2 நாளாகமம் 29:1-36

29  எசேக்கியா+ 25 வயதில் ராஜாவானார். அவர் 29 வருஷங்கள் எருசலேமில் ஆட்சி செய்தார். அவருடைய அம்மா பெயர் அபியா, அவள் சகரியாவின் மகள்.+  எசேக்கியா தன்னுடைய மூதாதையான தாவீதைப் போலவே,+ யெகோவாவுக்குப் பிரியமாக நடந்துவந்தார்.+  அவர் ஆட்சி செய்த முதலாம் வருஷம் முதலாம் மாதத்தில், யெகோவாவுடைய ஆலயத்தின் கதவுகளைத் திறந்து அவற்றைப் பழுதுபார்த்தார்.+  பின்பு, ஆலயத்தின் கிழக்குப் பகுதியிலிருந்த சதுக்கத்தில் குருமார்களையும் லேவியர்களையும் ஒன்றுகூட்டினார்.  அவர்களிடம், “லேவியர்களே, நான் சொல்வதைக் கேளுங்கள். இப்போது நீங்கள் உங்களைப் புனிதப்படுத்திக்கொண்டு,+ உங்களுடைய முன்னோர்களின் கடவுளான யெகோவாவின் ஆலயத்தைப் புனிதப்படுத்துங்கள். அருவருப்பான சிலைகளைப் பரிசுத்த இடத்திலிருந்து வெளியே தூக்கிப் போடுங்கள்.+  நம்முடைய அப்பாக்கள் யெகோவா தேவனுக்கு உண்மையாக இருக்கவில்லை. அவருக்குப் பிடிக்காத காரியங்களைச் செய்து,+ அவரைவிட்டு விலகிப்போனார்கள். யெகோவாவின் கூடாரத்துக்கு மரியாதை காட்டாமல், அவரை ஒதுக்கித்தள்ளினார்கள்.+  நுழைவு மண்டபத்தின் கதவுகளை+ இழுத்து மூடி, விளக்குகளை அணைத்துவிட்டார்கள்.+ இஸ்ரவேலின் கடவுளுடைய ஆலயத்தில் தூபம் காட்டுவதையும், தகன பலி செலுத்துவதையும் நிறுத்திவிட்டார்கள்.+  அதனால், யூதாமீதும் எருசலேம்மீதும் யெகோவாவுக்குப் பயங்கர கோபம் வந்தது.+ மற்றவர்கள் அதிர்ச்சி அடையுமளவுக்கு அவர்களுக்குக் கோர முடிவைக் கொண்டுவந்தார், மற்றவர்கள் கேலி செய்யுமளவுக்குக் கேவலமான நிலையில் அவர்களை விட்டுவிட்டார். இதையெல்லாம் நீங்கள் உங்களுடைய கண்ணால் பார்க்கிறீர்களே.+  நம்முடைய முன்னோர்கள் தாங்கள் செய்த தவறுக்குத் தண்டனையாக வாளுக்கு இரையானார்கள்;+ நம்முடைய மகன்களையும் மகள்களையும் மனைவிகளையும் எதிரிகள் பிடித்துக்கொண்டு போனார்கள்.+ 10  அதனால், இப்போது இஸ்ரவேலின் கடவுளான யெகோவாவுடன் ஒப்பந்தம்+ செய்ய மனதார ஆசைப்படுகிறேன். அப்போதுதான், அவருக்கு நம்மீது இருக்கிற கடும் கோபம் தணியும். 11  என் மகன்களே, ஏனோதானோ என்று இருப்பதற்கு* இது நேரமல்ல. ஏனென்றால், யெகோவா முன்னால் நின்று அவருக்குச் சேவை செய்வதற்காகவும்+ பலிகளை எரித்து புகை எழும்பிவரச் செய்வதற்காகவும்+ அவர் உங்களைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்” என்று சொன்னார். 