Skip to content

Skip to secondary menu

பொருளடக்கத்திற்குச் செல்

யெகோவாவின் சாட்சிகள்

தமிழ்

ஆன்லைன் பைபிள் | புதிய உலக மொழிபெயர்ப்பு

எசேக்கியேல் 28:1-26

முக்கியக் குறிப்புகள்

 • தீரு ராஜாவுக்கு எதிரான தீர்க்கதரிசனம் (1-10)

  • “நான் ஒரு கடவுள்” (2, 9)

 • தீரு ராஜாவுக்காகப் புலம்பல் பாட்டு (11-19)

  • ‘நீ ஏதேனில் இருந்தாய்’ (13)

  • “பாதுகாக்கும் கேருபீனாக நான் உன்னை நியமித்தேன்” (14)

  • “கெட்ட வழியில் நடக்க ஆரம்பித்தாய்” (15)

 • சீதோனுக்கு எதிரான தீர்க்கதரிசனம் (20-24)

 • இஸ்ரவேலர்கள் தங்கள் தேசத்திற்குத் திரும்புவார்கள் (25, 26)

28  யெகோவா மறுபடியும் என்னிடம்,  “மனிதகுமாரனே, தீருவின் தலைவனைப் பார்த்து இப்படிச் சொல்: ‘உன்னதப் பேரரசராகிய யெகோவா சொல்வது இதுதான்: “உன் இதயத்தில் பெருமை வந்துவிட்டதால்+ உன்னை ஒரு கடவுள் என்று சொல்லிக்கொண்டிருக்கிறாய். கடல் நடுவே கடவுளின் சிம்மாசனத்தில் உட்கார்ந்திருப்பதாகப் பெருமையடிக்கிறாய்.+ நீ என்னதான் உன்னைக் கடவுளாக நினைத்தாலும், நீ சாதாரண மனுஷன்தான், கடவுள் கிடையாது.   நீ தானியேலைவிட அறிவாளி என்று நினைக்கிறாய்.+ உனக்குத் தெரியாத ரகசியங்களே இல்லை என்று நினைக்கிறாய்.   உன்னுடைய ஞானத்தினாலும் புத்தியினாலும்* நீ சொத்துகளைச் சேர்த்தாய். தங்கத்தையும் வெள்ளியையும் பொக்கிஷ அறைகளில் குவித்து வைத்தாய்.+   திறமையாக வியாபாரம் செய்து கொள்ளை லாபம் சம்பாதித்தாய்.+ செல்வம் வந்ததும் உன் இதயத்தில் செருக்கும் வந்துவிட்டது.”’  ‘அதனால், உன்னதப் பேரரசராகிய யெகோவா சொல்வது இதுதான்: “நீ உன் உள்ளத்தில் உன்னை ஒரு கடவுளாக நினைப்பதால்,   மிகவும் கொடூரமான ஜனங்களை உனக்கு எதிராக வர வைப்பேன்.+ அவர்கள் வாளை உருவி, உன் ஞானத்தினால் நீ சேர்த்த எல்லா அழகான பொருள்களையும் அழிப்பார்கள். உன்னுடைய சிறப்பையும் மேன்மையையும் குலைத்துப்போடுவார்கள்.+   உன்னைச் சவக்குழியில் இறக்குவார்கள். நடுக்கடலில் உனக்குக் கோரமான முடிவுகட்டுவார்கள்.+   அப்போதுகூட, உன்னை அழிக்கிறவர்களைப் பார்த்து, ‘நான் ஒரு கடவுள்’ என்று சொல்வாயா? உன்னைக் களங்கப்படுத்துகிறவர்களின் கையில் சிக்கும்போது நீ ஒரு கடவுளாகவா இருப்பாய்? வெறும் மனுஷனாகத்தானே இருப்பாய்.”’ 10  ‘விருத்தசேதனம் செய்யப்படாத ஆட்களைப் போல நீ வேறு தேசத்து ஜனங்களின் கையில் சாவாய். இதை நானே சொல்கிறேன்’ என்று உன்னதப் பேரரசராகிய யெகோவா சொல்கிறார்” என்றார். 11  யெகோவா மறுபடியும் என்னிடம், 12  “மனிதகுமாரனே, தீருவின் ராஜாவைப் பார்த்து இந்தப் புலம்பல் பாட்டைப் பாடு: ‘உன்னதப் பேரரசராகிய யெகோவா சொல்வது இதுதான்: “நீ எந்தக் குறையும் இல்லாதவனாக இருந்தாய். ஞானம் நிறைந்தவனாகவும்+ அழகே உருவானவனாகவும் இருந்தாய்.+ 13  நீ கடவுளுடைய தோட்டமான ஏதேனில் இருந்தாய். மாணிக்கம், புஷ்பராகம், சூரியகாந்தக் கல், படிகப்பச்சை, கோமேதகம், பச்சைக் கல், நீலமணிக் கல், நீலபச்சைக் கல்,+ மரகதம் ஆகிய ரத்தினக்கற்களால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தாய். அந்தக் கற்கள் பதிக்கப்பட்ட தங்க நகைகளைப் போட்டிருந்தாய். உன்னைப் படைத்த நாளில் அவற்றை நான் தயாராக வைத்திருந்தேன். 