Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

காதலுக்கு கண் இல்லை

காதலுக்கு கண் இல்லை

காதலுக்கு கண் இல்லை

ஸ்பெயினிலுள்ள விழித்தெழு! நிருபர்

உங்களுக்கோ கிட்டப்பார்வை, அதனால் சரியாக கண் தெரியாது என்று வைத்துக்கொள்வோம், ஆனால் அழகான கன்னிப் பெண்கள் பவனி வருவதோ அந்தி வேளையில்தான். அவர்களில் உங்களுக்கேற்ற ஜோடியை கண்டுபிடிக்க சொன்னால் உங்களுக்கு எப்படியிருக்கும்? ஆண் அந்துப்பூச்சிகளின் நிலை இதுதான். ஆனால், இப்படிப்பட்ட இக்கட்டான நேரத்தில் கைகொடுக்கும் சில விசேஷ அம்சங்களை இந்த அழகான அந்துப்பூச்சிகள் தங்களில் கொண்டுள்ளன.

பெண் பார்க்கும் படலத்தை தொடங்குவதற்குமுன், கோடை கால மாதங்களில் இந்த அந்துப்பூச்சி கொழுத்த ஒரு கம்பளிப்புழுவாக கண்ணில்படும் எல்லா உணவுப் பொருட்களையும் கபளீகரம் செய்து வயிறை நிரப்பிக்கொள்கிறது. இதனால் அதற்கு பின்வரும் வசந்த காலத்தில், கூட்டுப்புழு பருவத்திலிருந்து பளப்பளப்பான அந்துப்பூச்சியாக வெளிப்படும்போது வாழ்நாள் முழுவதற்கும் போதுமான உணவை சேமித்துக்கொள்கிறது. ஏனெனில் இதன் வாழ்நாள் காலம் குறுகியதே!

சாப்பாட்டு பிரச்சினை இல்லாததால் இந்த அந்துப்பூச்சி ஜோடி தேடும் பணியில் மும்முரமாக ஈடுபடுகிறது! இந்த அந்துப்பூச்சிகளின் உடலில் அந்த உறுப்பு மட்டும் இல்லையேல், இந்த வேலை வைக்கோல் போரில் ஊசி தேடுவது போல்தான் இருந்திருக்கும்.

இந்தப் பூச்சியின் குட்டி தலையில் ‘ஆன்டெனா’ போல இரண்டு உணர்கொம்புகள் உள்ளன! இந்தச் சிறிய உறுப்பு உலகிலேயே மிகவும் சிறப்பான வாசனை கண்டுபிடிக்கும் மிஷினாக இருக்கலாம். பெண் அந்துப்பூச்சி வசீகரிப்பதற்காக வெளியிடும் துளியளவு ஃபெரமோன் என்ற வேதிப்பொருளை அல்லது “வாசனை”யை உணர்ந்துகொள்வதற்கு அவை அத்தனை நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ளன.

பெண் அந்துப்பூச்சிகள் எண்ணிக்கையிலோ குறைவு! இந்த சூழ்நிலையில் இவற்றின் ஃபெரமோன் சென்ட் ஆண் அந்துப்பூச்சிகளுக்கு ஒரு லைட் ஹவுஸைப் போல வழிகாட்டுகின்றன. ஆண் அந்துப்பூச்சியின் உணர்கொம்புகள் மிகவும் சக்திவாய்ந்தவை. சுமார் 11 கிலோமீட்டர் தொலைவிலிருக்கும் பெண் அந்துப்பூச்சியைக்கூட அநாயசமாக கண்டுபிடித்துவிடும். அடுத்த கணமே தடங்கல்களை தகர்த்து, ஜிவ்வென பறந்து, தன் ஜோடிமுன் ஆஜராகிவிடும். உண்மைதான் பூச்சிகளின் உலகத்தில், அந்துப்பூச்சியின் விஷயத்திலாவது காதலுக்கு கண்ணே தேவையில்லை!

கடவுளுடைய படைப்பில் நம்மை கவரும் காட்சிகளும் வியப்பூட்டும் வடிவமைப்புகளும் ஏராளம் ஏராளம்!! சங்கீதக்காரன் எழுதியது எத்தனை உண்மை: “கர்த்தாவே, உமது கிரியைகள் எவ்வளவு திரளாயிருக்கிறது! அவைகளையெல்லாம் ஞானமாய்ப் படைத்தீர்.”​—சங்கீதம் 104:⁠24.

[பக்கம் 10-ன் படத்திற்கான நன்றி]

© A. R. Pittaway