Skip to content

Skip to secondary menu

பொருளடக்கத்திற்குச் செல்

யெகோவாவின் சாட்சிகள்

தமிழ்

ஆன்லைன் பைபிள் | புதிய உலக மொழிபெயர்ப்பு

அப்போஸ்தலர் 17:1-34

முக்கியக் குறிப்புகள்

  • பவுலும் சீலாவும் தெசலோனிக்கேயில் (1-9)

  • பவுலும் சீலாவும் பெரோயாவில் (10-15)

  • அத்தேனேயில் பவுல் (16-22அ)

  • அரியோபாகுவில் பவுல் கொடுக்கும் பேச்சு (22ஆ-34)

17  அவர்கள் அம்பிபோலி, அப்பொலோனியா நகரங்கள் வழியாக தெசலோனிக்கே நகரத்துக்கு வந்தார்கள்.+ அங்கே யூதர்களுடைய ஜெபக்கூடம் ஒன்று இருந்தது.  பவுல் தன் வழக்கத்தின்படியே+ ஜெபக்கூடத்துக்குப் போய், அங்கிருந்தவர்களிடம் மூன்று ஓய்வுநாட்களுக்கு வேதவசனங்களிலிருந்து நியாயங்காட்டிப் பேசினார்.+  கிறிஸ்து பாடுகள் படுவதும்,+ பின்பு உயிரோடு எழுந்திருப்பதும்+ அவசியமாக இருந்ததென்றும், தான் அறிவித்த இயேசுதான் அந்தக் கிறிஸ்து என்றும் நிரூபிக்கிற விதத்தில் மேற்கோள்கள் காட்டி விளக்கினார்.  இதனால், அவர்களில் சிலர் இயேசுவின் சீஷர்களாகி பவுலோடும் சீலாவோடும்+ சேர்ந்துகொண்டார்கள். அதேபோல், கடவுளை வணங்கிய கிரேக்கர்களில் ஏராளமான ஆட்களும், முக்கியமான பெண்களில் நிறைய பேரும் அவர்களோடு சேர்ந்துகொண்டார்கள்.  ஆனால் யூதர்கள் பொறாமைப்பட்டு,+ சந்தையில் வெட்டியாகத் திரிந்துகொண்டிருந்த மோசமான ஆட்கள் சிலரைக் கும்பலாகச் சேர்த்துக்கொண்டு நகரத்தில் ஆர்ப்பாட்டம் செய்ய ஆரம்பித்தார்கள். பின்பு, பவுலையும் சீலாவையும் அந்தக் கும்பலிடம் இழுத்து வருவதற்காக யாசோன் என்பவருடைய வீட்டைத் தாக்கி உள்ளே புகுந்தார்கள்.  அவர்களை அங்கே கண்டுபிடிக்க முடியாததால், யாசோனையும் வேறு சில சகோதரர்களையும் நகரத் தலைவர்களிடம் இழுத்துக்கொண்டுபோய், “உலகமெங்கும் அமளி உண்டாக்குகிற ஆட்கள் இங்கேயும் வந்துவிட்டார்கள்.+  இவர்களை யாசோன் தன்னுடைய வீட்டில் விருந்தாளிகளாகத் தங்க வைத்திருக்கிறான். இவர்கள் எல்லாரும் இயேசு என்ற வேறொரு ராஜா இருப்பதாகச் சொல்லி, ரோம அரசனுடைய* கட்டளைகளுக்கு எதிராகச் செயல்படுகிறார்கள்” என்று கூச்சல் போட்டார்கள்.+  இதையெல்லாம் கேட்டபோது கூட்டத்தாரும் நகரத் தலைவர்களும் கலக்கம் அடைந்தார்கள்.  அந்த நகரத் தலைவர்கள், யாசோனிடமிருந்தும் மற்றவர்களிடமிருந்தும் ஜாமீன் தொகையை வாங்கிக்கொண்டு அவர்களை விடுதலை செய்தார்கள். 10  இருட்டிய உடனே, பவுலையும் சீலாவையும் சகோதரர்கள் பெரோயாவுக்கு அனுப்பினார்கள்; அவர்கள் அங்கே போய்ச் சேர்ந்ததும் யூதர்களுடைய ஜெபக்கூடத்துக்குப் போனார்கள். 