Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

யெகோவாவின் சாட்சிகள்

மொழியை தேர்ந்தெடுங்கள் தமிழ்

ஏசாயா 36:1-22

முக்கியக் குறிப்புகள்

  • சனகெரிப் யூதாவைத் தாக்குகிறான் (1-3)

  • ரப்சாக்கே யெகோவாவைக் கேலி செய்கிறான் (4-22)

36  எசேக்கியா ராஜா ஆட்சி செய்த 14-ஆம் வருஷத்தில், யூதாவிலிருந்த மதில் சூழ்ந்த நகரங்கள் எல்லாவற்றின் மேலும் அசீரிய ராஜா சனகெரிப்+ படையெடுத்து வந்து அவற்றைக் கைப்பற்றினான்.+  பின்பு, அவன் ரப்சாக்கேயை* எருசலேமிலிருந்த எசேக்கியா ராஜாவிடம் அனுப்பினான்.+ அவனோடு ஒரு பெரிய படையையும் லாகீசிலிருந்து+ அனுப்பினான். மேல் குளத்தின் வாய்க்கால்+ பக்கத்தில் போய் அவர்கள் நின்றார்கள். அது வண்ணார் பகுதிக்குப் பக்கத்திலிருந்த நெடுஞ்சாலையில் இருந்தது.+  அப்போது, அரண்மனை நிர்வாகியும் இல்க்கியாவின் மகனுமான எலியாக்கீம்,+ செயலாளரான செப்னா,+ பதிவாளரும் ஆசாப்பின் மகனுமான யோவா ஆகியவர்கள் அவனிடம் வந்தார்கள்.  ரப்சாக்கே அவர்களிடம், “மன்னாதி மன்னரான அசீரிய ராஜா சொல்லி அனுப்பிய இந்தச் செய்தியைத் தயவுசெய்து எசேக்கியாவிடம் போய்ச் சொல்லுங்கள்: ‘என்ன தைரியத்தில் நீ இப்படியெல்லாம் செய்கிறாய்?+  என்னோடு போர் செய்ய உனக்குச் சாமர்த்தியமும் பலமும் இருப்பதாகப் பிதற்றுகிறாயே. யாரை நம்பி என்னையே எதிர்க்கத் துணிந்துவிட்டாய்?+  இதோ! எகிப்தைப்போய் நம்பிக்கொண்டிருக்கிறாயே. அது ஒடிந்துபோன நாணல். அதன்மேல் யாராவது கை ஊன்றினால், அது அவனுடைய கையைக் குத்திக் கிழித்துவிடும். எகிப்தின் ராஜாவான பார்வோனை நம்பியிருக்கிற எல்லாருக்கும் அதே கதிதான் ஏற்படும்.+  “எங்கள் கடவுளான யெகோவாமேல் நம்பிக்கை வைத்திருக்கிறோம்” என்று ஒருவேளை நீ சொல்லலாம். ஆனால், அவருடைய ஆராதனை மேடுகளையும் பலிபீடங்களையும்தான் நீ அழித்துவிட்டாயே!+ “எருசலேமில் உள்ள பலிபீடத்தின் முன்னால்தான் நீங்கள் மண்டிபோட வேண்டும்” என்று யூதாவிலும் எருசலேமிலும் இருப்பவர்களுக்குச் சொல்லியிருக்கிறாயே!’+  இதோ, என் எஜமானாகிய அசீரிய ராஜா உனக்குச் சவால் விடுகிறார்,+ கேள்: நான் உனக்கு 2,000 குதிரைகளைத் தருகிறேன், அதில் சவாரி செய்வதற்காவது உன்னிடம் ஆட்கள் இருக்கிறார்களா பார்க்கலாம்!  ரதங்களுக்கும் குதிரைவீரர்களுக்கும் நீ எகிப்திடம் கையேந்தி நிற்கிறாயே, என் எஜமானுக்கு வேலை செய்கிற ஒரு சாதாரண ஆளுநரையாவது உன்னால் விரட்டியடிக்க முடியுமா? 10  யெகோவாவின் உத்தரவு இல்லாமலா நான் இந்த இடத்தை அழிக்க வந்திருக்கிறேன்? ‘இந்த நகரத்துக்கு எதிராகப் படையெடுத்துப் போய் அதை அழித்துப்போடு’ என்று யெகோவாதான் என்னிடம் சொன்னார்” என்றான். 11  அதற்கு எலியாக்கீமும் செப்னாவும்+ யோவாவும், “உங்கள் ஊழியர்களான எங்களுக்கு அரமேயிக் மொழி* தெரியும். தயவுசெய்து அரமேயிக் மொழியிலேயே பேசுங்கள்.+ மதில்மேல் இருக்கிறவர்களுக்குக் கேட்கிற மாதிரி யூதர்களுடைய மொழியில் பேச வேண்டாம்” என்று ரப்சாக்கேயிடம்+ சொன்னார்கள்.