Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

யெகோவாவின் சாட்சிகள்

மொழியை தேர்ந்தெடுங்கள் தமிழ்

1 தீமோத்தேயு 1:1-20

முக்கியக் குறிப்புகள்

  • வாழ்த்துக்கள் (1, 2)

  • பொய்ப் போதகர்களுக்கு எதிரான எச்சரிக்கை (3-11)

  • பவுலுக்குக் காட்டப்பட்ட அளவற்ற கருணை (12-16)

  • என்றென்றுமுள்ள ராஜா (17)

  • ‘சிறந்த போராட்டத்தைப் போராடு’ (18-20)

1  நம்முடைய மீட்பராயிருக்கிற கடவுளும் நம்முடைய நம்பிக்கையாயிருக்கிற கிறிஸ்து இயேசுவும்+ கட்டளை கொடுத்தபடி, கிறிஸ்து இயேசுவின் அப்போஸ்தலனாக இருக்கிற பவுல்,  உண்மையான மகனாகவும் சக விசுவாசியாகவும் இருக்கிற+ தீமோத்தேயுவுக்கு*+ எழுதுவது: பரலோகத் தகப்பனாகிய கடவுளிடமிருந்தும் நம் எஜமானாகிய கிறிஸ்து இயேசுவிடமிருந்தும் உனக்கு அளவற்ற கருணையும் இரக்கமும் சமாதானமும் கிடைக்கட்டும்.  நான் மக்கெதோனியாவுக்குப் புறப்பட்டபோது எபேசுவில் தங்கியிருக்கச் சொல்லி உன்னை உற்சாகப்படுத்தியது போலவே இப்போதும் உற்சாகப்படுத்துகிறேன். ஏனென்றால், அங்கே இருக்கிற சிலர் பொய்க் கோட்பாடுகளைக் கற்றுக்கொடுக்கிறார்கள்.  அதோடு, கட்டுக்கதைகளுக்கும்+ வம்சாவளிப் பட்டியல்களுக்கும் கவனம் செலுத்துகிறார்கள். இவையெல்லாம் கடவுளுடைய விஷயங்களைப் போதித்து விசுவாசத்தைப் பலப்படுத்துவதற்குப் பதிலாக வீண் கேள்விகளைத்தான் எழுப்புகின்றன.+ அதனால், இப்படிச் செய்யக் கூடாதென்று அவர்களுக்குக் கட்டளையிடு.  இந்தக் கட்டளையின் நோக்கம், சுத்தமான இதயத்தோடும் நல்ல மனசாட்சியோடும் வெளிவேஷமில்லாத விசுவாசத்தோடும் நாம் அன்பு காட்ட வேண்டும் என்பதுதான்.+  சிலர் இவற்றைவிட்டு விலகி, வீண்பேச்சு பேசிக்கொண்டிருக்கிறார்கள்.+  அவர்கள் திருச்சட்டப் போதகர்களாக+ இருப்பதற்கு விரும்புகிறார்கள். ஆனால், தாங்கள் எவற்றைச் சொல்கிறார்கள் என்பதையும், எவற்றைச் செய்ய வற்புறுத்துகிறார்கள் என்பதையும் புரிந்துகொள்ளாமல் இருக்கிறார்கள்.  திருச்சட்டம் நல்லது என்பது நமக்குத் தெரியும். ஆனால், ஒருவர் அதைச் சரியாகக் கடைப்பிடிக்க வேண்டும்.  நமக்குத் தெரிந்திருக்கிறபடி, நீதிமான்களுக்காகச் சட்டம் இயற்றப்படுவதில்லை; அதற்குப் பதிலாக, அக்கிரமக்காரர்கள்,+ அடங்காதவர்கள், கடவுள்பக்தி இல்லாதவர்கள், பாவிகள், உண்மையில்லாதவர்கள்,* பரிசுத்தமானவற்றை அவமதிக்கிறவர்கள், அப்பா அம்மாவையோ மற்றவர்களையோ கொலை செய்கிறவர்கள், 10  பாலியல் முறைகேட்டில்* ஈடுபடுகிறவர்கள், ஆண்களோடு உறவுகொள்ளும் ஆண்கள், ஆட்களைக் கடத்துகிறவர்கள், பொய் சொல்கிறவர்கள், கொடுத்த வாக்கை மீறுகிறவர்கள்* ஆகியோருக்காகவும், பயனுள்ள* போதனைகளுக்கு+ எதிரான எல்லா செயல்களையும் செய்கிறவர்களுக்காகவும்தான் சட்டம் இயற்றப்படுகிறது. 