Skip to content

Skip to secondary menu

பொருளடக்கத்திற்குச் செல்

யெகோவாவின் சாட்சிகள்

தமிழ்

ஆன்லைன் பைபிள் | புதிய உலக மொழிபெயர்ப்பு

மத்தேயு 14:1-36

முக்கியக் குறிப்புகள்

  • யோவானின் தலை வெட்டப்படுகிறது (1-12)

  • 5,000 பேருக்கு இயேசு உணவு கொடுக்கிறார் (13-21)

  • தண்ணீர்மேல் நடக்கிறார் (22-33)

  • கெனேசரேத்தில் மக்களைக் குணமாக்குகிறார் (34-36)

14  அந்தச் சமயத்தில், இயேசுவைப் பற்றிய செய்தியை மாகாண அதிபதி ஏரோது* கேள்விப்பட்டான்.+  அவன் தன்னுடைய வேலையாட்களிடம், “இவர் யோவான் ஸ்நானகர்தான்.* இவர் உயிரோடு எழுப்பப்பட்டிருக்கிறார், அதனால்தான் இவரால் அற்புதங்களைச் செய்ய முடிகிறது”+ என்று சொன்னான்.  ஏரோது தன்னுடைய சகோதரன் பிலிப்புவின் மனைவி ஏரோதியாளைப் பிரியப்படுத்துவதற்காக யோவானைப் பிடித்து சங்கிலியால் கட்டி சிறையில் அடைத்திருந்தான்.+  ஏனென்றால் யோவான் அவனிடம், “நீங்கள் அவளை வைத்திருப்பது சரியல்ல”+ என்று நிறைய தடவை சொல்லியிருந்தார்;  அதனால் ஏரோது அவரைக் கொல்ல நினைத்தான், ஆனால் மக்கள் அவரை ஒரு தீர்க்கதரிசி என்று நம்பியதால் அவர்களுக்குப் பயந்தான்.+  ஏரோதுவின் பிறந்தநாள்+ கொண்டாட்டத்தில், ஏரோதியாளின் மகள் அங்கிருந்த விருந்தாளிகள் முன்னால் நடனம் ஆடினாள்; அதைப் பார்த்து ஏரோது மனம் குளிர்ந்துபோனான்.+  அதனால், அவள் என்ன கேட்டாலும் தருவதாக ஆணையிட்டுக் கொடுத்தான்.  அப்போது அவள் தன்னுடைய அம்மா தூண்டிவிட்டபடியே, “யோவான் ஸ்நானகனின் தலையை ஒரு தட்டில் வைத்து எனக்குக் கொடுங்கள்” என்று சொன்னாள்.+  அதைக் கேட்டு ராஜா துக்கமடைந்தான்; ஆனாலும், விருந்தாளிகள் முன்னால் ஆணையிட்டுக் கொடுத்திருந்ததால் அவள் விருப்பத்தை நிறைவேற்றச் சொல்லி உத்தரவிட்டான். 10  உடனே ஆள் அனுப்பி, சிறையிலிருந்த யோவானின் தலையை வெட்டச் செய்தான். 11  அவருடைய தலை ஒரு தட்டில் வைக்கப்பட்டு அந்தப் பெண்ணிடம் கொடுக்கப்பட்டது; அவள் அதைத் தன் அம்மாவிடம் கொண்டுபோய்க் கொடுத்தாள். 12  யோவானுடைய சீஷர்கள் வந்து அவருடைய உடலை எடுத்துக்கொண்டுபோய் அடக்கம் செய்தார்கள்; பின்பு, இயேசுவிடம் வந்து விஷயத்தைச் சொன்னார்கள். 13  இயேசு இதைக் கேட்டதும், கொஞ்ச நேரம் தனியாக இருப்பதற்காகப் படகில் ஏறி, ஒதுக்குப்புறமான ஓர் இடத்துக்குப் போனார்; ஆனால் மக்கள் இதைக் கேள்விப்பட்டு, தங்கள் நகரங்களிலிருந்து நடந்தே அவரிடம் போனார்கள்.+ 14  அவர் அங்கே போய் இறங்கியபோது ஏராளமான மக்கள் திரண்டு வந்திருந்ததைப் பார்த்து, மனம் உருகி,+ அங்கிருந்த நோயாளிகளைக் குணமாக்கினார்.+ 15  சாயங்காலம் ஆனபோது சீஷர்கள் அவரிடம் வந்து, “இது ஒதுக்குப்புறமான இடம், ரொம்ப நேரமும் ஆகிவிட்டது. அதனால் இந்த மக்களை அனுப்பிவிடுங்கள். கிராமங்களுக்குப் போய் இவர்கள் ஏதாவது வாங்கிச் சாப்பிடட்டும்”+ என்று சொன்னார்கள். 16  அதற்கு இயேசு, “இவர்கள் போக வேண்டியதில்லை; நீங்களே இவர்களுக்கு ஏதாவது சாப்பிடக் கொடுங்கள்” என்று சொன்னார். 17  அதற்கு அவர்கள், “ஐந்து ரொட்டிகளையும் இரண்டு மீன்களையும் தவிர எங்களிடம் வேறொன்றும் இல்லை” என்று சொன்னார்கள். 