Skip to content

Skip to secondary menu

பொருளடக்கத்திற்குச் செல்

யெகோவாவின் சாட்சிகள்

தமிழ்

ஆன்லைன் பைபிள் | புதிய உலக மொழிபெயர்ப்பு

நெகேமியா 13:1-31

முக்கியக் குறிப்புகள்

  • நெகேமியா சீர்கேடுகளைச் சரிசெய்கிறார் (1-31)

    • பத்திலொரு பாகம் கொடுக்கப்பட வேண்டும் (10-13)

    • ஓய்வுநாளை அவமதிக்கக் கூடாது (15-22)

    • கலப்புத் திருமணம் கண்டிக்கப்படுகிறது (23-28)

13  அன்று ஜனங்களுக்கு முன்னால் மோசேயின் புத்தகம் வாசிக்கப்பட்டது.+ அதில், உண்மைக் கடவுளுடைய சபையின் பாகமாக ஆவதற்கு அம்மோனியர்களையும் மோவாபியர்களையும்+ ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது என்று எழுதப்பட்டிருந்தது.+  ஏனென்றால், அவர்கள் இஸ்ரவேலர்களுக்கு உணவும் தண்ணீரும் தரவில்லை. அதுமட்டுமல்ல, இஸ்ரவேலர்களைச் சபிக்கச் சொல்லி பிலேயாமுக்குக் கூலி கொடுத்தார்கள்.+ ஆனால், எங்கள் கடவுள் அந்தச் சாபத்தை ஆசீர்வாதமாக மாற்றினார்.+  திருச்சட்டம் வாசிக்கப்பட்டதைக் கேட்டதும், மற்ற தேசத்தார்* எல்லாரும் இஸ்ரவேல் ஜனங்களிலிருந்து தனியாகப் பிரிக்கப்பட்டார்கள்.+  இதற்குமுன் எங்கள் கடவுளுடைய ஆலயத்தின் சேமிப்பு* அறைகளைக் குருவாகிய எலியாசிப் கவனித்துவந்தார்.+ அவர் தொபியாவின்+ சொந்தக்காரர்.  அவர் தொபியாவுக்கு ஒரு பெரிய சேமிப்பு* அறையைக் கொடுத்திருந்தார். அதற்குமுன் அங்குதான் உணவுக் காணிக்கையும் சாம்பிராணியும் பாத்திரங்களும் வைக்கப்பட்டிருந்தன. அதோடு, லேவியர்களுக்கும் பாடகர்களுக்கும் வாயிற்காவலர்களுக்கும் சேர வேண்டிய பத்திலொரு பாகமான* தானியம்,+ புதிய திராட்சமது, எண்ணெய்+ ஆகியவையும் குருமார்களுக்குக் கொடுக்கப்படுகிற காணிக்கையும் வைக்கப்பட்டிருந்தன.+  இதெல்லாம் நடந்தபோது நான் எருசலேமில் இல்லை. அர்தசஷ்டா ராஜா+ பாபிலோனை ஆட்சி செய்த 32-ஆம் வருஷத்தில்+ நான் அவரிடம் திரும்பிப் போயிருந்தேன். சில காலத்துக்குப் பிறகு நான் அவரிடம் விடுப்பு கேட்டு வாங்கிக்கொண்டு,  மறுபடியும் எருசலேமுக்கு வந்தேன். அப்போது எலியாசிப்+ செய்திருந்த ஒரு பெரிய அநியாயத்தைப் பார்த்தேன். உண்மைக் கடவுளின் ஆலயப் பிரகாரத்திலுள்ள சேமிப்பு* அறை ஒன்றை அவர் தொபியாவுக்குக்+ கொடுத்திருந்தார்.  அதைப் பார்த்ததும் எனக்குப் பயங்கர கோபம் வந்தது. அதனால், தொபியாவின் வீட்டுச் சாமான்களையெல்லாம் அந்தச் சேமிப்பு* அறையிலிருந்து வெளியே தூக்கியெறிந்தேன்.  அதன்பின், சேமிப்பு* அறைகளைச்+ சுத்தம் செய்யும்படி கட்டளை கொடுத்தேன். உண்மைக் கடவுளுடைய ஆலயத்தின் பாத்திரங்களையும் உணவுக் காணிக்கையையும் சாம்பிராணியையும்+ திரும்பவும் அங்கே கொண்டுவந்து வைத்தேன். 10  லேவியர்களுக்குச் சேர வேண்டிய பங்குகள்+ கொடுக்கப்படாததால்,+ அவர்களும் பாடகர்களும் ஆலய வேலைகளை விட்டுவிட்டு அவரவர் வயல் நிலங்களுக்குப்+ போய்விட்டதையும் தெரிந்துகொண்டேன். 