நியாயாதிபதிகள் 15:1-20

15  கொஞ்சக் காலத்துக்குப் பின்பு, கோதுமை அறுவடை நடந்துகொண்டிருந்தபோது, ஒரு வெள்ளாட்டுக் குட்டியை எடுத்துக்கொண்டு சிம்சோன் தன்னுடைய மனைவியைப் பார்க்கப் போனார். “நான் என் மனைவியின் படுக்கை அறைக்குப் போய் அவளைப் பார்க்க வேண்டும்” என்று சொன்னார். ஆனால், உள்ளே போக அவளுடைய அப்பா அவரை விடவில்லை.  அவர் சிம்சோனிடம், “நீங்கள் அவளை அடியோடு வெறுத்துவிட்டதாக+ நினைத்து, உங்களுடைய மாப்பிள்ளைத் தோழனாக இருந்தவனுக்கு அவளைக் கொடுத்துவிட்டேன்.+ அவளுடைய தங்கை அவளைவிட ரொம்ப அழகானவள். அவளுக்குப் பதிலாகத் தயவுசெய்து இவளைக் கல்யாணம் செய்துகொள்ளுங்கள்” என்றார்.  ஆனால் சிம்சோன், “நான் பெலிஸ்தியர்களுக்கு என்ன செய்யப்போகிறேன் என்று பாருங்கள்! இந்தத் தடவை அவர்கள் என்மேல் குற்றம் சொல்ல முடியாது” என்றார்.  பின்பு, சிம்சோன் போய் 300 குள்ளநரிகளைப் பிடித்துக்கொண்டு வந்தார். அதன்பின், இரண்டிரண்டு குள்ளநரிகளை வாலோடு வாலாகச் சேர்த்து, அவற்றின் நடுவில் ஒரு தீப்பந்தத்தை வைத்துக் கட்டினார்.  பிறகு அந்தத் தீப்பந்தங்களைப் பற்ற வைத்து, பெலிஸ்தியர்களின் வயல்களில் அந்தக் குள்ளநரிகளை ஓடவிட்டார். அதனால் கதிர்க்கட்டுகள், பயிர்கள், திராட்சைத் தோட்டங்கள், ஒலிவத் தோப்புகள் என எல்லாமே எரிந்து சாம்பலானது.  “யார் இப்படிச் செய்தது?” என்று பெலிஸ்தியர்கள் கேட்டார்கள். “திம்னா ஊர்க்காரனின் மருமகன் சிம்சோன்தான் இப்படிச் செய்திருக்கிறான். அவனுடைய மனைவி அவனுக்கு மாப்பிள்ளைத் தோழனாக இருந்தவனுக்குக் கொடுக்கப்பட்டதால்+ கோபத்தில் இப்படிச் செய்திருக்கிறான்” என்று அவர்களுக்குச் சொல்லப்பட்டது. உடனே, பெலிஸ்தியர்கள் போய் சிம்சோனின் மனைவியையும் மாமனாரையும் கொளுத்தினார்கள்.+  அப்போது சிம்சோன் அவர்களிடம், “நீங்கள் செய்த காரியத்துக்கு உங்களைப் பழிவாங்காமல் விட மாட்டேன்”+ என்றார்.  பின்பு, அவர்களைச் சரமாரியாக வெட்டிக் குவித்தார். அதன்பின், ஏத்தாம் மலைப்பாறையில் இருந்த ஒரு குகையில்* தங்கினார்.  பிற்பாடு, பெலிஸ்தியர்கள் திரண்டு வந்து யூதா பிரதேசத்தில் முகாம்போட்டு, லேகியில்+ வெறியோடு அலைந்துகொண்டிருந்தார்கள். 10  அப்போது யூதா கோத்திரத்து ஆண்கள் அவர்களிடம், “ஏன் எங்களைத் தாக்க வந்திருக்கிறீர்கள்?” என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள், “சிம்சோனைப் பிடிக்க* வந்திருக்கிறோம். அவனைப் பழிக்குப்பழி வாங்கப்போகிறோம்” என்று சொன்னார்கள். 