Skip to content

Skip to secondary menu

பொருளடக்கத்திற்குச் செல்

யெகோவாவின் சாட்சிகள்

தமிழ்

ஆன்லைன் பைபிள் | புதிய உலக மொழிபெயர்ப்பு

மத்தேயு 18:1-35

முக்கியக் குறிப்புகள்

  • பரலோக அரசாங்கத்தில் மிக உயர்ந்தவர் (1-6)

  • பாவம் செய்யத் தூண்டுகிறவர்கள் (7-11)

  • வழிதவறிப் போன ஆட்டைப் பற்றிய உவமை (12-14)

  • சகோதரரை நல்ல வழிக்குக் கொண்டுவருவது எப்படி (15-20)

  • மன்னிக்காத அடிமையைப் பற்றிய உவமை (21-35)

18  அந்த நேரத்தில் சீஷர்கள் இயேசுவின் பக்கம் வந்து, “பரலோக அரசாங்கத்தில் உண்மையில் யார் மிக உயர்ந்தவராக இருப்பார்?”+ என்று கேட்டார்கள்.  அப்போது அவர் ஒரு சின்னப் பிள்ளையைக் கூப்பிட்டு அவர்கள் நடுவில் நிறுத்தி,  “உண்மையாகவே உங்களுக்குச் சொல்கிறேன், நீங்கள் உங்களை மாற்றிக்கொண்டு* சின்னப் பிள்ளைகளைப் போல் ஆகாவிட்டால்,+ ஒருபோதும் பரலோக அரசாங்கத்துக்குள் அனுமதிக்கப்பட மாட்டீர்கள்.+  இந்தச் சின்னப் பிள்ளையைப் போல் தாழ்மையாக நடந்துகொள்கிறவர்தான் பரலோக அரசாங்கத்தில் மிக உயர்ந்தவராக இருப்பார்.+  இப்படிப்பட்ட ஒரு சின்னப் பிள்ளையை எனக்காக* ஏற்றுக்கொள்கிறவர் என்னையும் ஏற்றுக்கொள்கிறார்.  ஆனால், என்மேல் விசுவாசம் வைக்கிற இந்தச் சிறியவர்களில் ஒருவரை யாராவது பாவம் செய்ய வைத்தால், மாவு அரைக்கும் ஒரு பெரிய கல்லை* அவனுடைய கழுத்தில் கட்டி, ஆழமான கடலில் தள்ளிவிடுவதே அவனுக்கு நல்லது.+  மக்களைப் பாவம் செய்யத் தூண்டுகிற இந்த உலகத்துக்குக் கேடுதான் வரும்! மற்றவர்களைப் பாவம் செய்யத் தூண்டுகிற ஆட்கள் கண்டிப்பாக இருப்பார்கள்; ஆனால், அவர்களுக்குக் கேடுதான் வரும்!  உன் கையோ காலோ உன்னைப் பாவம் செய்ய வைத்தால், அதை வெட்டி எறிந்துவிடு;+ என்றுமே அணையாத நெருப்புக்குள் இரண்டு கைகளுடனோ இரண்டு கால்களுடனோ நீ வீசப்படுவதைவிட, ஊனமாகவோ முடமாகவோ வாழ்வை* பெறுவது நல்லது.+  உன் கண் உன்னைப் பாவம் செய்ய வைத்தால், அதைப் பிடுங்கி எறிந்துவிடு; கொழுந்துவிட்டு எரிகிற கெஹென்னாவுக்குள்* இரண்டு கண்களோடு நீ வீசப்படுவதைவிட ஒற்றைக் கண்ணோடு வாழ்வைப் பெறுவது நல்லது.+ 10  இந்தச் சிறியவர்களில் ஒருவரைக்கூட கேவலமாக நினைக்காதபடி கவனமாக இருங்கள்; ஏனென்றால், அவர்களுடைய தேவதூதர்கள் என் பரலோகத் தகப்பனின் முகத்துக்கு முன்னால் எப்போதும் இருக்கிறார்கள்+ என்று நான் உங்களுக்குச் சொல்கிறேன். 