Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

யெகோவாவின் சாட்சிகள்

மொழியை தேர்ந்தெடுங்கள் தமிழ்

எரேமியா 8:1-22

முக்கியக் குறிப்புகள்

  • எல்லாரும் போகிற போக்கில் ஜனங்கள் போகிறார்கள் (1-7)

  • யெகோவாவின் வார்த்தையை வெறுக்கிறவர்களுக்கு ஏது ஞானம்? (8-17)

  • யூதாவின் நிலைமையைப் பார்த்து எரேமியா புலம்புகிறார் (18-22)

    • “கீலேயாத்தில் பரிமளத் தைலமே இல்லையா?” (22)

8  யெகோவா சொல்வது இதுதான்: “அந்தச் சமயத்தில் யூதாவுடைய ராஜாக்கள், அதிகாரிகள், குருமார்கள், தீர்க்கதரிசிகள், எருசலேம் ஜனங்கள் எல்லாருடைய எலும்புகளும் அவர்களுடைய கல்லறைகளிலிருந்து எடுக்கப்பட்டு,  சூரியனுக்கும் சந்திரனுக்கும் நட்சத்திரங்களுக்கும் முன்பாகப் பரப்பி வைக்கப்படும். இந்த வானத்துப் படைகளைத்தானே அவர்கள் ஆசை ஆசையாக வணங்கினார்கள்!+ பக்தியோடு கும்பிட்டார்கள்! உதவிக்காகக் கூப்பிட்டார்கள்! அவர்களுடைய எலும்புகள் அள்ளப்படாமலும் புதைக்கப்படாமலும் அப்படியே விடப்பட்டு, நிலத்தில் எருவாகிவிடும்.”+  “இந்தப் பொல்லாத ஜனங்களில் மிச்சம்மீதி இருப்பவர்களை நான் சிதறிப்போக வைப்பேன். அவர்கள் எங்கே போனாலும் வாழ்வதைவிட சாவதையே விரும்புவார்கள்” என்று பரலோகப் படைகளின் யெகோவா சொல்கிறார்.  “நீ அவர்களிடம் இப்படிச் சொல்: ‘யெகோவா சொல்வது என்னவென்றால், “விழுந்தவர்கள் எழுந்திருப்பது இல்லையா? ஒருவர் மனம் மாறினால் மற்றவரும் மனம் மாற மாட்டாரா?   ஆனால், இந்த எருசலேம் ஜனங்கள் ஏன் எனக்குத் துரோகம் செய்துகொண்டே இருக்கிறார்கள்? அவர்கள் பித்தலாட்டத்தில் ஊறிப்போயிருக்கிறார்கள்.மனம் மாற மறுக்கிறார்கள்.+   அவர்கள் பேசுவதையெல்லாம் நான் கவனித்துக் கேட்டேன். அவர்கள் நியாயமாகப் பேசவில்லை. அக்கிரமங்கள் செய்ததற்காக ஒருவன்கூட மனம் வருந்தி, ‘இப்படிச் செய்துவிட்டேனே!’ என்று சொல்லவில்லை.+ மற்றவர்கள் போகிற கெட்ட வழிக்கே அவர்களும் திரும்பத் திரும்பப் போகிறார்கள்; ஒரு குதிரை போர்க்களத்துக்குள் பாய்ந்தோடுவதைப் போல அவர்களும் அந்த வழிக்கே பாய்ந்தோடுகிறார்கள்.   ஒரு சாதாரண நாரைக்குக்கூட இடம்பெயர வேண்டிய காலம் தெரியும்.காட்டுப் புறாவுக்கும் உழவாரக் குருவிக்கும் புதர்ச் சிட்டுக்கும்கூட* திரும்பிவர* வேண்டிய காலம் தெரியும். ஆனால் என்னுடைய ஜனங்களுக்கு, யெகோவாவாகிய நான் நியாயத்தீர்ப்பு கொடுக்கப்போகும் காலத்தைப் பற்றித் தெரியவில்லை.”’+   ‘“நாங்கள் புத்திசாலிகள், யெகோவாவின் சட்டம்* எங்களுக்கு நன்றாகத் தெரியும்” என்று நீங்கள் எப்படிச் சொல்லலாம்? எழுத்தர்களின்* கள்ள எழுத்தாணி+ பொய்யை மட்டுமே எழுதிவந்திருக்கிறது.   ஞானிகள் அவமானம் அடைந்திருக்கிறார்கள்;+ கதிகலங்கிப் போயிருக்கிறார்கள். அவர்கள் நிச்சயம் பிடிபடுவார்கள். யெகோவாவின் வார்த்தையை அவர்கள் வெறுத்து ஒதுக்கினார்கள்.அவர்களுக்குக் கொஞ்சமாவது ஞானம் இருக்கிறதா? 10  நான் அவர்களுடைய மனைவிகளையும் நிலங்களையும்மற்ற ஆட்களின் கையில் கொடுத்துவிடுவேன்.+சிறியோர்முதல் பெரியோர்வரை எல்லாருமே அநியாயமாக லாபம் சம்பாதிக்கிறார்கள்.