Skip to content

Skip to secondary menu

பொருளடக்கத்திற்குச் செல்

யெகோவாவின் சாட்சிகள்

தமிழ்

ஆன்லைன் பைபிள் | புதிய உலக மொழிபெயர்ப்பு

லேவியராகமம் 19:1-37

முக்கியக் குறிப்புகள்

  • பரிசுத்தமாக இருப்பது சம்பந்தமான சட்டங்கள் (1-37)

    • அறுவடையின்போது செய்ய வேண்டியவை (9, 10)

    • காது கேட்காதவனுக்கும் கண் தெரியாதவனுக்கும் கரிசனை காட்ட வேண்டும் (14)

    • இல்லாததையும் பொல்லாததையும் பேசக் கூடாது (16)

    • யார்மேலும் பகை வைத்திருக்கக் கூடாது (18)

    • மாயமந்திரமும் ஆவியுலகத் தொடர்பும் தடை செய்யப்படுகின்றன (26, 31)

    • பச்சை குத்துவதற்குத் தடை (28)

    • மூத்தவர்களுக்கு மரியாதை கொடுக்க வேண்டும் (32)

    • மற்ற தேசத்து ஜனங்களை நேசிக்க வேண்டும் (33, 34)

19  பின்பு யெகோவா மோசேயிடம்,  “இஸ்ரவேல் ஜனங்கள் எல்லாரிடமும் நீ சொல்ல வேண்டியது என்னவென்றால், ‘நான் உங்கள் கடவுளாகிய யெகோவா. நான் பரிசுத்தமானவர், அதனால் நீங்களும் பரிசுத்தமாக இருக்க வேண்டும்.+  நீங்கள் ஒவ்வொருவரும் உங்களுடைய அம்மா அப்பாவுக்கு மதிப்புக் கொடுக்க வேண்டும்.+ ஓய்வுநாட்களைக் கடைப்பிடிக்க வேண்டும்.+ நான் உங்கள் கடவுளாகிய யெகோவா.  ஒன்றுக்கும் உதவாத தெய்வங்களை நீங்கள் வணங்கக் கூடாது,+ சிலைகளை வார்த்து அவற்றைக் கும்பிடக் கூடாது.+ நான் உங்கள் கடவுளாகிய யெகோவா.  நீங்கள் யெகோவாவுக்குச் சமாதான பலி செலுத்தினால்,+ அவர் ஏற்றுக்கொள்ளும் விதத்தில் அதைச் செலுத்த வேண்டும்.+  பலி செலுத்தும் நாளில் அதைச் சாப்பிட வேண்டும், அடுத்த நாளிலும் அதைச் சாப்பிடலாம். ஆனால், மூன்றாம் நாள்வரை மீதியாக இருப்பதை எரித்துவிட வேண்டும்.+  மூன்றாம் நாளிலும் சாப்பிட்டால், அது அருவருப்பானது. நான் அதை ஏற்றுக்கொள்ள மாட்டேன்.  அதைச் சாப்பிடுகிறவன் அந்தக் குற்றத்துக்காகத் தண்டிக்கப்படுவான். ஏனென்றால், யெகோவா பரிசுத்தமாக நினைப்பதை அவன் அவமதிக்கிறான். அதனால் அவன் கொல்லப்பட வேண்டும்.  உங்கள் வயலில் அறுவடை செய்யும்போது வரப்பு ஓரத்தில் உள்ள கதிர்களை முழுமையாக அறுவடை செய்யக் கூடாது, சிந்திய கதிர்களை எடுக்கவும் கூடாது.+ 10  அதோடு, உங்கள் திராட்சைத் தோட்டத்தில் பறிக்காமல் விடப்பட்ட பழங்களையோ கீழே விழுந்து கிடக்கிற பழங்களையோ எடுக்கக் கூடாது. அவற்றை ஏழைகளுக்காகவும் உங்களோடு வாழ்கிற மற்ற தேசத்து ஜனங்களுக்காகவும் விட்டுவிட வேண்டும்.+ நான் உங்கள் கடவுளாகிய யெகோவா. 11  நீங்கள் திருடக் கூடாது,+ ஏமாற்றக் கூடாது,+ யாருக்கும் அநியாயம் செய்யக் கூடாது. 12  நீங்கள் என்னுடைய பெயரில் பொய் சத்தியம் செய்து என் பெயரைக் களங்கப்படுத்தக் கூடாது.+ நான் உங்கள் கடவுளாகிய யெகோவா. 