Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

யெகோவாவின் சாட்சிகள்

மொழியை தேர்ந்தெடுங்கள் தமிழ்

எபிரெயர் 12:1-29

முக்கியக் குறிப்புகள்

  • இயேசு நம் விசுவாசத்தை முழுமையாக்குகிறவர் (1-3)

    • திரண்ட மேகம் போன்ற சாட்சிகள் (1)

  • யெகோவாவின் புத்திமதியை அலட்சியம் செய்யாதே (4-11)

  • நீங்கள் போகிற பாதைகளை எப்போதும் நேராக்குங்கள் (12-17)

  • பரலோக எருசலேமை அணுகுவது (18-29)

12  அதனால், திரண்ட மேகம் போன்ற இத்தனை சாட்சிகள் நம்மைச் சூழ்ந்திருப்பதால், நாமும்கூட பாரமான எல்லாவற்றையும், நம்மை எளிதில் சிக்க வைக்கிற பாவத்தையும்,+ உதறித்தள்ளிவிட்டு நமக்கு நியமிக்கப்பட்டிருக்கிற ஓட்டப் பந்தயத்தில் சகிப்புத்தன்மையோடு ஓடுவோமாக.+  விசுவாசத்தின் அதிபதியும் நம்முடைய விசுவாசத்தை முழுமையாக்குகிறவருமான* இயேசுவின் மீதே கண்களைப் பதிய வைத்து+ ஓடுவோமாக. அவர் தன் முன்னால் வைக்கப்பட்டிருந்த சந்தோஷத்தின் காரணமாக அவமானத்தைப் பொருட்படுத்தாமல் மரக் கம்பத்தில்* வேதனைகளைச் சகித்தார்; இப்போது, கடவுளுடைய சிம்மாசனத்தின் வலது பக்கத்தில் உட்கார்ந்திருக்கிறார்.+  பாவிகள் தங்களுக்கே கேடுண்டாகும்படி பேசிய கேவலமான பேச்சுகளையெல்லாம்+ சகித்துக்கொண்ட அவரைப் பற்றிக் கவனமாக யோசித்துப் பாருங்கள். அப்படிச் செய்தால், நீங்கள் சோர்ந்துபோய் பின்வாங்கிவிட மாட்டீர்கள்.+  பாவத்துக்கு எதிரான உங்களுடைய போராட்டத்தில் இரத்தம் சிந்துமளவுக்கு நீங்கள் இன்னும் போராடவில்லை.  பிள்ளைகளுக்குச் சொல்லப்படுவதுபோல் உங்களுக்குச் சொல்லப்பட்ட அறிவுரையை நீங்கள் அடியோடு மறந்துவிட்டீர்கள்: “என் மகனே, யெகோவாவின்* புத்திமதியை* அலட்சியம் செய்யாதே, அவர் உன்னைத் திருத்தும்போது சோர்ந்துபோகாதே.  யெகோவா* யார்மேல் அன்பு வைத்திருக்கிறாரோ அவர்களைக் கண்டித்துத் திருத்துகிறார். சொல்லப்போனால், யாரையெல்லாம் தன்னுடைய மகன்களாக ஏற்றுக்கொள்கிறாரோ அவர்களையெல்லாம் தண்டிக்கிறார்.”*+  உங்களைத் திருத்துவதற்காகத்தான்* கடவுள் உங்களைத் தண்டிக்கிறார் என்பதைப் புரிந்துகொண்டு, அதைச் சகித்துக்கொள்ளுங்கள். அவர் உங்களைத் தன்னுடைய மகன்களைப் போல் நடத்துகிறார்;+ தகப்பன் கண்டித்துத் திருத்தாத மகன் உண்டா?+  எல்லாருக்கும் கிடைக்கிற கண்டிப்பு உங்களுக்குக் கிடைக்காவிட்டால் நீங்கள் உண்மையான மகன்களாக இல்லாமல் முறைகேடாகப் பிறந்த மகன்களாகத்தான் இருப்பீர்கள்.  