Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

யெகோவாவின் சாட்சிகள்

மொழியை தேர்ந்தெடுங்கள் தமிழ்

எஸ்றா 6:1-22

முக்கியக் குறிப்புகள்

  • பதிவேடுகளை ஆராய்ந்தபின் தரியு கொடுத்த ஆணை (1-12)

  • ஆலயம் கட்டிமுடிக்கப்பட்டு அர்ப்பண விழா கொண்டாடப்படுகிறது (13-18)

  • பஸ்கா பண்டிகை கொண்டாடப்படுகிறது (19-22)

6  அதனால், தரியு ராஜாவின் உத்தரவுப்படி பாபிலோனின் கஜானாக்களில் வைக்கப்பட்டிருந்த பதிவேடுகள் ஆராயப்பட்டன.  மேதிய மாகாணத்தில், அக்மேதா நகரிலிருந்த கோட்டையில் ஒரு சுருள் கண்டெடுக்கப்பட்டது. அதில்,  “கோரேஸ் ராஜா தனது ஆட்சியின் முதலாம் வருஷத்தில் எருசலேம் ஆலயம் சம்பந்தமாகக் கொடுத்த உத்தரவு இதுதான்:+ ‘ஆலயத்தை முன்பிருந்த இடத்தில் திரும்பக் கட்டி, அங்கு பலிகளைச் செலுத்த வேண்டும். அதன் அஸ்திவாரங்களைப் பழுதுபார்க்க வேண்டும். அதன் உயரம் 60 முழமாகவும்,* அகலம் 60 முழமாகவும் இருக்க வேண்டும்.+  பெரிய கற்களை ஒன்றின்மேல் ஒன்றாக மூன்று வரிசைகளிலும், மரங்களை+ ஒரு வரிசையிலும் வைத்துக் கட்ட வேண்டும். அதற்கான செலவுகள் ராஜாவின் கஜானாவிலிருந்து தரப்படும்.+  அதோடு, நேபுகாத்நேச்சார் எருசலேமில் உள்ள கடவுளுடைய ஆலயத்திலிருந்து பாபிலோனுக்கு எடுத்துவந்த தங்கப் பாத்திரங்களும் வெள்ளிப் பாத்திரங்களும்+ திருப்பிக் கொடுக்கப்பட வேண்டும். எருசலேமிலுள்ள கடவுளுடைய ஆலயத்தில் அவை இருந்த இடத்திலேயே வைக்கப்பட வேண்டும்.’+  அதனால், ஆற்றுக்கு அப்பாலுள்ள* பிரதேசத்தின் ஆளுநர் தத்னாயுக்கும், சேத்தார்-பொஸ்னாயுக்கும், உங்களோடு சேர்ந்த துணை ஆளுநர்களுக்கும்+ நான் இப்போது கொடுக்கும் கட்டளை என்னவென்றால், யூதர்களுடைய விஷயத்தில் தலையிடாதீர்கள்.  கடவுளுடைய ஆலய வேலையைத் தடுக்காதீர்கள். யூதர்களின் ஆளுநரும் பெரியோர்களும்* அந்த ஆலயத்தை முன்பிருந்த இடத்தில் திரும்பக் கட்டுவார்கள்.  அந்தக் கட்டுமான வேலைக்காக யூத ஜனங்களின் பெரியோர்களுக்கு நீங்கள் உதவ வேண்டுமென்று ஆணையிடுகிறேன். அவர்கள் எந்தத் தடையும் இல்லாமல் வேலையைத் தொடர்ந்து செய்வதற்காக+ அரசு கஜானாவிலிருந்து,+ முக்கியமாக ஆற்றுக்கு அப்பாலுள்ள பிரதேசத்தில் வசூலிக்கப்படுகிற வரியிலிருந்து, உடனடியாக அவர்களுக்குப் பணம் கொடுக்க வேண்டும்.  தேவைப்படுகிற மற்ற எல்லாவற்றையும்கூட கொடுக்க வேண்டும். அதாவது, எருசலேமிலுள்ள குருமார்கள் சொல்கிறபடியே பரலோகத்தின் கடவுளுக்குத் தகன பலி செலுத்த இளம் காளைகள்,+ செம்மறியாட்டுக் கடாக்கள்,+ செம்மறியாட்டுக் குட்டிகள்+ ஆகியவற்றையும், கோதுமையையும்,+ உப்பையும்,+ திராட்சமதுவையும்,+ எண்ணெயையும்+ ஒவ்வொரு நாளும் கண்டிப்பாகக் கொடுக்க வேண்டும். 10  அப்போதுதான், அவர்களால் பரலோகத்தின் கடவுளுக்குப் பிரியமான பலிகளைத் தவறாமல் செலுத்தி, ராஜாவும் அவருடைய மகன்களும் நீடூழி வாழ்வதற்காகப் பிரார்த்தனை செய்ய முடியும்.+ 11  இந்த ஆணையை யார் மீறினாலும் சரி, அவனுடைய வீட்டிலிருந்து ஒரு மரச்சட்டம் உருவி எடுக்கப்பட்டு, அதன்மீதே அவன் தொங்கவிடப்படுவான். என்னுடைய உத்தரவை மீறிய குற்றத்துக்காக அவன் வீடு பொதுக் கழிப்பிடமாக* மாற்றப்படும். 