Skip to content

Skip to secondary menu

பொருளடக்கத்திற்குச் செல்

யெகோவாவின் சாட்சிகள்

தமிழ்

ஆன்லைன் பைபிள் | புதிய உலக மொழிபெயர்ப்பு

அப்போஸ்தலர் 19:1-41

முக்கியக் குறிப்புகள்

  • எபேசுவில் பவுல்; சிலர் மறுபடியும் ஞானஸ்நானம் எடுக்கிறார்கள் (1-7)

  • பவுல் கற்பிக்கிறார் (8-10)

  • பேய்களின் தொல்லைகள் மத்தியிலும் வெற்றி (11-20)

  • எபேசுவில் கலவரம் (21-41)

19  அப்பொல்லோ+ கொரிந்துவில் இருந்தபோது, பவுல் மலைப்பகுதிகள் வழியாக எபேசுவுக்குப்+ போய்ச் சேர்ந்தார். அங்கே சில சீஷர்களைப் பார்த்து அவர்களிடம்,  “நீங்கள் இயேசுவின் சீஷர்களானபோது கடவுளுடைய சக்தியைப் பெற்றுக்கொண்டீர்களா?”+ என்று கேட்டார். அதற்கு அவர்கள், “கடவுளுடைய சக்தியைப் பற்றி நாங்கள் கேள்விப்பட்டதுகூட இல்லை” என்று சொன்னார்கள்.  “அப்படியானால், நீங்கள் எந்த ஞானஸ்நானத்தைப் பெற்றீர்கள்?” என்று அவர் கேட்டார். அதற்கு, “யோவான் கொடுத்த ஞானஸ்நானத்தைப்+ பெற்றோம்” என்று சொன்னார்கள்.  அப்போது பவுல், “யோவான் தனக்குப்பின் வரவிருந்த இயேசுமேல் நம்பிக்கை வைக்கும்படி மக்களிடம் சொல்லி,+ மனம் திருந்துவதற்கு அடையாளமாக ஞானஸ்நானம் கொடுத்து வந்தார்”+ என்று சொன்னார்.  இதைக் கேட்டபோது எஜமானாகிய இயேசுவின் பெயரில் அவர்கள் ஞானஸ்நானம் எடுத்தார்கள்.  அவர்கள்மேல் பவுல் தன்னுடைய கைகளை வைத்தபோது கடவுளுடைய சக்தி அவர்களுக்குக் கிடைத்தது.+ அவர்கள் வெவ்வேறு மொழிகளில் பேசவும் தீர்க்கதரிசனம் சொல்லவும் ஆரம்பித்தார்கள்.+  அங்கே ஏறக்குறைய 12 ஆண்கள் இருந்தார்கள்.  பின்பு, அவர் மூன்று மாதங்களாக ஜெபக்கூடத்துக்குப் போய்த்+ தைரியமாகப் பேசிவந்தார்; கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிப் பேச்சுகள் கொடுத்து, பக்குவமாக நியாயங்காட்டிப் பேசிவந்தார்.+  ஆனால், அங்கிருந்த சிலர் அவர் சொல்வதை நம்பாமல் பிடிவாதமாக இருந்தார்கள், இந்த மார்க்கத்தை*+ பற்றிக் கூட்டத்தார் முன்னால் கேவலமாகப் பேசினார்கள். அதனால் பவுல் அவர்களைவிட்டு விலகினார்;+ சீஷர்களைத் தனியாகக் கூட்டிக்கொண்டுபோய், திரன்னு பள்ளி அரங்கத்தில் தினமும் பேச்சுகள் கொடுத்துவந்தார். 10  இரண்டு வருஷங்களுக்கு இப்படியே செய்துவந்தார். அதனால், ஆசிய மாகாணம் முழுவதிலும் வாழ்ந்துவந்த யூதர்களும் கிரேக்கர்களும் எஜமானின் வார்த்தையைக் கேட்டார்கள். 11  பவுலின் கைகளால் கடவுள் மாபெரும் அற்புதங்களைச் செய்துகொண்டே இருந்தார்.+ 12  சொல்லப்போனால், அவருடைய கைக்குட்டைகளையும் துணிகளையும் கொண்டுவந்து நோயாளிகள்மேல் வைத்தபோது+ நோய்கள் குணமாயின, பேய்களும் ஓடிப்போயின.+ 13  பல இடங்களுக்குப் பயணம் செய்து பேய்களை விரட்டிவந்த யூதர்கள் சிலர், எஜமானாகிய இயேசுவின் பெயரைப் பயன்படுத்த முயற்சி செய்தார்கள். அவர்கள், “பவுல் பிரசங்கிக்கிற இயேசுவின் பெயரில் கட்டளையிடுகிறேன், போய்விடு”+ என்று சொல்லி பேய்களை விரட்ட முயற்சி செய்தார்கள். 