Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

யெகோவாவின் சாட்சிகள்

மொழியை தேர்ந்தெடுங்கள் தமிழ்

2 நாளாகமம் 28:1-27

முக்கியக் குறிப்புகள்

  • ஆகாஸ் யூதாவின் ராஜாவாகிறார் (1-4)

  • சீரியாவிடமும் இஸ்ரவேலிடமும் தோற்றுப்போகிறார் (5-8)

  • இஸ்ரவேலை ஓதேத் எச்சரிக்கிறார் (9-15)

  • யூதாவுக்கு வந்த அவமானம் (16-19)

  • ஆகாஸ் சிலைகளை வணங்குகிறார்; இறந்துபோகிறார் (20-27)

28  ஆகாஸ்+ ராஜாவானபோது அவருக்கு 20 வயது. அவர் எருசலேமில் 16 வருஷங்கள் ஆட்சி செய்தார். தன்னுடைய மூதாதையான தாவீது யெகோவாவுக்குப் பிரியமாக நடந்ததுபோல் அவர் நடக்கவில்லை.+  அதற்குப் பதிலாக, இஸ்ரவேல் ராஜாக்களின் வழியில் நடந்தார்;+ பாகால்களுக்கு உலோகச் சிலைகளைச் செய்யும் அளவுக்குப் போய்விட்டார்.+  அதோடு, பென்-இன்னோம்* பள்ளத்தாக்கில்* பலிகளை எரித்து புகை எழும்பிவரச் செய்தார், தன்னுடைய மகன்களை நெருப்பில் சுட்டெரித்தார்.+ இப்படி, இஸ்ரவேலர்களின் கண் முன்னால் யெகோவா விரட்டியடித்த மற்ற தேசத்தாரின் அருவருப்பான பழக்கவழக்கங்களைப் பின்பற்றினார்.+  அதுமட்டுமல்ல, ஆராதனை மேடுகளிலும்+ குன்றுகளிலும் அடர்த்தியான மரங்கள்+ ஒவ்வொன்றின் கீழும் பலிகளை எரித்து புகை எழும்பிவரச் செய்தார்.  அதனால், அவருடைய கடவுளான யெகோவா அவரை சீரியா ராஜாவின் கையில் கொடுத்தார்.+ சீரியர்கள் அவரைத் தோற்கடித்து, ஏராளமான மக்களை தமஸ்குவுக்குப்+ பிடித்துக்கொண்டு போனார்கள். கடவுள் அவரை இஸ்ரவேல் ராஜாவின் கையிலும் கொடுத்தார். இஸ்ரவேல் ராஜா அவரைத் தோற்கடித்து, எக்கச்சக்கமான வீரர்களைக் கொன்று குவித்தார்.  ரெமலியாவின் மகனான பெக்கா+ யூதாவிலிருந்த 1,20,000 தைரியமிக்க ஆண்களை ஒரே நாளில் கொன்றுபோட்டார். தங்களுடைய முன்னோர்களின் கடவுளான யெகோவாவை விட்டு விலகியதால்தான் அவர்களுக்கு இந்த நிலைமை வந்தது.+  ராஜாவின் மகனான மாசெயாவையும், அரண்மனையைக் கவனித்துக்கொண்ட அசரீக்காம் என்ற அதிகாரியையும், ராஜாவுக்கு அடுத்த ஸ்தானத்தில் இருந்த எல்க்கானாவையும் எப்பிராயீமைச் சேர்ந்த சிக்ரி என்ற வீரர் கொன்றுபோட்டார்.  அதோடு, யூதாவைச் சேர்ந்த தங்கள் சகோதரர்களில் 2,00,000 பேரை இஸ்ரவேலர்கள் பிடித்துக்கொண்டு போனார்கள். அந்தக் கூட்டத்தில் பெண்களும் ஆண் பிள்ளைகளும் பெண் பிள்ளைகளும் இருந்தார்கள். அவர்கள் எக்கச்சக்கமான பொருள்களைக் கைப்பற்றி சமாரியாவுக்குக்+ கொண்டுபோனார்கள்.  யெகோவாவின் தீர்க்கதரிசி ஓதேத் அங்கே இருந்தார். அவர் சமாரியாவுக்கு வந்துகொண்டிருந்த படைவீரர்களிடம் போய், “இங்கே பாருங்கள், உங்கள் முன்னோர்களின் கடவுளான யெகோவா யூதா மக்கள்மேல் கோபமாக இருந்ததால்தான் அவர்களை உங்களிடம் தோற்றுப்போக வைத்தார்.