Skip to content

Skip to secondary menu

பொருளடக்கத்திற்குச் செல்

யெகோவாவின் சாட்சிகள்

தமிழ்

ஆன்லைன் பைபிள் | புதிய உலக மொழிபெயர்ப்பு

எபிரெயர் 6:1-20

முக்கியக் குறிப்புகள்

  • முதிர்ச்சியை நோக்கி முன்னேறுங்கள் (1-3)

  • விசுவாசத்தைவிட்டு விலகியவர்கள், கடவுளுடைய மகனை மறுபடியும் மரக் கம்பத்தில் ஆணியடிக்கிறார்கள் (4-8)

  • நம்பிக்கை நிறைவேறும் என்ற முழு உறுதியோடு இருங்கள் (9-12)

  • கடவுளுடைய வாக்குறுதி நிச்சயம் நிறைவேறும் (13-20)

    • கடவுளுடைய வாக்குறுதியும் உறுதிமொழியும் மாறாதவை (17, 18)

6  அதனால்தான், கிறிஸ்துவைப் பற்றிய அடிப்படை போதனைகளைக்+ கற்று முடித்திருக்கிற நாம், வீணான செயல்களைவிட்டு மனம் திருந்துவது, கடவுள்மேல் விசுவாசம் வைப்பது ஆகியவற்றையும்,  ஞானஸ்நானங்கள், கைகளை வைப்பது,+ உயிர்த்தெழுதல்,+ நிரந்தர நியாயத்தீர்ப்பு ஆகிய போதனைகளையும் மறுபடியும் அஸ்திவாரமாகப் போடாமல் முதிர்ச்சியை நோக்கி வேகமாக முன்னேற வேண்டும்.+  கடவுள் அனுமதித்தால் நாம் கண்டிப்பாக முதிர்ச்சியை நோக்கி முன்னேறுவோம்.  ஒருசமயம் அறிவொளியைப் பெற்றும்,+ பரலோக அன்பளிப்பை* ருசிபார்த்தும், கடவுளுடைய சக்தியைப் பெற்றும்,  கடவுளுடைய நல்ல வார்த்தையைச் சுவைத்தும், வரப்போகிற உலகத்தின்* வல்லமையான காரியங்களை ருசித்தும்  விசுவாசத்தைவிட்டு விலகியவர்கள்,+ கடவுளுடைய மகனைத் தாங்களே மறுபடியும் மரக் கம்பத்தில் ஆணியடித்து வெளிப்படையாக அவரை அவமானப்படுத்துகிறார்கள்.+ அதனால், அவர்களுடைய புத்தியைத் தெளிய வைத்து அவர்களைத் திருத்துவது முடியாத காரியம்.  உதாரணமாக, நிலம் அதன்மேல் அடிக்கடி பெய்கிற மழை நீரை உறிஞ்சிக்கொண்டு, அதில் பயிர் செய்கிறவர்களுக்குப் பிரயோஜனமாக இருக்கிற விளைச்சலைத் தரும்போது, அது கடவுளால் ஆசீர்வதிக்கப்படும்.  ஆனால், களைகளையும் முட்செடிகளையும் முளைப்பிக்கும்போது, அது ஒதுக்கித்தள்ளப்பட்டு விரைவில் சாபத்துக்குள்ளாகும், முடிவில் சுட்டெரிக்கப்படும்.  அன்புக் கண்மணிகளே, நாங்கள் இப்படிப் பேசினாலும், விசுவாசத்தை விட்டு விலகியவர்களைவிட நீங்கள் நல்ல நிலையில் இருக்கிறீர்கள் என்றும், மீட்புக்கு வழிநடத்துகிற காரியங்களைப் பெற்றிருக்கிறீர்கள் என்றும் நம்பிக்கையோடு இருக்கிறோம். 