Skip to content

Skip to secondary menu

பொருளடக்கத்திற்குச் செல்

யெகோவாவின் சாட்சிகள்

தமிழ்

ஆன்லைன் பைபிள் | புதிய உலக மொழிபெயர்ப்பு

எரேமியா 17:1-27

முக்கியக் குறிப்புகள்

  • யூதாவின் பாவங்கள் செதுக்கப்பட்டிருக்கின்றன (1-4)

  • யெகோவாமேல் நம்பிக்கை வைப்பதால் வரும் ஆசீர்வாதங்கள் (5-8)

  • நம்பவே முடியாத இதயம் (9-11)

  • இஸ்ரவேலின் நம்பிக்கையாகிய யெகோவாவே (12, 13)

  • எரேமியாவின் ஜெபம் (14-18)

  • ஓய்வுநாளைப் புனிதமான நாளாக அனுசரிப்பது (19-27)

17  “யூதாவின் பாவம் இரும்பு எழுத்தாணியால் எழுதப்பட்டிருக்கிறது. அவர்களுடைய இதயப் பலகையிலும் பலிபீடங்களின் கொம்புகளிலும் வைர நுனியால் அது செதுக்கப்பட்டிருக்கிறது.   அடர்த்தியான மரங்களின் கீழும், பெரிய குன்றுகளின் மேலும், வெட்டவெளியில் இருக்கிற மலைகளின் மேலும்+ அவர்கள் வைத்திருந்த பலிபீடங்களையும் பூஜைக் கம்பங்களையும்*+   அவர்களுடைய பிள்ளைகள்கூட ஞாபகம் வைத்திருக்கிறார்கள். யூதா ஜனங்களே, தேசமெங்கும் நீங்கள் பாவம் செய்ததால் உங்களுடைய ஆராதனை மேடுகளை எதிரிகளின் கையில் கொடுப்பேன்.+ உங்களுடைய எல்லா செல்வங்களையும் கொள்ளைபோக வைப்பேன்.+   நான் கொடுத்த சொத்து உங்களுடைய கையைவிட்டுப் போவதற்கு நீங்களே காரணமாவீர்கள்.+ முன்பின் தெரியாத தேசத்தில் உங்கள் எதிரிகளுக்கு அடிமைகளாவீர்கள்.+ ஏனென்றால், என் கோபத்தைத் தீ போல நீங்கள் கிளறிவிட்டிருக்கிறீர்கள்.*+ அது எப்போதும் எரிந்துகொண்டே இருக்கும்.”   யெகோவா சொல்வது இதுதான்: “யெகோவாவாகிய என்னை விட்டுவிட்டு அற்ப மனுஷனையும் மனுஷனுடைய பலத்தையும்+ நம்புகிறவன் சபிக்கப்படுவான்.   பாலைவனத்தில் நிற்கிற தனி மரம் போல அவன் ஆவான். அவன் நல்லதை அனுபவிக்க மாட்டான். வனாந்தரத்தின் வறண்ட பகுதிகளிலும், யாருமே குடியிருக்க முடியாத உப்புநிலத்திலும்தான் அவன் குடியிருப்பான்.   யெகோவாமேல் விசுவாசம் வைக்கிறவனும், யெகோவாமேல் நம்பிக்கை வைக்கிறவனும் ஆசீர்வதிக்கப்படுவான்.+   வாய்க்கால்களின் ஓரமாக நடப்பட்டு, தண்ணீர் பக்கமாக வேர்விடும் மரத்தைப் போல அவன் ஆவான். வெயில் கொளுத்தினாலும் உஷ்ணத்தை உணர மாட்டான். எப்போதும் செழிப்பாக* இருப்பான்.+ வறட்சிக் காலத்தில்கூட கவலையில் வாட மாட்டான். எப்போதும் கனி கொடுத்துக்கொண்டே இருப்பான்.   எல்லாவற்றையும்விட மனுஷனுடைய இதயமே நயவஞ்சகமானது; அது எதையும் செய்யத் துணியும்.