Skip to content

Skip to secondary menu

பொருளடக்கத்திற்குச் செல்

யெகோவாவின் சாட்சிகள்

தமிழ்

ஆன்லைன் பைபிள் | புதிய உலக மொழிபெயர்ப்பு

லூக்கா 7:1-50

முக்கியக் குறிப்புகள்

  • படை அதிகாரியின் விசுவாசம் (1-10)

  • நாயீன் நகரத்து விதவையின் மகனை இயேசு உயிரோடு எழுப்புகிறார் (11-17)

  • யோவான் ஸ்நானகர் புகழப்படுகிறார் (18-30)

  • குறை சொல்கிற தலைமுறையைக் கண்டிக்கிறார் (31-35)

  • பாவியான பெண் மன்னிக்கப்படுகிறாள் (36-50)

    • கடன் வாங்கியவர்களைப் பற்றிய உவமை (41-43)

7  மக்களுக்குச் சொல்ல வேண்டியதையெல்லாம் அவர் சொல்லி முடித்த பிறகு கப்பர்நகூமுக்குள் போனார்.  படை அதிகாரியான* ஒருவருக்குப் பிரியமான வேலைக்காரன் வியாதிப்பட்டு, சாகிற நிலையில் இருந்தான்.+  இயேசுவைப் பற்றி அந்தப் படை அதிகாரி கேள்விப்பட்டபோது தன்னுடைய வேலைக்காரனைக் காப்பாற்ற வரும்படி கேட்டுக்கொள்வதற்காக யூதர்களுடைய பெரியோர்களில்* சிலரை அவரிடம் அனுப்பினார்.  அவர்கள் இயேசுவிடம் போய் மிகவும் கெஞ்சி, “நீங்கள் இந்த உதவியைச் செய்வதற்கு இவர் தகுதியானவர்.  ஏனென்றால், இவர் நம்முடைய மக்களை நேசிக்கிறார்; இங்கே ஒரு ஜெபக்கூடத்தையும் கட்டித் தந்திருக்கிறார்” என்று சொன்னார்கள்.  அதனால், இயேசு அவர்களோடு போனார். ஆனால், அந்த வீட்டுக்குச் சற்றுத் தூரத்தில் அவர் வந்துகொண்டிருந்தபோதே, படை அதிகாரி தன் நண்பர்களை அனுப்பி, “ஐயா, உங்களுக்குச் சிரமம் வேண்டாம்; நீங்கள் என்னுடைய வீட்டுக்குள் அடியெடுத்து வைப்பதற்கு எனக்கு எந்தத் தகுதியும் இல்லை.+  உங்களை வந்து பார்ப்பதற்கும்கூட தகுதி இல்லை. அதனால், ஒரு வார்த்தை சொல்லுங்கள், என் வேலைக்காரன் குணமாகட்டும்.  நான் அதிகாரம் உள்ளவர்களின் கீழ் வேலை செய்தாலும், என் அதிகாரத்துக்குக் கீழும் படைவீரர்கள் இருக்கிறார்கள்; நான் அவர்களில் ஒருவனிடம் ‘போ!’ என்றால் போகிறான், இன்னொருவனிடம் ‘வா!’ என்றால் வருகிறான்; என் அடிமையிடம் ‘இதைச் செய்!’ என்றால் செய்கிறான்” என்று சொல்லச் சொன்னார்.  அதைக் கேட்டு இயேசு ஆச்சரியப்பட்டு, தன் பின்னால் வந்துகொண்டிருந்த கூட்டத்தாரிடம் திரும்பி, “நான் உங்களுக்குச் சொல்கிறேன், இஸ்ரவேலில்கூட இப்பேர்ப்பட்ட விசுவாசத்தை நான் பார்த்ததில்லை”+ என்று சொன்னார். 10  அவரிடம் அனுப்பப்பட்டவர்கள் வீட்டுக்குத் திரும்பி வந்தபோது, அந்த வேலைக்காரன் குணமாகியிருந்ததைப் பார்த்தார்கள்.+ 11  பின்பு, நாயீன் என்ற நகரத்துக்கு அவர் பயணம் செய்தார். அவருடைய சீஷர்களும் ஏராளமான மக்களும் அவரோடு பயணம் செய்தார்கள். 