Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

யெகோவாவின் சாட்சிகள்

மொழியை தேர்ந்தெடுங்கள் தமிழ்

மாற்கு 11:1-33

முக்கியக் குறிப்புகள்

  • இயேசுவின் வெற்றி பவனி (1-11)

  • அத்தி மரத்தைச் சபிக்கிறார் (12-14)

  • ஆலயத்தைச் சுத்தப்படுத்துகிறார் (15-18)

  • பட்டுப்போன அத்தி மரத்திலிருந்து பாடம் (19-26)

  • இயேசுவின் அதிகாரத்தைப் பற்றிக் கேள்வி கேட்கிறார்கள் (27-33)

11  அவர்கள் எருசலேமை நெருங்கிக்கொண்டிருந்தார்கள்; ஒலிவ மலையில் இருக்கிற பெத்பகே, பெத்தானியா+ என்ற கிராமங்களுக்குப் பக்கத்தில் வந்தபோது அவர் தன்னுடைய சீஷர்கள் இரண்டு பேரை அனுப்பி,+  “அதோ! அங்கே தெரிகிற அந்தக் கிராமத்துக்குப் போங்கள்; அங்கே போனவுடன், இதுவரை யாரும் ஏறாத கழுதைக்குட்டி ஒன்று கட்டி வைக்கப்பட்டிருப்பதைப் பார்ப்பீர்கள்; அதை அவிழ்த்து இங்கே கொண்டுவாருங்கள்.  ‘ஏன் இப்படிச் செய்கிறீர்கள்?’ என்று யாராவது கேட்டால், ‘எஜமானுக்கு வேண்டும், உடனே அவர் இதைத் திருப்பி அனுப்பிவிடுவார்’ என்று சொல்லுங்கள்” என்றார்.  அதன்படியே அவர்கள் புறப்பட்டுப் போய், ஒரு வீட்டு வாசலுக்கு வெளியே தெருவில் கட்டப்பட்டிருந்த கழுதைக்குட்டியைப் பார்த்து அதை அவிழ்த்தார்கள்.+  அப்போது அங்கே நின்றுகொண்டிருந்த சிலர், “கழுதைக்குட்டியை ஏன் அவிழ்க்கிறீர்கள்?” என்று அவர்களிடம் கேட்டார்கள்.  இயேசு சொன்னபடியே அவர்கள் பதில் சொன்னபோது அவர்களைப் போகவிட்டார்கள்.  பின்பு, அவர்கள் இரண்டு பேரும் அந்தக் கழுதைக்குட்டியை+ இயேசுவிடம் கொண்டுவந்து, அதன்மேல் தங்கள் மேலங்கிகளைப் போட்டார்கள்; அவர் அதன்மேல் உட்கார்ந்தார்.+  நிறைய பேர் தங்களுடைய மேலங்கிகளை வழியில் விரித்தார்கள்; வேறு சிலர் பாதையோரத்திலிருந்து இளங்கிளைகளை ஒடித்துக்கொண்டு வந்து வழியில் பரப்பினார்கள்.+  முன்னால் போனவர்களும் பின்னால் வந்தவர்களும், “கடவுளே, இவரைக் காத்தருளுங்கள்!*+ யெகோவாவின்* பெயரில் வருகிறவர் ஆசீர்வதிக்கப்பட்டவர்!+ 10  வரப்போகிற நம் தந்தை தாவீதின் அரசாங்கம் ஆசீர்வதிக்கப்பட்டது!+ பரலோகத்தில் இருக்கிறவரே, இவரைக் காத்தருளுங்கள்!” என்று ஆரவாரம் செய்துகொண்டே இருந்தார்கள். 11  அவர் எருசலேமுக்கு வந்து, ஆலயத்துக்குள் போய், அங்கிருந்த எல்லாவற்றையும் பார்த்தார்; அதற்குள் அதிக நேரமாகிவிட்டதால் பன்னிரண்டு பேரோடு* பெத்தானியாவுக்குப் போனார்.+ 12  மறுநாள் பெத்தானியாவிலிருந்து அவர்கள் வந்துகொண்டிருந்தபோது அவருக்குப் பசி எடுத்தது.+ 13  அப்போது இலைகள் நிறைந்த ஓர் அத்தி மரத்தைத் தூரத்திலிருந்து பார்த்தார்; அதில் கனி ஏதாவது இருக்கிறதா என்று பார்க்க அதன் பக்கத்தில் போனார். ஆனால், அதில் இலைகள் மட்டும்தான் இருந்தன, ஒரு கனிகூட இல்லை; ஏனென்றால், அது அத்திப்பழ பருவம் கிடையாது. 14  அப்போது அவர் அந்த மரத்தைப் பார்த்து, “இனி யாரும் எப்போதும் உன் கனிகளைச் சாப்பிடாமல் இருக்கட்டும்”+ என்று சொன்னார். அவருடைய சீஷர்கள் அதைக் கேட்டுக்கொண்டிருந்தார்கள். 15  பின்பு, அவர்கள் எருசலேமுக்கு வந்தார்கள். அவர் ஆலயத்துக்குள் போய், அங்கே விற்றுக்கொண்டும் வாங்கிக்கொண்டும் இருந்தவர்களை வெளியே துரத்த ஆரம்பித்தார்; காசு மாற்றுபவர்களின் மேஜைகளையும் புறா விற்பவர்களின் இருக்கைகளையும் கவிழ்த்துப்போட்டார்.