14  ஸ்கேவா என்ற யூத முதன்மை குருவின் ஏழு மகன்களும் இப்படிச் செய்தார்கள். 15  அப்போது அந்தப் பேய், “எனக்கு இயேசுவைத் தெரியும்,+ பவுலையும் தெரியும்,+ ஆனால் நீங்கள் யார்?” என்று கேட்டது. 16  பேய் பிடித்திருந்த அந்த ஆள் உடனே அவர்கள் எல்லார்மேலும் பாய்ந்து, அவர்களை அமுக்கித் திணறடித்தான். அதனால், அவர்கள் காயங்களோடு அந்த வீட்டைவிட்டு நிர்வாணமாக ஓடிப்போனார்கள். 17  இந்தச் செய்தி எபேசுவில் வாழ்ந்துவந்த யூதர்களுக்கும் கிரேக்கர்களுக்கும் தெரியவந்தபோது அவர்கள் எல்லாரும் பயந்துபோனார்கள். எஜமானாகிய இயேசுவின் பெயருக்குப் புகழ் சேர்ந்துகொண்டே இருந்தது. 18  இயேசுவின் சீஷர்களாக மாறிய பலர், தாங்கள் பழக்கமாகச் செய்த பாவங்களை வெளிப்படையாக ஒத்துக்கொண்டார்கள். 19  மாயமந்திரங்கள் செய்துவந்த ஏராளமான ஆட்கள் தங்களுடைய புத்தகங்களை மொத்தமாகக் கொண்டுவந்து, எல்லாருக்கும் முன்னால் தீ வைத்துக் கொளுத்தினார்கள்.+ அவற்றின் மதிப்பு 50,000 வெள்ளிக் காசுகள் என்று கணக்கிட்டார்கள். 20  இப்படி, யெகோவாவின்* வார்த்தை மாபெரும் விதத்தில் பரவி, தடைகளையெல்லாம் வென்றுவந்தது.+ 21  இவையெல்லாம் நடந்து முடிந்த பின்பு, பவுல் மக்கெதோனியாவுக்கும்+ அகாயாவுக்கும் போக வேண்டுமென்றும், அதன்பின் எருசலேமுக்குப் போக வேண்டுமென்றும்+ தன்னுடைய மனதில் தீர்மானித்தார். “அங்கிருந்து ரோமுக்கும் போக வேண்டும்” என்று சொல்லிக்கொண்டார்.+ 22  அதனால், தனக்கு உதவி செய்தவர்களில் இரண்டு பேரை, அதாவது தீமோத்தேயுவையும்+ எரஸ்துவையும்,+ மக்கெதோனியாவுக்கு அனுப்பிவிட்டு, அவர் மட்டும் சில காலம் ஆசிய மாகாணத்திலேயே தங்கினார். 23  அந்தக் காலத்தில், இந்த மார்க்கம்+ சம்பந்தமாகப் பெரிய கலவரம் வெடித்தது.+ 24  தெமேத்திரியு என்ற வெள்ளி ஆசாரி ஒருவன் அர்த்தமி கோயிலின் வடிவத்தை வெள்ளியில் சின்ன உருவங்களாகச் செய்து, கைத்தொழிலாளிகளுக்கு ஏராளமான லாபம் தேடித் தந்தான்.+ 25  இவர்களையும் இப்படிப்பட்ட தொழில் செய்கிற மற்றவர்களையும் அவன் ஒன்றுகூட்டி, “நண்பர்களே, இந்தத் தொழில் நமக்கு நிறைய வருமானத்தைத் தருகிறது என்பது உங்களுக்கே நன்றாகத் தெரியும். 26  ஆனால், கைகளால் செய்யப்பட்டதெல்லாம் தெய்வங்கள் கிடையாது என்று இந்த பவுல் சொல்லிக்கொண்டு திரிகிறான்.+ எபேசுவில்+ மட்டுமல்ல, கிட்டத்தட்ட ஆசிய மாகாணம் முழுவதும் இப்படிச் சொல்லி ஏராளமான ஆட்களை நம்ப வைத்து, அவர்களுடைய மனதைத் திசைதிருப்பியிருக்கிறான்; இதை நீங்களே பார்த்தும் கேட்டும் இருக்கிறீர்கள். 27  இதனால், நம் தொழிலுக்குக் கெட்ட பெயர் வருவது மட்டுமல்ல, மகா தேவி அர்த்தமியின் கோயிலுக்கு எந்த மதிப்பும் இல்லாமல் போய்விடும். ஆசிய மாகாணம் முழுவதும், ஏன் உலகம் முழுவதும், மக்கள் வணங்குகிற நம் தேவியின் மகத்துவமும் மங்கிவிடும்” என்று சொன்னான். 