Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

யெகோவாவின் சாட்சிகள்

மொழியை தேர்ந்தெடுங்கள் தமிழ்

2 நாளாகமம் 26:1-23

முக்கியக் குறிப்புகள்

  • உசியா யூதாவின் ராஜாவாகிறார் (1-5)

  • உசியாவின் போர் நடவடிக்கைகள் (6-15)

  • ஆணவம்பிடித்த உசியாவுக்குத் தொழுநோய் (16-21)

  • உசியா இறந்துபோகிறார் (22, 23)

26  யூதா மக்கள் எல்லாரும் அமத்சியாவுக்கு அடுத்து, அவருடைய மகன் உசியாவை+ ராஜாவாக்கினார்கள்; அப்போது, அவருக்கு 16 வயது.+  ராஜா* இறந்த* பின்பு, அவர் ஏலோத்தைத்+ திரும்பக் கட்டி, அதை யூதா தேசத்துடன் மீண்டும் இணைத்துக்கொண்டார்.+  உசியா+ ராஜாவானபோது அவருக்கு 16 வயது; அவர் எருசலேமில் 52 வருஷங்கள் ஆட்சி செய்தார். அவருடைய அம்மா பெயர் எக்கோலியாள், அவள் எருசலேமைச் சேர்ந்தவள்.+  உசியா தன்னுடைய அப்பாவான அமத்சியாவைப் போலவே யெகோவாவுக்குப் பிரியமானதைச் செய்துவந்தார்.+  உண்மைக் கடவுளுக்குப் பயந்து நடக்க வேண்டுமென்று சகரியா அவருக்குச் சொல்லிக்கொடுத்திருந்தார்; அதனால், சகரியா உயிரோடு இருந்த காலமெல்லாம் உசியா உண்மைக் கடவுளைத் தேடினார். அப்படித் தேடியபோது, யெகோவா அவரை ஆசீர்வதித்தார்.+  அவர் பெலிஸ்தியர்களை எதிர்த்துப் போர் செய்யப் போனார்.+ அவர்களோடு போர் செய்து, காத் நகரத்தின் மதிலையும்,+ யப்னே நகரத்தின் மதிலையும்+ அஸ்தோத் நகரத்தின் மதிலையும் உடைத்தார்.+ பின்பு, அஸ்தோத்துக்குப் பக்கத்திலும் பெலிஸ்தியர்களின் பகுதியிலும் நகரங்களைக் கட்டினார்.  பெலிஸ்தியர்களையும் கூர்பாகாலில் குடியிருந்த அரேபியர்களையும்+ மெயூனீம்களையும் தோற்கடிக்க உண்மைக் கடவுள் அவருக்கு உதவி செய்துகொண்டே இருந்தார்.  அம்மோனியர்கள்+ உசியாவுக்குக் கப்பம் கட்ட ஆரம்பித்தார்கள். அவர் மிகவும் வலிமைமிக்க ராஜாவாக ஆனதால் அவருடைய புகழ் எகிப்துவரை பரவியது.  எருசலேமில் இருந்த ‘மூலை நுழைவாசல்,’+ ‘பள்ளத்தாக்கு நுழைவாசல்,’+ முட்டுச்சுவர் ஆகியவற்றின்மீது பலமான கோபுரங்களைக் கட்டினார்.+ 10  அதோடு, வனாந்தரத்தில் கோபுரங்களைக் கட்டினார்,+ நிறைய தண்ணீர்த் தொட்டிகளை அமைத்தார்;* (ஏனென்றால், அவரிடம் ஏராளமான கால்நடைகள் இருந்தன.) இதேபோல், சேப்பெல்லாவிலும் சமவெளியிலும்* செய்தார். அவருக்கு விவசாயத்தில் அதிக ஆர்வம் இருந்தது. அதனால், மலைகளிலும் கர்மேல் பகுதியிலும் விவசாயிகளையும் திராட்சைத் தோட்டக்காரர்களையும் வேலைக்கு வைத்திருந்தார். 11  அதோடு, போர் செய்வதற்குத் தயார் நிலையில் ஒரு போர்ப்படையை வைத்திருந்தார். போருக்குப் போகும்போது அந்தப் படைவீரர்கள் அணி அணியாகப் போவார்கள். அவர்கள் எத்தனை பேர் இருக்கிறார்கள் என்பதைச் செயலாளரான+ எயியேலும் அதிகாரியான மாசெயாவும் கணக்கெடுத்து, அதைப் பதிவு செய்தார்கள்.+ இவர்கள் இரண்டு பேரும், ராஜாவுக்குச் சேவை செய்த அதிகாரிகளில் ஒருவரான அனனியாவின் தலைமையில் வேலை செய்தார்கள். 12  தந்தைவழிக் குடும்பத் தலைவர்களின் மொத்த எண்ணிக்கை 2,600. இவர்கள் இந்த மாவீரர்களுக்கு அதிகாரிகளாக இருந்தார்கள். 13  ஆயுதம் ஏந்திய 3,07,500 வீரர்கள், இவர்களுடைய தலைமையில் போருக்குப் போக எப்போதும் தயாராக இருந்தார்கள். எதிரிகளைத் தாக்குவதற்கு இந்த வலிமையான படை ராஜாவுக்குப் பக்கபலமாக இருந்தது.