ஆதியாகமம் 26:1-35

26  ஆபிரகாமின் காலத்தில் பஞ்சம் உண்டானது போலவே,+ மறுபடியும் ஒரு பஞ்சம் தேசத்தில் உண்டானது. அதனால், கேராரிலிருந்த பெலிஸ்திய ராஜாவான அபிமெலேக்கிடம் ஈசாக்கு போனார்.  அப்போது யெகோவா அவர்முன் தோன்றி, “நீ எகிப்துக்குப் போகாதே. நான் சொல்கிற இடத்துக்குப் போய்க் குடியிரு.  இந்தத் தேசத்தில் அன்னியனாகத் தங்கியிரு.+ நான் எப்போதும் உன்னோடு இருந்து உன்னை ஆசீர்வதிப்பேன். உனக்கும் உன் சந்ததிக்கும் இந்தத் தேசம் முழுவதையும் கொடுப்பேன்.+ உன் அப்பாவான ஆபிரகாமுக்குக் கொடுத்த உறுதிமொழியை நிறைவேற்றுவேன்.+  நான் ஆபிரகாமிடம், ‘உன் சந்ததியை வானத்திலுள்ள நட்சத்திரங்களைப் போலப் பெருகப் பண்ணுவேன்.+ உன் சந்ததிக்கு இந்தத் தேசம் முழுவதையும் கொடுப்பேன்.+ உன் சந்ததியின் மூலம் பூமியிலுள்ள எல்லா தேசத்தாரும் நிச்சயம் ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொள்வார்கள்’+ என்று சொன்னேன், அதன்படியே செய்வேன்.  ஏனென்றால், ஆபிரகாம் என் பேச்சைக் கேட்டு நடந்தான். எப்போதுமே என்னுடைய விதிமுறைகளையும் கட்டளைகளையும் சட்டதிட்டங்களையும் கடைப்பிடித்தான்”+ என்று சொன்னார்.  அதனால், ஈசாக்கு கேராரிலேயே+ குடியிருந்தார்.  அங்கிருந்த ஆண்கள் அவருடைய மனைவியைப் பற்றிக் கேட்டபோதெல்லாம், “இவள் என் தங்கை” என்று அவர் சொல்லிவந்தார்.+ ரெபெக்காள் அழகாக இருந்ததால்+ அங்கே இருந்தவர்கள் அவளை அடைவதற்காகத் தன்னைக் கொன்றுபோடுவார்களோ என்று பயந்துதான் அவளைத் தன் மனைவி என்று சொல்லாமல் இருந்தார்.  கொஞ்சக் காலத்துக்குப் பின்பு, பெலிஸ்திய ராஜாவான அபிமெலேக்கு ஜன்னல் வழியாகப் பார்த்தபோது, ஈசாக்கு தன் மனைவி ரெபெக்காளைக் கொஞ்சிக்கொண்டிருந்தார்.*+  உடனே அபிமெலேக்கு ஈசாக்கைக் கூப்பிட்டு, “அவள் உண்மையில் உன் மனைவிதானே! அப்புறம் எதற்கு ‘இவள் என் தங்கை’ என்று சொன்னாய்?” என்று கேட்டார். அதற்கு ஈசாக்கு, “அவளை அடைவதற்காக என்னை யாராவது கொன்றுபோடுவார்களோ என்று பயந்துதான் அப்படிச் சொன்னேன்”+ என்றார். 10  அதற்கு அபிமெலேக்கு, “ஏன் இப்படிச் செய்தாய்?+ எங்களில் யாராவது உன் மனைவியோடு படுத்திருந்தால், எங்கள்மேல் பழி விழுந்திருக்குமே!”+ என்றார். 11  பின்பு, “இந்த மனுஷனின் மேலோ இவனுடைய மனைவியின் மேலோ யாராவது கை வைத்தால் அவன் கண்டிப்பாகக் கொல்லப்படுவான்!” என்று எல்லா ஜனங்களையும் எச்சரித்தார். 