13  நீங்கள் மோசடி செய்யக் கூடாது,+ கொள்ளையடிக்க* கூடாது.+ கூலியாளுக்குக் கொடுக்க வேண்டிய சம்பளத்தை அடுத்த நாள் காலைவரை நீங்களே வைத்திருக்கக் கூடாது.+ 14  காது கேட்காதவனைச் சபித்துப் பேசக் கூடாது. கண் தெரியாதவனுக்கு முன்னால் எதையாவது போட்டு அவனைத் தடுக்கி விழ வைக்கக் கூடாது.+ உங்கள் கடவுளுக்கு நீங்கள் பயந்து நடக்க வேண்டும்.+ நான் யெகோவா. 15  நீங்கள் அநியாயமாகத் தீர்ப்பு சொல்லக் கூடாது. ஏழைக்குப் பாரபட்சம் காட்டவோ பணக்காரனுக்குச் சலுகை காட்டவோ கூடாது.+ எல்லாருக்கும் நியாயமாகத் தீர்ப்பு சொல்ல வேண்டும். 16  அடுத்தவர்களைப் பற்றி இல்லாததையும் பொல்லாததையும் பேசிக்கொண்டு திரியக் கூடாது.+ அவர்களுடைய உயிருக்கு உலை வைக்கக் கூடாது.*+ நான் யெகோவா. 17  உள்ளத்தில்கூட உங்கள் சகோதரனை வெறுக்காதீர்கள்.+ ஒருவன் பாவம் செய்தால் அவனைக் கண்டியுங்கள்.+ இல்லாவிட்டால், நீங்களும் அவனுடைய பாவத்துக்கு உடந்தையாகிவிடுவீர்கள். 18  யாரையும் பழிவாங்கக் கூடாது.+ யார்மேலும் பகை* வைத்திருக்கக் கூடாது. உங்கள்மேல் நீங்கள் அன்பு காட்டுவது போல மற்றவர்கள்மேலும்* அன்பு காட்ட வேண்டும்.+ நான் யெகோவா. 19  நான் கொடுக்கும் இந்தச் சட்டதிட்டங்களை நீங்கள் கடைப்பிடிக்க வேண்டும்: இரண்டு விதமான வீட்டு விலங்குகளை இனக்கலப்பு செய்யக் கூடாது. இரண்டு வகையான தானியங்களைக் கலந்து உங்கள் வயலில் விதைக்கக் கூடாது.+ இரண்டு விதமான நூல்களைக் கலந்து நெய்யப்பட்ட உடையை உடுத்தக் கூடாது.+ 20  ஒரு அடிமைப் பெண் இன்னொருவனுக்கு நிச்சயிக்கப்பட்டு இருக்கலாம். ஆனால், அவள் மீட்கப்படாமலோ விடுதலை செய்யப்படாமலோ இருக்கலாம். அவளோடு ஒருவன் உடலுறவுகொண்டால் அவர்களுக்குத் தண்டனை கொடுக்க வேண்டும். ஆனால், அவர்களைக் கொல்லக் கூடாது. ஏனென்றால், அவள் இன்னும் விடுதலை செய்யப்படவில்லை. 21  அவன் யெகோவாவுக்குக் குற்ற நிவாரண பலி செலுத்த ஒரு செம்மறியாட்டுக் கடாவைச்+ சந்திப்புக் கூடாரத்தின் வாசலுக்குக் கொண்டுவர வேண்டும். 22  அவன் செய்த பாவத்துக்காகக் குருவானவர் அந்தச் செம்மறியாட்டுக் கடாவை யெகோவாவின் சன்னிதியில் கொண்டுவந்து அவனுக்குப் பாவப் பரிகாரம் செய்வார். அப்போது, அவனுடைய பாவம் மன்னிக்கப்படும். 23  நான் கொடுக்கிற தேசத்துக்கு வந்தபின் அங்கே ஏதாவது பழ மரத்தை நீங்கள் நட்டால், அதன் பழங்களை மூன்று வருஷங்களுக்குச் சாப்பிடக் கூடாது. தடை செய்யப்பட்ட அசுத்தமான பழங்களாக அவற்றைக் கருத வேண்டும். 24  ஆனால், நான்காம் வருஷத்தில் அதன் பழங்கள் பரிசுத்தமாக இருக்கும், நீங்கள் அவற்றை யெகோவாவுக்குச் சந்தோஷமாகப் படைக்க வேண்டும்.