Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

யெகோவாவின் சாட்சிகள்

மொழியை தேர்ந்தெடுங்கள் தமிழ்

தானியேல் 10:1-21

முக்கியக் குறிப்புகள்

  • கடவுளிடமிருந்து வந்த தூதுவர் தானியேலைச் சந்திக்கிறார் (1-21)

    • அந்தத் தேவதூதருக்கு மிகாவேல் உதவுகிறார் (13)

10  பெர்சிய ராஜா கோரேஸ்+ ஆட்சி செய்த மூன்றாம் வருஷத்தில், ஒரு பெரிய போரைப் பற்றிய செய்தி பெல்தெஷாத்சார்+ என்று அழைக்கப்பட்ட தானியேலுக்கு வெளிப்படுத்தப்பட்டது. அந்தச் செய்தி உண்மையானது. அதை தானியேல் புரிந்துகொண்டார்; அவர் பார்த்த விஷயங்கள் அவருக்குப் புரிய வைக்கப்பட்டன.  அந்த நாட்களில், தானியேலாகிய நான் மூன்று வாரங்களாகத் துக்கம் அனுசரித்துவந்தேன்.+  ருசியான உணவு எதையும் சாப்பிடவில்லை. இறைச்சியோ திராட்சமதுவோ என் வாயில் படவில்லை. மூன்று வாரங்களாக நான் எண்ணெய் பூசிக்கொள்ளவும் இல்லை.  முதலாம் மாதம் 24-ஆம் நாளில், பெரிய ஆறாகிய டைகிரீசின்*+ கரையில் இருந்தேன்.  நான் நிமிர்ந்து பார்த்தபோது, நாரிழை* உடையில் ஒரு மனிதர் தெரிந்தார்.+ அவர் ஊப்பாஸ் ஊரின் தங்கத்தால் செய்யப்பட்ட வாரை இடுப்பில் கட்டியிருந்தார்.  அவருடைய உடல் படிகப்பச்சைபோல்+ பிரகாசித்தது, அவருடைய முகம் மின்னலைப் போல் மின்னியது, அவருடைய கண்கள் தீப்பந்தங்களைப் போல் தகதகத்தன, அவருடைய கைகளும் பாதங்களும் பளபளப்பாக்கப்பட்ட செம்பைப் போல் பளிச்சிட்டன,+ அவருடைய குரலோசை ஜனக்கூட்டத்தின் ஆரவாரத்தைப் போல் இருந்தது.  தானியேலாகிய நான் மட்டும்தான் அந்தத் தரிசனத்தைப் பார்த்தேன்,+ என்னுடன் இருந்தவர்கள் அதைப் பார்க்கவில்லை. ஆனாலும் அவர்கள் பயத்தில் நடுநடுங்கிப்போய் அங்கிருந்து ஓடி ஒளிந்துகொண்டார்கள்.  நான் மட்டும் தன்னந்தனியாக இருந்தேன். பிரமிப்பூட்டும் அந்தத் தரிசனத்தைப் பார்த்தவுடன், என் பலமெல்லாம் போய்விட்டது. கொஞ்சம்கூட தெம்பு இல்லாமல் துவண்டுபோனேன்.+  பின்பு, அந்த மனிதர் பேசும் சத்தம் கேட்டது. அதைக் கேட்டுக்கொண்டிருந்த சமயத்திலேயே குப்புற படுத்தபடி நன்றாகத் தூங்கிவிட்டேன்.+ 10  அப்போது, ஒரு கை என்னைத் தொட்டு எழுப்பியது.+ நான் என் கைகளையும் முழங்கால்களையும் தரையில் ஊன்றி எழுந்தேன். 11  அவர் என்னிடம், “தானியேலே, கடவுளுக்கு மிகவும் பிரியமானவனே,*+ உன்னிடம் பேசுவதற்காகத்தான் நான் அனுப்பப்பட்டிருக்கிறேன். எழுந்து நின்று, நான் சொல்லப்போவதைக் கவனமாகக் கேள்” என்றார். அப்போது, நான் நடுங்கிக்கொண்டே எழுந்து நின்றேன். 