Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

வேட்டையாடப்படும்—வெள்ளை “வேட்டைக்காரன்!”

வேட்டையாடப்படும்—வெள்ளை “வேட்டைக்காரன்!”

வேட்டையாடப்படும்—வெள்ளை “வேட்டைக்காரன்!”

உலகிலுள்ள ‘அசைவம்’ சாப்பிடும் இனத்தை சேர்ந்த மீன்களிலேயே மிகப்பெரியதும், அரசனைப் போல கடலில் வலம் வருவதும் இந்த வெண்சுறாவே. மற்றெந்த உயிரினத்தையும்விட இந்த பயங்கரமான மீனே மனிதரை தொடை நடுங்க வைக்கிறது. ஆனால் இப்போதோ, ஆஸ்திரேலியா, பிரேஸில், நமிபியா, தென் ஆப்பிரிக்கா, அமெரிக்கா போன்ற நாடுகளைச் சுற்றியுள்ள கடல்களிலும் மத்தியதரைக் கடலிலும் இவை பாதுகாக்கப்பட்டு வருகின்றன. மற்ற நாடுகளும் அதை ஆமோதிப்பதைக் குறித்து ஆலோசித்து வருகின்றன. ஆனால் மனித உயிர்களை குடிக்கும் கொடிய மீன் என்று தெரிந்தும், ஏன் இது பாதுகாக்கப்படுகிறது? நாம் பார்க்கப்போகிற விதமாக இதுவொன்றும் சாதாரண விஷயம் அல்ல. அதேசமயத்தில் இந்த சுறாமீனைப் பற்றிய பொதுமக்களின் கருத்து எப்போதும் உண்மையாக இருப்பதில்லை.

சுறா இனத்திலேயே இந்த வெண்சுறாதான்  a ராஜா அல்லது ஹீரோ. கடலின் உணவுச் சங்கிலியில் கில்லர் திமிங்கலம் மற்றும் ஸ்பெர்ம் திமிங்கலத்தோடு வெண் சுறாவும் மேல் நிலையில் இருக்கிறது. இவற்றை அடித்து சாப்பிடும் தைரியம் வேறெந்த பிராணிக்கும் இல்லை. இது மீன்கள், டால்பின்கள், மற்ற சுறாக்கள் போன்ற எதையும் விட்டுவைக்காமல் விரட்டிப்பிடித்து ருசித்துவிடுகிறது. ஆனால் இதற்கு வயது ஆக ஆக உருவம் பெருத்து, வேகம் குறைந்துவிடுகிறது. அதனால் கடல்நாய், பென்குவின் மற்றும் அழுகிய பிணம் போன்றவற்றையே சாப்பிடுகிறது. இதற்கு பிடித்த உணவு, செத்த திமிங்கலங்களே.

இரை தேடும் விஷயத்தில் இது கில்லாடி. இரை தேடும் சமயத்தில் இதன் கூரிய பார்வை உட்பட எல்லா புலன்களும் விழிப்புடனிருக்கும். அதன் மோப்ப சக்தியை பற்றி சொல்ல வேண்டுமானால், அதை நீந்தும் மூக்கு என்று சொன்னால் பொருத்தமாக இருக்கும்! அதுமட்டுமா அதன் காதுகளைப் பற்றி என்ன நினைத்தீர்கள்​—⁠அதன் காதுகளுக்கு எதுவும் டிமிக்கி கொடுக்க முடியாது, ஆகவே, அதை நீந்தும் காது என்றும் சொல்லலாம்.

இதனுடைய உடலின் இருபக்கத்திலும், அழுத்தத்தை உணர்ந்துகொள்ளும் ஆற்றலுடைய உயிரணுக்கள் கொண்ட காது இருக்கிறது. அதனால் துல்லியமாக கேட்கும் இதன் காதிடமிருந்து எதுவுமே தப்ப முடியாது. இதன் உதவியால், வேறு உயிரிகள் எதிலாவது மாட்டிக்கொண்டு துள்ளுவது போன்ற அசைவுகளை, அதிர்வுகளை உடனடியாக உணர்ந்துகொள்கிறது. உதாரணமாக, ஈட்டியில் மாட்டிக்கொண்ட மீன் துடிப்பதை அது உடனடியாக உணர்ந்துகொள்கிறது. ஆகவே கடலில் மூழ்கி, ஈட்டி வைத்து மீன் பிடிப்பவர்கள், மீனை ஈட்டியால் குத்தியவுடன் எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் இரத்தம் சொட்ட சொட்ட தத்தளிக்கும் அந்த மீனை தண்ணீரிலிருந்து வெளியே எடுத்துவிடுவது நல்லது.