12  அதைக் கேட்டதும் லேவியர்கள் எழுந்து நின்றார்கள். கோகாத்தியரான+ அமாசாயின் மகன் மகாத், அசரியாவின் மகன் யோவேல்; மெராரியரான+ அப்தியின் மகன் கீஸ், அசரியாவின் மகன் எகலெலேல்; கெர்சோனியரான+ சிம்மாவின் மகன் யோவா, யோவாவின் மகன் ஏதேன்; 13  எலிசாப்பானின் வம்சத்தில் வந்த ஷிம்ரி, யெகுவேல்; ஆசாப்பின் வம்சத்தில்+ வந்த சகரியா, மத்தனியா; 14  ஏமானின் வம்சத்தில்+ வந்த யெகியேல், சீமேயி; எதித்தூனின் வம்சத்தில்+ வந்த செமாயா, ஊசியேல் ஆகியோர் எழுந்து நின்றார்கள். 15  பின்பு, அந்த லேவியர்கள் தங்களுடைய சகோதரர்களை ஒன்றுகூட்டி தங்களைப் புனிதப்படுத்திக்கொண்டு யெகோவாவின் ஆலயத்துக்கு வந்தார்கள். ஏனென்றால், யெகோவா சொன்னபடி அவருடைய ஆலயத்தைச் சுத்தப்படுத்த வேண்டுமென்று ராஜா கட்டளையிட்டிருந்தார்.+ 16  பின்பு, குருமார்கள் யெகோவாவின் ஆலயத்துக்கு உள்ளே போய் சுத்தம் செய்தார்கள்; யெகோவாவின் ஆலயத்திலிருந்த பொய் வழிபாடு சம்பந்தப்பட்ட பொருள்களையெல்லாம் வெளியே கொண்டுவந்து, யெகோவாவுடைய ஆலயத்தின் பிரகாரத்தில்+ போட்டார்கள். லேவியர்கள் அவற்றை எடுத்து கீதரோன் பள்ளத்தாக்கில்+ கொண்டுபோய்ப் போட்டார்கள். 17  முதலாம் மாதம் முதலாம் தேதியில் புனிதப்படுத்தும் வேலையை ஆரம்பித்தார்கள்; இப்படிப் புனிதப்படுத்திக்கொண்டே, எட்டாம் தேதியில் யெகோவாவுடைய ஆலயத்தின் நுழைவு மண்டபத்துக்கு+ வந்து சேர்ந்தார்கள். யெகோவாவின் ஆலயத்தைப் புனிதப்படுத்தும் வேலையை இன்னும் எட்டு நாட்களுக்குச் செய்தார்கள். முதலாம் மாதம் 16-ஆம் தேதியில் வேலையை முடித்தார்கள். 18  அதன் பின்பு, அவர்கள் எசேக்கியா ராஜாவிடம் போய், “நாங்கள் யெகோவாவின் ஆலயம் முழுவதையும் சுத்தப்படுத்திவிட்டோம், தகன பலிக்கான பலிபீடத்தையும்+ அதற்கான எல்லா சாமான்களையும்+ படையல் ரொட்டிகளை வைக்கிற மேஜையையும்+ அதற்கான எல்லா சாமான்களையும் சுத்தப்படுத்திவிட்டோம். 19  ஆகாஸ் ராஜா ஆட்சி செய்தபோது கடவுளுக்கு உண்மையாக நடக்காமல்+ ஆலயத்திலிருந்த சாமான்களையெல்லாம் வெளியே தூக்கிப்போட்டார், இல்லையா? அவற்றைச் சரிசெய்து, புனிதப்படுத்திவிட்டோம்.+ இப்போது அவற்றை யெகோவாவின் பலிபீடத்துக்கு முன்னால் வைத்திருக்கிறோம்” என்று சொன்னார்கள். 20  எசேக்கியா ராஜா காலையில் சீக்கிரமாக எழுந்து நகரத்திலிருந்த அதிகாரிகளை ஒன்றுகூட்டினார். அவர்கள் எல்லாரும் யெகோவாவின் ஆலயத்துக்குப் போனார்கள். 