Skip to content

Skip to secondary menu

பொருளடக்கத்திற்குச் செல்

யெகோவாவின் சாட்சிகள்

தமிழ்

ஆன்லைன் பைபிள் | புதிய உலக மொழிபெயர்ப்பு

எரேமியா 30:1-24

முக்கியக் குறிப்புகள்

  • சொந்த தேசத்துக்குத் திரும்புவதையும் குணமாக்கப்படுவதையும் பற்றிய வாக்குறுதிகள் (1-24)

30  எரேமியாவுக்கு யெகோவாவிடமிருந்து கிடைத்த செய்தி இதுதான்: 2   “இஸ்ரவேலின் கடவுளாகிய யெகோவா இப்படிச் சொல்கிறார்: ‘நான் உன்னிடம் சொல்கிற எல்லா வார்த்தைகளையும் ஒரு புத்தகத்தில் எழுது.  “காலம் வரப்போகிறது” என்று யெகோவா சொல்கிறார். “அப்போது, இஸ்ரவேலிலிருந்தும் யூதாவிலிருந்தும் சிறைபிடிக்கப்பட்டுப் போன என் ஜனங்களை நான் கூட்டிச்சேர்ப்பேன்.+ அவர்களுடைய முன்னோர்களுக்கு நான் கொடுத்த தேசத்துக்கே அவர்களைக் கூட்டிக்கொண்டு வருவேன். அவர்கள் மறுபடியும் அங்கே குடியிருப்பார்கள்”+ என்று யெகோவா சொல்கிறார்.’”  இஸ்ரவேல் ஜனங்களிடமும் யூதா ஜனங்களிடமும் யெகோவா சொன்ன வார்த்தைகள் இவை.   யெகோவா சொல்வது இதுதான்: “அலறல் சத்தம் கேட்கிறது. எங்கு பார்த்தாலும் திகில்! சமாதானமே இல்லை.   ஒரு ஆண் ஒரு குழந்தையைப் பெற்றெடுக்க முடியுமா என்று தயவுசெய்து கேட்டுப் பாருங்கள். அப்படியிருக்கும்போது, பலசாலியான ஆண்கள் ஏன் இடுப்பைப் பிடித்துக்கொண்டு இருக்கிறார்கள்? பிரசவ வேதனைப்படுகிற பெண்ணைப் போல ஏன் துடிக்கிறார்கள்?+ ஏன் எல்லாருடைய முகமும் வெளுத்துப்போயிருக்கிறது?   ஐயோ! அந்த நாள் பயங்கரமான நாள்!+ அதுபோல் ஒரு நாள் வந்ததே கிடையாது! அது யாக்கோபுக்கு வேதனையான நாள். ஆனாலும், அந்த வேதனையிலிருந்து அவன் விடுவிக்கப்படுவான்.”  பரலோகப் படைகளின் யெகோவா சொல்வது இதுதான்: “அந்த நாளில் நான் அவர்கள் கழுத்திலுள்ள நுகத்தடியை உடைத்துப்போடுவேன். அவர்களுடைய வார்களை இரண்டாக அறுத்துவிடுவேன். முன்பின் தெரியாதவர்கள்* இனி அவர்களை அடிமையாக்க மாட்டார்கள்.  அவர்களுடைய கடவுளான யெகோவாவுக்கும், அவர் கொடுக்கப்போகும் ராஜாவான தாவீதுக்கும் அவர்கள் சேவை செய்வார்கள்.”+ 10  யெகோவா சொல்வது இதுதான்: “என் ஊழியனாகிய யாக்கோபே, பயப்படாதே. இஸ்ரவேலே, திகிலடையாதே.+ தூர தேசத்திலிருந்து உன்னை விடுதலை செய்வேன். நீ சிறைபிடிக்கப்பட்டுப் போன தேசத்திலிருந்து உன் சந்ததியைக் காப்பாற்றுவேன்.+ யாக்கோபு திரும்பி வருவான்; தொல்லை இல்லாமல் சமாதானமாக வாழ்வான். அவனைப் பயமுறுத்த யாரும் இருக்க மாட்டார்கள்.”+ 11  யெகோவா சொல்வது இதுதான்: “உன்னைக் காப்பாற்றுவதற்காக நான் உன்னோடு இருக்கிறேன். உன்னை எந்தத் தேசங்களுக்கெல்லாம் சிதறிப்போக வைத்தேனோ அந்தத் தேசங்களையெல்லாம் அழித்துவிடுவேன்.+ ஆனால், உன்னை அழிக்க மாட்டேன்.+ அதேசமயம், உன்னைத் தண்டிக்காமலும் விட மாட்டேன்.+ உன்னைச் சரியான* அளவுக்குக் கண்டித்துத் திருத்துவேன்.” 