சுறா மீனுக்கும் ஆறாவது அறிவு இருக்கிறது என்பது உங்களுக்கு தெரியுமா! அதன் பெயர் ஆம்புலே ஆஃப் லோரான்ட்செனே. இந்த சுறாவினுடைய மூக்கைச்சுற்றி இந்த சிறிய நாளங்கள் சிதறியிருக்கின்றன. இதன் அபார சக்தி நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது. இரையின் இதயத்துடிப்பு, செவுள்களின் அசைவு அல்லது நீந்துவதால் ஏற்படும் உடல் அசைவு போன்றவற்றால் வெளியாகும் மிக நுண்ணிய மின் அலைகளையும் இவை உடனடியாக உணர்ந்துகொள்ளும். சாதாரணமாக கடலுக்கும் பூமியின் காந்தப்புலத்திற்கு இடையே சில செயல்பாடுகள் உள்ளன. இந்த மிக நுணுக்கமான செயல்பாட்டையும் இதன் ஆறாம் அறிவால் உணர்ந்துகொள்கிறது. இதன் மூலம், வடதிசை எது தென்திசை எது என்றும் சுறாக்கள் அறிந்துகொள்கின்றன.

வெண்சுறாவை தெரிந்துகொள்ளுங்கள்

பெயரில் வெள்ளை இருப்பதால் இது முழுக்க முழுக்க மின்னலடிக்கும் வெண்மையாக இருக்கும் என்று கற்பனை செய்துகொண்டு இந்த ஷார்க்கை நேரில் பார்ப்போருக்கு ஒரே ‘ஷாக்.’ ஏனென்றால் இதன் வயிறு பகுதி மட்டுமே வெள்ளை அல்லது வெளிர் நிறத்தில் இருக்கும். அதன் முதுகு அல்லது மேல்பகுதியோ பொதுவாக கரும்சாம்பல் நிறத்தில் உள்ளது. மீனின் இருபக்கத்திலும் அந்த இருவண்ணங்களும் ஒரு கோடு போட்டாற்போல் இணைகின்றன. அந்த கோணல் மாணலான கோடு ஒவ்வொரு சுறாமீனுக்கும் மாறுபடுகிறது. சுறாக்கள் மறைந்திருந்து தாக்குவதற்கு அல்லது எளிதில் கண்ணில் படாமல் திடீரென தாக்குவதற்கு இது உதவி செய்கிறபோதிலும், விஞ்ஞானிகள் ஒவ்வொரு சுறா மீனையும் சரியாகவும் தெளிவாகவும் அடையாளம் கண்டுபிடிப்பதற்கும் இது உதவுகிறது.

இந்த வெண்சுறாக்கள் எவ்வளவு பெரியதாக வளரும்? இதுவரை அளக்கப்பட்ட “வெண்சுறாக்களிலேயே பெரிய சுறாக்களின் அளவு சுமார் 5.8 மீட்டரிலிருந்து 6.4 மீட்டர்” என்று மாபெரும் வெண்சுறா என்ற ஆங்கில புத்தகம் சொல்கிறது. இவ்வளவு பெரிய மீனின் எடை 2,000 கிலோவிற்கும் அதிகமாக இருக்கலாம். இந்த சுறா மீனுக்கு பின்புறம் வளைந்த முக்கோண வடிவ துடுப்புகள் உள்ளன. நீர்மூழ்கிக்குண்டு போல காட்சியளிக்கும் உடலோடு இவை கச்சிதமாக இணைந்துள்ளன. இதனால் அந்த மீன் ஏவுகணை போல் நீரில் நீந்திச் செல்கிறது. ஒரே சீராக அமைந்திருக்கும் இதன் வால் கூடுதல் சக்தியை கொடுக்கிறது. சுறா இனத்திலேயே இந்த விசேஷ வடிவமைப்புள்ள வாலைப் பெற்றிருப்பது இந்த சுறா மட்டுமே. பெரும்பாலான மற்ற வகை சுறா மீன்களுக்கு வால் சீரான அளவில் அமைந்திருப்பதில்லை.

