Skip to content

Skip to secondary menu

பொருளடக்கத்திற்குச் செல்

யெகோவாவின் சாட்சிகள்

தமிழ்

ஆன்லைன் பைபிள் | புதிய உலக மொழிபெயர்ப்பு

நீதிமொழிகள் 21:1-31

முக்கியக் குறிப்புகள்

  • ராஜாவின் இதயம் யெகோவாவின் கையில் (1)

  • பலியைவிட நீதி நியாயம் முக்கியம் (3)

  • கடினமாக உழைத்தால் வெற்றி நிச்சயம் (5)

  • ஏழையின் கதறலைக் கேட்காவிட்டால் நம் கதறலும் கேட்கப்படாது (13)

  • யெகோவாவுக்கு எதிரான ஞானம் இல்லை (30)

21  ராஜாவின் இதயம் யெகோவாவின் கையில் நீரோடைபோல்* இருக்கிறது. தான் விரும்பும் திசையில் அதை அவர் திருப்பிவிடுகிறார்.+   மனிதனுடைய வழிகளெல்லாம் அவனுக்குச் சரியாகத் தோன்றுகின்றன.+ ஆனால், யெகோவாதான் இதயங்களை* ஆராய்கிறார்.+   பலி செலுத்துவதைவிட ஒருவன் நீதி நியாயத்தோடு நடப்பதைத்தான் யெகோவா மிகவும் விரும்புகிறார்.+   அக்கிரமக்காரர்களின் பாதைக்கு விளக்குபோல் இருக்கிற ஆணவக் கண்களும், அகம்பாவ இதயமும் பாவம் நிறைந்தவை.+   கடினமாக உழைக்கிறவனுடைய திட்டங்கள் நிச்சயம் வெற்றி பெறும்.+ ஆனால், எதையும் அவசரப்பட்டுச் செய்கிறவர்களுக்கு வறுமைதான் வரும்.+   பொய் சொல்லி சம்பாதிக்கிற சொத்து, மறைந்துபோகும் மூடுபனி போன்றது, ஆபத்தான கண்ணி போன்றது.*+   பொல்லாதவர்கள் நியாயமாக நடக்க மறுக்கிறார்கள். அதனால், அவர்கள் செய்கிற கொடுமைகளே அவர்களை வாரிக்கொண்டு போய்விடும்.+   குற்றமுள்ளவனின் வழி குறுக்கு வழி. ஆனால், குற்றமற்றவனின் வழி நேர்வழி.+   சண்டைக்கார* மனைவியோடு வீட்டுக்குள் குடியிருப்பதைவிட, கூரைக்கு மேலே ஒரு ஓரமாகத் தங்கியிருப்பதே மேல்.+ 10  பொல்லாதவன் கெட்டதைச் செய்யத் துடிக்கிறான்.+ அடுத்தவனுக்கு அவன் கொஞ்சம்கூட கருணை காட்டுவது இல்லை.+ 11  கேலி செய்கிறவனைத் தண்டிக்கும்போது அனுபவமில்லாதவனும் ஞானமுள்ளவனாக ஆகிறான். ஞானமுள்ளவன் ஒரு விஷயத்தை ஆழமாகப் புரிந்துகொள்ளும்போது* அறிவை அடைகிறான்.*+ 12  நீதியுள்ள கடவுள் பொல்லாதவனின் வீட்டைக் கவனிக்கிறார். பொல்லாதவர்கள் எல்லாரையும் ஒழித்துக்கட்டுகிறார்.+ 13  ஏழை கதறும்போது ஒருவன் காதுகளை அடைத்துக்கொண்டால், அவன் கதறும்போதும் யாருமே கேட்க மாட்டார்கள்.+ 14  ரகசியமாகக் கொடுக்கப்படுகிற அன்பளிப்பு கோபத்தைத் தணிக்கும்.+ மறைவாகக் கொடுக்கப்படுகிற லஞ்சம் ஆக்ரோஷத்தை அடக்கும். 15  நியாயமாக நடப்பது நீதிமானுக்குச் சந்தோஷம் தருகிறது.+ ஆனால், அக்கிரமம் செய்கிறவனுக்கு அது கொடுமையாக இருக்கிறது. 16  விவேகமான வழியைவிட்டு விலகிப்போகிறவன் செத்துக் கிடப்பவர்களோடு* அமைதியாகக் கிடப்பான்.