11  *—— 12  நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? ஒருவனிடம் 100 ஆடுகள் இருந்து, அவற்றில் ஒன்று வழிதவறிப் போனால்,+ அவன் மற்ற 99 ஆடுகளையும் மலைகளில் விட்டுவிட்டு, வழிதவறி அலைகிற ஆட்டைத் தேடிப் போவான், இல்லையா?+ 13  அவன் அதைக் கண்டுபிடித்துவிட்டால், வழிதவறிப் போகாத மற்ற 99 ஆடுகளைவிட அந்த ஒரு ஆட்டை நினைத்தே அதிக சந்தோஷப்படுவான் என்று நான் உங்களுக்கு நிச்சயமாகவே சொல்கிறேன். 14  அதுபோலவே, இந்தச் சிறியவர்களில் ஒருவர்கூட அழிந்துபோவதை என்* பரலோகத் தகப்பன் விரும்புவதில்லை.+ 15  உங்கள் சகோதரர் ஒரு பாவம் செய்துவிட்டால், அவரிடம் தனியாகப் போய் அவர் செய்த தவறை எடுத்துச் சொல்லுங்கள்;+ நீங்கள் சொல்வதை அவர் காதுகொடுத்துக் கேட்டால், நீங்கள் அவரை நல்ல வழிக்குக் கொண்டுவந்திருப்பீர்கள்.+ 16  நீங்கள் சொல்வதை அவர் கேட்கவில்லை என்றால், ஒருவரையோ இருவரையோ உங்களோடு கூட்டிக்கொண்டு போய்ப் பேசுங்கள். ஏனென்றால், இரண்டு அல்லது மூன்று சாட்சிகளின் வாக்குமூலம் எல்லா விஷயங்களையும் உறுதிசெய்யும்.+ 17  அவர்கள் சொல்வதையும் அவர் கேட்கவில்லை என்றால், சபைக்குத் தெரியப்படுத்துங்கள். சபை சொல்வதையும் அவர் கேட்கவில்லை என்றால், அவர் உங்களுக்கு மற்ற தேசத்தாரைப் போலவும்+ வரி வசூலிப்பவரைப் போலவும் இருக்கட்டும்.+ 18  உண்மையாகவே உங்களுக்குச் சொல்கிறேன், நீங்கள் பூமியில் பூட்டுவதெல்லாம் பரலோகத்தில் ஏற்கெனவே பூட்டப்பட்டிருக்கும், நீங்கள் பூமியில் திறப்பதெல்லாம் பரலோகத்தில் ஏற்கெனவே திறக்கப்பட்டிருக்கும்.* 19  மறுபடியும் உங்களுக்குச் சொல்கிறேன், இந்தப் பூமியிலே உங்களில் இரண்டு பேர் முக்கியமான எந்தவொரு விஷயத்தைப் பற்றியும் ஒருமனதாக வேண்டிக்கொண்டால், என் பரலோகத் தகப்பன் அதை நிறைவேற்றுவார்.+ 20  ஏனென்றால், இரண்டு அல்லது மூன்று பேர் எங்கெல்லாம் என் பெயரில் ஒன்றுகூடுகிறார்களோ+ அங்கெல்லாம் நான் அவர்கள் நடுவில் இருப்பேன்” என்று சொன்னார். 21  அப்போது பேதுரு அவரிடம் வந்து, “எஜமானே, எனக்கு விரோதமாக என் சகோதரன் பாவம் செய்தால் நான் எத்தனை தடவை அவனை மன்னிக்க வேண்டும்? ஏழு தடவையா?” என்று கேட்டார். 22  அதற்கு இயேசு, “ஏழு தடவை அல்ல, 77 தடவை என்று நான் உனக்குச் சொல்கிறேன்.+ 23  அதனால்தான் பரலோக அரசாங்கம், அடிமைகளிடம் கடனை வசூலிக்க நினைத்த ஒரு ராஜாவைப் போல் இருக்கிறது. 24  அந்த ராஜா அவர்களிடம் கடனை வசூலிக்க ஆரம்பித்தபோது, 10,000 தாலந்து* கடன்பட்டிருந்த ஒருவனை அவரிடம் கொண்டுவந்தார்கள். 