10  பரிசுத்தவான்களுக்காக நீங்கள் சேவை செய்திருக்கிறீர்கள், சேவை செய்தும் வருகிறீர்கள்; அதனால், உங்களுடைய உழைப்பையும் தன்னுடைய பெயருக்காக நீங்கள் காட்டிய அன்பையும் மறந்துவிடுவதற்குக் கடவுள் அநீதியுள்ளவர் கிடையாது.+ 11  நீங்கள் ஒவ்வொருவரும் தொடர்ந்து சுறுசுறுப்பாகச் சேவை செய்ய வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். அப்போதுதான், உங்களுடைய நம்பிக்கை+ நிறைவேறும் என்ற முழு உறுதி கடைசிவரை+ உங்களுக்கு இருக்கும். 12  அதனால், மந்தமானவர்களாக ஆகிவிடாதீர்கள்;+ அதற்குப் பதிலாக, விசுவாசத்தாலும் பொறுமையாலும் கடவுளுடைய வாக்குறுதிகளைப் பெற்றவர்களுடைய முன்மாதிரியைப் பின்பற்றுங்கள். 13  ஆபிரகாமுக்குக் கடவுள் வாக்குறுதி கொடுத்தபோது, ஆணையிட்டுச் சொல்வதற்குத் தன்னைவிடப் பெரியவர் யாரும் இல்லாததால் தன்மீதே ஆணையிட்டு,+ 14  “நான் உன்னை நிச்சயம் ஆசீர்வதிப்பேன்; நான் உன்னை நிச்சயம் பெருகப் பண்ணுவேன்” என்று சொன்னார்.+ 15  அதன்படியே, ஆபிரகாம் பொறுமையாகக் காத்திருந்த பின்பு கடவுள் வாக்குறுதி கொடுத்ததைப் பெற்றுக்கொண்டார். 16  மக்கள் தங்களைவிட பெரியவர்கள் பெயரில்தான் ஆணையிடுவார்கள். அந்த உறுதிமொழி சட்டப்பூர்வ உத்தரவாதம்+ கொடுப்பதால், எல்லா வாக்குவாதங்களுக்கும் முற்றுப்புள்ளி வைக்கிறது. 17  அப்படியே, கடவுளும் தன்னுடைய வாக்குறுதியை ஆஸ்தியாகப் பெற்றவர்களுக்குத்+ தன்னுடைய நோக்கம் மாறாது என்பதை இன்னும் தெளிவுபடுத்த விரும்பி, ஓர் உறுதிமொழியின் மூலம் அதற்கு உத்தரவாதம் கொடுத்தார். 18  கடவுளால் பொய் சொல்லவே முடியாத,+ மாறாத இரண்டு காரியங்களை* வைத்துப் பார்க்கும்போது, அவரை அடைக்கலமாக நினைத்து ஓடிவந்த நாம், நம் முன்னால் வைக்கப்பட்டிருக்கிற நம்பிக்கையைப் பலமாகப் பிடித்துக்கொண்டு மிகுந்த ஊக்கம் பெறுவதற்காகவே அதை உறுதிப்படுத்தினார் என்பது தெளிவாகத் தெரிகிறது. 19  அந்த நம்பிக்கை+ நம் உயிருக்கு நங்கூரம் போன்றது; அது உறுதியானது, நம்பகமானது; திரைச்சீலைக்குள் போக அது நம்மை வழிநடத்துகிறது.+ 20  மெல்கிசேதேக்கைப் போலவே என்றென்றும் தலைமைக் குருவாகியிருக்கிற+ நம் முன்னோடியான இயேசு+ நம் சார்பில் அந்தத் திரைச்சீலைக்குள் போயிருக்கிறார்.

அடிக்குறிப்புகள்

வே.வா., “இலவச அன்பளிப்பை.”
வே.வா., “சகாப்தத்தின்.” சொல் பட்டியலைப் பாருங்கள்.
அதாவது, “யெகோவாவின் வாக்குறுதியையும் ஆணையையும்.”