11  தெசலோனிக்கேயில் இருந்த யூதர்களைவிட பெரோயாவில் இருந்த யூதர்கள் பரந்த மனப்பான்மை உள்ளவர்களாக இருந்தார்கள். ஏனென்றால், கடவுளுடைய வார்த்தைகளை அவர்கள் மிகுந்த ஆர்வத்தோடு கேட்டு, அவையெல்லாம் சரிதானா என்று தினமும் வேதவசனங்களைக் கவனமாக ஆராய்ந்து பார்த்தார்கள். 12  அதனால், அவர்களில் பலர் இயேசுவின் சீஷர்களானார்கள். மதிப்புக்குரிய கிரேக்க பெண்களில் பலரும் ஆண்களில் சிலரும்கூட சீஷர்களானார்கள். 13  பவுல் கடவுளுடைய வார்த்தையை பெரோயாவிலும் அறிவித்து வருகிறார் என்று தெசலோனிக்கேயில் இருந்த யூதர்கள் கேள்விப்பட்டபோது, மக்களைத் தூண்டி கலகம் உண்டாக்க அங்கேயும் வந்தார்கள்.+ 14  சகோதரர்கள் உடனே பவுலைக் கடற்கரைக்கு அனுப்பி வைத்தார்கள்.+ ஆனால், சீலாவும் தீமோத்தேயுவும் பெரோயாவிலேயே தங்கிவிட்டார்கள். 15  பவுலோடு போனவர்கள் அத்தேனே நகரம்வரை கூடவே போனார்கள். பின்பு, எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் சீலாவும் தீமோத்தேயுவும்+ தன்னிடம் வரவேண்டுமென்ற கட்டளையை பவுலிடமிருந்து அவர்கள் பெற்றுக்கொண்டு திரும்பி வந்தார்கள். 16  சீலாவுக்காகவும் தீமோத்தேயுவுக்காகவும் அத்தேனே நகரத்தில் பவுல் காத்துக்கொண்டிருந்தபோது, அந்த நகரம் முழுவதும் சிலைகள் இருந்ததைப் பார்த்து எரிச்சலடைந்தார். 17  அதனால், ஜெபக்கூடத்தில் யூதர்களிடமும் கடவுளை வணங்கிய மற்றவர்களிடமும் தினமும் சந்தையில் சந்தித்த ஆட்களிடமும் நியாயங்காட்டிப் பேசினார். 18  ஆனால், தத்துவ ஞானிகளான சில எப்பிக்கூரர்களும் ஸ்தோயிக்கர்களும் அவரோடு வாக்குவாதம் செய்தார்கள். சிலர், “இந்த உளறுவாயன் என்ன சொல்கிறான்?” என்று கேட்டார்கள். வேறு சிலர், “இவன் அன்னிய தெய்வங்களைப் பற்றி அறிவிக்கிறவன்போல் தெரிகிறது” என்று சொன்னார்கள். இயேசுவையும் உயிர்த்தெழுதலையும் பற்றிய நல்ல செய்தியை+ அவர் அறிவித்ததால் அப்படிச் சொன்னார்கள். 19  பின்பு, அவர்கள் அவரை அரியோபாகுவுக்குக் கூட்டிக்கொண்டுபோய், “நீ ஏதோ புதிதாகக் கற்றுக்கொடுக்கிறாயே, அது என்னவென்று நாங்கள் தெரிந்துகொள்ளலாமா? 20  நீ சொல்கிற சில விஷயங்கள் விசித்திரமாக இருக்கின்றன; அவற்றின் அர்த்தத்தைத் தெரிந்துகொள்ள விரும்புகிறோம்” என்றார்கள். 21  சொல்லப்போனால், அத்தேனே நகரத்திலிருந்த எல்லாரும், அங்கே தங்கியிருந்த மற்ற தேசத்து மக்களும், புதுப்புது விஷயங்களைப் பேசுவதிலும் கேட்பதிலும்தான் பொழுதைக் கழித்தார்கள். 22  அப்போது, அரியோபாகுவின்+ நடுவில் பவுல் எழுந்து நின்று, “அத்தேனே நகர மக்களே, மற்ற மக்களைவிட நீங்கள் எல்லா விதத்திலும் தெய்வங்கள்மேல் பயபக்தி உள்ளவர்களாக இருப்பதைப் பார்க்கிறேன்.