Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

எலக்ட்ரானிக் சாதனங்களால் நட்பு முறியுமா?

எலக்ட்ரானிக் சாதனங்களால் நட்பு முறியுமா?

மெசேஜ், ஈ-மெயில், வீடியோ கான்ஃபரன்ஸிங், சோஷியல் மீடியா போன்றவற்றைப் பயன்படுத்தி, ஒருவர் இந்த உலகத்தின் எந்த மூலைமுடுக்கில் இருந்தாலும் அவரிடம் பேச முடியும். இது நல்ல விஷயம்தான்!

ஆனால், எலக்ட்ரானிக் சாதனங்களை மட்டுமே பயன்படுத்தி நண்பர்களோடு பேசிப் பழகும்போது...

  • நண்பர்களுடைய உணர்ச்சிகளைப் புரிந்துகொள்ள முடியாமல் போகலாம்.

  • தனிமையாகவும் வெறுமையாகவும் உணரலாம்.

  • நண்பர்களைவிட தங்களைப் பற்றியே அதிகமாக யோசிக்க ஆரம்பித்துவிடலாம்.

நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டியவை

உணர்ச்சிகளைப் புரிந்துகொள்வது

மற்றவர்களுடைய உணர்ச்சிகளைப் புரிந்துகொள்வதற்கு, நேரமெடுத்து அவர்களைப் பற்றி யோசிக்க வேண்டும். ஆனால், மெசேஜ்களை அனுப்புவதிலும் வாசிப்பதிலும் பிஸியாக இருந்தாலோ சோஷியல் மீடியாவே கதி என இருந்தாலோ இதைச் செய்வது கஷ்டமாகிவிடும்.

ஏகப்பட்ட மெசேஜ் வந்து குவியும்போது, அதற்கெல்லாம் சட்டென்று ஏதோவொரு பதிலை அனுப்ப வேண்டும் என்றுதான் நினைப்பீர்களே தவிர, உங்கள் நண்பருக்கு உதவி தேவையா என்று யோசிக்க மாட்டீர்கள்.

யோசித்துப்பாருங்கள்: உங்கள் நண்பர்களுக்கு மெசேஜ் அனுப்பும்போது அவர்கள்மேல் அக்கறை இருப்பதை எப்படிக் காட்டலாம்?—1 பேதுரு 3:8.

வெறுமையுணர்வே மிஞ்சும்

மற்றவர்கள் போடுகிற படங்களையோ போஸ்ட்டுகளையோ பார்க்கும் ஒருவருக்கு, ‘இந்த மாதிரி உருப்படியா நான் எதுவுமே செய்யலையே’ என்ற எண்ணம் வருவதாக ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள். அதனால், சோஷியல் மீடியாவில் மணிக்கணக்காக நேரம் செலவிட்ட பிறகும் நிறைய பேர் சந்தோஷமாக இருப்பதில்லை என்பதை அந்த ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்திருக்கிறார்கள்.

மற்றவர்கள் போடுகிற சுவாரஸ்யமான ஃபோட்டோக்களைப் பார்க்கும்போது, ‘என்னால இந்த மாதிரி வாழ்க்கைய அனுபவிக்க முடியலையே’ என்ற எண்ணமும் உங்களுக்கு வரலாம். சொல்லப்போனால், ‘மத்தவங்கல்லாம் ரொம்ப ஜாலியா இருக்காங்க, என் வாழ்க்க அப்படியில்லையே’ என்றும் நீங்கள் நினைக்கலாம்.

யோசித்துப்பாருங்கள்: சோஷியல் மீடியாவைப் பயன்படுத்தும்போது தேவையில்லாமல் மற்றவர்களோடு உங்களை ஒப்பிட்டுப் பார்க்காமல் இருக்க என்ன செய்யலாம்?—கலாத்தியர் 6:4.

உங்களைப் பற்றியே யோசிப்பீர்கள்

தன்னுடைய மாணவர்களில் சிலர் சுயநலமாக நடந்துகொள்கிறார்கள் என்று ஒரு டீச்சர் சொல்கிறார். “அவர்களுடைய காரியத்தைச் சாதிக்க வேண்டும் என்பதற்காகத்தான் நண்பர்களை வைத்துக்கொள்கிறார்கள்” என்று அவர் எழுதினார். தேவைப்படும்போது பயன்படுத்திவிட்டு பிறகு ஆஃப் செய்து வைக்கும் ஃபோனையும் கம்ப்யூட்டரையும் போலத்தான் நண்பர்களை இவர்கள் பார்க்கிறார்கள்.

யோசித்துப்பாருங்கள்: நீங்கள் ஆன்லைனில் போடும் போஸ்ட்டுகள், உங்களுக்குள் போட்டிபோடுகிற எண்ணம் இருப்பதையும், உங்களைப் பற்றி மட்டுமே அதிகமாக யோசிப்பதையும் காட்டுகிறதா?—கலாத்தியர் 5:26.

நீங்கள் செய்ய வேண்டியவை

எலக்ட்ரானிக் சாதனங்களை எப்படிப் பயன்படுத்துகிறீர்கள் என்று யோசித்துப்பாருங்கள்

எலக்ட்ரானிக் சாதனங்கள் உங்கள் கட்டுப்பாட்டில் இருக்கும்போது நண்பர்களோடு இருக்கும் நட்பைப் பலப்படுத்த முடியும். நீங்கள் இணைபிரியாத நண்பர்களாகவும் இருப்பீர்கள்.

பைபிள் ஆலோசனை: “அன்பு . . . சுயநலமாக நடந்துகொள்ளாது.”—1 கொரிந்தியர் 13:4, 5.

கீழே உள்ள ஆலோசனைகளில் எதைச் செய்ய விரும்புகிறீர்கள் என்பதை டிக் செய்யுங்கள். அல்லது, உங்கள் குறிப்புகளைக் கீழே எழுதுங்கள்.

  • வெறுமனே மெசேஜோ ஈ-மெயிலோ அனுப்புவதற்குப் பதிலாக நேரில் சந்தித்துப் பேசுங்கள்

  • மற்றவர்களிடம் பேசும்போது ஃபோனைத் தூரமாக அல்லது சைலன்ட்டில் (Silent mode) வையுங்கள்

  • மற்றவர்கள் போடுகிற போஸ்ட்டுகளைப் பார்ப்பதற்கும் படிப்பதற்கும் ரொம்ப நேரம் செலவு செய்யாதீர்கள்

  • மற்றவர்கள் பேசுவதைக் காதுகொடுத்துக் கேளுங்கள்

  • பிரச்சினையில் தவிக்கிற உங்கள் நண்பரிடம் பேசுங்கள்