Skip to content

Skip to secondary menu

பொருளடக்கத்திற்குச் செல்

யெகோவாவின் சாட்சிகள்

தமிழ்

ஆன்லைன் பைபிள் | புதிய உலக மொழிபெயர்ப்பு

செப்பனியா 1:1-18

முக்கியக் குறிப்புகள்

  • யெகோவா தண்டனைத் தீர்ப்பு வழங்கும் நாள் பக்கத்தில் வந்துவிட்டது (1-18)

    • யெகோவாவின் மகா நாள் மிகவும் வேகமாக வந்துகொண்டிருக்கிறது (14)

    • வெள்ளியோ தங்கமோ ஜனங்களைக் காப்பாற்றாது (18)

1  யூதாவின் ராஜாவாகிய ஆமோனின்+ மகன் யோசியாவின் காலத்தில்,+ எசேக்கியாவின் எள்ளுப்பேரனும் அமரியாவின் கொள்ளுப்பேரனும் கெதலியாவின் பேரனும் கூஷியின் மகனுமாகிய செப்பனியாவுக்கு* யெகோவாவிடமிருந்து கிடைத்த செய்தி இதுதான்:   “நான் பூமியில் இருக்கிற எல்லாவற்றையும் அடியோடு அழித்துவிடுவேன்” என்று யெகோவா சொல்கிறார்.+   “மனுஷர்களையும் மிருகங்களையும் கொல்வேன். வானத்தில் பறக்கும் பறவைகளையும் கடலில் நீந்துகிற மீன்களையும் அழிப்பேன்.+ பொல்லாதவர்களையும் அவர்களுடைய பாவங்களுக்குக் காரணமான எல்லாவற்றையும்*+ ஒழிப்பேன். மனுஷர்களைப் பூமியிலிருந்து அழித்துவிடுவேன்” என்று யெகோவா சொல்கிறார்.   “நான் யூதாவுக்கு எதிராக என் கையை நீட்டுவேன். எருசலேமில் குடியிருக்கிறவர்கள்மேல் என் கையை ஓங்குவேன். பாகாலைச் சுவடு தெரியாமல் அழித்துவிடுவேன்.+ பொய் தெய்வ பூசாரிகளின் பெயர்களையும் போலி குருமார்களின் பெயர்களையும் ஒழித்துவிடுவேன்.+   மொட்டைமாடிக்குப் போய் சூரியனையும் சந்திரனையும் நட்சத்திரங்களையும் கும்பிடுகிறவர்களையும்,+ யெகோவாவை மட்டும் வணங்குவதாக அவரிடம் வாக்குக் கொடுத்துவிட்டு,+ மல்காமிடமும் அதேபோல் வாக்குக் கொடுக்கிறவர்களையும் நான் அழிப்பேன்.+   யெகோவாவைவிட்டு விலகிப்போகிறவர்களை+ ஒழித்துக்கட்டுவேன். யெகோவாவைத் தேடாமலும் அவரை விசாரிக்காமலும் இருக்கிறவர்களை+ அழித்துவிடுவேன்.”   உன்னதப் பேரரசராகிய யெகோவாவுக்கு முன்னால் அமைதியாக இருங்கள்; யெகோவாவின் நாள் பக்கத்தில் வந்துவிட்டது.+ யெகோவா ஒரு பலியை ஏற்பாடு செய்திருக்கிறார்; அழைக்கப்பட்டவர்களை அவர் தயார்படுத்தியிருக்கிறார்.*   “யெகோவாவாகிய நான் பலி கொடுக்கும் நாளில் அதிபதிகளைத் தண்டிப்பேன். ராஜாவின் மகன்களையும்+ மற்ற தேசத்தாரைப் போல உடை உடுத்துகிறவர்களையும் தண்டிப்பேன்.   அந்த நாளில் மேடைமேல்* ஏறுகிற எல்லாரையும் தண்டிப்பேன். எஜமானின் வீட்டை வன்முறைச் செயல்களாலும் மோசடி வேலைகளாலும் நிரப்புகிறவர்களைத் தண்டிப்பேன்.” 10  யெகோவா இப்படிச் சொல்கிறார்: “அந்த நாளில், ‘மீன் நுழைவாசலில்’+ கதறல் சத்தம் கேட்கும். நகரத்தின் புதிய பகுதியில்+ ஒப்பாரிச் சத்தம் கேட்கும். மலைகளில் பயங்கர சத்தம் கேட்கும். 