+ 23  உதாரணமாக, நான் இந்த நகரத்தின் வழியாக வந்தபோது, நீங்கள் வணங்குகிறவற்றைக் கவனமாகப் பார்த்துக்கொண்டே வந்தேன். அப்போது, ‘அறியப்படாத கடவுளுக்கு’ என்று பொறிக்கப்பட்டிருந்த ஒரு பலிபீடத்தைக்கூட பார்த்தேன். நீங்கள் அறியாமல் வணங்குகிற அந்தக் கடவுளைப் பற்றித்தான் உங்களுக்குச் சொல்கிறேன். 24  உலகத்தையும் அதிலுள்ள எல்லாவற்றையும் படைத்த கடவுள் வானத்துக்கும் பூமிக்கும் எஜமானாக இருப்பதால்,+ மனுஷர்களால் கட்டப்பட்ட கோயில்களில் அவர் குடியிருப்பதில்லை.+ 25  மனுஷர்களுடைய கைகளால் அவர் எந்தப் பணிவிடையையும் பெற்றுக்கொள்வதில்லை,+ அதற்கான அவசியமும் அவருக்கு இல்லை. ஏனென்றால், அவர்தான் எல்லாருக்கும் உயிரையும் சுவாசத்தையும்+ மற்ற எல்லாவற்றையும் தருகிறார். 26  ஒரே மனுஷனிலிருந்து எல்லா தேசத்து மக்களையும் உண்டுபண்ணி,+ அவர்களைப் பூமி முழுவதும் குடியிருக்க வைத்திருக்கிறார்.+ குறித்த காலங்களையும், குடியிருக்கும் எல்லைகளையும் அவர்களுக்கு நிர்ணயித்துக் கொடுத்திருக்கிறார்.+ 27  உண்மையில், அவர் நம் ஒருவருக்கும் தூரமானவராக இல்லாதபோதிலும், அவரை நாம் தேட வேண்டும் என்பதற்காக, அதுவும் தட்டித் தடவியாவது கண்டுபிடிக்க வேண்டும்+ என்பதற்காக அப்படிச் செய்திருக்கிறார். 28  அவரால்தான் நாம் உயிர் வாழ்கிறோம், அசைகிறோம், இருக்கிறோம்; உங்கள் கவிஞர்களில் சிலர்கூட, ‘நாம் அவருடைய பிள்ளைகள்’* என்று சொல்லியிருக்கிறார்கள். 29  நாம் கடவுளுடைய பிள்ளைகளாக*+ இருப்பதால், மனுஷர்களுடைய சிற்ப வேலைப்பாட்டாலும் கற்பனையாலும் வடிவமைக்கப்பட்ட பொன், வெள்ளி, கல் உருவங்களைப் போலக் கடவுள் இருப்பார் என்று நாம் நினைக்கக் கூடாது.+ 30  உண்மைதான், மக்கள் அறியாமையில் இருந்த காலங்களைக்+ கடவுள் கண்டும்காணாதவர்போல் விட்டுவிட்டார். ஆனால், இப்போது மனம் திருந்தும்படி எல்லா இடங்களிலும் உள்ள மக்களுக்குச் சொல்கிறார். 31  ஏனென்றால், தான் நியமித்த ஒரு மனுஷர் மூலம் இந்த உலகத்தை நீதியோடு நியாயந்தீர்க்க அவர் ஒரு நாளைக் குறித்திருக்கிறார்.+ இறந்துபோன அந்த மனுஷரை உயிர்த்தெழுப்பியதன் மூலம் அதற்கான உத்தரவாதத்தை எல்லா மனுஷர்களுக்கும் கொடுத்திருக்கிறார்”+ என்று சொன்னார். 32  உயிர்த்தெழுதலைப் பற்றி அவர்கள் கேட்டபோது சிலர் கேலி செய்ய ஆரம்பித்தார்கள்.+ இன்னும் சிலர், “இன்னொரு சமயத்தில் இதைப் பற்றி மறுபடியும் கேட்கிறோம்” என்று சொன்னார்கள். 33  அதனால், பவுல் அவர்களைவிட்டுப் புறப்பட்டுப் போனார். 34  இருந்தாலும், சில ஆட்கள் அவரோடு சேர்ந்துகொண்டு இயேசுவின் சீஷர்களானார்கள். அவர்களில் அரியோபாகு நீதிமன்றத்தின் நீதிபதிகளில் ஒருவரான தியொனீசியு என்பவரும், தாமரி என்ற பெண்ணும், வேறு சிலரும் இருந்தார்கள்.

அடிக்குறிப்புகள்

நே.மொ., “சீஸருடைய.” சொல் பட்டியலைப் பாருங்கள்.
வே.வா., “சந்ததி.”
வே.வா., “சந்ததியாக.”