Skip to content

Skip to secondary menu

பொருளடக்கத்திற்குச் செல்

யெகோவாவின் சாட்சிகள்

தமிழ்

ஆன்லைன் பைபிள் | புதிய உலக மொழிபெயர்ப்பு

ஏசாயா 34:1-17

முக்கியக் குறிப்புகள்

  • தேசங்களை யெகோவா பழிவாங்கப் போகிறார் (1-8)

  • ஏதோம் பாழாய்ப் போகும் (9-17)

34  தேசங்களே, பக்கத்தில் வந்து நான் சொல்வதைக் கேளுங்கள். ஜனங்களே, கவனித்துக் கேளுங்கள். பூமியும் அதில் உள்ளவையும் கேட்கட்டும். உலகமும் அதில் வாழ்கிற அனைத்தும் கேட்கட்டும்.   யெகோவா எல்லா தேசங்கள்மேலும் பயங்கர கோபமாக இருக்கிறார்.+ அவர்களுடைய எல்லா படைகள்மேலும் கடும் கோபத்தோடு இருக்கிறார்.+ அவர்களைக் கொன்றுபோடுவார். அவர்களை அடியோடு அழித்துவிடுவார்.+   அவர்களுடைய உடல்கள் சிதறிக்கிடக்கும். அவற்றிலிருந்து துர்நாற்றம் வீசும்.+ அவர்களுடைய இரத்தம் மலைகளில் ஆறாக ஓடும்.+   வானம் ஒரு சுருளைப் போலச் சுருட்டி வைக்கப்படும். திராட்சை இலைகள் காய்ந்து உதிர்வதைப் போலவும், அத்திப் பிஞ்சுகள் வெம்பிப்போய் கீழே விழுவதைப் போலவும், வானத்தின் படைகள் வீழ்ந்துவிடும். அவையெல்லாம் சிதைந்துபோகும்.   “ஏனென்றால், வானத்திலே என் வாளில் இரத்தம் சொட்டும்.+ அது ஏதோமின் மேலும் நான் அழிக்க நினைத்திருக்கிற ஜனங்களின் மேலும் இறங்கி என் தீர்ப்பை நிறைவேற்றும்.+   யெகோவாவாகிய நான் போஸ்றாவில் ஒரு பலியைச் செலுத்தப்போகிறேன். ஏதோமில் உயிர்களைக் கொன்று குவிக்கப்போகிறேன்.+ அதற்காக யெகோவாவாகிய என்னிடம் ஒரு வாள் இருக்கிறது. அந்த வாள் முழுவதிலும் இரத்தமும் கொழுப்பும்+ படியும். செம்மறியாட்டுக் கடாக் குட்டியின் இரத்தமும் வெள்ளாடுகளின் இரத்தமும் செம்மறியாட்டுக் கடாக்களுடைய சிறுநீரகங்களின் மேலுள்ள கொழுப்பும் அதில் படியும்.   அவற்றோடு காட்டு எருதுகளும் புஷ்டியான காளைகளும் இளம் காளைகளும் வெட்டிச் சாய்க்கப்படும். தேசத்தில் இரத்த ஆறு ஓடும். அதன் மண் கொழுப்பினால் சேறாகிவிடும்.”   பழிவாங்குவதற்காக யெகோவா ஒரு நாளைத் தீர்மானித்திருக்கிறார்.+ சீயோனின் வழக்கைத் தீர்ப்பதற்காக ஒரு வருஷத்தைக் குறித்திருக்கிறார்.+   அவளுடைய* ஆறுகளில் தண்ணீருக்குப் பதிலாகத் தார் ஓடும். அவளுடைய மண் கந்தகமாக மாறும். அவளுடைய தேசம் எரிகிற தார்போல் ஆகிவிடும். 10  ராத்திரியும் பகலும் அது அணையாமல் எரிந்துகொண்டிருக்கும். அதன் புகை என்றென்றும் எழும்பிக்கொண்டே இருக்கும். எத்தனை தலைமுறை வந்துபோனாலும் அவளுடைய தேசம் பாழாகவே கிடக்கும். எத்தனை வருஷங்கள் உருண்டோடினாலும் யாருமே அதைக் கடந்துபோக மாட்டார்கள்.+ 11  கூழைக்கடா பறவையும் முள்ளம்பன்றியும் அங்கே குடியிருக்கும். நெட்டைக்காது ஆந்தைகளும் அண்டங்காக்கைகளும் அங்கே தங்கும். கடவுள் அளவுநூலைப் பிடித்து அளந்து, அதை வெறுமையாக்குவார். தூக்குநூலை* பிடித்துப் பார்த்து, அதை அழித்துவிடுவார். 12  அதன் அதிபதிகள் யாருமே ராஜாவாக மாட்டார்கள். இளவரசர்கள் எல்லாருமே ஒழிந்துபோவார்கள். 13  அதன் மாடமாளிகைகளில் முட்கள் முளைக்கும். அதன் கோட்டைகளில் முட்செடிகளும் களைகளும் வளர்ந்து நிற்கும். அது நரிகள் குடியிருக்கும் இடமாக மாறும்.+ நெருப்புக்கோழிகள் வாழும் இடமாக ஆகும். 14  பாலைவன மிருகங்களும் ஊளையிடும் மிருகங்களும் அங்கே ஒன்றையொன்று சந்திக்கும். காட்டு ஆடுகள்* ஒன்றையொன்று கூப்பிடும். சாக்குருவிகள் அங்கே தங்கி, ஓய்வெடுக்கும். 15  பறக்கும் பாம்பு தனக்கென ஓர் இடம் அமைத்து அங்கே முட்டைகள் இடும். குட்டிகளைத் தன் நிழலில் வைத்துக்கொள்ளும். பருந்துகள் அங்கே ஜோடி ஜோடியாக வந்து சேரும். 16  யெகோவாவுடைய புத்தகத்திலே தேடிப் பார்த்து சத்தமாக வாசியுங்கள். அவற்றில் ஒன்றும் குறையாது. எதுவுமே ஜோடியில்லாமல் இருக்காது. ஏனென்றால், யெகோவாவே இந்தக் கட்டளையைக் கொடுத்திருக்கிறார். அவருடைய சக்தியே அவற்றை ஒன்றுசேர்த்திருக்கிறது. 17  அவை ஒவ்வொன்றுக்கும் ஓர் இடத்தை அவர் கொடுத்திருக்கிறார். அவருடைய கைகளாலேயே அளந்து கொடுத்திருக்கிறார். அங்கே அவை என்றென்றைக்கும் குடியிருக்கும். தலைமுறை தலைமுறையாகத் தங்கியிருக்கும்.

அடிக்குறிப்புகள்

அநேகமாக, ஏதோமின் தலைநகரான போஸ்றாவைக் குறிக்கலாம்.
வே.வா., “தூக்குக்குண்டை.”
அல்லது, “ஆட்டு உருவப் பேய்கள்.”