பூமியிலுள்ள நம் தகப்பன்கள் நம்மைக் கண்டித்துத் திருத்தினாலும், நாம் அவர்களுக்கு மரியாதை கொடுத்தோம்; அப்படியானால், வாழ்வு பெறுவதற்காக நம் பரலோகத் தகப்பனுக்கு* நாம் இன்னும் அதிகமாகக் கட்டுப்பட்டு நடக்க வேண்டும், இல்லையா?+ 10  பூமியிலுள்ள தகப்பன்கள் தங்களுக்குச் சரியாகத் தோன்றியபடி கொஞ்சக் காலம் நம்மைக் கண்டித்துத் திருத்தினார்கள். பரலோகத் தகப்பனோ, தன்னைப் போல் நாமும் பரிசுத்தமானவர்களாக இருக்கும்படி+ நம்முடைய நன்மைக்காக நம்மைக் கண்டித்துத் திருத்துகிறார். 11  உண்மைதான், எந்தக் கண்டிப்பும் அந்தச் சமயத்தில் சந்தோஷமாகத் தோன்றாது, வேதனையாகத்தான் தோன்றும். ஆனாலும், அதனால் பயிற்சி பெற்றவர்களுக்கு அது பிற்பாடு சமாதான பலனைத் தரும், அதாவது நீதியான வாழ்வைத் தரும். 12  அதனால், பலமில்லாத கைகளையும் தள்ளாடுகிற முழங்கால்களையும் பலப்படுத்துங்கள்;+ 13  நீங்கள் போகிற பாதைகளை எப்போதும் நேராக்குங்கள்;+ அப்போதுதான், பலவீனமான கைகால் மூட்டுகள் பிசகிப்போகாது, அவை குணமாகும். 14  எல்லாரோடும் சமாதானமாக இருக்கப் பாடுபடுங்கள்,+ புனிதமானவர்களாக இருக்கவும் பாடுபடுங்கள்;+ புனிதமில்லாதவர்கள் யாரும் நம் எஜமானைப் பார்க்க மாட்டார்கள். 15  உங்களில் யாரும் கடவுளுடைய அளவற்ற கருணையை இழந்துவிடாதபடி எச்சரிக்கையாக இருங்கள்; எந்தவொரு விஷத்தன்மையுள்ள வேரும் உங்களுக்குள் முளைத்து பிரச்சினை உண்டாக்காதபடியும், அதனால் பலர் தீட்டுப்படாதபடியும் எச்சரிக்கையாக இருங்கள்.+ 16  அதோடு, உங்களில் யாரும் பாலியல் முறைகேட்டில்* ஈடுபடுகிறவராகவோ, ஏசாவைப் போல் பரிசுத்த காரியங்களை மதிக்காதவராகவோ இல்லாதபடி எச்சரிக்கையாக இருங்கள்; அவன் ஒரேவொரு வேளை உணவுக்காகத் தன்னுடைய மூத்தமகன் உரிமையைக் கொடுத்துவிட்டான்.+ 17  அதன் பிறகு என்ன நடந்ததென்று உங்களுக்கே தெரியும்; அவன் ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொள்ள விரும்பியும் ஒதுக்கித்தள்ளப்பட்டான்; அப்போது, அவன் கண்ணீர்விட்டுத்+ தன் அப்பாவுடைய மனதை மாற்ற எவ்வளவோ முயற்சி செய்தும் அவனால் முடியவில்லை. 18  அப்படியானால், நீங்கள் அணுகியிருப்பது* தொட்டு உணரக்கூடிய மலையை+ அல்ல; அது தீப்பற்றி எரிந்தது,+ அங்கே கார்மேகம் சூழ்ந்தது, காரிருள் கவ்வியது, புயல்காற்று வீசியது,+ 19  எக்காளம் முழங்கியது,+ குரல் கேட்டது.+ அந்தக் குரலைக் கேட்ட மக்கள் அதற்குமேல் ஒரு வார்த்தைகூட அது தங்களிடம் பேச வேண்டாமென்று மோசேயிடம் கெஞ்சிக் கேட்டுக்கொண்டார்கள்.