*+ அதை யாரால் புரிந்துகொள்ள முடியும்? 10  யெகோவாவாகிய நான் இதயத்தை ஆராய்ந்து பார்க்கிறேன்.+ அடிமனதின் யோசனைகளை* பரிசோதித்துப் பார்த்து, அவரவர் வழிகளுக்கும் செயல்களுக்கும் தகுந்தபடி அவரவருக்குக் கூலி கொடுப்பேன்.+ 11  ஒரு கவுதாரி தான் போடாத முட்டைகளைச் சேர்த்து வைப்பது போல, மோசடிக்காரன் மற்றவர்களுடைய சொத்துகளைச் சேர்த்து வைக்கிறான்.+ ஆனால், கொஞ்சக் காலம்கூட அவற்றை அவனால் அனுபவிக்க முடியாது. கடைசியில், அவன் முட்டாளாகத்தான் இருப்பான்.” 12  கடவுளுடைய மகிமையான சிம்மாசனம் ஆரம்பத்திலிருந்தே உயர்ந்திருக்கிறது. அதுவே நம்முடைய ஆலயம்.+ 13  இஸ்ரவேலின் நம்பிக்கையாகிய யெகோவாவே, உங்களைவிட்டு விலகிப்போகிற* எல்லாரும் அவமானம் அடைவார்கள். உங்களுக்குத் துரோகம் செய்கிறவர்களின் பெயர்கள் மண்ணில்தான் எழுதப்படும்.+ ஏனென்றால், வாழ்வு தரும் நீரூற்றாகிய யெகோவாவை அவர்கள் விட்டுவிட்டார்கள்.+ 14  யெகோவாவே, உங்களைத்தான் நான் எப்போதும் புகழ்கிறேன். நீங்கள் என்னைக் குணமாக்குங்கள், அப்போது நான் குணமாவேன்.+ என்னைக் காப்பாற்றுங்கள், அப்போது நான் பிழைத்துக்கொள்வேன். 15  சிலர் என்னிடம், “யெகோவா சொன்னதெல்லாம் ஏன் இன்னும் நடக்கவில்லை?+ தயவுசெய்து அதையெல்லாம் சீக்கிரமாக நடத்திக்காட்டச் சொல்!” என்கிறார்கள். 16  ஆனாலும், நான் ஒரு மேய்ப்பனாக உங்களைப் பின்பற்றுவதை விட்டுவிட்டு ஓடிப்போகவில்லை. அழிவு நாள் வர வேண்டுமென்று ஆசைப்படவில்லை. நான் என்னென்ன பேசினேன் என்று உங்களுக்கே நன்றாகத் தெரியும். உங்கள் கண் முன்னால்தானே எல்லாவற்றையும் பேசினேன்! 17  என்னைத் திகிலடைய வைக்காதீர்கள். ஆபத்து நாளில் நீங்கள்தான் எனக்கு அடைக்கலம். 18  என்னைத் துன்புறுத்துகிறவர்களுக்கு அவமானம் வரட்டும்.+ ஆனால், எனக்கு அவமானம் வர அனுமதிக்காதீர்கள். அவர்கள் திகிலடையட்டும். ஆனால், நான் திகிலடைய அனுமதிக்காதீர்கள். அவர்களுக்கு எதிராக அழிவு நாளைக் கொண்டுவாருங்கள்.+ அவர்களை நொறுக்கிப்போடுங்கள், அடியோடு அழித்துவிடுங்கள். 19  யெகோவா என்னிடம், “யூதாவின் ராஜாக்கள் வந்துபோகிற முக்கிய* நுழைவாசலுக்கும் எருசலேமின் மற்ற எல்லா நுழைவாசல்களுக்கும் நீ போ. அங்கே நின்றுகொண்டு இப்படிச் சொல்:+ 20  ‘இந்த நுழைவாசல்கள் வழியாக வந்துபோகிற யூதாவின் ராஜாக்களே, யூதா ஜனங்களே, எருசலேம் ஜனங்களே, யெகோவாவின் செய்தியைக் கேளுங்கள். 