Skip to content

யாருடைய கைவண்ணம்?

ஆக்டோபஸின் அதிசயக் கைகள்

ஆக்டோபஸின் அதிசயக் கைகள்

 உடலில் சிறிய கீறல் மட்டுமே போட்டு ரொம்பவும் இடுக்கமான பகுதிகளில் செய்யப்படும் அறுவை சிகிச்சைகளுக்கு உதவும் ஒரு நவீன கருவியை ரோபோடிக்ஸ் பொறியாளர்கள் வடிவமைத்துவருகிறார்கள். இதற்குத் தூண்டுகோலாக இருப்பது எது தெரியுமா? மிகச் சுலபமாக வளைந்து நெளியும் ஆக்டோபஸின் கைகள்!

 யோசித்துப் பாருங்கள்: ஆக்டோபஸுக்கு எட்டு கைகள் இருக்கின்றன. ரொம்பவும் இடுக்கமான இடங்களில்கூடச் சுலபமாக நீண்டு நெளியும் இந்தக் கைகள், ஒரு பொருளை எட்டிப் பிடிக்கவோ, கவ்விக்கொள்ளவோ, நசுக்கிப் பிழியவோ ஆக்டோபஸுக்கு உதவுகின்றன. ஆக்டோபஸினால் தன் கைகளை எந்தத் திசையில் வேண்டுமானாலும் திருப்ப முடியும். அதுமட்டுமா? தேவைப்பட்டால், தன் கைகளுடைய எந்தப் பாகத்தை வேண்டுமானாலும் விறைப்பாக்கிக்கொள்ள முடியும்!

 ஆக்டோபஸின் கைகளைப் போலவே சுலபமாக வளைந்து நெளியும் மென்மையான ரோபோ கைகள், சிறிய கீறல் போட்டு செய்யப்படும் அறுவை சிகிச்சைகளுக்கு ரொம்ப உதவியாக இருக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் நம்புகிறார்கள். இப்படிப்பட்ட ரோபோ கைகள், மிகச் சிக்கலான அறுவை சிகிச்சை தேவைப்படும் நோயாளிகளுக்குக்கூட கைகொடுக்கும் என்று அவர்கள் நம்புகிறார்கள்.

 ஆக்டோபஸின் கைகள் அருமையாக வளைந்து நெளியும் காட்சியைப் பாருங்கள்

 இப்படிப்பட்ட ரோபோ கைகள் ஏற்கெனவே தயாரிக்கப்பட்டிருக்கின்றன. தற்போது செயற்கை அறுவை சிகிச்சைகளில் அவை பயன்படுத்தப்படுகின்றன. இந்த ஐந்து அங்குல கையின் ஒரு பாகம், மென்மையான உள்ளுறுப்புகளுக்கு எந்தச் சேதமும் வராத விதத்தில் அவற்றைத் தூக்கிப்பிடிக்கிறது; இந்தக் கையின் இன்னொரு பாகம் அறுவை சிகிச்சையைச் செய்கிறது. “இன்னும் நவீன அம்சங்களைக் கொண்ட புதிய கருவிகளுக்கு இது ஒரு முன்னோடியாக இருக்கும் என்று நம்புகிறோம்” என்கிறார், இந்தக் கருவியைக் கண்டுபிடித்த குழுவைச் சேர்ந்த டாக்டர் டோமாசோ ரான்சானி.

நன்றாக வளைந்து நெளியும் ரோபோ கைகள், அறுவை சிகிச்சைகளுக்கு ரொம்பவும் உதவியாக இருக்கும்

 நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? ஆக்டோபஸின் கைகள் தானாகவே வந்திருக்குமா? அல்லது, அது யாரோ ஒருவருடைய கைவண்ணமா?