12  ஈசாக்கு அந்தத் தேசத்தில் பயிர் செய்யத் தொடங்கினார். யெகோவா அவரை ஆசீர்வதித்ததால்+ அந்த வருஷத்தில் விதைத்ததைவிட 100 மடங்கு அதிகமாக அறுவடை செய்தார். 13  அவர் பணக்காரராக ஆனார், சொத்துகள் குவிந்துகொண்டே இருந்ததால் மிகப் பெரிய பணக்காரராக ஆனார். 14  அவருக்கு ஏராளமான ஆடுமாடுகளும் நிறைய வேலைக்காரர்களும் இருந்தார்கள்.+ அதையெல்லாம் பார்த்து பெலிஸ்தியர்கள் வயிற்றெரிச்சல்பட்டார்கள். 15  அதனால், அவருடைய அப்பாவான ஆபிரகாமுடைய காலத்தில் ஆபிரகாமின் வேலைக்காரர்கள் வெட்டியிருந்த எல்லா கிணறுகளையும்+ பெலிஸ்தியர்கள் மண்ணினால் மூடினார்கள். 16  அப்போது அபிமெலேக்கு ஈசாக்கிடம், “நீ எங்களைவிட ரொம்பப் பெரிய ஆளாகிவிட்டாய், அதனால் இங்கிருந்து போய்விடு” என்று சொன்னார். 17  உடனே, ஈசாக்கு அங்கிருந்து புறப்பட்டுப் போய் கேரார்+ பள்ளத்தாக்கில்* கூடாரம் போட்டுத் தங்கினார். 18  அவருடைய அப்பா ஆபிரகாம் நிறைய கிணறுகளை வெட்டியிருந்தார். ஆனால், ஆபிரகாம் இறந்தபின் பெலிஸ்தியர்கள் அவற்றை மூடிவிட்டார்கள்.+ அந்தக் கிணறுகளை ஈசாக்கு மறுபடியும் தோண்டி, தன்னுடைய அப்பா வைத்திருந்த பெயர்களையே அவற்றுக்கு வைத்தார்.+ 19  ஈசாக்கின் வேலைக்காரர்கள் அந்தப் பள்ளத்தாக்கில்* தோண்டியபோது, நல்ல தண்ணீருள்ள கிணற்றைப் பார்த்தார்கள். 20  அப்போது, கேராரைச் சேர்ந்த மேய்ப்பர்கள் ஈசாக்கின் மேய்ப்பர்களிடம், “இந்தக் கிணற்றுத் தண்ணீர் எங்களுடையது!” என்று சொல்லி வாக்குவாதம் செய்தார்கள். அவர்கள் அவருடன் வாக்குவாதம் செய்ததால் அந்தக் கிணற்றுக்கு ஏசேக்கு* என்று அவர் பெயர் வைத்தார். 21  அவர்கள் இன்னொரு கிணற்றைத் தோண்ட ஆரம்பித்தபோது, அதற்காகவும் பெலிஸ்தியர்கள் வாக்குவாதம் செய்தார்கள். அதனால், அந்தக் கிணற்றுக்கு சித்னா* என்று பெயர் வைத்தார். 22  பிற்பாடு, அவர் அங்கிருந்து புறப்பட்டுப் போய் வேறொரு கிணற்றைத் தோண்டினார். ஆனால், இந்தத் தடவை அவர்கள் வாக்குவாதம் செய்யவில்லை. அதனால், “நம்முடைய சந்ததி பெருகுவதற்காக இப்போது யெகோவா இந்தத் தேசத்தில் நமக்கு நிறைய இடம் தந்திருக்கிறார்”+ என்று சொல்லி, அந்தக் கிணற்றுக்கு ரெகொபோத்* என்று பெயர் வைத்தார். 23  பின்பு, அவர் அங்கிருந்து புறப்பட்டு பெயெர்-செபாவுக்குப்+ போனார். 24  அந்த ராத்திரி யெகோவா அவர்முன் தோன்றி, “உன்னுடைய அப்பாவான ஆபிரகாமின் கடவுள் நான்தான்.+ பயப்படாதே, நான் உன்னோடு இருக்கிறேன்.+ என்னுடைய ஊழியன் ஆபிரகாமுக்காக நான் உன்னை ஆசீர்வதித்து, உன் சந்ததியைப் பெருக வைப்பேன்”+ என்று சொன்னார். 