12  அந்த நகரத்தின் வாசலுக்குப் பக்கத்தில் அவர் வந்தபோது, இறந்துபோன ஒருவனைச் சிலர் தூக்கிக்கொண்டு வந்தார்கள். அவன் தன்னுடைய அம்மாவுக்கு ஒரே மகன்.+ அவளோ ஒரு விதவை. அந்த நகரத்தைச் சேர்ந்த ஏராளமான மக்கள் அவளோடு வந்தார்கள். 13  இயேசு அவளைப் பார்த்தபோது, மனம் உருகி,+ “அழாதே”+ என்று சொன்னார். 14  பின்பு, பாடைக்குப் பக்கத்தில் போய் அதைத் தொட்டார். அதைத் தூக்கிக்கொண்டு வந்தவர்கள் அப்படியே நின்றார்கள். அப்போது அவர், “இளைஞனே, நான் உனக்குச் சொல்கிறேன், எழுந்திரு!”+ என்று சொன்னார். 15  இறந்துபோனவன் எழுந்து உட்கார்ந்து பேச ஆரம்பித்தான்; பின்பு, இயேசு அவனை அவனுடைய அம்மாவிடம் ஒப்படைத்தார்.+ 16  அங்கிருந்த எல்லாரும் பயந்துபோனார்கள்; “பெரிய தீர்க்கதரிசி ஒருவர் நம் மத்தியில் தோன்றியிருக்கிறார்”+ என்றும், “கடவுள் தன்னுடைய மக்கள்மேல் கவனத்தைத் திருப்பியிருக்கிறார்”+ என்றும் சொல்லி கடவுளை மகிமைப்படுத்த ஆரம்பித்தார்கள். 17  அவரைப் பற்றிய இந்தச் செய்தி யூதேயா முழுவதும் அதன் சுற்றுப்புறம் முழுவதும் பரவியது. 18  யோவானுடைய சீஷர்கள் இவற்றையெல்லாம் யோவானிடம் சொன்னார்கள்.+ 19  அதனால், அவர் தன் சீஷர்களில் இரண்டு பேரைக் கூப்பிட்டு, “வர வேண்டியவர் நீங்கள்தானா+ அல்லது வேறொருவரையும் நாங்கள் எதிர்பார்க்க வேண்டுமா?” என்று கேட்கச் சொல்லி இயேசுவிடம் அனுப்பினார். 20  அந்தச் சீஷர்கள் போய், “யோவான் ஸ்நானகர்* எங்களை உங்களிடம் அனுப்பி, ‘வர வேண்டியவர் நீங்கள்தானா அல்லது வேறொருவரையும் நாங்கள் எதிர்பார்க்க வேண்டுமா?’ என்று கேட்கச் சொன்னார்” என்றார்கள். 21  அந்த நேரத்தில் பலவிதமான நோய்களையும் கொடிய வியாதிகளையும் அவர் நீக்கினார்,+ பேய்களைத் துரத்தினார், ஏராளமான ஆட்களைக் குணமாக்கினார், பார்வையில்லாத நிறைய பேருக்குப் பார்வை கொடுத்தார். 22  அதன் பின்பு அவர் அந்தச் சீஷர்களிடம், “நீங்கள் பார்த்ததையும் கேட்டதையும் யோவானிடம் போய்ச் சொல்லுங்கள்: பார்வை இல்லாதவர்கள் பார்க்கிறார்கள்,+ நடக்க முடியாதவர்கள் நடக்கிறார்கள், தொழுநோயாளிகள் சுத்தமாகிறார்கள், காது கேட்காதவர்கள் கேட்கிறார்கள்,+ இறந்தவர்கள் உயிரோடு எழுப்பப்படுகிறார்கள், ஏழைகளுக்கு நல்ல செய்தி சொல்லப்படுகிறது.+ 23  எந்தச் சந்தேகத்துக்கும் இடம் கொடுக்காமல் என்னை நம்புகிறவன் சந்தோஷமானவன்”+ என்று சொன்னார். 24  யோவான் அனுப்பிய ஆட்கள் திரும்பிப் போன பின்பு, இயேசு அந்தக் கூட்டத்தாரிடம் யோவானைப் பற்றிப் பேச ஆரம்பித்தார்; அவர்களிடம், “எதைப் பார்க்க வனாந்தரத்துக்குப் போனீர்கள்? காற்றில் அசைந்தாடும் நாணலையா?