+ 17  உல்லாசப் பிரியன் ஏழையாவான்.+ திராட்சமதுவையும் எண்ணெயையும் விரும்புகிறவன் பணக்காரனாக மாட்டான். 18  நீதிமானுக்குப் பொல்லாதவன் மீட்புவிலையாவான். நேர்மையானவனுக்குத் துரோகி மீட்புவிலையாவான்.+ 19  சண்டைக்காரியும்* கோபக்காரியுமான மனைவியோடு குடியிருப்பதைவிட வனாந்தரத்தில் வாழ்வதே மேல்.+ 20  ஞானமுள்ளவனின் வீட்டில் அருமையான பொக்கிஷமும் எண்ணெயும் இருக்கும்.+ ஆனால், முட்டாள் தன்னிடம் இருப்பதையெல்லாம் வெட்டியாகச் செலவழித்துவிடுவான்.+ 21  நீதியையும் மாறாத அன்பையும் நாடுகிறவன் வாழ்வும், நீதியும், மகிமையும் பெறுவான்.+ 22  ஞானமுள்ளவனால் பலசாலிகளுடைய நகரத்தின் மதிலில்கூட ஏற முடியும். அவர்கள் நம்பியிருக்கிற கோட்டையைக்கூட அவனால் தகர்க்க முடியும்.+ 23  தன் வாயையும் நாவையும் அடக்குகிறவன் பிரச்சினையில் சிக்காமல் இருப்பான்.+ 24  அகங்காரத்தோடு* கண்மூடித்தனமாக நடக்கிறவன், அகங்காரம்பிடித்த பெருமைக்காரன்+ என்று சொல்லப்படுகிறான். 25  சோம்பேறி எதை நினைத்து ஏங்குகிறானோ அதுவே அவனைக் கொன்றுவிடும். ஏனென்றால், அவனுடைய கைகள் வேலை செய்ய மறுக்கின்றன.+ 26  அவன் நாள் முழுவதும் பேராசையோடு ஏங்குகிறான். ஆனால், நீதிமான் கஞ்சத்தனம் காட்டாமல் எல்லாவற்றையும் கொடுக்கிறான்.+ 27  பொல்லாதவன் கொடுக்கிற பலி அருவருப்பானது என்றால்,+ கெட்ட எண்ணத்தோடு* அவன் கொடுக்கிற பலி இன்னும் எந்தளவுக்கு அருவருப்பானது! 28  பொய் சாட்சி சொல்கிறவன் அழிந்துபோவான்.+ ஆனால், கவனமாகக் கேட்கிறவன் சரியாகச் சாட்சி சொல்வான்.* 29  பொல்லாதவன் தனக்கு எந்தப் பிரச்சினையுமே இல்லாததுபோல் காட்டிக்கொள்கிறான்.+ ஆனால், நேர்மையானவனின் வழிதான் உறுதியான வழி.+ 30  யெகோவாவுக்கு எதிரான ஞானமும் இல்லை, பகுத்தறிவும் இல்லை, ஆலோசனையும் இல்லை.+ 31  போருக்காகக் குதிரைகள் தயாராக நிறுத்தி வைக்கப்படும்.+ ஆனால், யெகோவாதான் வெற்றி* தருகிறார்.+

அடிக்குறிப்புகள்

வே.வா., “வாய்க்கால்கள்போல்.”
வே.வா., “உள்ளெண்ணங்களை.”
அல்லது, “சாவை விரும்புகிறவர்களுக்கு மறைந்துபோகும் மூடுபனி போன்றது.”
வே.வா., “நச்சரிக்கிற.”
வே.வா., “விவேகத்தைச் சம்பாதிக்கும்போது.”
வே.வா., “என்ன செய்ய வேண்டும் என்பதைத் தெரிந்துகொள்கிறான்.”
வே.வா., “செத்து செயலிழந்து போனவர்களோடு.”
வே.வா., “நச்சரிக்கிறவளும்.”
இதற்கான எபிரெய வார்த்தை அசட்டுத் துணிச்சலோடு நடப்பதையும், வரம்பு மீறுவதையும், பொறுப்பில் உள்ளவர்களை அநாவசியமாக முந்திக்கொள்வதையும் குறிக்கிறது.
வே.வா., “வெட்கங்கெட்ட விதமாக நடந்துகொண்டு.”
நே.மொ., “என்றென்றும் பேசுவான்.”
வே.வா., “மீட்பு.”