+தீர்க்கதரிசிகள்முதல் குருமார்கள்வரை எல்லாருமே மோசடி செய்கிறார்கள்.+ 11  சமாதானமே இல்லாதபோது,“சமாதானம் இருக்கிறது! சமாதானம் இருக்கிறது!” என்று சொல்லி,+ என் ஜனங்களுடைய காயங்களை* மேலோட்டமாகக் குணப்படுத்தப் பார்க்கிறார்கள். 12  அவர்கள் செய்த அருவருப்பான காரியங்களை நினைத்துக் கொஞ்சமாவது வெட்கப்படுகிறார்களா? இல்லவே இல்லை! வெட்கம் என்றால் என்னவென்றுகூட அவர்களுக்குத் தெரியாது!+ அதனால், விழுந்துவிட்டவர்களோடு அவர்களும் விழுவார்கள். நான் தண்டிக்கும்போது அவர்கள் தடுக்கி விழுவார்கள்’+ என்று யெகோவா சொல்கிறார். 13  ‘நான் அவர்களை ஒட்டுமொத்தமாக அழித்துவிடுவேன்’ என்று யெகோவா சொல்கிறார். ‘திராட்சைக் கொடியில் ஒரு குலைகூட இருக்காது, அத்தி மரத்தில் ஒரு பழம்கூட மிஞ்சாது. அவற்றின் இலைகளெல்லாம் உதிர்ந்துவிடும். நான் அவர்களுக்குக் கொடுத்த எல்லாமே அவர்களுடைய கையைவிட்டு நழுவிப்போகும்.’” 14  “நாம் ஏன் இங்கே உட்கார்ந்துகொண்டிருக்கிறோம்? நாம் எல்லாரும் சேர்ந்து மதில் சூழ்ந்த நகரங்களுக்குப் போய்,+ அங்கே செத்துப்போகலாம். நாம்தான் யெகோவாவுக்கு விரோதமாகப் பாவம் செய்துவிட்டோமே!அதனால், நம் கடவுளாகிய யெகோவா நமக்கு விஷம் கலந்த தண்ணீரைக் கொடுக்கிறார்.+அவர் நம்மைக் கொல்லப்போகிறார். 15  சமாதானம் கிடைக்கும் என்று எதிர்பார்த்தோம்; ஆனால், நல்லது எதுவுமே நடக்கவில்லை.குணமாகும் காலத்துக்காகக் காத்திருந்தோம்; ஆனால், திகில்தான் எங்களை ஆட்டிப்படைக்கிறது!+ 16  தாண் நகரத்தில் எதிரிகளின் குதிரைகள் சீறுகிற சத்தம் கேட்கிறது. வீரியமுள்ள குதிரைகள்* கனைக்கும் சத்தத்தில் தேசமே அதிருகிறது.அந்த எதிரிகள் வந்து தேசத்தையும் அதில் உள்ள எல்லாவற்றையும் நாசமாக்குவார்கள்.நகரத்தையும் அதன் ஜனங்களையும் அழிப்பார்கள்.” 17  “நான் உங்கள் நடுவே பாம்புகளை அனுப்பப்போகிறேன்.அவை மகுடி ஊதினாலும் மயங்காத விஷப் பாம்புகள்.அவை கண்டிப்பாக உங்களைக் கடிக்கும்” என்று யெகோவா சொல்கிறார். 18  என் நெஞ்சு வலிக்கிறது.என் வேதனை தீரவே தீராது. 19  தூர தேசத்திலிருந்து என் ஜனங்கள்உதவி கேட்டு அலறுகிறார்கள். “யெகோவா சீயோனில் இல்லையா? அவளுடைய ராஜா அங்கிருந்து போய்விட்டாரா?” என்று புலம்புகிறார்கள். “ஆனால், அவர்கள் ஒன்றுக்கும் உதவாத பொய் தெய்வங்களின் சிலைகளை வணங்கிஎன் கோபத்தை ஏன் கிளறுகிறார்கள்?” 20  “அறுவடை முடிந்துவிட்டது, கோடைக் காலமும் முடிந்துவிட்டது. ஆனால், நமக்கு இன்னும் விடுதலை கிடைக்கவில்லையே!” 21  என் ஜனங்களுடைய காயங்களைப் பார்த்து என் மனம் பதறுகிறது.+உடல் நடுங்குகிறது. எனக்கு எல்லாமே வெறுத்துப்போய்விட்டது. 22  கீலேயாத்தில் பரிமளத் தைலமே* இல்லையா?+ வைத்தியம் பார்க்க ஒருவர்கூட இல்லையா?+ என் ஜனங்கள் ஏன் இன்னும் குணமாகவில்லை?+

அடிக்குறிப்புகள்

அல்லது, “கொக்குவுக்கும்கூட.”
வே.வா., “இடம்பெயர.”
வே.வா., “அறிவுரை.”
வே.வா., “செயலாளர்களின்.”
வே.வா., “முறிவுகளை.”
வே.வா., “பொலிகுதிரைகள்.”
வே.வா., “தைல மருந்தே.”