+ 25  இல்லையென்றால், வேறு எதைப் பார்க்கப் போனீர்கள்? விலை உயர்ந்த உடை உடுத்திய மனுஷனையா?+ விலை உயர்ந்த உடை உடுத்தி ஆடம்பரமாக வாழ்கிறவர்கள் அரண்மனைகளில்தானே இருக்கிறார்கள்! 26  இல்லையென்றால், வேறு யாரைப் பார்க்கப் போனீர்கள்? ஒரு தீர்க்கதரிசியைப் பார்ப்பதற்காகவா? ஆம், நான் உங்களுக்குச் சொல்கிறேன், ஒரு தீர்க்கதரிசியைவிட மேலானவரைப் பார்க்கவே போனீர்கள்.+ 27  ‘இதோ! நான் என்னுடைய தூதுவரை உனக்கு முன்னால் அனுப்புகிறேன். அவர் உனக்கு முன்னால் போய் உன் பாதையைத் தயார்படுத்துவார்’ என்று இவரைப் பற்றித்தான் எழுதப்பட்டிருக்கிறது.+ 28  நான் உங்களுக்குச் சொல்கிறேன், மனுஷராகப் பிறந்தவர்களில் யோவானைவிட உயர்ந்தவர் யாரும் இல்லை; ஆனால், கடவுளுடைய அரசாங்கத்தில் தாழ்ந்தவராக இருக்கிறவர் அவரைவிட உயர்ந்தவராக இருக்கிறார்”+ என்று சொன்னார். 29  யோவானிடம் ஞானஸ்நானம் பெற்றிருந்த வரி வசூலிப்பவர்களும் மற்ற எல்லாரும்+ இதைக் கேட்டு, கடவுள் நீதியுள்ளவர் என்று அறிவித்தார்கள். 30  ஆனால், அவரிடம் ஞானஸ்நானம் பெறாத பரிசேயர்களும் திருச்சட்ட வல்லுநர்களும் கடவுளுடைய அறிவுரையை அலட்சியம் செய்தார்கள்.+ 31  அதோடு இயேசு, “இந்தத் தலைமுறையை நான் யாருக்கு ஒப்பிடுவேன்? இவர்கள் யாரைப் போல் இருக்கிறார்கள்?+ 32  சந்தையில் உட்கார்ந்துகொண்டு மற்ற பிள்ளைகளைப் பார்த்து, ‘உங்களுக்காகக் குழல் ஊதினோம், ஆனால் நீங்கள் நடனம் ஆடவில்லை; புலம்பி அழுதோம், ஆனால் நீங்கள் அழவில்லை’ என்று சொல்கிற சின்னப் பிள்ளைகளைப் போல் இருக்கிறார்கள். 33  எப்படியென்றால், யோவான் ஸ்நானகர் ரொட்டி சாப்பிடவும் இல்லை, திராட்சமது குடிக்கவும் இல்லை;+ ஆனால், ‘இவனுக்குப் பேய் பிடித்திருக்கிறது’ என்று நீங்கள் சொல்கிறீர்கள். 34  மனிதகுமாரனோ சாப்பிடுகிறார், குடிக்கிறார்; ஆனால், ‘இவன் பெருந்தீனிக்காரன், குடிகாரன், வரி வசூலிப்பவர்களுக்கும் பாவிகளுக்கும் நண்பன்!’+ என்று சொல்கிறீர்கள். 35  இருந்தாலும், ஒருவர் செய்கிற நீதியான செயல்கள்* அவர் ஞானமுள்ளவர் என்பதை நிரூபிக்கும்”+ என்று சொன்னார். 36  இயேசுவைத் தன்னுடைய வீட்டுக்கு விருந்து சாப்பிட வரச் சொல்லி பரிசேயர்களில் ஒருவன் கேட்டுக்கொண்டே இருந்தான். அதனால், அவர் அவனுடைய வீட்டுக்குப் போய்ச் சாப்பிட உட்கார்ந்தார். 37  அந்த நகரத்திலிருந்த பாவியாகிய ஒரு பெண் அதைக் கேள்விப்பட்டு, வாசனை எண்ணெய் நிறைந்த வெண்சலவைக்கல் குப்பி ஒன்றை எடுத்துவந்தாள்.+ 38  அவருக்குக் கால்மாட்டில் பின்புறமாக உட்கார்ந்துகொண்டு, அழுதுகொண்டே அவருடைய பாதங்களைக் கண்ணீரால் நனைத்து, தன்னுடைய கூந்தலால் துடைத்தாள். அவருடைய பாதங்களை மென்மையாக முத்தமிட்டு, அந்த வாசனை எண்ணெயை ஊற்றினாள். 