சகரியா 8:1-23

8  பரலோகப் படைகளின் யெகோவாவிடமிருந்து மறுபடியும் கிடைத்த செய்தி இதுதான்:  “‘சீயோனுக்கு உதவி செய்ய நான் மிகுந்த வைராக்கியமாக இருப்பேன்.+ அந்த வைராக்கியத்தினால், அவளுடைய எதிரிகள்மேல் என் கோபத்தைக் கொட்டுவேன்’ என்று பரலோகப் படைகளின் யெகோவா சொல்கிறார்.”  “‘நான் சீயோனுக்குத் திரும்புவேன்.+ எருசலேமில் குடியிருப்பேன்.+ அப்போது எருசலேம் நகரம் “சத்திய நகரம்”*+ என்றும், பரலோகப் படைகளின் யெகோவாவுடைய மலை “பரிசுத்த மலை”+ என்றும் அழைக்கப்படும்’ என யெகோவா சொல்கிறார்.”  “பரலோகப் படைகளின் யெகோவா சொல்வது இதுதான்: ‘மறுபடியும் எருசலேமின் பொது சதுக்கங்களில், கைத்தடி வைத்திருக்கிற வயதான ஆண்களும் பெண்களும் உட்கார்ந்திருப்பார்கள்.+  நகரத்தின் பொது சதுக்கங்களில் நிறைய பிள்ளைகள் விளையாடிக்கொண்டு இருப்பார்கள்.’”+  “பரலோகப் படைகளின் யெகோவா சொல்வது இதுதான்: ‘இப்படியெல்லாம் நடப்பது ரொம்பக் கஷ்டமென்று இந்த ஜனங்களில் மீதியாக இருப்பவர்கள் ஒருவேளை நினைப்பார்கள். ஆனால், இவற்றை நடத்திக்காட்டுவது எனக்குக் கஷ்டமா என்ன?’ என்று பரலோகப் படைகளின் யெகோவா கேட்கிறார்.”  “பரலோகப் படைகளின் யெகோவா இப்படிச் சொல்கிறார்: ‘கிழக்கிலும் மேற்கிலும் உள்ள தேசங்களிலிருந்து என்னுடைய ஜனங்களை நான் விடுதலை செய்வேன்.+  அவர்களை அங்கிருந்து கூட்டிக்கொண்டு வருவேன். அவர்கள் எருசலேமில் குடியிருப்பார்கள்.+ அவர்கள் என்னுடைய ஜனங்களாக இருப்பார்கள். நான் அவர்களுக்கு உண்மையுள்ள* கடவுளாகவும் நீதியுள்ள கடவுளாகவும் இருப்பேன்.’”+  “பரலோகப் படைகளின் யெகோவா இப்படிச் சொல்கிறார்: ‘பரலோகப் படைகளின் யெகோவாவுடைய ஆலயத்தைக் கட்டும் வேலையைத் தைரியமாகச் செய்யுங்கள்.+ இந்த வார்த்தைகளை, ஆலயத்துக்கு அஸ்திவாரம் போடப்பட்ட நாளிலிருந்தே தீர்க்கதரிசிகள் மூலமாக நீங்கள் கேட்டுவருகிறீர்கள்.+ 10  அதற்குமுன் மனுஷனுக்கோ மிருகத்துக்கோ கூலி கொடுக்கப்படவில்லை.+ யாரும் எங்கும் நிம்மதியாகப் போய்வர எதிரி விடவில்லை. ஏனென்றால், எல்லா ஜனங்களும் ஒருவரோடு ஒருவர் மோதிக்கொள்ளும்படி நான் செய்தேன்.’ 11  இப்போது, பரலோகப் படைகளின் யெகோவா சொல்வது இதுதான்: ‘மீதியிருக்கும் இந்த ஜனங்களை முன்பு நடத்தியது போல இனி நடத்த மாட்டேன்.+ 12  சமாதான விதை விதைக்கப்படும், திராட்சைக் கொடி பழங்களைக் கொடுக்கும், பூமி விளைச்சலைத் தரும்,+ வானம் பனியைப் பொழியும். மீதியிருக்கும் இந்த ஜனங்கள் இவை எல்லாவற்றையும் அனுபவிக்கும்படி செய்வேன்.+ 13  யூதா ஜனங்களே, இஸ்ரவேல் ஜனங்களே, மற்ற தேசத்து ஜனங்கள்முன் நீங்கள் சபிக்கப்பட்ட ஜனமாக இருந்தீர்கள்.