+ 20  ஏனென்றால், “ஒரு மிருகம் இந்த மலையைத் தொட்டால்கூட, அது கல்லெறிந்து கொல்லப்பட வேண்டும்” என்ற கட்டளையைக் கேட்டு அவர்கள் பயந்துபோயிருந்தார்கள்.+ 21  அதோடு மோசேயும்கூட, “நான் பயந்து நடுங்குகிறேன்”+ என்று சொல்லும் அளவுக்கு அந்தக் காட்சி பயங்கரமாக இருந்தது. 22  நீங்களோ பரலோக சீயோன் மலையையும்,+ உயிருள்ள கடவுளுடைய நகரமாகிய பரலோக எருசலேமையும்,+ லட்சக்கணக்கான தேவதூதர்கள் அடங்கிய பேரவையையும்,+ 23  பரலோக உறுப்பினர்களாகச் சேர்க்கப்பட்டிருக்கிற மூத்தமகன்களின் சபையையும், எல்லாருக்கும் நீதிபதியாகிய கடவுளையும்,+ அவருடைய சக்தியால் பிறப்பிக்கப்பட்டுப்+ பரிபூரணமாக்கப்பட்ட நீதிமான்களையும்,+ 24  புதிய ஒப்பந்தத்தின்+ மத்தியஸ்தரான இயேசுவையும்,+ ஆபேலின் இரத்தம்+ பேசியதைவிட மேலான விதத்தில் பேசுகிற அவருடைய இரத்தமாகிய தெளிக்கப்பட்ட இரத்தத்தையும் அணுகியிருக்கிறீர்கள். 25  அதனால், கடவுள் பேசும்போது செவிகொடுக்காமல் இருந்துவிடாதபடி* பார்த்துக்கொள்ளுங்கள். ஏனென்றால், பூமியில் தெய்வீக எச்சரிப்பைக் கொடுத்தவருக்குச் செவிகொடுக்காமல் இருந்தவர்கள் தண்டனையிலிருந்து தப்பிக்கவில்லை. அப்படியிருக்கும்போது, பரலோகத்திலிருந்து பேசுகிறவருக்கு நாம் செவிகொடுக்காமல் அவரைவிட்டு விலகினால், தண்டனையிலிருந்து எப்படித் தப்பிப்போம்?+ 26  அன்று கடவுளுடைய குரல் பூமியை உலுக்கியது;+ இன்றோ, “நான் இன்னொரு தடவை இந்தப் பூமியை மட்டுமல்ல, வானத்தையும் உலுக்குவேன்” என்று அவர் வாக்குறுதி கொடுத்திருக்கிறார்.+ 27  “இன்னொரு தடவை” என்று அவர் குறிப்பிட்டிருப்பது உலுக்கப்படுகிறவை, அதாவது உண்டாக்கப்பட்டவை, அழிக்கப்படும் என்பதை அர்த்தப்படுத்துகிறது; உலுக்கப்படாதவை நிலைத்திருப்பதற்காக அவை அழிக்கப்படும். 28  அதனால், உலுக்கி அசைக்க முடியாத அரசாங்கம் நமக்குக் கிடைக்கப்போவதால் தொடர்ந்து அளவற்ற கருணையைப் பெற்று, பயத்தோடும் பக்தியோடும் கடவுளுக்குப் பிரியமாகப் பரிசுத்த சேவை செய்வோமாக. 29  ஏனென்றால், நம்முடைய கடவுள் சுட்டெரிக்கிற நெருப்பாக இருக்கிறார்.+

அடிக்குறிப்புகள்

வே.வா., “பரிபூரணமாக்குகிறவருமான.”
இணைப்பு A5-ஐப் பாருங்கள்.
வே.வா., “யெகோவா கண்டிக்கும்போது.”
இணைப்பு A5-ஐப் பாருங்கள்.
நே.மொ., “அவர்களுக்கெல்லாம் சாட்டையடி கொடுக்கிறார்.”
வே.வா., “உங்களுக்குப் பயிற்சி கொடுப்பதற்காகத்தான்.”
நே.மொ., “நம் ஆன்மீக வாழ்வின் தகப்பனுக்கு.”
இஸ்ரவேலர்கள் சீனாய் மலையை அணுகிய சமயத்தை இது குறிக்கிறது.
வே.வா., “சாக்குப்போக்கு சொல்லாதபடி; அலட்சியம் செய்யாதபடி.”