39  அவரை விருந்துக்கு அழைத்த பரிசேயன் இதைப் பார்த்து, “இவர் ஒரு தீர்க்கதரிசியாக இருந்தால், தன்னைத் தொடுகிற இவள் யார், எப்படிப்பட்டவள் என்றெல்லாம் இவருக்குத் தெரிந்திருக்கும்; இவள் ஒரு பாவியாயிற்றே” என்று தனக்குள் சொல்லிக்கொண்டான்.+ 40  அப்போது இயேசு அவனிடம், “சீமோனே, நான் உனக்கு ஒன்று சொல்கிறேன்” என்றார். அதற்கு அவன், “சொல்லுங்கள், போதகரே!” என்றான். 41  அப்போது அவர், “ஒருவரிடம் இரண்டு பேர் கடன் வாங்கியிருந்தார்கள்; ஒருவன் 500 தினாரியு* வாங்கியிருந்தான், இன்னொருவன் 50 தினாரியு வாங்கியிருந்தான். 42  அவர்களால் கடனைத் திருப்பிக்கொடுக்க முடியாமல் போனபோது, அவர்கள் இரண்டு பேரையுமே அவர் தாராளமாக மன்னித்தார். அப்படியானால், அந்த இரண்டு பேரில் யார் அவரிடம் அதிகமாக அன்பு காட்டுவான்?” என்று கேட்டார். 43  அதற்கு சீமோன், “எவனுக்கு அதிகக் கடனை மன்னித்தாரோ அவன்தான் என்று நினைக்கிறேன்” என்றான். அவர், “சரியாகச் சொன்னாய்” என்றார். 44  பின்பு அந்தப் பெண்ணின் பக்கம் திரும்பி, சீமோனிடம், “இந்தப் பெண்ணைப் பார்த்தாயா? நான் உன்னுடைய வீட்டுக்கு வந்தேன்; நீ என் பாதங்களைக் கழுவத் தண்ணீர் தரவில்லை. ஆனால் இவள் என் பாதங்களைக் கண்ணீரால் நனைத்து, தன்னுடைய கூந்தலால் துடைத்தாள். 45  நீ என்னை முத்தமிடவில்லை; ஆனால், இந்தப் பெண் நான் உள்ளே வந்ததுமுதல் என்னுடைய பாதங்களை மென்மையாக முத்தமிட்டுக்கொண்டே இருக்கிறாள். 46  நீ என் தலையில் எண்ணெய் ஊற்றவில்லை; ஆனால், இந்தப் பெண் என் பாதங்களில் வாசனை எண்ணெயை ஊற்றினாள். 47  நான் உனக்குச் சொல்கிறேன், இவள் நிறைய* பாவங்கள் செய்திருந்தாலும் அவையெல்லாம் மன்னிக்கப்படுகின்றன,+ அதனால் இவள் இன்னும் அதிகமாக அன்பு காட்டுகிறாள்; ஆனால், குறைவாக மன்னிக்கப்படுகிறவன் குறைவாகவே அன்பு காட்டுகிறான்” என்று சொன்னார். 48  பின்பு அவளிடம், “உன்னுடைய பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன”+ என்று சொன்னார். 49  அவரோடு சாப்பிட்டுக்கொண்டிருந்தவர்கள், “இவர் யார்? பாவங்களைக்கூட மன்னிக்கிறாரே!” என்று சொல்லிக்கொண்டார்கள்.+ 50  ஆனால் அவர் அந்தப் பெண்ணிடம், “உன் விசுவாசம் உனக்கு மீட்பு தந்திருக்கிறது;+ சமாதானமாகப் போ” என்று சொன்னார்.

அடிக்குறிப்புகள்

அதாவது, “நூறு வீரர்களுக்கு அதிகாரியான.”
வே.வா., “மூப்பர்களில்.”
ஸ்நானகர் என்றால் ஞானஸ்நானம் கொடுக்கிறவர்.
வே.வா., “செயல்களால் கிடைக்கிற பலன்கள்.”
இணைப்பு B14-ஐப் பாருங்கள்.
வே.வா., “பெரிய.”