+ 16  ஆலயத்தின் வழியாக எதையும் எடுத்துக்கொண்டு போக அவர் யாரையும் அனுமதிக்கவில்லை. 17  அதேசமயம், அவர் தொடர்ந்து கற்பித்து, “‘என்னுடைய வீடு எல்லா தேசத்தாருக்கும் ஜெப வீடாக இருக்கும்’ என்று எழுதப்பட்டிருக்கிறது,+ இல்லையா? ஆனால் நீங்கள் அதைக் கொள்ளைக்காரர்களின் குகையாக்கிவிட்டீர்கள்”+ என்றார். 18  இதைக் கேட்ட முதன்மை குருமார்களும் வேத அறிஞர்களும் அவரைக் கொல்வதற்கு வழிதேட ஆரம்பித்தார்கள்;+ ஆனாலும், அவர் கற்பித்ததைக் கேட்டு மக்கள் எல்லாரும் மலைத்துப்போனதால் அவரை நினைத்துப் பயந்தார்கள்.+ 19  சாயங்கால நேரத்தில் இயேசுவும் அவருடைய சீஷர்களும் நகரத்துக்கு வெளியே போனார்கள். 20  விடியற்காலையில் அந்த வழியாக அவர்கள் வந்துகொண்டிருந்தபோது, அந்த அத்தி மரம் வேரோடு பட்டுப்போயிருந்ததைப் பார்த்தார்கள்.+ 21  இயேசு சொன்னது பேதுருவின் ஞாபகத்துக்கு வந்தது; அதனால், “ரபீ,* இதோ! நீங்கள் சபித்த அத்தி மரம் பட்டுப்போய்விட்டது”+ என்று சொன்னார். 22  அதற்கு அவர், “கடவுள்மேல் விசுவாசம் வையுங்கள். 23  உண்மையாகவே உங்களுக்குச் சொல்கிறேன், யாராவது இந்த மலையைப் பார்த்து, ‘இங்கிருந்து பெயர்ந்து போய்க் கடலில் விழு’ என்று சொல்லி, அது நடக்குமென்று சந்தேகப்படாமல் விசுவாசித்தால், அவர் சொன்னபடியே நடக்கும்.+ 24  இதனால்தான் நான் சொல்கிறேன், நீங்கள் கடவுளிடம் எதையெல்லாம் கேட்கிறீர்களோ அதையெல்லாம் பெற்றுக்கொண்டதாகவே விசுவாசியுங்கள், அப்போது அதையெல்லாம் நிச்சயம் பெற்றுக்கொள்வீர்கள்.+ 25  நீங்கள் ஜெபம் செய்ய நிற்கும்போது, யார் மீதாவது உங்களுக்கு மனவருத்தம் இருந்தால் அவர்களை மன்னித்துவிடுங்கள்; அப்போதுதான் உங்கள் பரலோகத் தகப்பனும் உங்கள் குற்றங்களை மன்னிப்பார்”+ என்று சொன்னார். 26  *—— 27  அவர்கள் மறுபடியும் எருசலேமுக்கு வந்தார்கள். ஆலயத்தில் அவர் நடந்துகொண்டிருந்தபோது, முதன்மை குருமார்களும் வேத அறிஞர்களும் பெரியோர்களும்* அவரிடம் வந்து, 28  “எந்த அதிகாரத்தால் நீ இதையெல்லாம் செய்கிறாய்? இதையெல்லாம் செய்ய உனக்கு அதிகாரம் கொடுத்தது யார்?”+ என்று கேட்டார்கள். 29  அதற்கு இயேசு, “நான் உங்களிடம் ஒரு கேள்வி கேட்கிறேன், அதற்குப் பதில் சொல்லுங்கள்; அப்போது, எந்த அதிகாரத்தால் இதையெல்லாம் செய்கிறேன் என்று நானும் உங்களுக்குச் சொல்கிறேன். 30  ஞானஸ்நானம் கொடுக்கிற அதிகாரத்தை யோவானுக்குக்+ கொடுத்தது கடவுளா* மனுஷர்களா? பதில் சொல்லுங்கள்”+ என்றார். 31  அப்போது அவர்கள், “‘கடவுள்’ என்று சொன்னால், ‘பின்பு ஏன் அவரை நம்பவில்லை?’ என்று கேட்பான். 32  ‘மனுஷர்கள்’ என்று சொன்னால் நம் கதி என்னவாகும்?” என்று தங்களுக்குள் பேசிக்கொண்டார்கள். யோவான் உண்மையிலேயே ஒரு தீர்க்கதரிசி என்று மக்கள் எல்லாரும் நம்பியதால் அப்படிச் சொல்ல பயந்தார்கள்.+ 33  அதனால், “எங்களுக்குத் தெரியாது” என்று இயேசுவிடம் சொன்னார்கள். அதற்கு இயேசு, “அப்படியானால், எந்த அதிகாரத்தால் இதையெல்லாம் செய்கிறேன் என்று நானும் உங்களுக்குச் சொல்ல மாட்டேன்” என்றார்.

அடிக்குறிப்புகள்

கிரேக்கில், “ஓசன்னா.”
இணைப்பு A5-ஐப் பாருங்கள்.
அதாவது, “அப்போஸ்தலர்களோடு.”
அதாவது, “போதகரே.”
இணைப்பு A3-ஐப் பாருங்கள்.
வே.வா., “மூப்பர்களும்.”
நே.மொ., “பரலோகமா.”