28  இதைக் கேட்ட அந்த ஆட்கள் எல்லாரும் கோபத்தில் பொங்கியெழுந்து, “எபேசியர்களின் அர்த்தமியே மகா தேவி!” என்று கோஷம்போட்டார்கள். 29  நகரமே குழப்பத்தில் மூழ்கியது. பவுலின் பயணத் தோழர்களான காயு, அரிஸ்தர்க்கு+ ஆகிய மக்கெதோனியர்களை அவர்கள் பிடித்து இழுத்துக்கொண்டு ஒன்றாக அரங்கத்துக்குள் ஓடினார்கள். 30  அப்போது பவுல், கூட்டத்துக்குள் போக விரும்பினார். ஆனால், சீஷர்கள் அவரைப் போக விடவில்லை. 31  பண்டிகைகளையும் விளையாட்டுகளையும் ஏற்பாடு செய்துவந்த சில அதிகாரிகள்கூட, அதாவது அவருக்குப் பழக்கமான சில அதிகாரிகள்கூட, அவரிடம் ஆள் அனுப்பி, அரங்கத்துக்குள் போய் ஆபத்தை விலைக்கு வாங்க வேண்டாமென்று அவரைக் கேட்டுக்கொண்டார்கள். 32  கூட்டத்தில் ஒரே குழப்பமாக இருந்தது; சிலர் இப்படியும் சிலர் அப்படியுமாகக் கத்திக்கொண்டிருந்தார்கள். சொல்லப்போனால், எதற்காகக் கூடிவந்திருந்தார்கள் என்றே பெரும்பாலான ஆட்களுக்குத் தெரியவில்லை. 33  அப்போது யூதர்கள், அலெக்சந்தர் என்பவரைக் கூட்டத்திலிருந்து முன்னுக்குத் தள்ளினார்கள். அவர் தன்னுடைய கையால் சைகை காட்டிவிட்டு, மக்களிடம் பேச முயற்சி செய்தார். 34  ஆனால், அவர் ஒரு யூதர் என்பதைத் தெரிந்துகொண்ட அந்தக் கூட்டத்தார் எல்லாரும், “எபேசியர்களின் அர்த்தமியே மகா தேவி!” என்று கிட்டத்தட்ட இரண்டு மணிநேரம் ஒரே குரலில் கத்தினார்கள். 35  கடைசியில், மாநகராட்சித் தலைவர் கூட்டத்தாரை அமைதிப்படுத்திய பின்பு, “எபேசு மக்களே, மகா தேவி அர்த்தமியின் கோயிலையும் வானத்திலிருந்து விழுந்த சிலையையும் எபேசு நகரம்தான் பாதுகாத்து வருகிறது என்பதைத் தெரியாதவர்கள் யாராவது இருக்கிறார்களா? 36  இதை யாராலும் மறுக்க முடியாது. அதனால் நீங்கள் அமைதியாக இருங்கள், அவசரப்பட்டு எதையும் செய்துவிடாதீர்கள். 37  நீங்கள் இங்கே இழுத்து வந்திருக்கும் ஆட்கள் கோயில் கொள்ளையர்களும் கிடையாது, நம் தேவியை நிந்திப்பவர்களும் கிடையாது. 38  அதனால், தெமேத்திரியுவுக்கும்+ அவரோடு இருக்கிற கைத்தொழிலாளிகளுக்கும் யார் மீதாவது வழக்கு இருந்தால், நீதிமன்றம் கூடுகிற நாட்களில் மாநில ஆளுநர்களிடம்* ஒருவரைப் பற்றி ஒருவர் முறையிட்டுக்கொள்ளட்டும். 39  இவர்கள்மேல் உங்களுக்கு வேறு ஏதாவது குற்றச்சாட்டு இருந்தால், சட்டப்படி கூடுகிற கூட்டத்தில் நீங்கள் அதைத் தீர்த்துக்கொள்ளலாம். 40  ஏனென்றால், இன்று நடந்த காரியத்துக்காக நம்மேல் நிச்சயமாகவே கலகக் குற்றம் சுமத்தப்படலாம். இந்தக் கலவரத்தை நியாயப்படுத்த எந்தவொரு காரணமும் நமக்குக் கிடையாது” என்று சொன்னார். 41  இப்படிச் சொல்லிவிட்டுக் கூட்டத்தைக் கலைத்தார்.

அடிக்குறிப்புகள்

இணைப்பு A5-ஐப் பாருங்கள்.