11  வியாபாரிகள் எல்லாரும் ஒழிந்துவிட்டார்கள். வெள்ளியை எடை போடுகிற எல்லாரும் அழிந்துவிட்டார்கள். அதனால் மக்தேஷ்* ஜனங்களே, அழுது புலம்புங்கள். 12  அந்தச் சமயத்தில் நான் விளக்குகளை ஏந்திக்கொண்டு எருசலேமெங்கும் தேடிப் பார்ப்பேன். அலட்சியமாக இருப்பவர்களை* கண்டுபிடித்துத் தண்டிப்பேன். அவர்கள் தங்களுடைய உள்ளத்தில், ‘யெகோவா நல்லதும் செய்ய மாட்டார், கெட்டதும் செய்ய மாட்டார்’ என்று சொல்லிக்கொள்கிறார்கள்.+ 13  அவர்களுடைய சொத்துகள் சூறையாடப்படும், அவர்களுடைய வீடுகள் பாழாக்கப்படும்.+ வீடுகளைக் கட்டுவார்கள், ஆனால் அவற்றில் குடியிருக்க மாட்டார்கள். திராட்சைத் தோட்டங்களை அமைப்பார்கள், ஆனால் அவற்றிலிருந்து கிடைக்கும் திராட்சமதுவைக் குடிக்க மாட்டார்கள்.+ 14  யெகோவாவின் மகா நாள் நெருங்கிவிட்டது!+ அது மிகவும் வேகமாக வந்துகொண்டிருக்கிறது, பக்கத்தில் வந்துவிட்டது!+ யெகோவாவின் நாளில் பயங்கரமான சத்தம் கேட்கும்.+ அப்போது, போர்வீரன்கூட அலறுவான்.+ 15  அது கடவுளுடைய கடும் கோபத்தின் நாள்.+ இக்கட்டும் வேதனையுமான நாள்.+ புயல்காற்றும் பேரழிவும் தாக்கும் நாள். அது மங்கலான நாள், இருண்ட நாள்.+ கார்மேகமும் கும்மிருட்டும் சூழ்ந்துகொள்ளும் நாள்.+ 16  ஊதுகொம்பின் சத்தமும் போர் முழக்கமும் கேட்கும் நாள்.+ மதில் சூழ்ந்த நகரங்களும் உயர்ந்த மூலைக்கோபுரங்களும் தாக்கப்படும் நாள்.+ 17  நான் மனிதர்களுக்கு மன வேதனையை உண்டாக்குவேன். கண் தெரியாதவர்களைப் போல அவர்கள் தட்டுத்தடுமாறி நடப்பார்கள்.+ ஏனென்றால், அவர்கள் யெகோவாவுக்கு எதிராகப் பாவம் செய்தார்கள்.+ அவர்களுடைய இரத்தம் மண்ணைப் போலக் கொட்டப்படும். அவர்களுடைய சதை* சாணம் போலக் கிடக்கும்.+ 18  யெகோவாவுடைய கடும் கோபத்தின் நாளில் அவர்களுடைய வெள்ளியோ தங்கமோ அவர்களைக் காப்பாற்றாது.+ அவருடைய வைராக்கியம் தீ போல முழு பூமியையும் பொசுக்கிவிடும்.+ பூமியின் குடிமக்கள் எல்லாரையும் அவர் பூண்டோடு அழித்துவிடுவார்; அந்த அழிவு படுபயங்கரமாக இருக்கும்.”+

அடிக்குறிப்புகள்

செப்பனியா என்ற பெயரின் அர்த்தம், “யெகோவா மறைத்து வைத்திருக்கிறார் (பொக்கிஷமாக வைத்திருக்கிறார்).”
அநேகமாக, “சிலை வழிபாட்டோடு சம்பந்தப்பட்ட பொருள்கள் அல்லது செயல்கள் எல்லாவற்றையும்.”
வே.வா., “புனிதப்படுத்தியிருக்கிறார்.”
ஒருவேளை, “சிம்மாசனத்தின் மேடைமேல்.”
அநேகமாக, “‘மீன் நுழைவாசலுக்கு’ பக்கத்திலுள்ள எருசலேமின் ஒரு பகுதி.”
வே.வா., “திராட்சை ரசத் தொட்டியின் அடியிலுள்ள வண்டல் போன்றவர்களை.”
நே.மொ., “குடல்.”