இந்த வெண்சுறாக்களைப் பார்த்தால் தலைதெறிக்க ஓட வைப்பது, அதன் பெரிய கூம்பு வடிவான தலை, வெறிபிடித்த கருமைநிற கண்கள் மற்றும் கத்தியைப்போன்ற கூர்மையான, முக்கோண வடிவ பற்கள் நிறைந்த வாய். இதன் பற்கள் இருபுறமும் கூரான ‘கத்திகளாக’ செயல்படுகின்றன, ஒருவேளை இதன் ஒரு பல் விழுந்துவிட்டால், பின் வரிசையில் உள்ள மாற்றீடு பல் முன்னே நகர்ந்து அந்தப் பல்லை புதுப்பிக்கிறது.

சக்தியளிக்கும் இரத்தத்தின் வெப்ப அளவு

மற்ற அநேக சுறா மீன்களின் சுற்றோட்ட மண்டலத்திலிருந்து, மேகோ, போர்பீகள் மற்றும் வெண்சுறா போன்ற சுறா மீன்கள் உட்படும் லேம்னிடே குடும்பத்தின் சுற்றோட்ட மண்டலம் முற்றிலும் வேறுபட்டது. இவற்றினுடைய இரத்தத்தின் வெப்பநிலை தண்ணீரின் வெப்பநிலையைவிட மூன்றிலிருந்து ஐந்து டிகிரி செல்ஸியஸ் அதிகமாக இருக்கும். இதனால் ஜீரண சக்தியும் பலமும் உறுதியும் இந்த சுறாமீனிற்கு அதிகமாக கிடைக்கிறது. டியூனா போன்ற வேகமாக நீந்தும் கடல் மீன்களையும் விரட்டி பிடித்து ‘ஏப்பம்விடும்’ மேகோ சுறா மீன், தேவையான சமயங்களில் மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தில் செல்லக்கூடும்!

சாதாரணமாக, சுறா மீன்களின் இரு மார்புத் துடுப்புகளும் நீரில் மிதப்பதற்கு உதவுகின்றன. குறிப்பிட்ட வேகத்திற்கு கீழே ஒருவேளை மெதுவாக நீந்தினால், விமானத்தைப் போன்றே இந்த சுறாக்களும் நின்றுவிடும், மூழ்கிவிடும். அப்படி மூழ்கிவிடாமல் மிதந்துகொண்டே இருக்க உதவி செய்யும் அதன் எண்ணெய் நிரம்பிய ஈரலிருந்தும் இந்த நிலைதான். அந்த ஈரல் சாதாரணமானதல்ல, அந்த சுறா மீனின் மொத்த எடையில் இந்த ஈரலே மூன்றில் ஒரு பங்கு எடையுடையது! கூடுதலாக, அநேக வகை சுறா மீன்கள் சுவாசிப்பதற்கு நீந்திக்கொண்டே இருக்க வேண்டும். அப்போதுதான் அதிகளவான ஆக்ஸிஜனுள்ள தண்ணீர் அவற்றின் வாய்க்குள்ளும், செவுளுக்குள்ளும் செல்லும். அதனால்தான் அதன் வாய் எப்போதும் கொஞ்சம் திறந்து பற்கள் வெளியே தெரிகிறது; காண்போரை திகிலூட்டுகிறது!

மனிதரை கொல்லுமா?