14  பாதுகாக்கும் கேருபீனாக நான் உன்னைத் தேர்ந்தெடுத்து நியமித்தேன். நீ கடவுளுடைய பரிசுத்த மலையில் இருந்தாய்.+ எரிகிற கற்களின் நடுவில் நடந்தாய். 15  நீ படைக்கப்பட்ட நாளிலிருந்து நல்ல வழியில்தான் நடந்தாய். ஆனால், பிற்பாடு கெட்ட வழியில் நடக்க ஆரம்பித்தாய்.+ 16  நீ வியாபாரம் செய்வதில் மூழ்கிப்போனதால்+ உன் நடுவே வன்முறை பெருகியது. நீ பாவம் செய்ய ஆரம்பித்தாய்.+ நீ தீட்டுப்பட்டதால் உன்னைக் கடவுளுடைய மலையிலிருந்தும் எரிகிற கற்களின் நடுவிலிருந்தும் துரத்தியடிப்பேன். பாதுகாக்கும் கேருபீனே, நான் உன்னை அழித்துவிடுவேன்.+ 17  அழகினால் உன் இதயத்தில் பெருமை வந்துவிட்டது.+ உன்னையே நீ உயர்வாக நினைத்ததால்+ உன் ஞானத்தைக் கெடுத்துக்கொண்டாய். நான் உன்னைத் தரையில் தள்ளுவேன்.+ ராஜாக்களுக்கு முன்னால் உன்னை வேடிக்கைப் பொருளாக்குவேன். 18  நீ செய்த நேர்மையற்ற வியாபாரத்தினாலும் பெரிய குற்றத்தினாலும் உன்னுடைய பரிசுத்தமான இடங்களைத் தீட்டுப்படுத்தினாய். அதனால், உன் நடுவில் தீயைக் கொளுத்துவேன். அது உன்னைப் பொசுக்கிவிடும்.+ உன்னைப் பார்க்கிற எல்லாருடைய கண் முன்னாலும் நான் உன்னை இந்தப் பூமியின் மேல் சாம்பலாக்குவேன். 19  உன்னைப் பற்றித் தெரிந்த ஜனங்கள் அதிர்ச்சியோடு உன்னைப் பார்ப்பார்கள்.+ உனக்குத் திடீரென்று பயங்கரமான முடிவு வரும். நீ அடியோடு அழிந்துபோவாய்”’”+ என்றார். 20  யெகோவா மறுபடியும் என்னிடம், 21  “மனிதகுமாரனே, சீதோனுக்கு+ நேராக உன் முகத்தைத் திருப்பிக்கொண்டு, அவளுக்கு எதிராக இப்படித் தீர்க்கதரிசனம் சொல்: 22  ‘உன்னதப் பேரரசராகிய யெகோவா சொல்வது இதுதான்: “சீதோனே, நான் உன்னுடைய எதிரியாக வந்து, உன் நடுவே மகிமை அடைவேன். நான் உன்னைத் தண்டித்து, நான் பரிசுத்தமான கடவுள் என்று காட்டும்போது நான் யெகோவா என்று ஜனங்கள் தெரிந்துகொள்வார்கள். 23  உனக்கு எதிராகக் கொள்ளைநோயை அனுப்புவேன். உன்னுடைய வீதிகளில் இரத்தம் ஓடும். எல்லா பக்கத்திலிருந்தும் வாள் பாய்ந்து வந்து உன் ஜனங்களை வெட்டிச் சாய்க்கும். அப்போது, நான் யெகோவா என்று அவர்கள் தெரிந்துகொள்வார்கள்.+ 24  அதன்பின், இஸ்ரவேல் ஜனங்களை முள்ளாய்க் குத்தி நோகடிக்கிறவர்களும்,+ கேவலமாக நடத்துகிறவர்களும் சுற்றுவட்டாரத்தில் எங்குமே இருக்க மாட்டார்கள். அப்போது, நான் உன்னதப் பேரரசராகிய யெகோவா என்று எல்லாரும் தெரிந்துகொள்வார்கள்.”’ 25  ‘உன்னதப் பேரரசராகிய யெகோவா சொல்வது இதுதான்: “மற்ற தேசங்களுக்குச் சிதறிப்போன இஸ்ரவேலர்களை நான் மறுபடியும் ஒன்றுசேர்க்கும்போது,+ நான் பரிசுத்தமான கடவுள் என்று எல்லா ஜனங்களும் புரிந்துகொள்வார்கள்.+ என்னுடைய ஊழியனாகிய யாக்கோபுக்கு நான் கொடுத்த தேசத்தில்+ என் ஜனங்கள் குடியிருப்பார்கள்.+ 26  அவர்களைக் கேவலமாக நடத்துகிற சுற்றுவட்டார ஜனங்கள் எல்லாரையும் நான் தண்டித்த பின்பு,+ அவர்கள் அங்கே பாதுகாப்பாக வாழ்வார்கள்.+ வீடுகளைக் கட்டி, திராட்சைத் தோட்டங்களை அமைத்து,+ பயமில்லாமல் வாழ்வார்கள். அப்போது, நான் அவர்களுடைய கடவுளான யெகோவா என்று தெரிந்துகொள்வார்கள்”’” என்றார்.

அடிக்குறிப்புகள்

வே.வா., “பகுத்தறிவினாலும்.”