11  அதனால் நான், “உண்மைக் கடவுளுடைய ஆலயத்தை ஏன் இப்படி அலட்சியமாக விட்டிருக்கிறீர்கள்?”+ என்று துணை அதிகாரிகளைக் கடுமையாகத் திட்டினேன்.+ பின்பு, ஆலய வேலைகளை விட்டுவிட்டுப் போனவர்களைக் கூட்டிக்கொண்டு வந்து திரும்பவும் அவரவர் பொறுப்பில் வைத்தேன். 12  யூதா ஜனங்கள் எல்லாரும், பத்திலொரு பாகம்+ தானியத்தையும் புதிய திராட்சமதுவையும் எண்ணெயையும் சேமிப்பு அறைகளுக்குக் கொண்டுவந்தார்கள்.+ 13  பின்பு, சேமிப்பு அறைகளைக் கவனிப்பதற்காக குருவான செலேமியாவையும் நகலெடுப்பவரான சாதோக்கையும் லேவியர்களில் ஒருவரான பெதாயாவையும் நியமித்தேன். மத்தனியாவின் பேரனும் சக்கூரின் மகனுமான ஆனானை அவர்களுக்கு உதவியாளராகத் தேர்ந்தெடுத்தேன். இவர்கள் எல்லாரும் நம்பகமானவர்கள் என்று பெயரெடுத்தவர்கள். தங்கள் சகோதரர்களுக்குப் பங்குகளைக் கொடுக்கும் பொறுப்பை இவர்களிடம் ஒப்படைத்தேன். 14  என் கடவுளே, நான் செய்திருப்பதை நினைத்துப் பாருங்கள்.+ உங்களுடைய ஆலயத்துக்காகவும் அங்கு வேலை செய்கிற ஆட்களுக்காகவும் நான் உண்மையோடு செய்த எதையும் மறந்துவிடாதீர்கள்.+ 15  அந்தக் காலத்தில், யூதா ஜனங்கள் ஓய்வுநாளிலே திராட்சரச ஆலைகளில் வேலை செய்வதையும்,+ தானிய மூட்டைகளைக் கொண்டுவந்து கழுதைகள்மேல் ஏற்றுவதையும் பார்த்தேன்.+ அதோடு, திராட்சமதுவையும் திராட்சைப் பழங்களையும் அத்திப் பழங்களையும் மற்ற சரக்குகளையும் அவர்கள் எருசலேமுக்குக் கொண்டுவருவதைப் பார்த்தேன். அதனால், ஓய்வுநாளில் பொருள்களை விற்பனை செய்யக் கூடாதென்று அவர்களை எச்சரித்தேன்.* 16  எருசலேம் நகரத்திலிருந்த தீரு ஜனங்கள், அங்கிருந்த யூதா ஜனங்களிடம் மீன்களையும் எல்லாவித சரக்குகளையும் ஓய்வுநாளில் விற்பனை செய்துகொண்டிருந்தார்கள்.+ 17  அதனால் நான் யூதாவின் முக்கியப் பிரமுகர்களிடம், “நீங்கள் ஓய்வுநாளைக்கூட மதிக்காமல் ஏன் இப்படி அட்டூழியம் செய்கிறீர்கள்? 18  உங்களுடைய முன்னோர்கள் இப்படிச் செய்ததால்தானே நம் கடவுள் நமக்கும் இந்த நகரத்துக்கும் இந்தக் கதியை வர வைத்திருக்கிறார்? இப்போது நீங்கள் ஓய்வுநாளை அவமதித்து,+ இஸ்ரவேலர்கள்மேல் அவருக்கு இருக்கிற கோபத்தை இன்னும் கிளறிவிடுகிறீர்கள்” என்று சொல்லி அவர்களைக் கடுமையாகத் திட்டினேன். 19  அதனால், ஓய்வுநாள் ஆரம்பிப்பதற்கு முன்பே சாயங்காலத்தில் எருசலேமின் கதவுகளை மூடுவதற்கு உத்தரவு போட்டேன். ஓய்வுநாள் முடியும்வரை கதவுகளைத் திறக்கக் கூடாது என்றும் கட்டளை கொடுத்தேன். ஓய்வுநாளில் யாரும் சரக்குகளை உள்ளே கொண்டுவராமல் பார்த்துக்கொள்ள என்னுடைய உதவியாளர்கள் சிலரைக் கதவுகளுக்குப் பக்கத்தில் நிறுத்தினேன். 20  அதனால், வியாபாரிகளும் பலவித சரக்குகளை விற்பவர்களும் ஒன்றிரண்டு தடவை ராத்திரியில் எருசலேமுக்கு வெளியே காத்துக் கிடந்தார்கள். 21  நான் அவர்களிடம், “எதற்காக ராத்திரி நேரத்தில் இப்படி மதிலுக்கு வெளியே காத்துக் கிடக்கிறீர்கள்? இன்னொரு தடவை உங்களை இங்கே பார்த்தால், ஆட்களை வைத்துத் துரத்தியடிப்பேன்” என்று எச்சரித்தேன். அதன் பிறகு, ஓய்வுநாளில் அவர்கள் அந்தப் பக்கம் வரவே இல்லை. 