இதுவரை அறியப்பட்டிருக்கும் 368 இன சுறா மீன்களில், சுமார் 20 வகை சுறாக்களே ஆபத்தானவை. ஒவ்வொரு வருடமும் சுமார் 100 பேர் தாக்கப்படுவதாக அறிக்கை காட்டுகிறது, ஆனால் இதற்கு பெரும்பாலும் 4 இனத்து சுறா மீன்களே காரணம். இந்த தாக்குதல்களில் சுமார் 30, உயிர்களை பறித்துள்ளன. இதற்கு காரணமான அந்த 4 இன மீன்கள்; எருது சுறா, புலிச்சுறா, பெருங்கடல் வெள்ளைநுனி சுறா மற்றும் வெண்சுறா. வேறெந்த சுறாவைப்பார்க்கிலும் அதிகமான மனித உயிர்களை குடித்த பெருமை எருது சுறாவையே சேரும்.

ஆனால் ஆச்சரியம் என்னவெனில், இந்த வெண்சுறாவால் தாக்கப்பட்டவர்களுள் குறைந்தது 55 சதவீதத்தினர்​—⁠சில பகுதிகளில் 80 சதவீதத்தினர், எப்படியோ உயிர் தப்பிவிட்டனர். இந்த சுறாவின் தாக்குதலில் மாட்டியபோதிலும் எவ்வாறு இத்தனைபேர் உயிர் பிழைத்திருக்கின்றனர்?

கடித்து துப்பும்

வெண்சுறா முதலில் தன் இரையை பலமாக கொடூரமாக கடித்து பிறகு துப்பிவிடும். பிறகு, அதை சாப்பிடுவதற்காக இரை சாகும்வரை காத்திருக்கும். ஆனால் அந்த இரை ஒருவேளை மனிதராக இருந்தால், இந்த வழக்கம் அவர் தப்பிவிட அல்லது காப்பற்றப்பட ஒரு வாய்ப்பளிக்கிறது. சில சமயங்களில் தைரியமான கூட்டாளிகளால் அவ்வாறு காப்பாற்றப்பட்டும் இருக்கின்றனர். ஆகவே ஒருபோதும் தனியாக கடலில் நீந்தக்கூடாது என்ற அறிவுரை உண்மையில் ஞானமானது என இது நிரூபித்திருக்கிறது.

இருப்பினும், இந்த சுறாக்கள் இவ்வாறு செய்வதற்கு இன்னொரு காரணமும் இருக்கிறது. சில சுறாக்களுக்கு இரையினுடைய இரத்தத்தின் வாசனை அந்த இரையை சாப்பிடும்படி வெறியேற்றுகிறது. ஆனால் வெண்சுறா அவ்வாறு இல்லை. ஒருவேளை இவ்வாறு இல்லாமல் மற்ற சுறாக்களைப் போலவே இதுவும் இருந்தால், தாக்கப்பட்டவரை காப்பாற்றப்போவது தற்கொலைக்கு சமம். ஆனால் இந்த வெண்சுறா ஏன் கடித்து துப்புகிறது?

அதற்கான காரணம் அதன் கண்கள், என ஊகிக்கிறார் ஓர் விஞ்ஞானி. சாதாரணமாக சுறாக்களுக்கு இருப்பதுபோன்று இந்த வெண்சுறாவிற்கு கண்களை பாதுகாக்கும் கண்ணிமை போன்ற தோல் கிடையாது. ஒருவேளை ஏதாவது அதில் இடிக்கப்போகிறது அல்லது மோதப்போகிறது என்றால் அதன் கண்குழிகளில் விழிகளை திருப்பிக்கொள்கிறது. அதனால் அதன் கண்கள் மூடப்படாமல் திறந்தே இருக்கின்றன. உதாரணமாக கடல்நாயை அது தாக்கும்போது அதன் நகங்கள் அதன் கண்களை பதம்பார்த்துவிடும் ஆபத்து இருக்கின்றது. அதனால் தன் இரையை விரைவாக கடுமையாக தாக்கி, கடித்து துப்பிவிடுவது இந்த வெண்சுறாவின் வழக்கமாக இருந்துவருகிறது.