12  ராஜாக்களிலோ ஜனங்களிலோ யாராவது இந்த ஆணையை மீறி எருசலேம் ஆலயத்தை அழிக்க நினைத்தால், அங்கு தன்னுடைய பெயரை நிலைநாட்டியிருக்கிற கடவுள்+ அவனை அழிக்கட்டும்! தரியுவாகிய நான் இந்த உத்தரவைக் கொடுக்கிறேன், இது உடனடியாக அமலுக்கு வருகிறது” என்று எழுதப்பட்டிருந்தது. 13  ஆற்றுக்கு அப்பாலுள்ள பிரதேசத்தின் ஆளுநர் தத்னாயும், சேத்தார்-பொஸ்னாயும்,+ அவர்களோடு சேர்ந்தவர்களும் தரியு ராஜா கட்டளையிட்ட எல்லாவற்றையும் உடனடியாகச் செய்தார்கள். 14  ஆகாயும்+ இத்தோவின் பேரன் சகரியாவும்+ தீர்க்கதரிசனம் சொன்னதைக் கேட்டு உற்சாகம் அடைந்த யூத ஜனங்களின் பெரியோர்கள், கட்டுமான வேலையில் முழு வீச்சில் ஈடுபட்டார்கள்.+ இஸ்ரவேலின் கடவுளுடைய கட்டளைப்படியும்+ கோரேஸ், தரியு, பெர்சிய ராஜாவான அர்தசஷ்டா ஆகியவர்களின் ஆணைப்படியும்+ ஆலயத்தைக் கட்டி முடித்தார்கள். 15  இப்படி, தரியு ராஜா ஆட்சி செய்த ஆறாம் வருஷம், ஆதார்* மாதம், மூன்றாம் நாளில் ஆலயம் கட்டி முடிக்கப்பட்டது. 16  பின்பு, இஸ்ரவேலர்களும் குருமார்களும் லேவியர்களும்+ சிறையிருப்பிலிருந்து திரும்பி வந்த மற்றவர்களும் கடவுளுடைய ஆலயத்தின் அர்ப்பண விழாவைச் சந்தோஷமாகக் கொண்டாடினார்கள். 17  அந்த விழாவின்போது 100 காளைகளையும், 200 செம்மறியாட்டுக் கடாக்களையும், 400 செம்மறியாட்டுக் குட்டிகளையும், பாவப் பரிகார பலியாக இஸ்ரவேல் கோத்திரங்களின் எண்ணிக்கைப்படி 12 வெள்ளாட்டுக் கடாக்களையும் செலுத்தினார்கள்.+ 18  மோசேயின் புத்தகத்தில் எழுதப்பட்டுள்ளபடியே,+ குருமார்களை வெவ்வேறு தொகுதிகளாகவும் லேவியர்களை வெவ்வேறு பிரிவுகளாகவும் பிரித்து,+ எருசலேமில் கடவுளுக்குச் சேவை செய்வதற்காக நியமித்தார்கள். 19  சிறையிருப்பிலிருந்து திரும்பி வந்தவர்கள், முதலாம் மாதம் 14-ஆம் நாளில் பஸ்கா பண்டிகையைக் கொண்டாடினார்கள்.+ 20  எல்லா குருமார்களும் லேவியர்களும் தங்களைத் தூய்மைப்படுத்திக்கொண்டு சுத்தமாக இருந்தார்கள்.+ அதனால் அந்தப் பண்டிகை நாளில், சிறையிருப்பிலிருந்து திரும்பி வந்த எல்லாருக்காகவும் மற்ற குருமார்களுக்காகவும் தங்களுக்காகவும் ஆட்டுக்குட்டிகளைப் பலி கொடுத்தார்கள். 21  பின்பு திரும்பி வந்தவர்களும், அவர்களோடு சேர்ந்துகொண்ட எல்லாரும், அதாவது இஸ்ரவேலின் கடவுளான யெகோவாவை வணங்குவதற்காக* வேறு தேசங்களின் அசுத்தமான பழக்கங்களைவிட்டு விலகிய எல்லாரும், அவற்றைச் சாப்பிட்டார்கள்.+ 22  புளிப்பில்லாத ரொட்டிப் பண்டிகையையும்+ ஏழு நாட்கள் கொண்டாடினார்கள். அவர்களுடைய சந்தோஷத்துக்குக் காரணம் யெகோவாவே. அவர்தான் அவர்களை அசீரிய ராஜாவின் இதயத்தில் இடம்பிடிக்கச் செய்திருந்தார்.+ அதனால், அந்த ராஜா இஸ்ரவேலின் கடவுளாகிய உண்மைக் கடவுளின் ஆலய வேலைக்கு ஆதரவு தந்திருந்தான்.

அடிக்குறிப்புகள்

அதாவது, “87.6 அடியாகவும்.” இணைப்பு B14-ஐப் பாருங்கள்.
அதாவது, “யூப்ரடிஸ் ஆற்றுக்கு மேற்கிலுள்ள.”
வே.வா., “மூப்பர்களும்.”
அல்லது, “குப்பைமேடாக; சாணம் கொட்டும் இடமாக.”
இணைப்பு B15-ஐப் பாருங்கள்.
நே.மொ., “தேடுவதற்காக.”