Skip to content

Skip to secondary menu

பொருளடக்கத்திற்குச் செல்

யெகோவாவின் சாட்சிகள்

தமிழ்

ஆன்லைன் பைபிள் | புதிய உலக மொழிபெயர்ப்பு

நாகூம் 3:1-19

முக்கியக் குறிப்புகள்

  • “இரத்தக்கறை படிந்த நகரமே, உனக்கு ஐயோ கேடு!” (1-19)

    • நினிவேக்குத் தண்டனைத் தீர்ப்பு வழங்கப்பட்டதற்கான காரணங்கள் (1-7)

    • நோ-அம்மோனைப் போல் நினிவே அழிக்கப்படும் (8-12)

    • நினிவேயின் அழிவைத் தடுக்க முடியாது (13-19)

3  இரத்தக்கறை படிந்த நகரமே, உனக்கு ஐயோ கேடு! நீ திருட்டிலும் பொய் புரட்டிலும் ஊறிப்போயிருக்கிறாய்! ஓயாமல் சூறையாடுகிறாய்!   சவுக்கின் சத்தம் கேட்கிறது, சக்கரங்களின் ஓசை ஒலிக்கிறது. குதிரை வேகமாக ஓடிவருகிறது, ரதம் மின்னலாகப் பாய்ந்து வருகிறது.   வீரர்கள் குதிரைமேல் ஏறி வருகிறார்கள். அவர்களுடைய வாள்கள் தகதகக்கின்றன, ஈட்டிகள் பளபளக்கின்றன. ஏராளமானவர்கள் வெட்டிச் சாய்க்கப்படுகிறார்கள். அவர்களுடைய உடல்கள் குவியல் குவியலாகக் கிடக்கின்றன. திரும்பிய பக்கமெல்லாம் கணக்குவழக்கில்லாத சடலங்கள். அவற்றின் மேல் வீரர்கள் தடுக்கி விழுகிறார்கள்.   எல்லாவற்றுக்கும் அந்த விலைமகளின் விபச்சாரம்தான் காரணம். அவள் கவர்ச்சியும் வசீகரமும் உள்ள சூனியக்காரி. பல தேசத்தாரை விபச்சார வலையில் சிக்க வைக்கிறாள். பல இனத்தாரை சூனியங்களால் வசியப்படுத்துகிறாள்.   பரலோகப் படைகளின் யெகோவா சொல்வது இதுதான்: “நான் உன்னை* தண்டிப்பேன்.+ உன்னுடைய ஆபாசத்தை எல்லாருக்கும் காட்டுவேன். மற்ற தேசத்தார் உன்னுடைய நிர்வாணக் கோலத்தையும், மற்ற ராஜ்யங்கள் உன்னுடைய கேவலமான நிலைமையையும் பார்க்கும்படி செய்வேன்.   குப்பையைத் தூக்கி உன்மேல் வீசுவேன். எல்லாரும் உன்னை வெறுக்கும்படி செய்வேன். உன்னை வேடிக்கைப் பொருளாக்குவேன்.+   உன்னைப் பார்க்கிற எல்லாரும், ‘நினிவே அழிந்துவிட்டது! அவளுக்காகப் பரிதாபப்பட ஒருவரும் இல்லை’ என்று சொல்லி ஓடிப்போவார்கள்.+ உனக்கு ஆறுதல் சொல்ல நான் எங்கே போய் ஆள் தேடுவேன்?   நைல் நதிக்கரைகளில்+ இருந்த நோ-அம்மோனைவிட*+ நீ மேலானவளோ? தண்ணீர் அவளைச் சூழ்ந்திருந்தது. கடல்தான் அவளுடைய சொத்து; அதுதான் அவளுடைய கோட்டைச் சுவர்.   எத்தியோப்பியாவும் எகிப்தும் அவளுக்கு மிகப் பெரிய பலமாக இருந்தன. பூத்+ ஜனங்களும் லீபியா ஜனங்களும் அவளுக்கு உறுதுணையாக இருந்தார்கள்.