Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பெல்ஷாத்சாரின் பெயர் பொறிக்கப்பட்ட களிமண் உருளை

உங்களுக்குத் தெரியுமா?

உங்களுக்குத் தெரியுமா?

பெல்ஷாத்சார் பாபிலோனின் ராஜாவாக இருந்தார் என்பதைத் தொல்பொருள் ஆராய்ச்சி எப்படி நிரூபிக்கிறது?

தானியேல் புத்தகத்தில் சொல்லப்பட்டிருக்கும் பெல்ஷாத்சார் என்ற ஒரு ராஜா இருந்ததே இல்லை என்று பல வருஷங்களாக பைபிள் விமர்சகர்கள் சொல்லிவந்தார்கள். (தானி. 5:1) அவர் உண்மையிலேயே வாழ்ந்தார் என்பதற்குத் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களுக்கு எந்த ஆதாரங்களும் கிடைக்காததால் அவர்கள் அப்படிச் சொன்னார்கள். ஆனால், 1854-ல் நிலைமை மாறியது. எப்படி?

அந்த வருஷத்தில், பிரிட்டிஷ் தூதர் ஜே. ஜி. டேலர், பழங்கால ஊர் நகரத்தின் இடிபாடுகளில் தொல்பொருள் ஆராய்ச்சி செய்தார். இன்றிருக்கும் ஈராக்கின் தெற்குப் பகுதியில்தான் அன்றைய ஊர் நகரம் இருந்தது. அங்கே இருந்த ஒரு பெரிய கோபுரத்தில் நிறைய களிமண் உருளைகளை அவர் கண்டுபிடித்தார். ஒவ்வொரு உருளையும் 10 செ.மீ. நீளம் இருந்தது. அவற்றில் கியூனிஃபார்ம் எழுத்துகள் பொறிக்கப்பட்டிருந்தன. பாபிலோனின் ராஜாவான நபோனிடஸும் அவருடைய மூத்த மகனான பெல்ஷாத்சாரும் நீடூழி வாழ வேண்டும் என்று செய்யப்பட்ட ஒரு பிரார்த்தனையும் அந்த உருளையில் இருந்தது. அதனால், பெல்ஷாத்சார் என்ற ஒருவர் உண்மையிலேயே வாழ்ந்ததை விமர்சகர்கள் ஒத்துக்கொண்டார்கள்.

பெல்ஷாத்சார் என்ற ஒருவர் வாழ்ந்தார் என்று மட்டுமல்ல, அவர் ஒரு ராஜாவாக இருந்தார் என்றும் பைபிள் சொல்கிறது. விமர்சகர்கள் மறுபடியும் கேள்வி எழுப்பினார்கள். உதாரணத்துக்கு, பெல்-சார்-உஸ்ஸுர் [பெல்ஷாத்சார்] தன் அப்பாவான நபோனிடஸுடன் சேர்ந்து ஆட்சி செய்ததாக சிலர் சொல்வதாகவும், ஆனால் அதற்கு எந்த ஒரு ஆதாரமும் இல்லை என்பதாகவும் 19-வது நூற்றாண்டில் வாழ்ந்த இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த வில்லியம் டால்பெட் என்ற ஒரு விஞ்ஞானி எழுதினார்.

மற்ற களிமண் உருளைகளில் இருந்த தகவல்களைப் படித்தபோது விமர்சகர்களின் கேள்விகளுக்குப் பதில் கிடைத்தது. பெல்ஷாத்சாரின் அப்பா நபோனிடஸ் ராஜா, தலைநகரத்தை விட்டுவிட்டு பல வருஷங்கள் வெளிநாட்டுக்குப் போய்விடுவார் என்ற தகவல் அந்த உருளைகளில் இருந்தது. அவர் இல்லாதபோது என்ன நடந்தது? “நபோனிடஸ் வெளிநாடுகளுக்குப் போனபோதெல்லாம் ஆட்சிப் பொறுப்பையும் படையின் பெரும்பாலான பகுதியையும் பெல்ஷாத்சாரிடம் ஒப்படைத்தார்” என்று என்ஸைக்ளோப்பீடியா பிரிட்டானிக்கா சொல்கிறது. பெல்ஷாத்சாரும் பாபிலோனை ஆட்சி செய்திருக்கிறார் என்பது இதிலிருந்து தெரிகிறது. அதனால், “தானியேல் புத்தகத்தில் பெல்ஷாத்சாரை ‘ராஜா’ என்று சொல்லியிருப்பது சரியாக இருக்கிறது” என்று தொல்பொருள் ஆராய்ச்சியாளரும் மொழியியல் நிபுணருமான ஆலன் மீலர்ட் சொன்னார்.

தானியேல் புத்தகம் நம்பகமானது என்பதற்கும், கடவுளுடைய தூண்டுதலால் எழுதப்பட்டிருக்கிறது என்பதற்கும் பைபிளிலேயே ஆதாரம் இருக்கிறது. கடவுளுடைய ஊழியர்களைப் பொறுத்தவரை, வேறு எந்த ஆதாரத்தையும்விட இதுதான் முக்கியமான ஆதாரம்!—2 தீ. 3:16.