2 ராஜாக்கள் 16:1-20

16  ரெமலியாவின் மகன் பெக்கா ஆட்சி செய்த 17-ஆம் வருஷத்தில், யோதாம் ராஜாவின் மகன் ஆகாஸ்+ யூதாவில் ராஜாவானார்.  ஆகாஸ் ராஜாவானபோது அவருக்கு 20 வயது; அவர் எருசலேமில் 16 வருஷங்கள் ஆட்சி செய்தார்; தன்னுடைய மூதாதையான தாவீது யெகோவா தேவனுக்குப் பிரியமாக நடந்ததுபோல் அவர் நடக்கவில்லை.+  அதற்குப் பதிலாக, இஸ்ரவேல் ராஜாக்களின் வழியில் நடந்தார்;+ தன்னுடைய சொந்த மகனையே நெருப்பில் பலி கொடுத்தார்.*+ இப்படி, இஸ்ரவேலர்களின் கண் முன்னால் யெகோவா விரட்டியடித்த மற்ற தேசத்தாரின் அருவருப்பான பழக்கவழக்கங்களைப் பின்பற்றினார்.+  அதுமட்டுமல்ல, ஆராதனை மேடுகளிலும் குன்றுகளிலும் அடர்த்தியான மரங்கள் ஒவ்வொன்றின் கீழும்+ பலிகளை எரித்து புகை எழும்பிவரச் செய்தார்.+  அப்போதுதான், சீரியாவின் ராஜாவான ரேத்சீனும், இஸ்ரவேலின் ராஜாவும் ரெமலியாவின் மகனுமான பெக்காவும் எருசலேமுக்கு எதிராகப் போர் செய்ய வந்தார்கள். ஆகாஸ் இருந்த அந்த நகரத்தை முற்றுகையிட்டார்கள்,+ ஆனால் அதைக் கைப்பற்ற முடியவில்லை.  அந்தச் சமயத்தில், சீரியாவின் ராஜாவான ரேத்சீன் ஏலாத்தைக் கைப்பற்றி+ மறுபடியும் அதை ஏதோமுடன் இணைத்தான், யூதர்களை* அங்கிருந்து துரத்திவிட்டான். பின்பு, ஏதோமியர்கள் ஏலாத்துக்குப் போய் இன்றுவரை அங்குதான் குடியிருக்கிறார்கள்.  அப்போது, அசீரிய ராஜாவான திகிலாத்-பிலேசரிடம்+ ஆகாஸ் தன்னுடைய தூதுவர்களை அனுப்பி, “நான் உங்கள் ஊழியன், உங்கள் பிள்ளை. சீரியா ராஜாவும் இஸ்ரவேல் ராஜாவும் என்னைத் தாக்குகிறார்கள். நீங்கள் வந்து என்னைக் காப்பாற்றுங்கள்” என்று சொன்னார்.  அதோடு, யெகோவாவின் ஆலயத்திலும் அரண்மனை கஜானாக்களிலும் இருந்த தங்கத்தையும் வெள்ளியையும் எடுத்து அசீரிய ராஜாவுக்கு லஞ்சமாக அனுப்பி வைத்தார்.+  அவருடைய வேண்டுகோளை அசீரிய ராஜா ஏற்றுக்கொண்டான். அதனால், தமஸ்குவுக்குப் போய் அதைக் கைப்பற்றி அங்கிருந்த மக்களை கீர் தேசத்துக்குச் சிறைபிடித்துக்கொண்டு போனான்;+ ரேத்சீனைக் கொன்றுபோட்டான்.+ 10  அசீரிய ராஜாவான திகிலாத்-பிலேசரைச் சந்திக்க ஆகாஸ் ராஜா தமஸ்குவுக்குப் போனார். அங்கிருந்த பலிபீடத்தைப் பார்த்தபோது, அதன் வரைபடத்தைக் குருவாகிய ஊரியாவுக்கு அனுப்பி வைத்தார். அதன் வடிவமைப்பு, கட்டப்பட்ட விதம் போன்ற விவரங்களை அதில் குறிப்பிட்டிருந்தார்.+ 11  ஆகாஸ் ராஜா தமஸ்குவிலிருந்து அனுப்பிய எல்லா விவரங்களையும் வைத்து குருவாகிய ஊரியா+ ஒரு பலிபீடத்தைக் கட்டினார்.