+ 10  ஆனாலும், அவள் சிறைபிடிக்கப்பட்டுப் போனாள். வேறு தேசத்துக்குக் கொண்டுபோகப்பட்டாள்.+ அவளுடைய பிள்ளைகள் எல்லா தெரு முனைகளிலும் கொடூரமாக அடித்துக் கொல்லப்பட்டார்கள். அவளுடைய முக்கியப் பிரமுகர்கள்மேல் குலுக்கல் போடப்பட்டது. பெரிய ஆட்களுக்கு விலங்கு மாட்டப்பட்டது. 11  நீயும் போதையேற குடிப்பாய்.+ ஓடி ஒளிந்துகொள்வாய். எதிரியிடமே பாதுகாப்பு தேடுவாய். 12  உன்னுடைய எல்லா கோட்டைகளும், முதலில் பழுத்த பழங்கள் உள்ள அத்தி மரங்களைப் போல இருக்கின்றன. அவற்றை உலுக்கும்போது, உலுக்குபவனின் வாயில் பழங்கள் விழுகின்றன. 13  உன்னுடைய படைவீரர்கள் பெண்களைப் போலப் பலவீனமாக இருக்கிறார்கள். எதிரிகள் நுழைவதற்கு வசதியாக உன்னுடைய வாசல் கதவுகள் திறந்து போடப்படும். அவற்றின் தாழ்ப்பாள்கள் தீயில் சுட்டெரிக்கப்படும். 14  முற்றுகைக் காலத்துக்காகத் தண்ணீரைச் சேமித்து வை.+ கோட்டைகளைப் பலப்படுத்து. சேற்றிலே கால்வைத்து களிமண்ணை மிதி. செங்கற்களைச் செய். 15  அங்கேயும் நெருப்பு உன்னைப் பொசுக்கும். வாள் உன்னை வெட்டி வீழ்த்தும்.+ இளம் வெட்டுக்கிளிகள் பயிர்களை நாசமாக்குவதுபோல் அது உன்னை நாசமாக்கும்.+ இளம் வெட்டுக்கிளிகள் போல அதிகமாகப் பெருகு! வெட்டுக்கிளிக் கூட்டத்தைப் போல ஏராளமாகப் பெருகு! 16  உன் வியாபாரிகள் வானத்து நட்சத்திரங்களைவிட அதிகமாக இருக்கிறார்கள். இளம் வெட்டுக்கிளி தன் தோலை உரித்துவிட்டுப் பறந்துபோகும். 17  உன் காவலர்கள் அந்த வெட்டுக்கிளி போல இருக்கிறார்கள். உன் அதிகாரிகள் வெட்டுக்கிளிப் பட்டாளத்தைப் போல இருக்கிறார்கள். குளிர்ச்சியான நாளில் அவை கற்சுவர்களின் இடுக்குகளில் பதுங்கிக்கொள்ளும். ஆனால், வெயில் அடிக்கும்போது பறந்துபோகும். அவை போகும் இடம் யாருக்கும் தெரியாது. 18  அசீரிய ராஜாவே, உன் மேய்ப்பர்கள் தூக்கக் கலக்கத்தில் இருக்கிறார்கள். உன்னுடைய பிரமுகர்கள் வீடுகளுக்குள் முடங்கிக்கிடக்கிறார்கள். உன் ஜனங்கள் மலைகளில் சிதறிப்போயிருக்கிறார்கள். அவர்களைக் கூட்டிச்சேர்க்க ஆளே இல்லை.+ 19  பேரழிவிலிருந்து நீ மீண்டுவரவே மாட்டாய். உன் காயம் ஆறவே ஆறாது. உன் கதியைக் கேள்விப்படுகிற எல்லாரும் கைகொட்டிச் சிரிப்பார்கள்.+ ஏனென்றால், உன்னுடைய கொடூரமான பிடியில் சிக்காதவர்கள் யாருமே இல்லை.”+

அடிக்குறிப்புகள்

அதாவது, “நினிவே நகரத்தை.”
அதாவது, “தீப்ஸ் நகரத்தைவிட.”