+ 12  அதற்கு ரப்சாக்கே, “உங்களிடமும் உங்கள் எஜமானிடமும் மட்டும் பேசுவதற்காகவா ராஜா என்னை அனுப்பி வைத்தார்? மதில்மேல் உட்கார்ந்திருக்கிற இந்த ஆட்களிடமும் பேசத்தானே அனுப்பி வைத்தார்? உங்களோடு சேர்ந்து அவர்களும்தானே தங்களுடைய மலத்தைத் தின்று தங்களுடைய சிறுநீரைக் குடிக்கப்போகிறார்கள்?” என்றான். 13  பின்பு ரப்சாக்கே நின்றுகொண்டு, யூதர்களுடைய மொழியில் சத்தமாக,+ “மன்னாதி மன்னரான அசீரிய ராஜா சொல்லி அனுப்பிய செய்தியைக் கேளுங்கள்.+ 14  ராஜாவின் செய்தி இதுதான்: ‘எசேக்கியாவின் பேச்சைக் கேட்டு ஏமாந்துவிடாதீர்கள். அவனால் உங்களைக் காப்பாற்ற முடியாது.+ 15  யெகோவாவை நம்பும்படி+ எசேக்கியா உங்களிடம் சொல்வான். “யெகோவா நிச்சயம் நம்மைக் காப்பாற்றுவார், இந்த நகரத்தை அசீரிய ராஜாவின் கையில் கொடுக்க மாட்டார்” என்று சொல்வான். அதையெல்லாம் நம்பாதீர்கள். 16  எசேக்கியாவின் பேச்சைக் கேட்காதீர்கள். அசீரிய ராஜா இப்படிச் சொல்கிறார்: “என்னோடு சமாதானம் பண்ணிக்கொண்டு, சரணடைந்து விடுங்கள். அப்போது நீங்கள் ஒவ்வொருவரும் உங்கள் திராட்சைக் கொடியிலிருந்தே பழங்களைச் சாப்பிடுவீர்கள், உங்கள் அத்தி மரத்திலிருந்தே பழங்களைச் சாப்பிடுவீர்கள், உங்கள் தண்ணீர்த் தொட்டியிலிருந்தே தண்ணீரைக் குடிப்பீர்கள். 17  பின்பு நான் வந்து, உங்கள் தேசத்தைப் போலவே செழிப்பாக இருக்கும் தேசத்துக்கு உங்களைக் கூட்டிக்கொண்டு போவேன்.+ அது, தானியமும் புதிய திராட்சமதுவும் ரொட்டியும் ஏராளமாகக் கிடைக்கிற தேசம். திராட்சைத் தோட்டங்கள் நிறைந்த தேசம். 18  ‘யெகோவா நம்மைக் காப்பாற்றுவார்’ என்று எசேக்கியா சொல்வதை நம்பி ஏமாந்துபோகாதீர்கள். எந்தத் தெய்வமாவது அசீரிய ராஜாவின் பிடியிலிருந்து தன்னுடைய நகரத்தைக் காப்பாற்றியிருக்கிறதா?+ 19  காமாத்திலும் அர்பாத்திலும்+ உள்ள தெய்வங்களால் என்ன செய்ய முடிந்தது? செப்பர்வாயிமில்+ உள்ள தெய்வங்களாலும் என்ன செய்ய முடிந்தது? அவற்றால் சமாரியாவை என்னிடமிருந்து காப்பாற்ற முடிந்ததா?+ 20  இதுவரைக்கும் எந்தத் தெய்வத்தால் தன்னுடைய நகரத்தை என் கையிலிருந்து காப்பாற்ற முடிந்திருக்கிறது? அப்படியிருக்கும்போது, யெகோவா மட்டும் எப்படி எருசலேமை என்னிடமிருந்து காப்பாற்றுவார்?”’”+ என்று கேட்டான். 21  ஆனால், பதிலுக்கு ஒரு வார்த்தைகூட பேசாமல் அவர்கள் அமைதியாக இருந்தார்கள். ஏனென்றால், “நீங்கள் அவனுக்குப் பதில் சொல்லக் கூடாது” என்று ராஜா கட்டளை கொடுத்திருந்தார்.+ 22  அரண்மனை நிர்வாகியும் இல்க்கியாவின் மகனுமான எலியாக்கீம், செயலாளரான செப்னா,+ பதிவாளரும் ஆசாப்பின் மகனுமான யோவா ஆகியவர்கள் தங்களுடைய உடைகளைக் கிழித்துக்கொண்டு, எசேக்கியாவிடம் வந்து, ரப்சாக்கே சொன்னதையெல்லாம் சொன்னார்கள்.

அடிக்குறிப்புகள்

வே.வா., “பானம் பரிமாறுகிறவர்களின் தலைவனை.”
வே.வா., “சீரியர்களின் மொழி.”