+ தமஸ்குவிலிருந்து ஆகாஸ் ராஜா திரும்பி வருவதற்குள் அந்தப் பலிபீடத்தைக் கட்டி முடித்துவிட்டார். 12  தமஸ்குவிலிருந்து ராஜா திரும்பி வந்து அந்தப் பலிபீடத்தைப் பார்த்தார், அதன் பக்கத்தில் போய் அதன்மேல் பலிகளைச் செலுத்தினார்.+ 13  அந்தப் பலிபீடத்தில் தன்னுடைய தகன பலிகளையும் உணவுக் காணிக்கைகளையும் எரித்துவந்தார். அதோடு, திராட்சமது காணிக்கைகளை ஊற்றி, சமாதான பலிகளின் இரத்தத்தை அதன்மேல் தெளித்தார். 14  ஆலயத்துக்கு முன்பக்கத்தில் யெகோவாவின் முன்னிலையில் இருந்த செம்புப் பலிபீடத்தை+ நீக்கிவிட்டார்; அதாவது, தன்னுடைய பலிபீடத்துக்கும் யெகோவாவின் ஆலயத்துக்கும் இடையே இருந்த செம்புப் பலிபீடத்தை நீக்கிவிட்டு, அதைத் தன்னுடைய பலிபீடத்துக்கு வடக்குப் பக்கத்தில் வைத்தார். 15  அதோடு, குருவாகிய ஊரியாவிடம்,+ “காலையில் கொடுக்கப்படுகிற தகன பலியையும், மாலையில் கொடுக்கப்படுகிற உணவுக் காணிக்கையையும்,+ ராஜாவின் தகன பலியையும், உணவுக் காணிக்கையையும், மக்கள் கொண்டுவருகிற தகன பலிகளையும், உணவுக் காணிக்கைகளையும், திராட்சமது காணிக்கைகளையும் பெரிய பலிபீடத்தில் கொடுக்க வேண்டும்.+ தகன பலிகளின் இரத்தம் முழுவதையும் மற்ற பலிகளின் இரத்தம் முழுவதையும் அதன்மீது தெளிக்க வேண்டும். செம்புப் பலிபீடத்தை என்ன செய்வதென்று அப்புறம் யோசித்துச் சொல்கிறேன்” என்று சொன்னார். 16  ஆகாஸ் ராஜா கட்டளையிட்ட எல்லாவற்றையும் குருவாகிய ஊரியா செய்தார்.+ 17  அதோடு, தள்ளுவண்டியின்+ நான்கு பக்கங்களையும் தனித்தனியாக அறுத்து, அதிலிருந்த தொட்டிகளை ஆகாஸ் ராஜா எடுத்துவிட்டார்.+ காளை உருவங்களின் மீது வைக்கப்பட்டிருந்த ‘செம்புக் கடல்’ தொட்டியை+ வெளியே எடுத்து கல்தளத்தில் வைத்தார்.+ 18  யெகோவாவின் ஆலயத்தில், ஓய்வுநாளுக்காக அமைக்கப்பட்டிருந்த கூரையுடன்கூடிய பகுதியையும் ராஜாவின் நுழைவாசலையும் வேறொரு இடத்துக்கு மாற்றினார். அசீரிய ராஜாவுக்குப் பயந்துதான் இப்படிச் செய்தார். 19  ஆகாசின் வாழ்க்கையில் நடந்த மற்ற விஷயங்களைப் பற்றி யூதா ராஜாக்களின் சரித்திரப் புத்தகத்தில் எழுதப்பட்டிருக்கிறது.+ 20  ஆகாஸ் இறந்ததும்,* அவருடைய முன்னோர்கள் அடக்கம் செய்யப்பட்ட ‘தாவீதின் நகரத்தில்’ அடக்கம் செய்யப்பட்டார். அவருக்குப் பிறகு, அவருடைய மகன் எசேக்கியா*+ ராஜாவானார்.

அடிக்குறிப்புகள்

நே.மொ., “நெருப்பைக் கடக்க வைத்தார்.”
வே.வா., “யூதா ஆண்களை.”
நே.மொ., “தன் முன்னோர்களோடு படுக்க வைக்கப்பட்டதும்.”
அர்த்தம், “யெகோவா பலப்படுத்துகிறார்.”

ஆராய்ச்சிக் குறிப்புகள்

மீடியா