+ 25  ஐந்தாம் வருஷத்தில் அதன் பழங்களை நீங்கள் சாப்பிடலாம். அந்த மரம் உங்களுக்கு ஏராளமான பழங்களைக் கொடுக்கும். நான் உங்கள் கடவுளாகிய யெகோவா. 26  இரத்தம் கலந்த எதையும் நீங்கள் சாப்பிடக் கூடாது.+ நீங்கள் சகுனம் பார்க்கவோ மாயமந்திரம் செய்யவோ கூடாது.+ 27  உங்களுடைய கிருதாவைச் சிரைத்துக்கொள்ள* கூடாது. உங்கள் தாடியை வெட்டி அலங்கோலமாக்கக் கூடாது.*+ 28  இறந்தவர்களுக்காக உங்கள் உடலைக் கீறிக் கிழித்துக்கொள்ளக் கூடாது,+ உங்கள் உடலில் பச்சை குத்திக்கொள்ளக் கூடாது. நான் யெகோவா. 29  உங்களுடைய மகளை விபச்சாரியாக்கி அவளை அவமானப்படுத்தக் கூடாது.+ அப்படிச் செய்தால், உங்கள் தேசம் விபச்சாரிகளால் சீரழிந்துவிடும். அங்கே ஒழுக்கக்கேடு பெருகிவிடும்.+ 30  நான் கட்டளை கொடுத்த ஓய்வுநாட்களை நீங்கள் கடைப்பிடிக்க வேண்டும்,+ என் வழிபாட்டுக் கூடாரத்துக்கு நீங்கள் பயபக்தி காட்ட வேண்டும். நான் யெகோவா. 31  ஆவிகளோடு பேசுகிறவர்களிடம் நீங்கள் போகக் கூடாது.+ குறிசொல்கிறவர்களிடம் குறி கேட்டு, உங்களை அசுத்தமாக்கிவிடக் கூடாது.+ நான் உங்கள் கடவுளாகிய யெகோவா. 32  நரைமுடி உள்ளவருக்கு முன்னால் நீங்கள் எழுந்து நிற்க வேண்டும்,+ வயதில் மூத்தவருக்கு நீங்கள் மரியாதை கொடுக்க வேண்டும்.+ உங்கள் கடவுளுக்கு நீங்கள் பயந்து நடக்க வேண்டும்.+ நான் யெகோவா. 33  உங்கள் தேசத்தில் குடியிருக்கிற வேறு தேசத்து ஜனங்களை நீங்கள் மோசமாக நடத்தக் கூடாது.+ 34  உங்களோடு குடியிருக்கிற வேறு தேசத்து ஜனங்களை உங்கள் தேசத்து ஜனங்களைப் போலவே நடத்த வேண்டும்.+ உங்களை நேசிப்பது போல அவர்களையும் நேசிக்க வேண்டும். நீங்களும் வேறு தேசத்தில், அதாவது எகிப்தில், குடியிருந்தீர்களே.+ நான் உங்கள் கடவுளாகிய யெகோவா. 35  எதையாவது அளக்கும்போதோ எடை போடும்போதோ நீங்கள் ஏமாற்றக் கூடாது.+ 36  சரியான தராசையும் சரியான எடைக்கல்லையும் சரியான படியையும்* சரியான ஆழாக்கையும்* நீங்கள் பயன்படுத்த வேண்டும்.+ எகிப்து தேசத்திலிருந்து உங்களைக் கூட்டிக்கொண்டு வந்த உங்கள் கடவுளாகிய யெகோவா நானே. 37  என்னுடைய எல்லா சட்டதிட்டங்களையும் நீதித்தீர்ப்புகளையும் நீங்கள் கடைப்பிடிக்க வேண்டும், அவற்றைப் பின்பற்ற வேண்டும்.+ நான் யெகோவா’” என்றார்.

அடிக்குறிப்புகள்

இந்த வார்த்தை, ஒருவருக்குக் கொடுக்க வேண்டியதைக் கொடுக்காமல் இருப்பதையும் குறிக்கலாம்.
அல்லது, “அடுத்தவர்களுடைய உயிர் ஆபத்தில் இருக்கும்போது நீங்கள் பக்கத்தில் நின்று வேடிக்கை பார்க்கக் கூடாது.”
வே.வா., “வன்மம்.”
வே.வா., “சக மனிதர்மேலும்.”
வே.வா., “வெட்டிக்கொள்ள.”
இது புறமத பழக்கங்களைக் குறிக்கலாம்.
நே.மொ., “எப்பாவையும்.” இணைப்பு B14-ஐப் பாருங்கள்.
நே.மொ., “ஹின் அளவையும்.” இணைப்பு B14-ஐப் பாருங்கள்.