21  ஏழு காளைகளையும் ஏழு செம்மறியாட்டுக் கடாக்களையும் ஏழு செம்மறியாட்டுக் கடாக் குட்டிகளையும் ஏழு வெள்ளாட்டுக் கடாக்களையும் பாவப் பரிகார பலியாகக் கொடுப்பதற்குக் கொண்டுவந்தார்கள். அவற்றை ராஜ்யத்துக்காகவும் ஆலயத்துக்காகவும் யூதா மக்களுக்காகவும் பலியாகக் கொடுப்பதற்குக் கொண்டுவந்தார்கள்.+ அவற்றை யெகோவாவின் பலிபீடத்தில் செலுத்தச் சொல்லி, ஆரோனின் வம்சத்தில் வந்த குருமார்களிடம் ராஜா சொன்னார். 22  காளைகள் வெட்டப்பட்டதும்,+ குருமார்கள் அவற்றின் இரத்தத்தை எடுத்து பலிபீடத்தில் தெளித்தார்கள்.+ அடுத்து, செம்மறியாட்டுக் கடாக்கள் வெட்டப்பட்டதும், அவற்றின் இரத்தத்தை எடுத்து பலிபீடத்தில் தெளித்தார்கள், செம்மறியாட்டுக் கடாக் குட்டிகள் வெட்டப்பட்டதும், அவற்றின் இரத்தத்தை எடுத்து பலிபீடத்தில் தெளித்தார்கள். 23  பின்பு, பாவப் பரிகார பலியாகக் கொடுக்க வேண்டிய வெள்ளாட்டுக் கடாக்களை ராஜாவுக்கும் சபையாருக்கும் முன்னால் கொண்டுவந்து, அவற்றின் தலையில் கைகளை வைத்தார்கள். 24  குருமார்கள் அவற்றை வெட்டி இரத்தத்தைப் பலிபீடத்தில் தெளித்து பாவப் பரிகார பலியாகக் கொடுத்தார்கள்; இப்படி, இஸ்ரவேலர்கள் எல்லாருக்காகவும் பாவப் பரிகாரம் செய்தார்கள். ஏனென்றால், இஸ்ரவேலர்கள் எல்லாருக்காகவும் தகன பலியையும் பாவப் பரிகார பலியையும் கொடுக்க வேண்டும் என்று ராஜா சொல்லியிருந்தார். 25  இதற்கிடையே, அவர் லேவியர்களின் கையில் ஜால்ராக்களையும் நரம்பிசைக் கருவிகளையும் யாழ்களையும்+ கொடுத்து யெகோவாவின் ஆலயத்தில் நிற்க வைத்திருந்தார். ஆலயத்தில் பாடுவதற்காக, தாவீதும்+ தரிசனக்காரரான காத்தும்+ நாத்தான் தீர்க்கதரிசியும் ஏற்படுத்தியிருந்த முறையை+ எசேக்கியா பின்பற்றினார். இதையெல்லாம் யெகோவா தன்னுடைய தீர்க்கதரிசிகள் மூலம் தெரிவித்திருந்தார். 26  தாவீது உருவாக்கிய இசைக் கருவிகளுடன் லேவியர்கள் நின்றுகொண்டிருந்தார்கள், எக்காளங்களைப்+ பிடித்துக்கொண்டு குருமார்கள் நின்றுகொண்டிருந்தார்கள். 27  பின்பு, பலிபீடத்தில் தகன பலி கொடுக்கச் சொல்லி எசேக்கியா கட்டளையிட்டார்.+ தகன பலி கொடுக்க ஆரம்பித்ததும் யெகோவாவுக்காகப் பாடல் பாடினார்கள். அதோடு, எக்காளங்களையும் ஊதினார்கள்; இஸ்ரவேலின் ராஜாவான தாவீது உருவாக்கிய இசைக் கருவிகளின் இசைக்கு ஏற்றபடி அவற்றை ஊதினார்கள். 