11  பயனுள்ள இந்தப் போதனைகள், சந்தோஷமுள்ள கடவுள் என்னிடம் ஒப்படைத்திருக்கிற மகத்தான நல்ல செய்திக்கு இசைவாக இருக்கின்றன.+ 12  என்னைப் பலப்படுத்திய நம் எஜமானாகிய கிறிஸ்து இயேசுவுக்கு நன்றியோடு இருக்கிறேன். ஏனென்றால், அவர் என்னை உண்மையுள்ளவன் என்று கருதி, அவருடைய ஊழியத்தைச் செய்வதற்கு என்னை நியமித்தார்.+ 13  முன்பு நான் துன்புறுத்துகிறவனாகவும், கடவுளை நிந்திக்கிறவனாகவும், திமிர்பிடித்தவனாகவும் இருந்தேன்.+ ஆனாலும், அறியாமையின் காரணமாக நான் விசுவாசமில்லாமல் நடந்துகொண்டதால் அவர் என்மேல் இரக்கம் காட்டினார். 14  நம் எஜமானுடைய அளவற்ற கருணை எனக்குத் தாராளமாகக் கிடைத்தது; அதோடு, விசுவாசமும் கிறிஸ்து இயேசுவின் மீதுள்ள அன்பும் எனக்குள் அதிகமானது. 15  பாவிகளை மீட்பதற்காகக் கிறிஸ்து இயேசு உலகத்துக்கு வந்தார்+ என்ற வார்த்தை உண்மையானது, முழுமையாக ஏற்றுக்கொள்ளப்பட வேண்டியது. அந்தப் பாவிகளில் பெரும் பாவி நான்தான்.+ 16  ஆனாலும், கிறிஸ்து இயேசுமேல் விசுவாசம் வைத்து முடிவில்லாத வாழ்வைப்+ பெறப்போகிறவர்களுக்கு நான் ஓர் எடுத்துக்காட்டாக இருக்கும்படி, அவர் என்மேல் பொறுமையை முழுமையாகக் காட்டினார், பெரும் பாவியாகிய என்மேல் இரக்கத்தைக் காட்டினார். 17  என்றென்றுமுள்ள ராஜாவாகவும்,+ அழிவில்லாதவராகவும்,+ பார்க்க முடியாதவராகவும்+ இருக்கிற ஒரே கடவுளுக்கே+ என்றென்றும் மாண்பும் மகிமையும் சேருவதாக. ஆமென்.* 18  தீமோத்தேயு, என் பிள்ளையே, உன்னைப் பற்றிச் சொல்லப்பட்ட தீர்க்கதரிசனங்களுக்கு ஏற்ப நான் உனக்கு இவற்றைக் கட்டளையிடுகிறேன். அந்தத் தீர்க்கதரிசனங்களை நீ மனதில் வைத்து, சிறந்த போராட்டத்தைப் போராடிக்கொண்டே+ இருக்க வேண்டும் என்பதற்காகவும், 19  விசுவாசத்தையும் நல்ல மனசாட்சியையும் நீ காத்துக்கொள்ள வேண்டும்+ என்பதற்காகவும் இவற்றைக் கட்டளையிடுகிறேன்; இவற்றைச் சிலர் ஒதுக்கிவிட்டு தங்களுடைய விசுவாசக் கப்பலை மூழ்கடித்திருக்கிறார்கள். 20  இமெனேயுவும்+ அலெக்சந்தரும் அப்படிப்பட்டவர்கள்தான். அவர்களை நான் சாத்தானிடம் ஒப்படைத்துவிட்டேன்.+ கடவுளை நிந்திக்கக் கூடாது என்ற பாடத்தை அவர்களுக்குக் கொடுக்கப்படும் கண்டிப்பிலிருந்து அவர்கள் கற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்காக அப்படிச் செய்தேன்.

அடிக்குறிப்புகள்

அர்த்தம், “கடவுளுக்கு மரியாதை கொடுப்பவன்.”
வே.வா., “மாறாத அன்பு இல்லாதவர்கள்.”
வே.வா., “பொய் சத்தியம் செய்கிறவர்கள்.”
வே.வா., “ஆரோக்கியமான.”
அதாவது, “அப்படியே ஆகட்டும்.”