12  யெகோவா சொல்வது இதுதான்: “உன் காயத்துக்கு மருந்தே இல்லை.+ உன்னுடைய புண் ஆறவே ஆறாது. 13  உனக்காகப் பரிந்து பேச யாரும் இல்லை. உன்னுடைய புண்ணுக்கு மருந்தே இல்லை. உன்னைக் குணப்படுத்த வழியே இல்லை. 14  உன் ஆசைக் காதலர்கள் உன்னை மறந்துவிட்டார்கள்.+ இப்போதெல்லாம் அவர்கள் உன்னைத் தேடி வருவதில்லை. ஏனென்றால், எதிரியைத் தாக்குவது போல நான் உன்னைத் தாக்கிவிட்டேன்.+ கொடூரக்காரன் தண்டிப்பது போல உன்னைத் தண்டித்துவிட்டேன். ஏனென்றால், நீ பெரிய பாவங்களையும் நிறைய குற்றங்களையும் செய்திருக்கிறாய்.+ 15  நீ காயப்பட்டதற்காக ஏன் கூச்சல்போடுகிறாய்? உன் வலி தீரவே தீராது! நீ பெரிய பாவங்களையும் நிறைய குற்றங்களையும் செய்திருக்கிறாய்.+ அதனால்தான், உன்னை இப்படித் தண்டித்திருக்கிறேன். 16  ஆனாலும், உன்னை அழிக்க நினைக்கிறவர்கள் அழிந்துபோவார்கள்.+ உன்னுடைய எதிரிகள் எல்லாரும் சிறைபிடிக்கப்பட்டுப் போவார்கள்.+ உன்னைச் சூறையாடுகிறவர்கள் சூறையாடப்படுவார்கள். உன்னைக் கொள்ளையடிக்கிற எல்லாரையும் கொள்ளைக்காரர்களின் கையில் கொடுப்பேன்.”+ 17  “அவர்கள் உன்னை ஒதுக்கப்பட்ட நகரம் என்று சொன்னாலும், ‘கேட்பாரற்ற சீயோன்’+ என்று அழைத்தாலும், நான் உன்னைச் சுகப்படுத்துவேன்; உன் காயங்களைக் குணப்படுத்துவேன்”+ என்று யெகோவா சொல்கிறார். 18  யெகோவா சொல்வது இதுதான்: “சிறைபிடிக்கப்பட்டுப் போன யாக்கோபின் சந்ததியை நான் கூட்டிச்சேர்ப்பேன்.+ அவர்களுக்கு இரக்கம் காட்டுவேன். அவர்களுடைய நகரம் மறுபடியும் மலைமேல் கட்டப்படும்.+ அவர்களுடைய கோட்டை அதற்குரிய இடத்தில் அமைக்கப்படும். 19  அவர்கள் நன்றி சொல்வார்கள், சந்தோஷமாக வாய்விட்டுச் சிரிப்பார்கள்.+ அவர்களை ஏராளமாகப் பெருகப் பண்ணுவேன், அவர்கள் குறையவே மாட்டார்கள்.+ அவர்களை மாபெரும் ஜனமாக்குவேன்.* அவர்களை யாரும் அற்பமாகப் பார்க்க மாட்டார்கள்.+ 20  அவர்கள் பழைய நிலைமைக்குத் திரும்புவார்கள். என் முன்னால் பலம்படைத்த ஜனமாக இருப்பார்கள்.+ அவர்களை அடக்கி ஒடுக்குகிற எல்லாரையும் நான் தண்டிப்பேன்.+ 21  அவர்களுடைய தலைவர் அவர்களில் ஒருவராக இருப்பார். அவர்களுடைய ராஜா அவர்கள் மத்தியிலிருந்தே தோன்றுவார். அவரை என் பக்கத்தில் வர வைப்பேன்; அவரும் வருவார்.” “மற்றபடி என் பக்கத்தில் வர யாருக்குத் துணிச்சல் வரும்?” என்று யெகோவா கேட்கிறார். 22  “நீங்கள் என் ஜனங்களாக இருப்பீர்கள்,+ நான் உங்கள் கடவுளாக இருப்பேன்.”+ 23  இதோ! யெகோவாவின் கோபம் புயல்காற்றாய் வீசும்.+ கெட்டவர்களின் தலைமேல் அது படுபயங்கரமான சூறாவளியாகச் சுழற்றியடிக்கும். 24  நினைத்ததைச் செய்து முடிக்கும்வரை யெகோவாவின் கடும் கோபம் தணியாது.+ கடைசி நாட்களில் இதைப் புரிந்துகொள்வீர்கள்.+

அடிக்குறிப்புகள்

வே.வா., “வேறு தேசத்தார்.”
வே.வா., “நியாயமான.”
அல்லது, “அவர்களைப் பெருமைப்படுத்துவேன்.”