+ ஆனால், நீங்கள் அவர்களை வெறித்தனமாகக் கொன்றுபோட்டீர்கள். உங்களுடைய செயல் வானத்தையே எட்டியிருக்கிறது. 10  இப்போது யூதா மக்களையும் எருசலேம் மக்களையும் வேலைக்காரர்களாகவும் வேலைக்காரிகளாகவும் வைத்துக்கொள்ள நினைக்கிறீர்களே!+ உங்கள் கடவுளாகிய யெகோவாவுக்கு விரோதமாக நீங்கள் மட்டும் எந்தத் தவறும் செய்யவில்லையா? 11  இப்போது நான் சொல்வதைக் கேளுங்கள். யெகோவா உங்கள்மேல் பயங்கர கோபமாக இருக்கிறார். அதனால், யூதாவில் இருக்கும் உங்கள் சகோதரர்களிடமிருந்து நீங்கள் பிடித்துக்கொண்டுவந்த மக்களைத் திருப்பி அனுப்பிவிடுங்கள்” என்று சொன்னார். 12  அதைக் கேட்டதும் எப்பிராயீம் தலைவர்களில் சிலரான யெகோனானின் மகன் அசரியாவும், மெசில்லேமோத்தின் மகன் பெரகியாவும், சல்லூமின் மகன் எகிஸ்கியாவும், ஹத்லாயின் மகன் அமாசாவும் போர் செய்துவிட்டுத் திரும்பி வந்துகொண்டிருந்த வீரர்களிடம் பேசினார்கள். 13  “நீங்கள் பிடித்துவந்த மக்களை இங்கே கொண்டுவராதீர்கள். அப்படிச் செய்தால், யெகோவாவுக்கு முன்னால் நாம் குற்றவாளிகளாக ஆகிவிடுவோம். ஏற்கெனவே பெரிய பாவம் செய்துவிட்டோம், கடவுளுடைய கோபம் இஸ்ரவேலுக்கு எதிராகப் பற்றியெரிகிறது. நீங்கள் இந்தக் காரியத்தையும் செய்தால், பாவத்துக்குமேல் பாவம்தான் சேரும்” என்று சொன்னார்கள். 14  அதனால், ஆயுதம் ஏந்திய அந்த வீரர்கள், தாங்கள் பிடித்து வந்த ஆட்களையும் கைப்பற்றிய பொருள்களையும்+ அதிகாரிகளிடமும் சபையார் எல்லாரிடமும் ஒப்படைத்தார்கள். 15  பின்பு, பெயர் பெயராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்கள், சிறைபிடித்து கொண்டுவரப்பட்டவர்களைக் கவனித்துக்கொள்ள ஆரம்பித்தார்கள். அவர்களில் போதிய உடையில்லாமல் இருந்த எல்லாருக்கும் தாங்கள் கைப்பற்றிய துணிமணிகளைக் கொடுத்தார்கள். அதோடு, செருப்பு, உணவு, தண்ணீர், உடம்பில் பூசிக்கொள்ள எண்ணெய் ஆகியவற்றையும் கொடுத்தார்கள். நடக்க முடியாதவர்களைக் கழுதைகளின் மேல் ஏற்றி, பேரீச்ச மரங்களின் நகரமான எரிகோவுக்குக் கூட்டிக்கொண்டு போனார்கள். அவர்களுடைய சகோதரர்களிடம் அவர்களை ஒப்படைத்துவிட்டு, சமாரியாவுக்குத் திரும்பி வந்தார்கள். 16  அந்தச் சமயத்தில், அசீரிய ராஜாக்களிடம் ஆகாஸ் ராஜா உதவி கேட்டார்.+ 17  மறுபடியும் ஏதோமியர்கள் யூதாமீது படையெடுத்து வந்து தாக்குதல் நடத்தினார்கள், அங்கிருந்த மக்களைப் பிடித்துக்கொண்டு போனார்கள். 