12  அவர் என்னிடம், “தானியேலே, பயப்படாதே.+ எல்லாவற்றையும் புரிந்துகொள்ளவும் கடவுளுக்குமுன் உன்னைத் தாழ்த்தவும் நீ விரும்பிய நாள்முதல் கடவுள் உன் ஜெபத்தைக் கேட்டிருக்கிறார். அதனால்தான் இப்போது நான் வந்திருக்கிறேன்.+ 13  ஆனால், பெர்சிய சாம்ராஜ்யத்தின் அதிபதி+ 21 நாட்களாக என்னை எதிர்த்து நின்றான். அப்போது, பெரிய அதிபதிகளில் ஒருவரான* மிகாவேல்*+ என் உதவிக்கு வந்தார். நான் பெர்சிய ராஜாக்களின் பக்கத்தில் இருந்தேன். 14  கடைசி நாட்களில் உன்னுடைய ஜனங்களுக்கு என்ன நடக்குமென்று+ உனக்குப் புரிய வைப்பதற்காக நான் வந்திருக்கிறேன். நீ பார்த்த தரிசனம் நிறைவேற இன்னும் பல நாட்கள் ஆகும்”+ என்றார். 15  அவர் அந்த வார்த்தைகளைச் சொன்னபோது நான் வாயடைத்துப்போய், தரையைப் பார்த்தபடி நின்றேன். 16  பின்பு, மனிதனைப் போலிருந்த ஒருவர் என் உதடுகளைத் தொட்டார்.+ உடனே நான் வாயைத் திறந்து, என் முன்னால் நின்றவரிடம், “எஜமானே, தரிசனத்தைப் பார்த்து நடுநடுங்கிப் போயிருக்கிறேன். எனக்குச் சக்தியே இல்லை.+ 17  அப்படியிருக்கும்போது, அடியேன் எப்படி எஜமானிடம் பேசுவேன்?+ என் தெம்பெல்லாம் போய்விட்டதே, மூச்சும் அடைக்கிறதே”+ என்றேன். 18  மனிதனைப் போலிருந்தவர் மறுபடியும் என்னைத் தொட்டுப் பலப்படுத்தினார்.+ 19  பின்பு என்னிடம், “கடவுளுக்கு மிகவும் பிரியமானவனே,*+ பயப்படாதே.+ எதற்கும் கவலைப்படாதே.+ தைரியமாக இரு, நம்பிக்கையோடு இரு” என்றார். இப்படி அவர் சொல்லிக்கொண்டு இருந்தபோது நான் பலமடைந்து, “என் எஜமானே, என்னைப் பலப்படுத்திவிட்டீர்கள், இப்போது பேசுங்கள்” என்றேன். 20  அப்போது அவர், “நான் எதற்காக உன்னிடம் வந்திருக்கிறேன் தெரியுமா? நான் திரும்பிப் போய் பெர்சிய அதிபதியோடு+ போர் செய்ய வேண்டும். நான் புறப்படும்போது, கிரேக்கு தேசத்து அதிபதி வருவான். 21  ஆனாலும், சத்திய புத்தகத்தில் எழுதப்பட்டுள்ள விஷயங்களை நான் உனக்குச் சொல்கிறேன். எனக்கு உறுதுணையாக இருப்பது உன் அதிபதியாகிய மிகாவேல்+ மட்டும்தான்” என்றார்.

அடிக்குறிப்புகள்

எபிரெயுவில், “இதெக்கேலின்.”
அதாவது, “லினன்.”
வே.வா., “அருமையானவனே.”
வே.வா., “முதன்மை அதிபதியாகிய.”
அர்த்தம், “கடவுளைப் போன்றவர் யார்?”
வே.வா., “அருமையானவனே.”