28  தகன பலியைக் கொடுத்து முடிக்கும்வரை பாடல் பாடினார்கள், எக்காளங்களை ஊதினார்கள். அந்தச் சமயத்தில் சபையார் எல்லாரும் தலைவணங்கினார்கள். 29  பலி கொடுத்து முடித்ததும், ராஜாவும் அவருடன் இருந்த எல்லாரும் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கினார்கள். 30  யெகோவாவைப் புகழ்வதற்காக தாவீதும்+ தரிசனக்காரரான ஆசாப்பும் எழுதிய பாடல்களைப் பாடச் சொல்லி,+ எசேக்கியா ராஜாவும் அதிகாரிகளும் லேவியர்களிடம் சொன்னார்கள். அவர்கள் மிகவும் சந்தோஷமாகக் கடவுளைப் புகழ்ந்து பாடி, சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கினார்கள். 31  பின்பு எசேக்கியா, “யெகோவாவுக்குச் சேவை செய்ய நீங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறீர்கள். அதனால், பலிகளையும் நன்றிப் பலிகளையும் எடுத்துக்கொண்டு யெகோவாவின் ஆலயத்துக்கு வாருங்கள்” என்று சொன்னார். அதனால், சபையார் பலிகளையும் நன்றிப் பலிகளையும் கொண்டுவந்தார்கள். மனப்பூர்வமாகக் காணிக்கை கொடுக்க விரும்பிய எல்லாரும் தகன பலிகளைக் கொண்டுவந்தார்கள்.+ 32  தகன பலி கொடுப்பதற்காக,+ 70 காளைகளையும் 100 செம்மறியாட்டுக் கடாக்களையும் 200 செம்மறியாட்டுக் கடாக் குட்டிகளையும் சபையார் கொண்டுவந்தார்கள். இவை எல்லாவற்றையும் யெகோவாவுக்குத் தகன பலி கொடுப்பதற்காகக் கொண்டுவந்தார்கள். 33  அதோடு, 600 காளைகளையும் 3,000 செம்மறியாடுகளையும் பரிசுத்த காணிக்கையாகக் கொண்டுவந்தார்கள். 34  தகன பலி செலுத்துவதற்காகக் கொண்டுவரப்பட்ட ஆடுமாடுகள் எல்லாவற்றையும் குருமார்களால் தோலுரிக்க முடியவில்லை. அதனால், அந்த வேலையைச் செய்து முடிக்கும்வரைக்கும், குருமார்கள் தங்களைப் புனிதப்படுத்தி முடிக்கும்வரைக்கும்,+ அவர்களுடைய சகோதரர்களான லேவியர்கள் உதவி செய்தார்கள்.+ குருமார்களைவிட லேவியர்கள்தான் தங்களைப் புனிதப்படுத்திக்கொள்வதில் மிகவும் கவனமாக இருந்தார்கள். 35  தகன பலிகளும்+ சமாதான பலிகளின் கொழுப்பும்+ அதிகமாக இருந்தன. அதேபோல், தகன பலிகளோடு செலுத்தப்பட்ட திராட்சமது காணிக்கைகளும்+ அதிகமாக இருந்தன. இப்படி, யெகோவாவின் ஆலய சேவை மறுபடியும் ஆரம்பமானது. 36  உண்மைக் கடவுள் தங்களுக்கு உதவி செய்ததையும், வேலைகளெல்லாம் வேகமாக நடந்து முடிந்ததையும் நினைத்து எசேக்கியாவும் மக்கள் எல்லாரும் ரொம்பச் சந்தோஷப்பட்டார்கள்.+

அடிக்குறிப்புகள்

வே.வா., “மகன்களே, ஓய்வெடுப்பதற்கு.”

ஆராய்ச்சிக் குறிப்புகள்

மீடியா