கிறது. இரண்டாம் உலகப் போரின்போது, ஜெர்மன் நாஸிக்களின் அட்டூழியங்களுக்கு லட்சக்கணக்கான அப்பாவி மக்கள் பலியானார்கள். அந்தக் கொடூரவாதிகளின் கொடுமைகளை எல்லாம் சகித்து, தப்பி வந்த ஒருவர் இவ்வாறு கூறினார்: “வேதனைகளால் கசந்துபோயிருக்கும் என் மனசு எட்டிக்காயைவிட கசப்பானது.”

ஆகவே, கடவுள் இருக்கிறாரா இல்லையா என்று பலர் குழம்பிபோய் இருக்கிறார்கள். பண்டைய கால கவிஞர் ஒருவர், படைப்பில் இருக்கும் அதிசயங்களையும் அழகையும் ஒழுங்கையும் கவனித்து, படைப்பாளர் இருப்பதை மனக் கண்ணால் கண்டார் என்று கண்டோம். அவரைப் போலவே நாமும் மனக் கண்ணால் படைப்பாளரை பார்ப்போமாக! ஆனால், கடவுளுக்கு நம்மீது அக்கறை இருந்தால், இவ்வளவு துன்பத்தை ஏன் அனுமதிக்கிறார்? இந்தக் கேள்விக்கு சரியான விடை கிடைத்தால்தான், நாமும் கடவுளை சரியான விதத்தில் வழிபடுவோம். விடையை எங்கே தேடுவது?

விடை வேண்டுமென்றால், கடவுள் உண்மையில் நம்மைப்பற்றி அக்கறை உள்ளவராக இருக்கிறாரா? என்ற சிற்றேட்டை படித்துப் பாருங்கள். சிற்றேட்டை எப்படி பெறலாம் என்பதற்கு இதே விழித்தெழு! பத்திரிகையில் பக்கம் 32-ஐ பாருங்கள். அந்தச் சிற்றேட்டில், “கடவுள் ஏன் துன்பத்தை அனுமதிக்கிறார்?” “கலகத்தின் விளைவு என்னவாக இருக்கிறது?” ஆகிய தலைப்பில் கொடுத்திருக்கும் விஷயங்களை கவனமாக படித்தால், கடவுள் இருக்கிறாரா இல்லையா என்பது கண்டிப்பாக தெரிந்துவிடும்.

[பக்கம் 11-ன் படம்]

படைத்தவை படைப்பாளரை பறைசாற்றுகின்றனவா?