18  அதோடு, பெலிஸ்தியர்களும்+ சேப்பெல்லா+ பகுதியில் இருந்த நகரங்களிலும் யூதாவின் நெகேபிலும் திடீர்த் தாக்குதல் நடத்தினார்கள். அங்கிருந்த பெத்-ஷிமேசையும்+ ஆயலோனையும்+ கெதெரோத்தையும் சோகோவையும் அதன் சிற்றூர்களையும்,* திம்னாவையும்+ அதன் சிற்றூர்களையும், கிம்சோவையும் அதன் சிற்றூர்களையும் பிடித்தார்கள். பின்பு, அங்கே குடியேறினார்கள். 19  யூதா மக்கள் ஒழுக்கங்கெட்ட வாழ்க்கை வாழ்வதற்கு இஸ்ரவேலின் ராஜாவான ஆகாஸ் காரணமாக இருந்தார், அவர்கள் யெகோவாவுக்குக் கொஞ்சம்கூட உண்மையாக இருக்கவில்லை. அதனால்தான், யூதா மக்களுக்கு இப்பேர்ப்பட்ட அவமானத்தை யெகோவா ஏற்படுத்தினார். 20  அசீரிய ராஜாவான தில்காத்-பில்நேசர்+ ஆகாசுக்கு உதவி செய்வதற்குப் பதிலாக, அவரையே எதிர்த்து வந்து அவருக்குக் கஷ்டம் கொடுத்தான்.+ 21  யெகோவாவின் ஆலயத்திலும் அரண்மனையிலும்+ உயர் அதிகாரிகளின் மாளிகைகளிலும் இருந்த எல்லா பொருள்களையும் ஆகாஸ் ராஜா எடுத்து அசீரிய ராஜாவுக்கு ஏற்கெனவே அன்பளிப்பாகக் கொடுத்திருந்தார். அப்படியிருந்தும் அவருக்கு எந்த உதவியும் கிடைக்கவில்லை. 22  இப்படிப்பட்ட நெருக்கடியான சூழ்நிலையில்கூட, ஆகாஸ் ராஜா யெகோவாவுக்கு இன்னும் அதிகமாகத்தான் துரோகம் செய்தார். 23  தன்னைத் தோற்கடித்த+ தமஸ்குவின் தெய்வங்களுக்கே பலி கொடுக்க ஆரம்பித்தார்.+ “சீரியா ராஜாக்களுடைய தெய்வங்கள் அவர்களுக்கு உதவி செய்கின்றன. அந்தத் தெய்வங்களுக்குப் பலி கொடுத்தால், எனக்கும் அவை உதவி செய்யும்”+ என்று நினைத்துக்கொண்டார். ஆனால், அவரும் இஸ்ரவேலர்கள் எல்லாரும் வீழ்ந்துபோக அவை காரணமாயின. 24  ராஜாவான ஆகாஸ், இவ்வளவு செய்தது போதாதென்று உண்மைக் கடவுளின் ஆலயத்திலிருந்த சாமான்களைச் சேகரித்து, அவற்றை உடைத்துப்போட்டார்.+ யெகோவாவுடைய ஆலயத்தின் கதவுகளை அடைத்துவிட்டார்.+ எருசலேமின் மூலைமுடுக்கெல்லாம் தனக்காகப் பலிபீடங்களைக் கட்டினார். 25  மற்ற தெய்வங்களுக்குப் பலிகளை எரித்து புகை எழும்பிவரச் செய்வதற்காக, யூதாவிலிருந்த எல்லா நகரங்களிலும் ஆராதனை மேடுகளை அமைத்தார்.+ இப்படியெல்லாம் செய்து, தன்னுடைய முன்னோர்களின் கடவுளான யெகோவாவின் மனதைப் புண்படுத்தினார். 26  ஆரம்பம்முதல் முடிவுவரை ஆகாசின் வாழ்க்கையில் நடந்த மற்ற விஷயங்கள் எல்லாம் யூதா மற்றும் எருசலேம் ராஜாக்களின் சரித்திரப் புத்தகத்தில் எழுதப்பட்டிருக்கிறது.+ 27  ஆகாஸ் இறந்ததும் இஸ்ரவேல் ராஜாக்களை அடக்கம் செய்த இடத்தில் அவரை அடக்கம் செய்யாமல், எருசலேம் நகரத்தில் அடக்கம் செய்தார்கள்.+ அவருக்குப் பிறகு, அவருடைய மகன் எசேக்கியா ராஜாவானார்.

அடிக்குறிப்புகள்

அர்த்தம், “இன்னோம் மகனின்.”
சொல் பட்டியலில் “கெஹென்னா” என்ற தலைப்பைப் பாருங்கள்.
வே.வா., “அதைச் சுற்றியுள்ள ஊர்களையும்.”