25  அதனால் ஈசாக்கு அங்கே ஒரு பலிபீடம் கட்டி, யெகோவாவின் பெயரைப் போற்றிப் புகழ்ந்தார்.+ பின்பு, அங்கே ஒரு கூடாரம் போட்டுத் தங்கினார்.+ அவருடைய வேலைக்காரர்கள் அங்கே ஒரு கிணறு தோண்டினார்கள். 26  பிற்பாடு, அபிமெலேக்கு கேராரிலிருந்து தன்னுடைய முக்கிய ஆலோசகரான அகுசாத்தையும், தன்னுடைய படைத் தளபதி பிகோலையும்+ கூட்டிக்கொண்டு ஈசாக்கைப் பார்க்க வந்தார். 27  ஈசாக்கு அவர்களிடம், “ஏன் என்னைப் பார்க்க வந்தீர்கள்? நீங்கள்தான் என்னை வெறுத்து, உங்கள் ஊரைவிட்டே அனுப்பிவிட்டீர்களே” என்றார். 28  அதற்கு அவர்கள், “யெகோவா உங்களோடு இருக்கிறார் என்பதை எங்கள் கண்களாலேயே பார்த்துவிட்டோம்.+ அதனால், ‘தயவுசெய்து எங்களோடு ஒரு சமாதான ஒப்பந்தம் செய்யுங்கள்’+ என்று கேட்க வந்திருக்கிறோம். 29  நாங்கள் உங்களுக்குக் கெடுதல் செய்யாமல் நல்லதையே செய்து, உங்களைச் சமாதானமாக அனுப்பி வைத்தோம் இல்லையா? அதுபோலவே, நீங்களும் எங்களுக்கு எந்தக் கெடுதலும் செய்ய மாட்டீர்கள் என்று எங்களோடு ஒப்பந்தம் செய்யுங்கள். உங்களை யெகோவா ஆசீர்வதித்திருக்கிறாரே!’” என்றார்கள். 30  பின்பு, ஈசாக்கு அவர்களுக்கு விருந்து வைத்தார். அவர்கள் சாப்பிட்டார்கள், குடித்தார்கள். 31  விடிந்ததுமே அவர்கள் எழுந்து ஒருவருக்கொருவர் உறுதிமொழி தந்தார்கள்.+ அதன்பின், ஈசாக்கு அவர்களை அனுப்பி வைத்தார். அவர்களும் சமாதானத்துடன் புறப்பட்டுப் போனார்கள். 32  அதே நாளில் ஈசாக்கின் வேலைக்காரர்கள் அவரிடம் வந்து, அவர்கள் தோண்டிய கிணற்றில்+ தண்ணீர் வந்துவிட்டதாகச் சொன்னார்கள். 33  அந்தக் கிணற்றுக்கு செபா* என்று அவர் பெயர் வைத்தார். அதனால்தான், அந்த நகரம் இன்றுவரை பெயெர்-செபா*+ என்று அழைக்கப்படுகிறது. 34  ஏசாவுக்கு 40 வயதானபோது, ஏத்தியனான பெயேரியின் மகள் யூதீத்தையும் ஏத்தியனான ஏலோனின் மகள் பஸ்மாத்தையும்+ கல்யாணம் செய்துகொண்டான். 35  அவர்கள் இரண்டு பேரும் ஈசாக்குக்கும் ரெபெக்காளுக்கும் தீராத தலைவலியாக இருந்தார்கள்.+

அடிக்குறிப்புகள்

வே.வா., “கட்டிப்பிடித்துக்கொண்டிருந்தார்.”
அதாவது, “காட்டாற்றுப் பள்ளத்தாக்கில்.”
அதாவது, “காட்டாற்றுப் பள்ளத்தாக்கில்.”
அர்த்தம், “வாக்குவாதம்.”
அர்த்தம், “குற்றச்சாட்டு.”
அர்த்தம், “விசாலமான இடங்கள்.”
அர்த்தம், “உறுதிமொழி; ஏழு.”
அர்த்தம், “உறுதிமொழியின் கிணறு; ஏழின் கிணறு.”

ஆராய்ச்சிக் குறிப்புகள்

மீடியா