11  அப்போது, யூதா கோத்திரத்தைச் சேர்ந்த 3,000 ஆண்கள் ஏத்தாம் மலைப்பாறையின் குகைக்குள் இருந்த சிம்சோனிடம் வந்து, “நாம் பெலிஸ்தியர்களுடைய ஆட்சியின் கீழ் இருக்கிறோம்+ என்று உனக்குத் தெரியாதா? ஏன் இப்படிச் செய்தாய்?” என்று கேட்டார்கள். அதற்கு அவர், “அவர்கள் எனக்குச் செய்ததைத்தான் நானும் அவர்களுக்குச் செய்தேன்” என்றார். 12  அப்போது அவர்கள், “உன்னைப் பிடித்து பெலிஸ்தியர்களின் கையில் கொடுப்பதற்காக வந்திருக்கிறோம்” என்றார்கள். ஆனால் அவர், “நீங்கள் என்னைக் கொல்ல மாட்டீர்கள் என்று சத்தியம் செய்து கொடுங்கள்” என்றார். 13  அதற்கு அவர்கள், “நாங்கள் உன்னைக் கொல்ல மாட்டோம், வெறுமனே உன்னைக் கட்டி அவர்களிடம் ஒப்படைப்போம்” என்றார்கள். பின்பு, இரண்டு புதிய கயிறுகளால் அவரைக் கட்டி, அந்தக் குகையிலிருந்து கொண்டுவந்தார்கள். 14  அவர் லேகிக்குக் கொண்டுவரப்பட்டதைப் பார்த்ததும் அங்கிருந்த பெலிஸ்தியர்கள் சந்தோஷமாகக் கோஷம் போட்டார்கள். அப்போது, யெகோவாவின் சக்தியால் சிம்சோன் பலம் பெற்றார்.+ அவர் கையில் கட்டப்பட்டிருந்த கயிறுகள் நெருப்பு பட்ட நூல்போல் அறுந்து, கீழே விழுந்தன.+ 15  அந்தச் சமயத்தில், அவர் ஓர் ஆண் கழுதையின் பச்சைத் தாடை எலும்பைப் பார்த்தார். உடனே, அதை எடுத்து 1,000 பேரைக் கொன்றார்.+ 16  அதன்பின் சிம்சோன், “கழுதையின் தாடை எலும்பால் பிணங்களைக் குவியல்களாகக் குவித்தேன்! கழுதையின் தாடை எலும்பால் 1,000 பேரைக் கொன்றுபோட்டேன்!”+ என்று சொன்னார். 17  இப்படிச் சொல்லி முடித்தபின், அந்தத் தாடை எலும்பைத் தூக்கியெறிந்துவிட்டு, அந்த இடத்துக்கு ராமாத்-லேகி*+ என்று பெயர் வைத்தார். 18  அப்போது அவருக்கு ரொம்பத் தாகமாக இருந்தது. அவர் யெகோவாவிடம், “இந்த அடியேனுக்கு நீங்கள் மாபெரும் வெற்றியைக் கொடுத்தீர்களே. ஆனால், இப்போது நான் தாகத்தால் செத்துக்கொண்டிருக்கிறேன். விருத்தசேதனம் செய்யப்படாத இந்த ஆட்களின் கையில் என் உயிர்போக வேண்டுமா?” என்று கெஞ்சினார். 19  அப்போது, லேகியில் இருந்த ஒரு பள்ளத்தைக் கடவுள் பிளந்தார், அதிலிருந்து தண்ணீர் பொங்கி வந்தது.+ அதைக் குடித்ததும் அவருக்கு உயிர் வந்தது, புத்துணர்ச்சி கிடைத்தது. அதனால், அந்த இடத்துக்கு என்-நக்கோரி* என்று பெயர் வைத்தார். அது இன்றுவரை லேகியில் இருக்கிறது. 20  பெலிஸ்தியர்களின் காலத்திலே சிம்சோன் 20 வருஷங்களுக்கு இஸ்ரவேலில் நியாயாதிபதியாக இருந்தார்.+

அடிக்குறிப்புகள்

வே.வா., “இடுக்கில்.”
வே.வா., “கட்டி இழுத்துக்கொண்டு போக.”
அர்த்தம், “தாடை எலும்பின் உயர்ந்த இடம்.”
அர்த்தம், “மன்றாடுகிறவரின் ஊற்று.”

ஆராய்ச்சிக் குறிப்புகள்

மீடியா