இந்த வெண்சுறாக்கள் குழந்தைகளைப்போன்றே செயல்படுகின்றன என்பதை மனதில் கொள்ளவேண்டும். சாதாரணமாக, குழந்தைகள் கையில் ஏதாவது ஒரு பொருள் கிடைத்தால்போதும் உடனே அதை முழுவதுமாக வாய்க்குள் போட முயற்சிக்கும், அதேபோன்றுதான் இந்த சுறாவும். “ஆனால் வருத்தகரமாக, ஒரு பெரிய வெண்சுறா [ருசித்துபார்ப்பதற்காக] கடிக்கும்போது, அதன் விளைவு மிக கொடுமையானது” என்று விளக்குகிறார் ஆஸ்திரேலியா, சிட்னியின் கடல் உயிரியல் நிபுணர் ஜான் வெஸ்ட்.

இந்த வெண்சுறா ஆபத்தானதாக இருந்தபோதிலும், மனிதரை சாப்பிடுவதற்காக வெறிபிடித்து அலையும் கொடூரமான இராட்ஷசன் அல்ல. ஒருவகை நத்தையை பிடிப்பதற்காக முக்குளிக்கும் ஒருவருக்கு 6,000 மணிநேரம் தண்ணீரில் இருந்த அனுபவம் இருக்கிறது. அவருடைய அனுபவத்தில் இரண்டே வெண்சுறாக்களைத்தான் பார்த்திருக்கிறார். ஆனால் ஒன்றுகூட இவரை தாக்கவில்லை. வேடிக்கை என்னவெனில், மனிதரைப்பார்த்து வெண்சுறாக்கள் பலமுறை பயந்து ஓடியிருக்கின்றன.

கடல் ஆராய்ச்சியாளரான ஜேக்ய்வ் கௌஸ்டியு மற்றும் அவருடைய நண்பர், கேப் வர்டே தீவுகளிலிருந்து முக்குளித்தபோது ஒரு பெரிய வெண்சுறாவுக்கு அருகே தற்செயலாக சென்றுவிட்டனர். அப்போது அங்கு நடந்ததைப் பற்றி கெளஸ்டியு இவ்வாறு எழுதினார்: “அது அவ்வாறு செய்யும் என நாங்கள் கொஞ்சம்கூட எதிர்பார்க்கவில்லை. அது உண்மையிலேயே பயந்துவிட்டது, உடனடியாக கழிவுபொருட்களை வெளியேற்றிவிட்டு, விட்டால்போதும் என மின்னல்வேகத்தில் சென்று மறைந்துவிட்டது. இந்த சுறாவிடமிருந்து எங்களுக்கு கிடைத்த அனுபவங்களை எல்லாம்வைத்து பார்த்தால், எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. சுறாக்களைப் பற்றிய பொதுமக்களின் கற்பனைகளுக்கும் நாங்கள் உண்மையில் பார்த்ததற்கும் எவ்வளவு வித்தியாசம்!”

இரைக்கு இரையாகும் வெண்சுறா

பொதுமக்களின் பீதிக்கும் தவறான அபிப்பிராயங்களுக்கும் முக்கிய காரணம் 1970-களில் வெளியான ஜாஸ் என்ற நாவலே. இந்த நாவல் பிற்பாடு புகழ்பெற்ற சினிமா படமாகவும் எடுக்கப்பட்டது. வெகுவிரைவில் அல்லது குறுகிய காலப்பகுதியில் வெண்சுறாக்கள் கொடூரமான இராட்ஷச விலங்குகள் என்ற கருத்து பரவியது. அதனால் வீரதீர ஆசாமிகளுக்கிடையில் தங்கள் வீரத்தை நிரூபிப்பதற்கு இது ஒரு போட்டியாக மாறியது. “பரிசுகளை தட்டிச்செல்ல விரும்பிய அநேக வேட்டைக்காரர்கள் ஒரு பெரிய குழுவாக கடலுக்கு சென்றனர். அவர்களுள் யார் இந்த சுறாவின் தலையை அல்லது தாடையை முதலில் கொண்டுவந்து நெருப்பிற்கு முன்பு வைக்கிறாரோ அவருக்கே பரிசு,” என்ற நிலை ஏற்பட்டது என்கிறது மாபெரும் வெண்சுறா என்ற புத்தகம். காலப்போக்கில், இது வியாபாரமாகவும் மாறியது, ஒப்பனை செய்யப்பட்ட ஒரு வெண்சுறாவின் பல் (ஆஸ்திரேலியாவில்) 1,000 டாலர் வரைக்கும் விலைபோனது; அத்துடன் அதன் முழு தாடை 20,000 டாலருக்கும் அதிகமாக விலைபோனது.