+ 14  படையில் இருந்த எல்லாருக்கும் கேடயங்களையும் ஈட்டிகளையும்+ தலைக்கவசங்களையும் உடல்கவசங்களையும்+ வில்லையும் கவண்கற்களையும்+ உசியா கொடுத்தார். 15  அதுமட்டுமல்ல, பொறியாளர்களால் வடிவமைக்கப்பட்ட போர் இயந்திரங்களை எருசலேமில் செய்தார்; அவற்றைக் கோபுரங்களின் மீதும்+ மதில்களின் ஓரங்களிலும் வைத்தார்கள். அவற்றைப் பயன்படுத்தி அம்புகளையும் பெரிய கற்களையும் எறிய முடியும். அவருக்கு நிறைய உதவி கிடைத்ததால், அவர் வலிமைமிக்கவராக ஆனார், அவருடைய புகழ் எல்லா தேசங்களுக்கும் பரவியது. 16  வலிமைமிக்கவராக ஆனதும், அவருக்கு ஆணவம் தலைக்கேறியது. அதுவே அவருடைய அழிவுக்குக் காரணமானது. யெகோவாவின் ஆலயத்துக்குள்ளே நுழைந்து தூபபீடத்தில் தூபம் காட்டப் போனதன் மூலம் தன்னுடைய கடவுளான யெகோவாவின் கட்டளையை அவர் மீறினார்.+ 17  உடனே குருவாகிய அசரியாவும் யெகோவாவுக்குச் சேவை செய்துவந்த தைரியமுள்ள 80 குருமார்களும் அவருக்குப் பின்னால் போனார்கள். 18  அவர்கள் உசியா ராஜாவைத் தடுத்து, “உசியா, நீங்கள் யெகோவாவுக்குத் தூபம் காட்டுவது சரியில்லை! குருமார்கள் மட்டும்தான் தூபம் காட்ட வேண்டும்,+ அவர்கள்தான் ஆரோனின் வம்சத்தில் வந்தவர்கள்,+ அவர்கள்தான் இந்த வேலைக்காகப் புனிதப்படுத்தப்பட்டவர்கள். பரிசுத்த இடத்தைவிட்டு வெளியே போங்கள். நீங்கள் உண்மையில்லாமல் நடந்துகொண்டீர்கள். இப்படிச் செய்ததற்காக யெகோவா தேவனிடமிருந்து உங்களுக்கு எந்த மகிமையும் கிடைக்காது” என்று சொன்னார்கள். 19  அதைக் கேட்டதும், தூபம் காட்டுவதற்காகக் கையில் தூபக்கரண்டியுடன் நின்றுகொண்டிருந்த உசியாவுக்குப் பயங்கர கோபம் வந்தது.+ குருமார்களிடம் அவர் கோபமாகப் பேசியபோதே, அவர்களுக்கு முன்னால் அவருடைய நெற்றியில் தொழுநோய்+ வர ஆரம்பித்தது. அப்போது யெகோவாவின் ஆலயத்தில் இருந்த தூபபீடத்துக்குப் பக்கத்தில் அவர் நின்றுகொண்டிருந்தார். 20  முதன்மை குருவான அசரியாவும் மற்ற குருமார்கள் எல்லாரும் அவரைப் பார்த்தபோது, அவருடைய நெற்றியில் தொழுநோய் வந்திருந்தது. யெகோவா அவருக்குத் தண்டனை கொடுத்ததால், அவரை அவசர அவசரமாக வெளியேற்றினார்கள். அவரும் வேகமாக வெளியேறினார். 21  சாகும்வரை உசியா ராஜா தொழுநோயாளியாக இருந்தார். அதனால், யெகோவாவின் ஆலயத்திலிருந்து அவர் விலக்கி வைக்கப்பட்டிருந்தார்.+ ஒரு தனி வீட்டில் வாழ்ந்துவந்தார். அந்தச் சமயத்தில், அவருடைய மகன் யோதாம் அரண்மனையைக் கவனித்துக்கொண்டு, தேசத்து மக்களுக்கு நீதி வழங்கிவந்தார்.+ 22  உசியாவின் வாழ்க்கையில் நடந்த மற்ற விஷயங்களை ஆரம்பம்முதல் முடிவுவரை ஆமோத்சின் மகனான ஏசாயா தீர்க்கதரிசி எழுதி வைத்தார்.+ 23  உசியா இறந்த* பிறகு அவருடைய முன்னோர்கள் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் அடக்கம் செய்யப்பட்டார். அவர் ஒரு தொழுநோயாளி என்பதால் ராஜாக்களை அடக்கம் செய்கிற இடத்துக்கு வெளியே இருந்த நிலத்தில் அவரை அடக்கம் செய்தார்கள். அவருக்குப் பிறகு, அவருடைய மகன் யோதாம் ராஜாவானார்.+

அடிக்குறிப்புகள்

அதாவது, “அவருடைய அப்பா அமத்சியா.”
நே.மொ., “தன் முன்னோர்களோடு படுக்க வைக்கப்பட்ட.”
அநேகமாக, பாறைகளில் வெட்டியிருக்கலாம்.
வே.வா., “பீடபூமியிலும்.”
நே.மொ., “தன் முன்னோர்களோடு படுக்க வைக்கப்பட்ட.”