21  யெகோவா சொல்வது இதுதான்: “ஜாக்கிரதை! ஓய்வுநாளில் நீங்கள் சரக்குகளைச் சுமந்துகொண்டு போகக் கூடாது, எருசலேமின் நுழைவாசல்கள் வழியாக உள்ளே கொண்டுவரவும் கூடாது.+ 22  ஓய்வுநாளில் உங்கள் வீடுகளிலிருந்து எந்தச் சரக்குகளையும் எடுத்துவரக் கூடாது. நீங்கள் எந்த வேலையும் செய்யக் கூடாது.+ ஓய்வுநாளைப் புனிதமான நாளாக அனுசரிக்க வேண்டும். இந்தக் கட்டளையைத்தான் நான் உங்கள் முன்னோர்களுக்குக் கொடுத்தேன்.+ 23  ஆனால், அவர்கள் கீழ்ப்படியவில்லை. நான் எவ்வளவோ சொல்லியும் அவர்கள் காதில் வாங்கவே இல்லை. நான் எவ்வளவோ கண்டித்தும் அவர்கள் திருந்தவே இல்லை.”’+ 24  ‘யெகோவா சொல்வது இதுதான்: “நீங்கள் ஓய்வுநாளில் இந்த நகரத்தின் நுழைவாசல்கள் வழியாக எந்தச் சரக்குகளையும் கொண்டுவரக் கூடாது. ஓய்வுநாளில் எந்த வேலையும் செய்யாமல் அதைப் புனிதமான நாளாக அனுசரிக்க வேண்டும்.+ நான் சொல்வதையெல்லாம் நீங்கள் அப்படியே கேட்டு நடந்தால், 25  தாவீதின் சிம்மாசனத்தில்+ உட்காருகிற ராஜாக்களும் இளவரசர்களும் இந்த நகரத்தின் நுழைவாசல்கள் வழியாக ரதங்களிலும் குதிரைகளிலும் வருவார்கள். அவர்களோடு யூதா ஜனங்களும் எருசலேம் ஜனங்களும் வருவார்கள்.+ இந்த நகரத்தில் எப்போதுமே ஜனங்கள் குடியிருப்பார்கள். 26  யூதாவின் நகரங்களிலிருந்தும், எருசலேமின் சுற்றுப்புறங்களிலிருந்தும், பென்யமீன் தேசத்திலிருந்தும்,+ தாழ்வான பிரதேசத்திலிருந்தும்,+ மலைப்பகுதியிலிருந்தும், நெகேபிலிருந்தும்* ஜனங்கள் தகன பலிகளையும்+ நன்றிப் பலிகளையும்+ மற்ற பலிகளையும்+ உணவுக் காணிக்கைகளையும்+ சாம்பிராணியையும் எடுத்துக்கொண்டு யெகோவாவின் ஆலயத்துக்கு வருவார்கள். 27  ஆனால், நீங்கள் என் பேச்சைக் கேட்காமல் ஓய்வுநாளின் புனிதத்தைக் கெடுத்தீர்கள் என்றால், ஓய்வுநாளின்போது சரக்குகளைச் சுமந்துகொண்டும் எருசலேமின் நுழைவாசல்கள் வழியாக அவற்றை எடுத்துக்கொண்டும் வந்தீர்கள் என்றால், அந்த நுழைவாசல்களில் தீ வைப்பேன். அந்தத் தீ அணையாமல் எரிந்துகொண்டே இருக்கும். அது எருசலேமின் கோட்டைகளைச்+ சாம்பலாக்கிவிடும்”’+ என்று சொன்னார்.”

அடிக்குறிப்புகள்

அல்லது, “என் கோபத்தால் நீங்கள் தீ போலப் பற்ற வைக்கப்பட்டிருக்கிறீர்கள்.”
வே.வா., “இலை உதிராமல்.”
அல்லது, “அதைக் குணப்படுத்தவே முடியாது.”
நே.மொ., “சிறுநீரகங்களை.” வே.வா., “ஆழமான உணர்ச்சிகளை.”
வே.வா., “விசுவாசதுரோகம் செய்கிற.”
நே.மொ., “ஜனங்களின்.”
வே.வா., “தெற்கிலிருந்தும்.”