+ ஆனால், நான் உங்களைக் காப்பாற்றுவேன். இனி நீங்கள் ஒரு ஆசீர்வாதமாக இருப்பீர்கள்.+ அதனால், பயப்படாதீர்கள்.+ தைரியமாக வேலை செய்யுங்கள்.’+ 14  பரலோகப் படைகளின் யெகோவா சொல்வது இதுதான்: ‘“உங்கள் முன்னோர்கள் என்னைப் பயங்கரமாகக் கோபப்படுத்தியதால் உங்களைத் தண்டிக்க முடிவுசெய்தேன், அதை நினைத்து நான் வருத்தப்படவில்லை”+ என்று பரலோகப் படைகளின் யெகோவா சொல்கிறார். 15  “ஆனால் இப்போது எருசலேமுக்கும் யூதா ஜனங்களுக்கும் நல்லது செய்ய நான் முடிவுசெய்திருக்கிறேன்.+ அதனால், பயப்படாதீர்கள்.”’+ 16  ‘நான் உங்களுக்குத் தரும் கட்டளைகள் இவைதான்: நீங்கள் ஒருவரோடு ஒருவர் உண்மை பேச வேண்டும்.+ உண்மையையும் சமாதானத்தையும் கட்டிக்காக்கும் விதமாக நகரவாசல்களில் தீர்ப்பு கொடுக்க வேண்டும்.+ 17  மற்றவர்களுக்குக் கெடுதல் செய்யத் திட்டம் தீட்டக் கூடாது.+ பொய் சத்தியம் செய்யக் கூடாது.+ இதையெல்லாம் நான் வெறுக்கிறேன்’+ என்று யெகோவா சொல்கிறார்.” 18  மறுபடியும் பரலோகப் படைகளின் யெகோவாவிடமிருந்து எனக்கு இந்தச் செய்தி கிடைத்தது: 19  “பரலோகப் படைகளின் யெகோவா சொல்வது இதுதான்: ‘யூதா ஜனங்களே, நான்காம் மாதத்திலும்,+ ஐந்தாம் மாதத்திலும்,+ ஏழாம் மாதத்திலும்,+ பத்தாம் மாதத்திலும்+ நீங்கள் விரதம் இருந்த நாட்கள் சந்தோஷம் பொங்குகிற பண்டிகை நாட்களாக மாறும்.+ அதனால் உண்மையையும் சமாதானத்தையும் நேசியுங்கள்.’ 20  பரலோகப் படைகளின் யெகோவா இப்படிச் சொல்கிறார்: ‘பல இனங்களையும் நகரங்களையும் சேர்ந்த ஜனங்கள் நிச்சயம் வருவார்கள். 21  ஒரு நகரத்தைச் சேர்ந்தவர்கள் இன்னொரு நகரத்தைச் சேர்ந்தவர்களிடம் போய், “பரலோகப் படைகளின் யெகோவாவை மனதார தேடிப்போகலாம், வாருங்கள். யெகோவாவிடம் கருணை கேட்டுக் கெஞ்சலாம், வாருங்கள். நாங்கள் கண்டிப்பாகப் போகிறோம்”+ என்று சொல்வார்கள். 22  பல இனங்களையும் பலம்படைத்த தேசங்களையும் சேர்ந்தவர்கள், பரலோகப் படைகளின் யெகோவாவைத் தேடவும் யெகோவாவிடம் கருணை கேட்டுக் கெஞ்சவும் எருசலேமுக்கு வருவார்கள்.’+ 23  பரலோகப் படைகளின் யெகோவா சொல்வது இதுதான்: ‘அந்த நாட்களில், மற்ற தேசங்களைச் சேர்ந்த எல்லா பாஷைக்காரர்களிலும் பத்துப் பேர்+ ஒரு யூதனுடைய உடையை* இறுக்கமாகப் பிடித்துக்கொண்டு, “கடவுள் உங்களோடு இருப்பதாகக் கேள்விப்பட்டோம்.+ அதனால், நாங்களும் உங்களோடு வருகிறோம்”+ என்று சொல்வார்கள்.’”

அடிக்குறிப்புகள்

வே.வா., “விசுவாச நகரம்.”
வே.வா., “நம்பகமான.”
வே.வா., “உடையின் ஓரத்தை.”

ஆராய்ச்சிக் குறிப்புகள்

மீடியா