இருப்பினும் இறந்த வெண்சுறாக்களில் பெரும்பாலானவை வியாபார நோக்கத்தில் பயன்படுத்தப்படும் மீன்பிடிக்கும் வலைகளில் சிக்கியவையே. கூடுதலாக, சுறாவிலிருந்து தயாரிக்கப்படும் பொருட்களுக்கு, முக்கியமாக அதன் துடுப்புகளுக்கு சந்தையில் அதிக டிமான்ட் இருப்பதால் வருடா வருடம் லட்சக்கணக்கான சுறா மீன்கள் சூறையாடப்படுகின்றன; அவற்றுள் வெண்சுறாக்களும் உள்ளடங்கும். ஆனால் சமீப வருடங்களில் இந்த எண்ணிக்கை கணிசமாக குறைந்திருக்கிறது, சுறாக்களை, முக்கியமாக வெண்சுறாக்களை பாதுகாக்கும் நடவடிக்கைகள் உலகின் எத்திசைகளிலும் எடுக்கப்பட்டு வந்துள்ளன.

உருமாறும் கருத்து

கடலில் வியாதிப்பட்ட, சாகப்போகும் நிலையிலுள்ள, தளர்ந்துபோன, இறந்துபோனவற்றை ஒன்றுவிடாமல் தேடி கண்டுபிடித்து இந்த சுறாக்கள் ‘கபளீகரம்’ செய்துவிடுகின்றன. ஆகவே சுறாக்கள் ஆரோக்கியமாக இருந்தால், கடலும் சுத்தமாகவும், சுகாதாரமாகவும் நன்றாக இருக்கும்.

சுறாக்களின் உயிர்களுக்கு வந்துள்ள ஆபத்தை உணர்ந்தவர்களாக, சுறாக்களின் எல்லா பிரச்சினைகளையும் பற்றி அறிந்துகொள்ள, உலக இயற்கை வளவாய்ப்பு பாதுகாப்பு யூனியனின் உயிரின பாதுகாப்பு ஆணையம், சுறா ஆராய்ச்சி நிபுணர் குழுவை ஏற்படுத்தியிருக்கிறது. இருப்பினும், வெண்சுறாக்களைப் பற்றி ஆராய்வது சாதாரண விஷயம் இல்லை. ஏனென்றால், அவை வெகு குறைவாகவே இருக்கின்றன, அதோடு அவற்றை பிடித்து எதிலாவது அடைத்துவைத்தால் இறந்துவிடும். ஆகவே அவற்றை அதன் இயற்கை சூழலில்தான் ஆராயவேண்டும்.

சுறாக்களைப் பற்றி இன்று மக்கள் அதிகமாக புரிந்திருப்பதால் அல்லது தெரிந்திருப்பதால், இந்த அற்புத படைப்புகளைப் பற்றி அவர்கள் கொண்டிருந்த கருத்துகளும் மாறிவருகின்றன. இருப்பினும், இந்த கருத்து வெண்சுறாவை மாற்றவில்லை. இவை உயிர்குடிக்கும் இராட்ஷசர்களாக இல்லாதபோதிலும், ஆபத்தான விலங்கினமே. ஆகவே அவற்றை ஜாக்கிரதையுடனும், மரியாதையுடனும், ஆம் ராஜ மரியாதையுடனும் நடத்த வேண்டும்!

[அடிக்குறிப்பு]

a வெண்சுறாவிற்கு வேறுபெயர்களும் உண்டு. உதாரணமாக, ஆஸ்திரேலியாவில், இதை வொய்ட் பாய்ன்டர் என்றும் தென் ஆப்பிரிக்காவில் இதை புலூ பாய்ன்டர் என்றும் அழைக்கின்றனர்.

[பக்கம் 11-ன் படம்]

இந்த சுறாக்களுக்கு பெரிய, திகிலூட்டும் வாய்கள் உள்ளன

[பக்கம் 10-ன் படங்களுக்கான நன்றி]

Photos by Rodney Fox Reflections

South African White Shark Research Institute