18  அப்போது அவர், “அவற்றை என்னிடம் கொண்டுவாருங்கள்” என்று சொன்னார். 19  அதன் பின்பு, புல்தரையில் உட்காரும்படி கூட்டத்தாரிடம் சொல்லிவிட்டு அந்த ஐந்து ரொட்டிகளையும் இரண்டு மீன்களையும் எடுத்து, வானத்தைப் பார்த்து, ஜெபம் செய்தார்.*+ பின்பு, ரொட்டிகளைப் பிட்டு சீஷர்களிடம் கொடுத்தார், அவர்கள் அதைக் கூட்டத்தாருக்குக் கொடுத்தார்கள். 20  எல்லாரும் திருப்தியாகச் சாப்பிட்டார்கள்; மீதியிருந்த ரொட்டித் துண்டுகளை 12 கூடைகள் நிறைய அவர்கள் சேகரித்தார்கள்.+ 21  இத்தனைக்கும், பெண்களையும் சின்னப் பிள்ளைகளையும் தவிர, சுமார் 5,000 ஆண்கள் சாப்பிட்டிருந்தார்கள்.+ 22  பின்பு, கூட்டத்தாரை அவர் அனுப்ப ஆரம்பித்தார்; அதோடு, உடனடியாகப் படகில் ஏறி தனக்கு முன்பே அக்கரைக்குப் போகும்படி சீஷர்களை அனுப்பினார்.+ 23  கூட்டத்தாரை அனுப்பிய பின்பு, ஜெபம் செய்வதற்காகத் தனியே ஒரு மலைக்கு அவர் போனார்.+ பொழுது சாய்ந்தபோது அவர் அங்கே தனியாக இருந்தார். 24  இதற்குள், படகு கரையிலிருந்து ரொம்பத் தூரம்* போயிருந்தது. எதிர்க்காற்று வீசியதால் அது அலைகளினால் அலைக்கழிக்கப்பட்டது; 25  நான்காம் ஜாமத்தில்,* அவர்களை நோக்கி அவர் கடல்மேல் நடந்து வந்தார். 26  அவர் கடல்மேல் நடந்து வருவதை சீஷர்கள் பார்த்தபோது கலக்கமடைந்தார்கள்; “ஏதோ மாய உருவம்!” என்று சொல்லி அலறினார்கள். 27  உடனே இயேசு அவர்களிடம், “தைரியமாக இருங்கள், நான்தான்; பயப்படாதீர்கள்” என்று சொன்னார்.+ 28  அப்போது பேதுரு அவரிடம், “எஜமானே, நீங்களா? அப்படியானால், நானும் தண்ணீர்மேல் நடந்து உங்களிடம் வருவதற்குக் கட்டளையிடுங்கள்” என்று சொன்னார். 29  அதற்கு அவர், “வா!” என்று சொன்னார். பேதுருவும் படகிலிருந்து இறங்கித் தண்ணீர்மேல் நடந்து இயேசுவை நோக்கிப் போனார். 30  ஆனால், புயல்காற்றைப் பார்த்ததும் பயந்துபோய்த் தண்ணீரில் மூழ்க ஆரம்பித்தார்; அப்போது, “எஜமானே, என்னைக் காப்பாற்றுங்கள்!” என்று அலறினார். 31  உடனே இயேசு தன் கையை நீட்டி அவரைப் பிடித்துக்கொண்டு, “விசுவாசத்தில் குறைவுபட்டவனே, ஏன் சந்தேகப்பட்டாய்?”+ என்று கேட்டார். 32  அவர்கள் படகில் ஏறிய பிறகு புயல்காற்று அடங்கியது. 33  படகில் இருந்தவர்கள் அவர் முன்னால் தலைவணங்கி, “நீங்கள் உண்மையிலேயே கடவுளுடைய மகன்தான்” என்று சொன்னார்கள். 34  பின்பு, அவர்கள் கடலைக் கடந்து, கெனேசரேத்துக்கு வந்துசேர்ந்தார்கள்.+ 35  அந்தப் பகுதியிலிருந்த ஆட்கள் அவரை அடையாளம் கண்டுகொண்டதும், சுற்றுவட்டாரத்தில் இருந்த எல்லா இடங்களுக்கும் செய்தி அனுப்பினார்கள். அதனால், நோயாளிகள் எல்லாரையும் மக்கள் அவரிடம் கூட்டிக்கொண்டு வந்தார்கள். 36  அவருடைய மேலங்கியின் ஓரத்தையாவது தொட அனுமதிக்கும்படி அவரிடம் கெஞ்சிக் கேட்டார்கள்.+ அப்படித் தொட்ட அத்தனை பேரும் முழுமையாகக் குணமானார்கள்.

அடிக்குறிப்புகள்

அதாவது, “ஏரோது அந்திப்பா.” சொல் பட்டியலைப் பாருங்கள்.
ஸ்நானகர் என்றால் ஞானஸ்நானம் கொடுக்கிறவர்.
நே.மொ., “அவற்றை ஆசீர்வதித்தார்.”
நே.மொ., “பல ஸ்டேடியா.” ஒரு ஸ்டேடியம் என்பது 185 மீ.
அதாவது, “அதிகாலை சுமார் 3 மணியிலிருந்து சுமார் 6 மணிக்கு இடைப்பட்ட சமயத்தில்.”