22  லேவியர்கள் தங்களைத் தவறாமல் தூய்மைப்படுத்திக்கொண்டு, நகர நுழைவாசல்களைக் காவல்காத்து, ஓய்வுநாளைப் பரிசுத்தமான நாளாக அனுசரிக்க வேண்டும்+ என்று சொன்னேன். என் கடவுளே, இந்த விஷயத்துக்காகவும் என்னை நினைத்துப் பாருங்கள். எப்போதும் போல இப்போதும் அளவுகடந்த அன்போடு* எனக்கு இரக்கம் காட்டுங்கள்.+ 23  அந்த நாட்களில் யூதர்கள் அஸ்தோத்தியர்களிலும்+ அம்மோனியர்களிலும் மோவாபியர்களிலும்+ பெண் எடுத்திருந்ததைத்+ தெரிந்துகொண்டேன். 24  அவர்களுடைய பிள்ளைகளில் பாதிப் பேர் அஸ்தோத் மொழியிலும் மற்ற மொழிகளிலும் பேசினார்கள். ஆனால், அவர்களில் யாருக்குமே யூதர்களின் மொழி தெரியவில்லை. 25  அதனால் நான் அவர்களைக் கடுமையாகத் திட்டினேன், சபித்தேன்; சிலரை அடித்து,+ அவர்களுடைய முடியைப் பிடுங்கினேன். அதோடு, மற்ற தேசத்தாருக்குப் பெண் கொடுக்கப்போவதில்லை என்றும், அவர்கள் நடுவிலிருந்து தங்களுக்கோ தங்களுடைய மகன்களுக்கோ பெண் எடுக்கப்போவதில்லை என்றும் கடவுள்மேல் சத்தியம் செய்து கொடுக்கும்படி சொன்னேன்.+ 26  பின்பு, “மற்ற தேசத்துப் பெண்களைக் கல்யாணம் செய்ததால்தானே இஸ்ரவேலின் ராஜாவான சாலொமோன் பாவம் செய்தார்? அவரைப் போல ஒரு ராஜா வேறு எங்குமே இருந்ததில்லை.+ அவரைக் கடவுள் நேசித்ததால்தான்+ இஸ்ரவேல் தேசம் முழுவதற்கும் ராஜாவாக்கினார். அப்படிப்பட்டவரையே மற்ற தேசத்துப் பெண்கள் பாவம் செய்ய வைத்துவிட்டார்கள்.+ 27  நீங்களும்கூட மற்ற தேசத்துப் பெண்களைக் கல்யாணம் செய்துகொண்டு நம்முடைய கடவுளுக்குத் துரோகம் செய்திருக்கிறீர்களே.+ நீங்கள் இவ்வளவு கேவலமாக நடந்திருப்பதை நம்பவே முடியவில்லை” என்றேன். 28  தலைமைக் குரு எலியாசிப்பின்+ மகனான யொயதாவின்+ மகன்களில் ஒருவன், ஓரோனியனான சன்பல்லாத்தின்+ மகளைக் கல்யாணம் செய்திருந்ததால் அவனை என்னிடமிருந்து துரத்தியடித்தேன். 29  என் கடவுளே, குருத்துவச் சேவையையும் குருமார்களோடும் லேவியர்களோடும் செய்யப்பட்ட ஒப்பந்தத்தையும்+ அவர்கள் எப்படி அவமதித்தார்கள் என்பதை மறந்துவிடாதீர்கள். 30  மற்ற தேசத்தாருடைய சகவாசத்தை அடியோடு விட்டுவிட்டு சுத்தமாக வாழ்வதற்கு நான் எல்லாருக்கும் உதவினேன். குருமார்களையும் லேவியர்களையும் மறுபடியும் அவரவர் வேலையில் நியமித்தேன்.+ 31  முதல் விளைச்சலைக் கொண்டுவரவும், அந்தந்த காலங்களில் விறகுகளைக் கொண்டுவரவும் ஏற்பாடு செய்தேன்.+ என் கடவுளே, என்னைப் பிரியத்தோடு நினைத்துப் பாருங்கள்.+

அடிக்குறிப்புகள்

வே.வா., “கலப்புத் திருமணத்தில் பிறந்தவர்கள்.”
வே.வா., “சாப்பாட்டு.”
வே.வா., “சாப்பாட்டு.”
வே.வா., “தசமபாகமான.”
வே.வா., “சாப்பாட்டு.”
வே.வா., “சாப்பாட்டு.”
வே.வா., “சாப்பாட்டு.”
அல்லது, “பொருள்களை விற்பனை செய்யக் கூடாதென ஓய்வுநாளில் அவர்களை எச்சரித்தேன்.”
வே.வா., “மாறாத அன்போடு.”