25  அதைத் திருப்பிக் கொடுக்க முடியாத நிலையில் அவன் இருந்ததால், அவனையும் அவனுடைய மனைவியையும் பிள்ளைகளையும் அவனிடமிருந்த எல்லாவற்றையும் விற்று கடனை அடைக்க வேண்டுமென்று+ அந்த ராஜா கட்டளையிட்டார். 26  அப்போது அந்த அடிமை அவருடைய காலில் விழுந்து, ‘கொஞ்சம் பொறுத்துக்கொள்ளுங்கள், எல்லாவற்றையும் உங்களுக்குத் திருப்பிக் கொடுத்துவிடுகிறேன்’ என்று சொல்லிக் கெஞ்சினான். 27  அதைப் பார்த்தபோது ராஜாவின் மனம் உருகியது; அதனால் அவனை விடுதலை செய்து, அவனுடைய கடன்களையெல்லாம் ரத்து செய்துவிட்டார்.+ 28  ஆனால் அந்த அடிமை வெளியே போய், தனக்கு 100 தினாரியு* கடன்பட்டிருந்த சக அடிமை ஒருவனைத் தேடிக் கண்டுபிடித்து, ‘எனக்குக் கொடுக்க வேண்டிய கடனையெல்லாம் திருப்பிக் கொடு’ என்று சொல்லி, அவனைப் பிடித்து, கழுத்தை நெரிக்க ஆரம்பித்தான். 29  அப்போது அந்தச் சக அடிமை அவனுடைய காலில் விழுந்து, ‘கொஞ்சம் பொறுத்துக்கொள்ளுங்கள், நான் உங்களுக்குத் திருப்பிக் கொடுத்துவிடுகிறேன்’ என்று சொல்லிக் கெஞ்ச ஆரம்பித்தான். 30  ஆனால், அவன் அதற்கு ஒத்துக்கொள்ளவில்லை. அங்கிருந்து புறப்பட்டுப் போய், கடனைத் திருப்பிக் கொடுக்கும்வரை அந்த அடிமையைச் சிறையில் அடைக்கச் செய்தான். 31  நடந்ததையெல்லாம் பார்த்து அவனுடைய சக அடிமைகள் மிகவும் வேதனைப்பட்டார்கள்; பின்பு, ராஜாவிடம் போய் நடந்ததையெல்லாம் சொன்னார்கள். 32  அப்போது, அந்த ராஜா அவனை வரவழைத்து, ‘பொல்லாத அடிமையே, நீ என்னிடம் கெஞ்சிக் கேட்டபோது உன் கடனையெல்லாம் ரத்து செய்தேன். 33  நான் உனக்கு இரக்கம் காட்டியதைப் போல் நீயும் உன்னுடைய சக அடிமைக்கு இரக்கம் காட்டியிருக்க வேண்டாமா?’+ என்று கேட்டார். 34  அவருக்கு அவன்மேல் பயங்கர கோபம் வந்ததால், எல்லா கடனையும் அடைக்கும்வரை அவனைச் சிறைக்காவலர்களிடம் ஒப்படைத்தார். 35  அப்படியே, நீங்கள் ஒவ்வொருவரும் உங்கள் சகோதரரை உள்ளப்பூர்வமாக மன்னிக்காவிட்டால்+ என் பரலோகத் தகப்பனும் உங்களை மன்னிக்க மாட்டார்”+ என்று சொன்னார்.

அடிக்குறிப்புகள்

நே.மொ., “உங்கள் வழியைவிட்டு முழுமையாகத் திரும்பி.”
வே.வா., “என் பெயரில்.”
வே.வா., “கழுதையை வைத்து இழுக்கப்படும் திரிகைக் கல்லை.”
அதாவது, “முடிவில்லாத வாழ்வை.”
இணைப்பு A3-ஐப் பாருங்கள்.
அல்லது, “உங்கள்.”
வே.வா., “பூமியில் நீங்கள் கட்டுவதெல்லாம் பரலோகத்தில் ஏற்கெனவே கட்டப்பட்டிருக்கும், பூமியில் நீங்கள் கட்டவிழ்ப்பதெல்லாம் பரலோகத்தில் ஏற்கெனவே கட்டவிழ்க்கப்பட்டிருக்கும்.”
10,000 தாலந்து வெள்ளி என்பது 6,00,00,000 தினாரியு. இணைப்பு B14-ஐப் பாருங்கள்.
இணைப்பு B14-ஐப் பாருங்கள்.